65-ம் ஆண்டில் ‘நீலமலைத் திருடன்’

இப்போதும் எனர்ஜி தரும் ‘சத்தியமே லட்சியமாய் கொள்ளடா’ பாடல்

65-ம் ஆண்டில் ‘நீலமலைத் திருடன்’

எம்ஜிஆர் படமென்றால் என்னவெல்லாம் இருக்க வேண்டும்?இன்னும் சொல்லவேண்டும் என்றால், தேவர் பிலிம்ஸ் படம் என்றால் எதெல்லாம் இருக்க வேண்டும்? கதை இருந்தது. சென்டிமென்ட் இருந்தது. ஹீரோயிஸம் இருந்தது. காதல் இருந்தது. ஆக்‌ஷன் இருந்தது. கெட்டவன் இருந்தான். குதிரை இருந்தது. நாய் இருந்தது. சண்டைக்காட்சிகள் எல்லாம் இருந்தன. படமும் இன்றைக்கும் மறக்க முடியாத படமாக இருக்கிறது. ஆனால் என்ன... ஒரு எம்ஜிஆர் படத்துக்குத் தேவையான சகலமும் இருந்தது. எம்ஜிஆர்தான் இந்தப் படத்தில் இல்லை. அந்தப் படம்... ‘நீலமலைத் திருடன்’.

தேவர் பிலிம்ஸ் 1956-ம் ஆண்டு முதன்முதலாகப் படம் தயாரித்தது. எம்ஜிஆரை வைத்து முதன்முதலாக படம் எடுத்தது. ‘தாய்க்குப்பின் தாரம்’ என்ற அந்தப் படம் வெற்றி பெற்றது. ஆனால் அந்தப் படம் எடுப்பதற்கு முன்பு வரை நல்ல நண்பர்களாக சின்னப்பா தேவரும் எம்ஜிஆரும் இருந்தார்கள். பிறகு இருவரும் சேர்ந்து இறுதிவரை அதே அன்புடனும் பாசத்துடனும் பல படங்கள் கொடுத்தார்கள். ஆனால், ‘தாய்க்குப்பின் தாரம்’ சமயத்தில் இருவருக்கும் ஏனோ மனஸ்தாபம் வந்துவிட்டது. இருவரும் பேசிக்கொள்ளவில்லை. 1957-ல், தேவர் பிலிம்ஸின் இரண்டாவது படைப்பாக வந்ததுதான் ‘நீலமலைத் திருடன்’. இதையடுத்து, எம்ஜிஆரும் சின்னப்பா தேவரும் மீண்டும் சேர்ந்து ‘தா’ வரிசைப் படங்களாகக் கொடுத்தார்கள் என்பதுதான் நமக்குத் தெரியுமே!

அண்ணனின் சொத்துகளை மது, மாது என்று செலவழிக்கும் தம்பி, அண்ணனின் மகனைச் சொத்துக்கு ஆசைப்பட்டுக் கொல்ல முடிவு செய்கிறான். அண்ணன், தன் குழந்தையை தங்கையிடம் விட்டுச் செல்கிறார்.

ஆனால் அங்கேயும் ஆபத்து வந்துவிட, தங்கை ஒரு பக்கம், தங்கையின் கணவர் ஒருபக்கம், தங்கையின் பெண் குழந்தை ஒருபக்கம், அண்ணனின் ஆண் குழந்தை ஒருபக்கம் என்று திசைக்கு ஒருவராக பிரிய நேர்கிறது.

அண்ணன் வந்து பார்த்தால் எவரையும் காணோம். காட்டுக்குகைக்குள் சென்றால், அங்கே தன் தம்பியால் பாதிக்கப்பட்டு, பழிக்குப் பழி வாங்கும் எண்ணத்துடன் பலரும் இருக்கிறார்கள்.

அவர்களுடன் அண்ணன் இணைகிறார். ‘நீலமலைத் திருடன் என்பவன் ஒருகாலத்தில் மக்களுக்கு உதவிகள் செய்தான். கெட்டவர்களை அழித்தான். நாமும் அதேபெயருடன் செயல்படுவோம்’ என்று அவர் சொல்ல எல்லோரும் சம்மதிக்கிறார்கள்.

இதேபோல் அந்த அண்ணனின் பையன் வளர்கிறான். கூட்டத்தில் சேருகிறான். ‘நீலமலைத் திருடன்’ எனும் பெயரில் கெட்டவர்களை அழித்து, மக்களுக்கு நன்மைகள் செய்கிறான். அந்தத் தங்கையின் மகள் ஒருவரின் வீட்டில் அடைக்கலமாகி வளர, முறைப்பெண் என்று தெரியாமலேயே இருவரும் காதலிக்கிறார்கள். பின்னர் ஒவ்வொருவரும் ஒருசமயத்தில் இணைகிறார்கள். வில்லன் தண்டிக்கப்படுகிறான். திருந்துகிறான். எல்லோரும் மீண்டும் சேர, திருமணம் நடக்க, ‘வணக்கம்’ போடுவதுதான் ‘நீலமலைத் திருடன்’ கதை.

நாயகன் ரஞ்சன். நாயகி அஞ்சலிதேவி. வில்லன் பி.எஸ்.வீரப்பா. அஞ்சலிதேவியின் அம்மா கண்ணாம்பா. நீலமலைத் திருடனைத் தேடும் போலீஸாக டி.ஏ.பாலையா. ரஞ்சனுடன் காமெடி கலாட்டாக்களுக்கு இருப்பவர் தங்கவேலு. அவருக்கு ஜோடியாக ஈ.வி.சரோஜா.

தேவர் பிலிம்ஸ் படத்துக்கே உண்டான குடும்பக் கதை, சஸ்பென்ஸ், அடியாள் கூட்டம், குதூகலப்படுத்துவதற்கான மிருக சாகசங்கள் என எல்லாமே இருக்கின்றன.

ஏற்கெனவே பல படங்களில் நடித்தவர்தான் ரஞ்சன். ஜெமினியின் ‘சந்திரலேகா’வில் வில்லத்தனத்தில் அட்டகாசம் பண்ணியெல்லாம் பேரெடுத்தவர்தான். காட்டில் நடந்துவருவார். புலி வரும். புலியுடன் சண்டை போடுவார். புலியைக் கொல்வார். திரும்பிப் பார்ப்பார். சிங்கம் வரும். இப்போது சிங்கத்துடன் சண்டை போடுவார். சிங்கத்தைக் கொல்வார்.

மேலும் கறுப்பு உடையும் முகமூடியும் அணிந்துகொண்டு, வெள்ளைக்குதிரையில் வலம் வருவார். அந்தக் குதிரை சொன்னதெல்லாம் கேட்கும். அதேபோல் நாய் ஒன்றும் வளர்ப்பார். அந்த நாய் இல்லாத சாகசங்களெல்லாம் பண்ணும். கடிதத்தையெல்லாம் கொண்டுபோய்க் கொடுக்கும்.

கட்டப்பட்ட குதிரையை அவிழ்த்துவிடும். கட்டப்பட்டு அடைக்கப்பட்டிருக்கும் அஞ்சலிதேவி இருக்கும் இடத்துக்கு குதிரையை நாய் அழைத்துச் செல்லும்.

சண்டைக்காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. தங்கவேலுவின் காமெடிக்கும் குறைவில்லை. பி.எஸ்.வீரப்பாவின் வில்லத்தனம் பெரிதாக இருக்காது என்றாலும் அவர் நடிப்பு வழக்கம்போல் அசத்தலாக இருக்கும்.

வழக்கம் போல கே.வி.மகாதேவன் இசை. ஏகப்பட்ட பாடல்கள். ’கொஞ்சும் மொழி பெண்களுக்கு’ என்ற பாடலை ஜிக்கியின் குரலில் கேட்கும்போது இன்னும் இனிமையும் இளமையும் கூடியிருக்கும். ’வெத்தல பாக்கு சுண்ணாம்பு’ என்ற ஜாலியான பாடலை எஸ்.சி.கிருஷ்ணன் கேலியாகவும் ரகளையாகவும் பாடியிருப்பார். ’சித்திரை மாதம் நிலவு’ என்ற பாடலை கஸ்தூரி எனும் பாடகி பாடியிருப்பார். ’உள்ளம் கொள்ளைபோகுதே’ என்ற பாடலும் நம் மனதைக் கொள்ளைகொள்ளும். எல்லாவற்றுக்கும் மேலாக இன்னொரு பாடல் இருக்கிறது.

‘மன்னாதி மன்னன்’ படத்தில் குதிரையில் வந்துகொண்டே ‘அச்சம் என்பது மடமையடா’ என்று பாடுவாரே எம்ஜிஆர். ‘வேட்டைக்காரன்’ படத்தில் குதிரையில் ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்’ என்று பாடுவார் அல்லவா! அதேபாணியில், குதிரையில் நாயை ஏற்றிக்கொண்டு தானும் உட்கார்ந்துகொண்டு, ‘சத்தியமே லட்சியமாய் கொள்ளடா’ என்று தத்துவ முத்துக்கள் தெறிக்கும் பாடலுக்கு நடித்திருப்பார் ரஞ்சன். மிகப்பெரிய ஹிட் பாடலாக டிஎம்எஸ் பாடி அசத்தியிருப்பார்.

1957 செப்டம்பர் 20-ல் வெளியானது ‘நீலமலைத் திருடன்.’ 65 ஆண்டுகளானாலும் இந்த ‘நீலமலைத் திருடன்’ எனும் தலைப்பில் ஒரு ‘கிக்’ இருக்கத்தான் செய்கிறது. ‘சத்தியமே லட்சியமாய் கொள்ளடா’ என்கிற டிஎம்எஸ் குரலில் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் ஒரு எனர்ஜி மனதுள் ஏறிக்கொண்டுதான் இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in