கவலை இல்லா மனிதர்களின் கதை!

கவலை இல்லாத மனிதன்
கவலை இல்லாத மனிதன்

கவலை இல்லாத மனிதர்கள் என்று இந்த உலகத்தில் யார்தான் இருக்கிறார்கள்? ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவகையில், ஏதோவொன்று கவலையாக இருக்கும். பணம் இல்லை என்பதுதான் ஏழைகளின் கவலையென்றால் பணமிருந்தும் நிம்மதி இல்லையே எனும் கவலையுடன் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். கவலைகள், ஆளுக்கு ஆள், சூழலுக்கு சூழல் மாறுபடலாம். ‘அட... இதெல்லாம் ஒரு விஷயமா... இதுக்குப் போய் கவலைப்படுறீங்களே’ என்று நாம் இன்னொருவருக்குச் சமாதானம் சொல்லலாம். பிறகு அதே விஷயத்துக்கு நாமேகூட கவலைப்படலாம். ஆக, கவலை இல்லாத மனிதர்கள் என்று எவருமே இல்லை. ஆனால் கவியரசு கண்ணதாசனுக்கு அப்படியொரு ஆசையோ கவலையோ இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அவர் தயாரித்த படத்துக்கு ‘கவலை இல்லாத மனிதன்’ என்றே பெயர் வைத்தார்.

நமக்கெல்லாம் பாடலாசிரியராக நன்கு பரிச்சயமான கவியரசர் கண்ணதாசன், எத்தனையோ படங்களுக்குக் கதை வசனம் எழுதியிருக்கிறார். சில படங்களில் ஒரே ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். படங்களைத் தயாரித்திருக்கிறார். ‘மாலையிட்ட மங்கை’, ‘சிவகங்கை சீமை’, ‘கருப்பு பணம்’, ‘வானம்பாடி’, ‘ரத்தத்திலகம்’ போன்றவை கண்ணதாசன் தயாரிப்பில் உருவான படங்கள். ஒவ்வொரு படமும், அட்டகாசமான தயாரிப்பும் பொருட்செலவும் கொண்டிருந்தன என்றபோதும் ஏனோ வெற்றி பெறவில்லை. ஆம்! திரையுலகம் கண்ணதாசன் எனும் படைப்பாளிக்குப் பல வெற்றிகளைக் கொடுத்திருந்தாலும் கண்ணதாசன் எனும் தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தையெல்லாம் கொடுத்துவிடவில்லை. எது குறித்தும் கவலைப்படாத கவியரசர், இவை குறித்தும் அலட்டிக்கொள்ளவில்லை.

சரி... ‘கவலை இல்லாத மனிதன்’ படத்துக்கு வருவோம்.

பணக்காரர் பாலையா. அவரின் மகன்கள் எம்.ஆர்.ராதா, சந்திரபாபு. இன்னொரு பக்கம் பணக்காரர் டி.கே.பகவதி. அவரின் மகள் எம்.என்.ராஜம். மது, மாது என கேளிக்கைகளில் நாட்டம் கொண்டிருக்கும் எம்.ஆர்.ராதா, ராஜசுலோசனாவைக் காதலித்து, கர்ப்பமாக்கி, குழந்தையையும் கொடுத்து ஏமாற்றிவிடுவார். பிறகு திருமணம் செய்துகொண்டு, அவரை வீட்டிலிருந்து துரத்திவிடுவார்.

சந்திரபாபு, சமத்துவ சிந்தனைகள் கொண்டவர். சாதிப் பாகுபாடுகள் பார்க்காதவர். குடிசையில் வாழும் எல்.விஜயலட்சுமியிடம் ஏற்படும் நட்பு, பிறகு காதலாக மலரும். அப்பா வாங்கிய கடனுக்காக டி.கே.பகவதி வீட்டை ஜப்தி செய்துவிட, ஆதரவின்றி நிற்பார் டி.ஆர்.மகாலிங்கம். அவருக்கு டி.கே.பகவதியின் மகளான எம்.என்.ராஜம் அடைக்கலம் கொடுத்து உதவுவார். அந்த அன்பே பின்னர் காதலாகும்.

ஆதரவற்ற நிலையில், எங்கு செல்வது என்றே தெரியாமல் திரியும் ராஜசுலோசனா, தாய்மாமனின் திருமணத்துக்கு வருவார். அவரைப் பார்த்துவிட்டு அனைத்தையும் தெரிந்துகொண்ட அவர், ராஜசுலோசனாவுக்கு அடைக்கலம் கொடுப்பார். கடன் வாங்கி உல்லாசமாகத் திரிந்த எம்.ஆர்.ராதாவால் பாலையாவுக்குச் சிக்கல். வீடுவாசல், சொத்துபத்து, ஹோட்டல் கடை என அனைத்தையும் இழந்து ஓட்டாண்டியாக, கையில் திருவோட்டுடன் கோயிலில் இருப்பார்.

வக்கீலுக்குப் படித்திருக்கும் சந்திரபாபுதான், அண்ணன் செய்த துரோகத்தை அறிந்து அவர்கள் திருமணம் புரியக் காரணமாக இருப்பார். எம்.என்.ராஜமும் டி.ஆர்.மகாலிங்கமும் இணைவதற்கும் உதவுவார். கையில் குழந்தையுடன் குடிசையில் வாழ்ந்து வரும் அண்ணி ராஜசுலோசனாவுக்கு அன்பும் ஆதரவும் தருவார்.

இந்த நிலையில், குழந்தையின் பெயரில் லாட்டரிச்சீட்டு வாங்க, அதற்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசு விழுந்திருக்கும். பேப்பரில் வந்த செய்தியை அறிந்து, பணத்தை அபகரிக்க, பொய்ப்பாசம் காட்டி நடிப்பார் எம்.ஆர்.ராதா. லாட்டரிச் சீட்டைக் கேட்டு ராஜசுலோசனாவை மிரட்ட, ‘அது உங்கள் தம்பியிடம்தான் இருக்கு’ என்று சொல்ல, ‘தரமுடியாது’ என்று சந்திரபாபு சொல்ல, குழந்தையைத் தூக்கிக்கொண்டு லாட்டரிச் சீட்டு கம்பெனிக்கு சென்று, ‘இந்தக் குழந்தைக்குத்தான் பரிசு விழுந்திருக்கு. பணம் கொடுங்க’ என்று எம்.ஆர்.ராதா சொல்ல, ‘சீட்டு என்னிடம் இருக்கு. குழந்தையை இவர் கடத்திக்கிட்டு வந்துட்டாரு’ என்று சந்திரபாபு சொல்ல, விஷயம் கோர்ட்டுக்குச் செல்லும்.

கவலை இல்லாத மனிதன்
கவலை இல்லாத மனிதன்

கோர்ட்டில், அப்பா பாலையா ‘இவனாலதான் நான் அழிஞ்சேன்’ என்பார். ‘இந்தக் குழந்தைக்கு இவன் அப்பா இல்லை’ என்பார். ஆனால் ராஜசுலோசனா, ‘இவர்தான் குழந்தைக்கு அப்பா’ என்று உண்மையைச் சொல்ல, எம்.ஆர்.ராதாவுக்குப் பணம் கிடைக்கும். குழந்தையை ராஜசுலோசனாவிடம் கொடுப்பார். அப்போது ராஜசுலோசனாவின் தாய்மாமா, துப்பாக்கியால் எம்.ஆர்.ராதாவைச் சுட, குறுக்கே பாய்ந்த சந்திரபாபுவின் மீது பட்டு அவர் இறக்க, எம்.ஆர்.ராதா திருந்துவார். ராஜாசுலோசனா மகிழ்வார் என படம் நிறைவுறும்.

1960 ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியானது ‘கவலை இல்லாத மனிதன்’. விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை. கே.சங்கர் படத்தை இயக்கினார். படத்தின் முதல் காட்சியில் பட்டமளிப்பு விழா. அதில் கண்ணதாசன் கலந்துகொண்டு, ’கவலை இல்லாமல் வாழ்ந்துவிட்டீர்கள். கல்லூரிக் காலத்துக்குப் பிறகு உங்கள் வாழ்க்கை கவலை இல்லாமல் அமையட்டும்’ என்று வாழ்த்துவதுடன் படம் தொடங்கும். ‘உலகத்தை அறிந்தவர் துணிந்தவர் அவரே கவலை இல்லாத மனிதன்’ என்று சந்திராபு பாடுவார். ‘நான் தெய்வமா நீ தெய்வமா, நமக்குள்ளே யார் தெய்வம் பதில் சொல்லம்மா’, ‘காட்டில் மரம் உறங்கும் கழனியில் நெல் உறங்கும் பாட்டில் பொருள் உறங்கும் பாற்கடலில் மீன் உறங்கும்’ என்றொரு பாடல். ‘சிரிக்கச் சொன்னார் சிரித்தேன் பார்க்கச் சொன்னார் பார்த்தேன்’ என்றொரு பாடல். இன்னும் சில பாடல்களும் உண்டு. என்றாலும் இப்போதும் எப்போதும் நம்மை என்னவோ செய்கிற ‘பிறக்கும்போதும் அழுகின்றாய் இறக்கும்போதும் அழுகின்றாய்’ என்ற பாடல் இந்தப் படத்தில்தான் இடம்பெற்றது.

கவலை இல்லாத மனிதன்
கவலை இல்லாத மனிதன்

சந்திரபாபு பிரமாதமாக நடித்திருப்பார். ஆனால் காமெடியை விட சீரியஸ் காட்சிகளே இவருக்கு அதிகம். பாலையா வழக்கம்போல அசத்தியிருப்பார். ராஜசுலோசனாவும் எம்.என்.ராஜமும் எல்.விஜயலட்சுமியும் சிறப்பாக நடித்திருப்பார்கள். டி.ஆர்.மகாலிங்கம் யதார்த்த நடிப்பை வழங்கியிருப்பார். படத்தில் எம்.ஆர்.ராதாதான் பட்டையைக் கிளப்பியிருப்பார். அவரது குரலின் ஏற்ற இறக்கங்களும் உடல்மொழியும் அதகளம் செய்யும்!

படம் விறுவிறுப்பாகவோ சுறுசுறுப்பாகவோ நகராதுதான். அழுத்தமான காட்சிகளோ அதிரடியாக எதிர்பாராத திருப்பங்களோ இல்லைதான். ஆனாலும் கண்ணதாசன் தயாரித்த ‘கவலை இல்லாத மனிதன்’ எல்லோரையும் ஏனோ கவனிக்கவைத்தது. மறக்கவிடாமல் செய்தது.

கவியரசர் கண்ணதாசன்
கவியரசர் கண்ணதாசன்

“நான் ‘கவலை இல்லாத மனிதன்’ என்றொரு படமெடுத்தேன். அதனால் பல கவலைகளால் பாதிக்கப்பட்டேன்’’ என்று தனக்கே உரிய நயத்துடனும் கேலியுடனும் கண்ணதாசன் எழுதியது நினைவுக்கு வருகிறது. படப்பிடிப்புக்கு வராமல் எல்லோருக்கும் தயார் நிலையிலிருக்க, சந்திரபாபு பலமுறை வராமல் டிமிக்கி கொடுத்திருக்கிறார் என்று கண்ணதாசனே எழுதியிருக்கிறார்.

இந்தப் படத்தில், பாடியவர்கள் பட்டியலில் சந்திரபாபுவின் பெயரே இடம்பெறவில்லை. அதேபோல், இன்னொரு விஷயம்... படத்துக்குக் கதை, வசனம், பாடல்கள் எழுதி, தயாரித்த கவியரசர் கண்ணதாசனின் பெயர் டைட்டிலில் ஒரு இடத்தில் கூட இடம்பெறவில்லை என்பது ஆச்சரியம் கலந்த வருத்தமே!

படம் வெளியாகி, 62 ஆண்டுகளாகின்றன. ’கவலை இல்லாத மனிதர்கள்’ என்று எவருமே இல்லை. கண்ணதாசன் காலங்களுக்கு அப்பாற்பட்டும் வாழ்ந்துகொண்டே இருப்பார். அவரின் ‘கவலை இல்லாத மனிதனும்’ காலங்கள் கடந்தும் நம் மனதில் நின்றுகொண்டே இருப்பான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in