மக்களின் மனம் கவர்ந்த ‘மன்னாதி மன்னன்!’

’மன்னாதி மன்னன்’ எம்ஜிஆர்
’மன்னாதி மன்னன்’ எம்ஜிஆர்

மன்னர் காலத்துப் படமென்றாலே அந்த செட்டுகளும் பிரம்மாண்ட அரங்குகளும் படத்தில் வருவோருக்கான ஆடை, வாள், ஆபரணங்கள் முதலான விஷயங்களும் நம்மை ரொம்பவே ஈர்த்துவிடும். அதிலும் எம்ஜிஆருக்கு ராஜா வேஷம் கன கச்சிதமாகப் பொருந்திவிடும். சாதாரணமாகவே அழகு கொஞ்சும் அவர் முகம், ராஜா வேஷத்தில் இன்னும் ஜொலிக்கும். அப்படி, எம்ஜிஆரின் கம்பீரத்துக்காகவும் பத்மினியின் பேரழகுக்காகவும் சண்டைக்காட்சிகளுக்காகவும் பாடல்களுக்காகவும் திரும்பத்திரும்பப் பார்க்கவைத்தான் ‘மன்னாதி மன்னன்’.

சிறிதும் பெரிதுமாக படங்கள் வந்தாலும் மிகப்பெரிய வெற்றி வரவில்லையே எனும் ஏக்கம் எம்ஜிஆருக்கு இருந்த காலம் அது. ’மலைக்கள்ளன்’, ‘மதுரை வீரன்’ மாதிரியான படங்கள் வந்து வெற்றி பெற்றாலும் அந்த ‘எம்ஜிஆரிஸம்’ படங்கள் உருவாகவில்லை. அதைக் கட்டமைக்க நினைத்த எம்ஜிஆர், சொந்தத் தயாரிப்பில், 1958-ம் ஆண்டு, ‘நாடோடி மன்னன்’ படத்தைத் தயாரித்து இயக்கினார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து, தன் படத்துக்கு எம்ஜிஆரை ஒப்பந்தம் செய்தார் தயாரிப்பாளர் எம்.நடேசன். ‘நாடோடி மன்னன்’ தாக்கத்தில், ‘மன்னாதி மன்னன்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கினார் நடேசன்.

எம்ஜிஆர், பத்மினி, அஞ்சலிதேவி, எம்ஜி.சக்கரபாணி, பி.எஸ்.வீரப்பா முதலானோர் நடித்தார்கள். கவிஞர் கண்ணதாசன் எழுதிய ‘ஆட்டனத்தி ஆதிமந்தி’ எனும் கதையையும் அதையொட்டி பாரதிதாசன் எழுதிய ’சேரதாண்டவம்’ எனும் கவிதையையும் வைத்து ‘மன்னாதி மன்னன்’ திரைக்கதை உருவாக்கப்பட்டது. படத்துக்குக் கதை, வசனம் கண்ணதாசன்!

சேர தேசத்தின் இளவரசன் எம்ஜிஆர். நடனப் பெண்ணான பத்மினி மீது காதல் கொள்கிறார். ஆனால் இதெல்லாம் தெரியாத சேர மன்னரோ, கரிகால் சோழனின் மகளைப் பெண் கேட்டு அனுப்புகிறார்.

மன்னாதி மன்னன் டைட்டில்
மன்னாதி மன்னன் டைட்டில்

ஆனால் எம்ஜிஆரின் அம்மா குறித்தும் பிறப்பு குறித்தும் கேலி பேசி ‘தன் மகளைத் தரமுடியாது’ என மறுத்து அவமானப்படுத்திவிடுகிறான் சோழ மன்னன். இதனால் வெகுண்டெழும் எம்ஜிஆர், ‘’நான் போய், அந்த நாட்டு இளவரசியைக் கடத்தி வருகிறேன். சோழ மன்னனின் கொட்டத்தை ஒடுக்குகிறேன்’’ என்று சொல்லிவிட்டுச் செல்கிறார். வழியில் கரிகால் சோழனின் மகள் இளவரசி அஞ்சலிதேவிக்கு ஆபத்து. அவரை எம்ஜிஆர்தான் காப்பாற்றுகிறார். தன்னை இளவரசன் என்று காட்டிக்கொள்ளாமல் வேறு ஏதோ சொல்லி சமாளிக்கிறார்.

இந்தநிலையில் பத்மினியை அடைய நினைக்கிறார் பி.எஸ்.வீரப்பா. அப்போது எம்ஜிஆர் வந்து காப்பாற்றுகிறார். ஆனால் பத்மினியைப் பற்றி வீரப்பா தவறாகச் சொல்ல, அதை உண்மையென்று நம்பி பத்மினியை வெறுக்கிறார் எம்ஜிஆர். ஒருகட்டத்தில் இளவரசியான அஞ்சலிதேவியை திருமணமும் செய்துகொள்கிறார். இதை அறிந்த பத்மினி, மனம் நொந்து, புத்த மதத்துக்கு மாறுகிறார்.

பிறகொரு நாள்... காவிரிக்கரையில் விழா. அப்போது கரையில் பத்மினியின் சடலத்தைப் பார்க்கும் எம்ஜிஆர் பரிதவித்துப் போகிறார். ஆனால் இறந்தது பத்மினி அல்ல. எம்ஜிஆரும் காவிரியில் மூழ்க குதிக்கிறார். அவரை பத்மினிதான் காப்பாற்றுகிறார். ஆனால், அஞ்சலிதேவியும் எம்ஜிஆரும் சேருகிறார்கள். மனம் வெறுத்த பத்மினி, காவிரில் விழுந்து இறக்கிறார். எம்ஜிஆர் அஞ்சலிதேவியை அழைத்துக்கொண்டு சொந்த தேசத்துக்குச் செல்கிறார்.

படம் கொஞ்சம் அங்கும் இங்குமாக அலைந்தாலும் எம்ஜிஆர் போரடிக்காமல் பார்த்துக்கொள்வார். பத்மினியின் கொள்ளை அழகில் திரைக்கதை தொய்வையெல்லாம் மறந்தார்கள் ரசிகர்கள். போதாக்குறைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் ஜீவசுகத்தைக் கொடுத்தன.

’ஆடாத மனமும் உண்டோ’ என்ற பாடல் முழு கர்நாடக சங்கீத இசையுடன் அமைந்து, டிஎம்எஸ் குரலில் நம் மனதை ரம்மியமாக்கியது. ’கனியக் கனிய மழலை பேசும் கண்மணி’ பாடல், அந்தக் காலத்து காதல் காவியப் பாடலாக அமைந்தது.

’நீயோ நானோ யார் நிலவே அவர் நினைவைக் கவர்ந்தது யார் நிலவே’ என்ற பாடலை இங்கே அஞ்சலிதேவி பாடுவார். அங்கே பத்மினி பாடுவார். நடுவே, ‘பூவிரிச் சோலையில் மயிலாடும் புரிந்தே குயில்கள் இசைபாடும்’ என்று எம்ஜிஆர் பாடுவார். ந்தப் பாடலை எம்ஜிஆருக்காக பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடியிருப்பார்.

’கண்கள் இரண்டும் இன்று உம்மைக் கண்டு பேசுமோ?’ என்ற பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ’கலையோடு கலந்தது உண்மை’ என்ற பாடலை எம்.எல்.வசந்தகுமாரி பாடினார். 'காவிரித் தாயே காவிரித் தாயே காதலர் விளையாட பூவிரித்தாயே’ என்ற பாடலை ஜமுனா ராணி பாடியிருந்தார்.

எல்லாப் பாடல்களையும் விட முக்கியமான பாடல் ‘அச்சமென்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா’ பாடல் மிகப்பெரிய கொள்கைப் பாடலாகவும் எம்ஜிஆருக்கு அரசியல் தாரக மந்திரப் பாடலாகவும் அமைந்துவிட்டது. ' வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி / மக்களின் மனதில் நிற்பவர் யார்/ மாபெரும் வீரர் மானம் காப்போர் / சரித்திரம் தனிலே நிற்கின்றார் / அச்சம் என்பது மடமையடா / அஞ்சாமை திராவிடர் உடமையடா / ஆறிலும் சாவு நூறிலும் சாவு / தாயகம் காப்பது கடமையடா’ என்ற கவியரசரின் வரிகளில் சிலிர்த்து தோள் சிலுப்பிக் கொண்டார்கள் தமிழர்கள்.

டைட்டிலில் ‘அஞ்சலிதேவி’ என்று போடவில்லை. ‘அஞ்சலி’ என்றுதான் போடுகிறார்கள். அதேபோல ‘குலதெய்வம்’ ராஜகோபால் என்று போடவில்லை. வி.ஆர்.ராஜகோபால் என்றுதான் போடுகிறார்கள். ஆனால், புரட்சி நடிகர் எம்ஜிஆர் என்று அப்போதே போட்டிருக்கிறார்கள்.

மன்னாதி மன்னன்
மன்னாதி மன்னன்

1960 அக்டோபர் 19-ம் தேதி வெளியானது ‘மன்னாதி மன்னன்’. படம் வெளியாகி, இன்றுடன் 62 ஆண்டுகளாகின்றன. ஆனால் எம்ஜிஆரின் பிறந்த நாளிலும் நினைவு தினத்திலும் கட்சிக் கூட்டங்களிலும் இன்றைக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நாமும் குதிரையில் ஜோராகப் பயணிக்கும் நினைப்பில், ரசித்துக் கொண்டே இருக்கிறோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in