‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘தம்பிக்கு எந்த ஊரு’க்கெல்லாம் அக்கா ‘சபாஷ் மீனா’

64 ஆண்டுகளாகியும் இன்னும் ‘சித்திரம் பேசுதடி!’
‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘தம்பிக்கு எந்த ஊரு’க்கெல்லாம் அக்கா ‘சபாஷ் மீனா’

நடிகர் கார்த்திக், ஜாலியாக ஊரைச் சுற்றிக்கொண்டிருப்பார். அவரைத் திருத்த அவரின் அப்பா எத்தனையோ முயற்சிகள் செய்வார். கடைசியாக, எஸ்டேட் வைத்திருக்கும் தன் நண்பனிடம் ‘என் மகனை வேலையெல்லாம் செய்யவைத்து, உருப்படியாக்கு’ என்று சொல்லி அனுப்பிவைப்பார். அங்கே கார்த்திக்கும் கவுண்டமணியும் ஒன்றுசேர, கார்த்திக் ரம்பாவைப் பார்க்க, ஏக குளறுபடிகளும் காமெடிகளும் ரவுண்டுகட்டு நம்மை கிச்சுகிச்சு மூட்டும். ‘அட... ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம்தானே... செம படம்’ என்கிறீர்கள்தானே.

ரஜினி, அடிதடி வம்பு என்று போய்க்கொண்டே இருப்பார். பெரிய பணக்காரப் பிள்ளைதான் என்ற போதும், அவர் செலவு வைக்கும் பில்தொகை எகிறவைக்கும். ‘இவனைத் திருத்த ஒரே வழி... கிராமத்தில் உள்ள நண்பன் செந்தாமரைதான்’ என முடிவு செய்து, ரஜினியை கிராமத்துக்கு அனுப்பிவைப்பார். அங்கே, ரஜினி செய்யும் கலாட்டாக்களும் பாம்பைப் பார்த்து... ‘பா... பா... பா...’ என்று ரஜினியின் பாம்புக் காமெடியும் செம லெவல். ‘இது ‘தம்பிக்கு எந்த ஊரு’ படம்தானே. ரஜினி காமெடில கலக்கியிருப்பாரு. ‘காதலின் தீபமொன்று’ பாட்டெல்லாம் சூப்பரா இருக்கும்’ என்று உடனே சொல்லிவிடுவீர்கள்.

இந்த இரண்டு படங்களுக்கு மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ படங்களுக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்த படம் உண்டு. அதை ஆதாரமாகவும் இன்ஸ்பிரேஷனாகவும் வைத்துக்கொண்டுதான், எல்லோரும் அந்தக் கதைக்குள் புகுந்து புறப்பட்டு ஜெயித்தார்கள். சிவாஜி நடித்த அந்தப் படம் ‘சபாஷ் மீனா’.

Ramji

நாடகம், நண்பர்களுடன் ஊர் சுற்றுதல், வீட்டுக்குத் தெரியாமல் நைட் ஷோ போவது என ஜாலியாகச் சுற்றிக் கொண்டிருப்பார் சிவாஜி. மிகப்பெரிய செல்வந்தரான அவரின் அப்பாவுக்கு சிவாஜிதான் தலைவலி. ‘திருச்சியில் இருந்தால் இவன் தேறமாட்டான். சென்னையில் இருக்கும் நண்பனிடம் அனுப்பிவைத்து அவனை நல்ல வழிக்குக் கொண்டுவரச் சொன்னால்தான் இவனைத் தேற்ற முடியும்’ என்று சென்னையில் இருக்கும் நண்பர் ரங்காராவிடம் அனுப்பிவைப்பார்.

சிவாஜியின் நண்பர் சந்திரபாபு. ஊருக்குக் கிளம்பும்போது, சந்திரபாபுவையும் அழைத்து வருவார். தனக்குப் பதிலாக ரங்காராவின் வீட்டுக்கு சந்திரபாபுவை அனுப்பிவைப்பார். ‘இதோ... என் அப்பா கொடுத்த கடிதம்’ என்று சந்திரபாபு கொடுக்க, சென்னையில் பணமில்லாமல் சிவாஜி கஷ்டப்பட, அங்கே குலதெய்வம் ராஜகோபாலின் அறிமுகம் கிடைக்கும். ரங்காராவின் மகள் சரோஜாதேவி. சந்திரபாபு மீது இவருக்குக் காதல் மலரும். குப்பத்தில் பூ விற்கும் மாலினியைப் பார்க்கும் சிவாஜிக்கு அவர் மீது காதல் பூக்கும்.

’சபாஷ் மீனா’ டைட்டில்
’சபாஷ் மீனா’ டைட்டில்Ramji

நடுவே, மகன் காணாமல் போனதால், மனநிலை பாதிக்கப்பட்ட செல்வந்தர் சிவாஜியைப் பார்த்து ‘மகனே’ என்று அழைத்துச் செல்வார் வீட்டுக்கு. அங்கே, குலதெய்வம் ராஜகோபாலும் சேர்ந்து அவரின் கம்பெனியை, நிறுவனத்தை சரிசெய்ய முயற்சி செய்வார்கள்.

இங்கே, ரங்காராவிடமும் சரோஜாதேவியிடமும் மாட்டிக்கொண்டு, தவித்து மருகுவார் சந்திரபாபு. ஒருகட்டத்தில் வீட்டைவிட்டு ஓடிவிட, அவரைத் தேடி ஆட்கள் செல்ல, ரிக்‌ஷா வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் சந்திரபாபுவைப் பிடித்து வருவார்கள். ஆனால் இவர் இன்னொரு சந்திரபாபு. மனைவி, குழந்தைகளெல்லாம் உண்டு. இந்த சந்திரபாபு அங்கே செல்ல, அந்த சந்திரபாபு இங்கே மாட்டிக்கொள்ள ஏக கலாட்டா.

பூ விற்கும் மாலினியின் முறைமாமன் கள்ளபார்ட் நடராஜன், மனநிலை பாதிக்கப்பட்ட முதலாளியிடம் வேலை செய்வார். ஏகப்பட்ட பணத்தைச் சுருட்டியிருப்பார். இதையெல்லாம் கண்டுபிடித்த சிவாஜி, நடவடிக்கை எடுக்க கெடு விதிப்பார்.

இந்தக் களேபரத்தில், கள்ளபார்ட்டின் நாடகத்தில் சிவாஜி ஒருவரைச் சுட்டு சாகடித்துவிட்டதாக பிளான் செய்துவிட, போலீஸ் துரத்தும். சிவாஜி தலைமறைவு. பிறகென்ன... ஒருபக்கம் சிவாஜியைக் கைது செய்வார்கள். இன்னொரு பக்கம் இரண்டு சந்திரபாபுகளையும் கைதுசெய்வார்கள். இறுதியில், எல்லா உண்மைகளும் தெரிந்து, எல்லோரும் ஒன்றுசேருவார்கள். ‘சுபம்’ போட்டு நம்மை வீட்டுக்கு அனுப்ப, நாமும் மனம் முழுக்க மகிழ்ச்சியும் முகம் முழுக்கச் சிரிப்புமாக சந்தோஷமாக வெளியே வந்தோம்.

பி.ஆர்.பந்துலு தன் பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக தயாரித்து, இயக்கிய படம். ‘புதிய பறவை’ முதலான படங்களை இயக்கிய தாதா மிராஸியின் கதை. வசனத்தை இயக்குநர் ப.நீலகண்டன் எழுதினார். டி.ஜி.லிங்கப்பா இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகின. எல்லாப் பாடல்களையும் கு.மா.பாலசுப்ரமணியம் எழுதியிருந்தார். ’அலங்காரவள்ளியே’, ’நல்வாழ்வு காணலாமே...’, ’ஆணாகப் பிறந்ததெல்லாம்’ என எல்லாப் பாடல்களுமே இனிமை ரகம். ‘காணா இன்பம் கனிந்ததேனோ’ பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ‘சித்திரம் பேசுதடி’ பாடலை மிக அழகாகப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். அதற்கு சிவாஜியின் நடிப்பும் மிக ஸ்டைலாக இருக்கும். இவருக்கு ஜோடி மாலினி எனும் நடிகை. இவர்தான் மீனா. ‘சபாஷ் மீனா’.

பி.ஆர்.பந்துலுவும் இயக்குநர் சந்தான பாரதியின் அப்பாவான சந்தானமும் நடித்திருந்தார்கள். சரோஜாதேவி சந்திரபாபுவுக்கு ஜோடி. மனநிலை பாதிக்கப்பட்டவரின் மகனான குலதெய்வம் ராஜகோபாலையும் கடைசியில் கண்டறிந்துவிடுவார்கள். இவரும் சிவாஜியும் சேர்ந்துகொண்டு, வீடுகளில் கண்ணாடியைக் கல் வீசி உடைப்பதும் சிவாஜிவந்து கண்ணாடி போட்டுவிட்டு காசாக்குவதும் பிறகு மாட்டிக்கொண்டு தரும அடி வாங்குவதும் ரகளையாக இருக்கும்.

சிவாஜிக்கு இணையாக சந்திரபாபுவுக்குக் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும். இயக்குநர்கள் பி.ஆர்.பந்துலு, தாதா மிராஸி, ப.நீலகண்டன் என மூவர் வெவ்வேறு பணிகளைச் செய்த இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமின்றி, தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத படமாகவும் அமைந்தது. இந்தப் படத்தை, பிரசித்தி பெற்ற நிறுவனமான ‘ஏ.எல்.எஸ்.’ நிறுவனம் வெளியிட்டது (கவியரசர் கண்ணதாசனின் சகோதரர் ஏ.எல்.சீனிவாசனின் நிறுவனம் இது).

Ramji

சிவாஜியை வைத்து பல படங்களைக் கொடுத்த பந்துலு, முழுக்க முழுக்க ‘பலே பாண்டியா’ எனும் காமெடிப் படத்தைக் கொடுத்தது போலவே இந்தக் காமெடி படத்தையும் தந்து அசத்தியிருப்பார். ’பலே பாண்டியா’வில் வரும் மனநிலை பாதிக்கப்பட்ட கதாபாத்திரம் போலவே, இதிலும் ‘மகனே... வாப்பா... மகனே... உக்காருப்பா’ என்றெல்லாம் அதேபோல் இழுத்து இழுத்துப் பேச வைத்திருப்பார் பந்துலு.

1958 அக்டோபர் 3-ம் தேதி வெளியான ‘சபாஷ் மீனா’வை மனதில் வைத்துக்கொண்டு, எத்தனையோ படங்கள் ‘உல்டாபுல்டா’ செய்து வந்திருக்கின்றன. அதேபோல் இந்தப் படத்தை இந்தி, கன்னடம் என பல மொழிகளில் முறைப்படி உரிமை வாங்கி, ரீமேக்கும் செய்து, வெற்றியைச் சுவைத்திருக்கிறார்கள்.

படம் வெளியாகி 64 ஆண்டுகளாகின்றன. இன்றைக்கும் இரவையும் நிலவையும் நம்மையும் தாலாட்டுகிற, மனதை அமைதிப்படுத்துகிற ‘சித்திரம் பேசுதடி’யையும் ‘காணா இன்பம் கனிந்ததேனோ’வையும் ரசித்துக்கொண்டேதான் இருக்கிறோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in