உலகம் சுற்றும் சினிமா - 49: வெள்ளையின வெறியர்கள் மத்தியில் ஒரு கறுப்பு ஆடு

‘ப்ளாக்க்ளான்ஸ்மேன்’ (2018)
உலகம் சுற்றும் சினிமா - 49: வெள்ளையின வெறியர்கள் மத்தியில் ஒரு கறுப்பு ஆடு

அமெரிக்காவின் நிறவெறிக்கு மிகப் பெரும் இருண்ட வரலாறு உண்டு. நிறவெறி ஊறிப்போன வெள்ளையர்களின் காழ்ப்புணர்ச்சியை ஒருங்கிணைத்து, அமைப்பு ரீதியில் கட்டமைக்கப்பட்ட வன்முறையாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தது ‘கு க்ளக்ஸ் க்ளான்' எனப்படும் நிறவெறி அமைப்பு. ஆங்கிலத்தில் சுருக்கமாக ‘KKK’. கு க்ளக்ஸ் க்ளான் பற்றிப் பல திரைப்படங்கள் மற்றும் ஆவணப் படங்கள் வெளியாகியிருக்கின்றன. அந்தப் பட்டியலில் உண்மை நிகழ்வுகளை மிக நெருக்கமாகக் கொண்டு, அதேசமயம் மிகவும் விறுவிறுப்பான திரைக் கதையுடன் உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் 2018-ம் ஆண்டு வெளிவந்த ‘ப்ளாக்க்ளான்ஸ்மேன்’ (BlacKkKlansman).

ரான் ஸ்டால்வொர்த் என்ற கறுப்பின காவல் அதிகாரி தன் பணி அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதிய ‘ப்ளாக் க்ளான்ஸ்மேன்’ என்ற புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. ‘மால்கம் எக்ஸ்’, ‘இன்சைட் மேன்’, ‘டா 5 ப்ளட்ஸ்’ போன்ற படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குநர் ஸ்பைக் லீ இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வந்த ‘டெனெட்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஜான் டேவிட் வாஷிங்டன்தான் இத்திரைப்படத்தின் கதாநாயகன். பல படங்களில் நடித்திருந்தாலும், ‘ப்ளாக்க்ளான்ஸ்மேன்’ திரைப்படம்தான் ஜான் டேவிட் வாஷிங்டனுக்கு ஹாலிவுட்டில் ஓர் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.

KKK-ல் ஒரு கறுப்பு ஆடு

1970-களில் நடக்கும் கதை இது. கொலராடோ ஸ்ப்ரிங்க்ஸ் நகரத்தின் முதல் கறுப்பின காவல் துறை அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் ரான் ஸ்டால்வொர்த். ஒரு கறுப்பின மனிதர், நகரத்தில் காவல் அதிகாரியாகப் பணிபுரிவதைத் தவிர்க்க நினைக்கும் மேலதிகாரிகள், ஸ்டால்வொர்த்தை காவல் நிலையத்தில் உள்ள கோப்பறையில் பணியமர்த்துவார்கள். தொடர்ச்சியாக சக வெள்ளை அதிகாரிகளின் நிறவெறிக்கு ஆளாகும் ஸ்டால்வொர்த், தன்னை ரகசியக் காவல் துறை அதிகாரியாக நியமிக்கும்படி தனது மேலதிகாரியிடம் கேட்பார். அவரின் கோரிக்கையை ஏற்கும் மேலதிகாரி, கறுப்பினத்தவர்களின் உரிமைக்காகப் போராடிவரும் ‘ப்ளாக் பாந்தர்’ அமைப்பின் கூட்டத்திற்குச் சென்று உளவு பார்க்குமாறு ஸ்டால்வொர்த்தை பணியமர்த்துவார்.

சக கறுப்பினத்தவர்களை வேவு பார்க்க ஆரம்பிப்பார் ஸ்டால்வொர்த். அங்கே கறுப்பின மாணவர் அமைப்பின் தலைவியான பாட்ரிஸ் டுமாஸ் என்ற பெண்ணின் நட்பு கிடைக்கும். தான் ஒரு காவல் அதிகாரி என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே பாட்ரிஸுடன் பழக ஆரம்பிப்பார் ஸ்டால்வொர்த். சில நாட்கள் கழித்து ஒரு நாளிதழில் கு க்ளக்ஸ் க்ளான் பற்றிய துண்டு விளம்பரத்தைப் பார்த்துவிட்டு சந்தேகத்தின் பெயரில் அவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்புகொள்வார். கறுப்பினத்தவர்கள், யூதர்கள் உள்ளிட்டோரை வெறுக்கும் வெள்ளையர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பிக்கும் ஸ்டால்வொர்த், கு க்ளக்ஸ் க்ளான் உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்றுவிடுவார். தங்களுடன் இணைந்துகொள்ளுமாறு அந்த அமைப்பினர் ஸ்டால்வொர்த்துக்கு அழைப்புவிடுப்பார்கள். நேராகச் சென்றால் தன் குட்டு வெளிப்பட்டுவிடுமென்று, தன் சக அதிகாரி ஃபிலிப் ஜிம்மர்மேன் என்ற யூதரை தனக்குப் பதிலாக ஸ்டால்வொர்த் அனுப்பி வைப்பார்.

கு க்ளக்ஸ் க்ளானைப் பொறுத்தவரை ஃபிலிப் தான் ஸ்டால்வொர்த். ஆனால், தொடர்ந்து ஸ்டால்வொர்த் அதன் உறுப்பினர்களுடன் தொலைபேசியில் தொடர்பில் இருப்பார். ஒரு கட்டத்தில் அமெரிக்காவில் உள்ள அனைத்து கு க்ளக்ஸ் க்ளான் கும்பல்களின் தலைவரான டுயூக் என்ற நிறவெறி பிடித்த வெள்ளையரிடமே தொலைபேசி வாயிலாக நட்பாகிவிடுவார் ஸ்டால்வொர்த். வரவிருக்கும் ஒரு கு க்ளக்ஸ் க்ளான் சந்திப்பை ஒட்டி கறுப்பினத்தவர்கள் மீது ஒரு பெரும் தாக்குதலுக்கு டுயூக் திட்டமிட்டிருப்பதையும் அறிந்துகொள்வார். ஸ்டால்வொர்த்தும் அவரது நண்பர்களும் அதைத் தடுத்தார்களா, சக அதிகாரிகளின் நிறவெறியிலிருந்து அவர் எப்படித் தப்பினார் என்பதே படத்தின் மீதிக் கதை.

நிஜமும் நிழலும்

பெரும்பாலான கதாபாத்திரங்கள் உண்மை மனிதர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பது படத்தின் சிறப்பம்சம். குறிப்பாக, கு க்ளக்ஸ் க்ளானின் தலைவர் டுயூக் பாத்திரம் ரத்தமும் சதையுமானது. டுயூக் நிஜ வாழ்வில் இந்நாள்வரை கறுப்பினத்தவர்கள், யூதர்கள் குறித்து விஷத்தைக் கக்கிவருகிறார். யூடியூப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் டுயூக்கை நிரந்தரமாகத் தடை செய்தது எல்லாம் அவரது லட்சணத்தை உலகுக்குப் பறைசாற்றும் சான்றுகள். இத்திரைப்படத்தின் இறுதியில் டுயூக்கிடம் ஸ்டால்வொர்த் பேசும் கடுமையான வசனங்கள் ஆண்டாண்டு கால நிறவெறிக்கு எதிராக எழுப்பப்பட்ட அறைகூவல்.
இத்திரைப்படம் ஆறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதைப் பெற்றது. பல காலமாகக் கெட்டிப்பட்டுப் போய் இருக்கும் நிறவெறிக்குக் கலை உலகில் இருந்து எழுந்த எதிர்க் குரல்களில் ‘ப்ளாக்க்ளான்ஸ்மேன்’ திரைப்படத்துக்கு என்றும் ஓர் சிறப்பிடம் உண்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in