விவேக்: காலத்தில் உறைந்துவிட்ட புன்னகை

விவேக்: காலத்தில் உறைந்துவிட்ட புன்னகை

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாளில் இருப்பவர்களின் மனதில் ஒரு சொல்லொணாத் துக்கம் ஏற்படும். மகிழ்ச்சியான கணங்களில் துணையாகவும், பெற்றோரிடம்கூட வெளிப்படுத்த முடியாத உணர்வுகளைக்கூட பகிர்ந்துகொள்ளும் அளவுக்குப் புரிதல் கொண்டவர்களாகவும், சுய எள்ளலை வெளிப்படுத்திக்கொள்ள வாய்ப்பளித்தவர்களாகவும், வலி நிறைந்த கணத்தை மறந்து சிரிக்க வைத்தவர்களாகவும் உடன் இருந்த சக நண்பர்களைப் பிரியும் கணம் என்பதால், மனம் நிலையற்று தவிக்கும். கிட்டத்தட்ட அப்படியான உணர்வைத்தான் தமிழகத்தின் பெரும்பாலான மக்களின் மனதில் ஏற்படுத்தியிருக்கிறது நடிகர் விவேக்கின் அகால மரணம்.

இளமையிலேயே திறமை

1961 நவம்பர் 19-ல் சங்கரன்கோவிலில் பிறந்தவர் விவேக். தந்தை டெபுடி இன்ஸ்பெக்டராக இருந்தவர் என்பதால், பல்வேறு ஊர்களுக்கு மாற்றலாகிக் கொண்டிருந்தது அவரது குடும்பம். அப்படிப் பல்வேறு ஊர்களில் தொடர்ந்த கல்வியும், பல்வேறு சமூகச் சூழலை எதிர்கொண்ட அனுபவமும் விவேக்கின் நகைச்சுவை சிந்தனையையும், சமூகச் சிந்தனையையும் இயல்பாகவே கட்டமைத்தன எனலாம்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் படித்த காலத்தில் அவருக்குப் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மேடைத் தமிழ் வகுப்புகள் பெரும் ஊக்கம் தந்தன. தனக்குத் தமிழ் வகுப்பெடுத்த, தனது கலைத் திறனை வளர்த்தெடுத்த பேராசிரியர் சாமுவேல் சுதானந்தா மீதும் பெரும் மதிப்பும் நன்றியும் கொண்டிருந்தார் விவேக். இசை, நடனம், நடிப்பு, மிமிக்ரி எனப் பல்வேறு தளங்களில் தனது கலையார்வத்தை வெளிப்படுத்தி கல்லூரி பேராசிரியர்களையும் சக மாணவர்களையும் கவர்ந்தார். விவேக்கின் கலைத் திறன் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் சாலமன் பாப்பையா. தனது மாணவருக்கு வாய்ப்பளிக்கும்படி கே.பாலசந்தருக்கு சிபாரிசு கடிதம் எழுதும் அளவுக்கு பாப்பையாவுக்கு விவேக் மீது அபார நம்பிக்கை இருந்தது.

பாலசந்தரின் பெருமைமிகு மாணவர்

இதற்கிடையே சென்னை ஹியூமர் கிளப் நிகழ்ச்சிகள் மூலம் பலரைச் சிரிக்கவைத்துக் கொண்டிருந்த விவேக்குக்கு, அந்தக் கிளப்பின் நிறுவனர் பி.ஆர்.கோவிந்தராஜன் மூலம் பாலசந்தரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாலசந்தரின் படங்களின் திரைக்கதையில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்திருந்தவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும், ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே முத்திரை பதித்ததும் விவேக்கின் வாழ்க்கையில் திருப்புமுனை தருணங்கள். பாலசந்தரின் ‘புதுப்புது அர்த்தங்கள்’, ‘ஒரு வீடு இரு வாசல்’ ஆகிய படங்களில் நடித்த விவேக், பாலசந்தரின் பெருமைமிகு மாணவராக உருவெடுத்தார்.

‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தில் அவர் பேசிய, ‘இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பால்’ எனும் வசனத்தை இன்றைக்குப் பலரும் நினைவுகூர்கிறார்கள். அந்தப் படத்தில் விவேக்கின் இன்னொரு முத்திரை உண்டு. மனைவி - மாமியாரின் கொடுமை தாங்காமல் வீட்டைவிட்டு வெளியேறிவிட்ட பாடகர் மணிபாரதியின் (ரகுமான்) இருப்பிடம் குறித்து, குடிபோதையில் விவேக் உளறிவைத்துவிடுவார். அடியாட்களின் ‘கவனிப்புக்கு’ பின்னர், மணிபாரதிக்கு போன் செய்து பேசும் விவேக்கின் நடிப்பு வெடிச்சிரிப்பை வரவழைக்கும். சுற்றிலும் அடியாட்கள் சூழ்ந்து நிற்க, “மஞ்சக் காமாலைன்னு டாக்டர்கள்லாம்(!) சொல்லிட்டாங்க” என்று அவர்களைச் சுட்டிக்காட்டிப் பேசும் விவேக், “நீங்க உடனே புறப்பட்டு வரல… வெறும் பொணத்தைத்தான் பார்க்க முடியும்” என்று சொல்லும் காட்சியே, அவரது அபார நகைச்சுவைத் திறனுக்குக் கட்டியம் கூறியது.

சூழலுக்கு ஏற்ப, பீதியும் இயலாமையும் கலந்த நகைச்சுவை நடிப்பைத் துல்லியமாக வெளிப்படுத்தும் நடிகர்கள் சோடைபோனதில்லை. விவேக் அதற்கு மிகச் சரியான உதாரணம். பின்னாட்களில் அவர் நடித்த ‘யுனிவெர்சிடி’ படத்தில், நாயகன் ஜீவா ‘மட்டன் பிரியாணியில் லெக் பீஸ் சாப்பிடுபவர்’ என தனது அடிப்பொடி சொல்லும் தகவலைக் கேட்டு வெலவெலக்கும் ‘ஆல்தோட்ட பூபதி’ பாத்திரமும் அந்தப் பட்டியலில் சேரும்!

கலகலப்பான நண்பர்

தமிழ் சினிமாவில் நாயகர்களின் நண்பர் குழாமில் இடம்பெறும் நகைச்சுவை நடிகர்கள், தங்கள் பிரத்யேகத் திறமை மூலம் தனிக் கவனம் பெறுவார்கள். ஷோபா சந்திரசேகர் இயக்கிய ‘நண்பர்கள்’ திரைப்படம் மூலம் அப்படியான கவனத்தை ஈர்த்த விவேக், ‘எம்ஜிஆர் நகரில்’, ‘இன்னிசை மழை’, ‘நான் பேச நினைப்பதெல்லாம்’, ‘புதிய மன்னர்கள்’ போன்ற படங்கள் மூலம் கலகலப்பான நண்பர் பாத்திரமாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 90-களின் பிற்பகுதியில் அவர் நடித்த ‘காதல் மன்னன்’, ‘சொல்லாமலே’, ‘கண்ணெதிரே தோன்றினாள்’ போன்ற படங்கள் அதுபோன்ற பாத்திரங்களில் அவரை மென்மேலும் மெருகேற்றின.

2000-களில் அவர் நடித்த பல படங்கள் அவரைத் தவிர்க்க முடியாத நடிகராக நிலைநிறுத்தின. சக போட்டியாளராகப் புயல் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்த வடிவேலுவுடன் சேர்ந்து நடித்த படங்களிலும் விவேக்கின் நகைச்சுவைத் திறன் நன்றாகவே எடுபட்டது. வார இதழ்களில் விவேக் எழுதிய தொடர்கள், எழுத்திலும் அவரது நகைச்சுவை உணர்வு எந்த அளவுக்கு ஊடுருவியிருந்தது என்பதை உணர்த்தின. விளையாட்டு வீரர்கள் முழங்காலில் அணியும் Knee pad -ஐ ‘முட்டி ஜட்டி’ என்று குறும்புடன் அவர் எழுதியிருந்தது ஒரு சோறு பதம்!

தன்னம்பிக்கையின் இலக்கணம்

இரண்டாம் வகுப்பு படித்தபோதே, பிரதமர் இந்திரா காந்திக்குப் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பி (இருவருக்கும் ஒரே பிறந்தநாள் தான்!), அவரிடமிருந்து பதில் கடிதமும் வரப்பெற்ற பெருமைக்குரியவர் விவேக். அதனால்தானோ என்னவோ, இயல்பிலேயே எவ்வளவு பெரிய ஆளுமை யையும் தயக்கமின்றி அணுகும் ஆற்றல் அவருக்கு இருந்தது. தன் நகைச்சுவைத் திறன் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் அவருக்குத் துணை நின்றது. நடிகர் திலகம் சிவாஜியின் சீரியஸான நடிப்பையே பகடி செய்து சிரிக்க வைக்கும் ஆற்றலும் அவருக்கு இருந்தது. ‘பராசக்தி’ படத்தின் புகழ்பெற்ற நீதிமன்றக் காட்சியைப் பகடி செய்து நடித்து பாராட்டைப் பெற்றார். திமுக தலைவர் கருணாநிதி போல மிமிக்ரி செய்து நடிக்கும் தைரியமும் விவேக்குக்கு இருந்தது.

மூடநம்பிக்கைகளைத் துணிச்சலுடன் கிண்டல் செய்யும் வசனங்களுடன் அவர் நடித்த பல பாத்திரங்கள் அவருக்கு ‘சின்னக் கலைவாணர்’ எனும் பட்டத்தைப் பெற்றுத்தந்தன. சிறுநகரங்களிலிருந்து சென்னை செல்லும் இளைஞர்களின் திரைப் பிரதிநிதியாகவும் விவேக் மிளிர்ந்தார்.

மாநகரத்தின் வாழ்க்கைக்கூறுகளில் இருக்கும் அவலங்கள் அவரது நகைச்சுவையில் மென்சோகமாக, உரிமையுடனான விமர்சனமாக இழையோடின. லிங்குசாமி இயக்கிய ‘ரன்’ திரைப்படம் அவற்றின் உச்சமாக அமைந்தது. தான் சார்ந்த திரையுலகம் உட்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த போக்குகளை, போகிறபோக்கில் மென்மையாக விமர்சிக்கும் திறனையும் அவர் பெற்றிருந்தார். “இப்பல்லாம் படங்கள்ல பாட்டு வந்தா, லேடீஸே தியேட்டருக்கு வெளியில போய் தம்மடிக்கிறாங்க” என்று வசனம் பேசுவதற்கெல்லாம் திரை ரசனை சார்ந்தும் ஆழமான புரிதல் வேண்டும். அது விவேக்குக்கு இருந்தது. அதனால்தான் ‘கருத்து கந்தசாமி’யாக அவரால் பரிமளிக்க முடிந்தது.

நிஜ வாழ்விலும் சிறந்த மனிதர்

திரைக்கு வெளியிலும் மிகச் சிறந்த ஆளுமையாக விவேக் திகழ்ந்தார். அப்துல் கலாமின் அன்பையும் அபிமானத்தையும் பெற்றிருந்தார். அப்துல் கலாம் கேட்டுக்கொண்டதன்படி மரம் நடுவதை ஓர் இயக்கமாக நடத்த ஆரம்பித்தார். எதிர்காலத் தலைமுறை மீது அவருக்கு ஆழ்ந்த அக்கறை இருந்தது. பள்ளி மாணவர்கள் தொடங்கி கல்லூரி மாணவர்கள் வரை, அனைவரும் எப்படி தங்கள் எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்த சிந்தனை அவரது பேச்சிலும் நடிப்பிலும் எதிரொலித்தது.

தனது மகன் பிரசன்ன குமார் 13-வயதிலேயே அகால மரணமடைந்தது விவேக்கை முற்றிலும் நொறுக்கி விட்டது. அதிலிருந்து மீண்டுவர முடியாமல் தவித்தவர், தனது நெருக்கமான வழிகாட்டிகளின் துணையுடன் மெல்ல மெல்ல மீண்டார். தனது மகனின் பெயரில் அறக்கட்டளையைத் தொடங்கி, மரக்கன்றுகள் நடும் பணிகளைப் பரவலாக முன்னெடுத்தார். நட்புக்கு இலக்கணமாக வாழ்ந்தார். தன்னுடன் கல்லூரியில் பயின்றவர்கள், அரசு அலுவலகத்திலும் சினிமாவிலும் உடன் பணிபுரிந்தவர்கள், உள்நாடு - வெளிநாடுவாழ் ரசிகர்கள் என எல்லோருடனும் நட்பைப் பேணினார். தனது நண்பர் செல் முருகனுக்குத் திரையிலும் நிஜவாழ்விலும் முக்கிய இடமளித்தார். இசை மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்த விவேக், சமீபத்தில் இளையராஜாவைச் சந்தித்த கணம் வரை அவருடன் செல் முருகனைப் பார்க்க முடிந்தது.

கலைஞர்கள் என்பவர்கள் மக்களின் அன்றாட வாழ்வின் விழுமியங்களை உட்கிரகித்து, தத்தமது கலைவடிவங்களின் மூலம் வெளிப்படுத்துபவர்கள். பதிலுக்கு அந்தக் கலைஞர்களின் படைப்புகளின் தாக்கத்தைச் சமூகமும் பெறும். இப்படியான கொடுக்கல் - வாங்கல்தான் சம்பந்தப்பட்ட கலைஞர், சமூகத்தில் அடைந்திருக்கும் வீச்சை உணர்த்தும். விவேக் நடித்த பல நகைச்சுவைக் காட்சிகளும், அவற்றுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த மகத்தான வரவேற்பும் இந்த கொடுக்கல் - வாங்கலின் சிறந்த உதாரணங்கள்.

கடைசி கணம் வரை மக்களுடன் தொடர்பில் இருந்த ஜனரஞ்சக நடிகராக, மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பொறுப்பை இறுதிமூச்சு வரை கைவிடாத கலைஞராக வாழ்ந்து மறைந்திருக்கிறார் விவேக். சிரிக்க மட்டுமல்லாமல், சிந்தனையைத் தூண்டவும், சக மனிதர்கள் மீதான அன்பை வளர்க்கவும் நடிப்பு எனும் கருவியைப் பயன்படுத்திக்கொண்டவராகவே அவரது அடையாளம் என்றென்றும் நிலைத்திருக்கும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in