61-ம் ஆண்டில் ‘பார்த்தால் பசி தீரும்’: ‘அன்று ஊமைப்பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ!’

- கமல் இரு வேடங்களில் நடித்த முதல் படம்!
61-ம் ஆண்டில் ‘பார்த்தால் பசி தீரும்’: ‘அன்று ஊமைப்பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ!’

சிவாஜியும் ஜெமினி கணேசனும் இணைந்து நடித்த பல படங்கள் வெற்றி அடைந்திருக்கின்றன. அந்தக் கூட்டணியில் சாவித்திரியும் இணைந்துவிட்டால் வெற்றிக்குக் கேட்கவா வேண்டும்? போதாக்குறைக்கு, செளகார் ஜானகியும் சரோஜாதேவியும் இணைந்து நடித்தால், எப்படியிருக்கும்? இப்படியொரு பிரம்மாண்டக் கூட்டணியுடன் படமெடுக்க, ஏவி.எம். மாதிரியான நிறுவனங்களால்தானே சாத்தியம்! அப்படியான அற்புதக் கூட்டணியில், உணர்வுக்கும் அன்புக்கும் தியாகத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து நம்மை மனமுருகச் செய்ததுதான் ‘பார்த்தால் பசி தீரும்!’

பாலுவும் வேலுவும் நண்பர்கள். இருவரும் பிரிட்டிஷ் இந்திய விமானப் படையில் பணியாற்றுகிறார்கள். அது, இரண்டாம் உலகப் போர் காலகட்டம். அப்போது அண்டை நாடுகளுடன் நடக்கும் யுத்தத்தில், வேலுவுக்கு பலத்த காயம் ஏற்படுகிறது. அவரைத் தூக்கிக் கொண்டு, அஸ்ஸாம் அருகே உள்ள கிராமம் ஒன்றுக்கு வந்து, ஒரு வீட்டில் அடைக்கலமாகிறார் பாலு. அங்கே, மொழி தெரியாமல் போனாலும் அந்த வீட்டில் உள்ள இந்திரோமாவும் அவரின் அப்பாவும் அவர்களுக்கு உதவிகள் செய்கிறார்கள்.

அப்போது இந்தோமா என்றும் இந்திரோமா என்றும் அழைக்கப்படுகிற அந்தப் பெண்ணுக்கும் வேலுவுக்கும் இடையே பூக்கிறது காதல். இந்த நிலையில், ஜப்பானிய வீரர்கள் அங்கே தேடிக்கொண்டு வருகிறார்கள். சிகிச்சையில் இருக்கும் தன் நண்பனைக் காப்பதற்காக, வந்தவர்களைத் திசை திருப்பும் நோக்கத்தில், பாலு அவர்களுக்குத் தெரிவது போல் ஓடுகிறார். காலில் சுடப்படுகிறார். அவரைக் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள், ஜப்பானிய போலீஸார்.

வேலுவுக்கும் இந்திரோமாவுக்கும் அவர்கள் வழக்கப்படி திருமணம் நடக்கிறது. தமிழைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லிக் கொடுக்கிறார். அப்போது, பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தினர், வேலுவைத் தேடி வருகின்றனர். அவரும் ‘’இப்போது செல்கிறேன். பிறகு உன்னை அழைத்துச் செல்கிறேன்’’ என்று சொல்லிச் செல்கிறார். மாதங்கள் ஓடுகின்றன. வேலு வரவில்லை. போரில், இந்தக் கிராமம் குண்டுவைத்து தகர்க்கப்படுகிறது. இந்திரோமாவுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால், இந்த விபத்தில் பார்வையை இழக்கிறாள் இந்திரோமா.

அந்தக் கிராமத்தைவிட்டு எங்கோ சென்றுவிடுகிறார்கள். இப்போது வேலு வந்து பார்க்கிறான். அந்தக் குடிசையே தரைமட்டமாகிக் கிடக்கிறது. துக்கித்துப் போனவன், தன் தாய்மாமாவிடம் சென்னைக்கு வந்து சேருகிறான்.

ஐந்தாறு வருடங்களுக்குப் பிறகு, கோர்ட்டில் நிரபராதி என விடுவிக்கப்படுகிறார் பாலு. சென்னை செல்வதற்காக அகதி முகாமிற்கு வருபவர், அங்கே தமிழ் பேசுகிற சிறுவனைப் பார்க்கிறார். அப்போது ‘’உன் தாத்தா இறந்துட்டாங்கடா’’ என்று அந்தப் பையனுக்கு யாரோ சேதி சொல்ல, அந்தப் பையனுடன் பாலுவும் சென்று பார்க்கிறார். அங்கே... பார்வையற்ற நிலையில் இந்திரோமா. அவருடைய மகன்தான் அந்தச் சிறுவன். அப்பாவை இழந்து ஆதரவின்றி இருக்கும் இந்திரோமாவையும் அவளின் மகனையும் அழைத்துக் கொண்டு, சென்னைக்கு வருகிறார் பாலு. மேலும், நண்பன் வேலுவுக்கும் இவருக்கும் திருமணமான விஷயமும் அவர்களின் மகனே இவன் என்பதும் தெரியவருகிறது. அப்பாவின் நண்பனான பாலுவை, அந்தச் சிறுவன் ‘அப்பா’ என்றே அழைக்கிறான்.

சென்னைக்கு வருகிறார்கள். பாலு கதாபாத்திரத்தில் சிவாஜி. வேலு கேரக்டரில் ஜெமினி கணேசன். இந்திரோமாவாக சாவித்திரி. அவரின் மகனாக சிறுவன் கமல்ஹாசன். அங்கே, தங்கவேலு வாடகைக்கு வீடு தருகிறார். ‘’என் முதலாளிக்கு மிலிட்டிரிக்காரங்கன்னா தனி மரியாதை உண்டு. அவர்கிட்ட உங்களுக்கு வேலை கேட்டுப் பாக்கறேன்’’ என்கிறார் தங்கவேலு. அதன்படி, சிவாஜியை தான் வேலை பார்க்கும் கம்பெனிக்கு அழைத்துச் செல்கிறார். அந்தக் கம்பெனியின் முதலாளி வேறு யாருமல்ல... ஜெமினிதான்!

அவரைப் பார்த்துவிட்ட சந்தோஷத்தில், சாவித்திரியிடம் விவரம் சொல்லிவிட்டு, ஜெமினியின் வீட்டுக்குச் செல்கிறார் சிவாஜி. அங்கே தன் மனைவி செளகார் ஜானகியையும் செளகாரின் சகோதரி சரோஜாதேவியையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார். அதிர்ந்து போகிற சிவாஜி, ஜெமினியின் மீது கோபமாகிறார். ஒருகட்டத்தில், பார்வையற்ற நிலையில் இருக்கும் சாவித்திரியையும் மகன் கமலையும் குறித்துச் சொல்லுகிறார். கலங்கிப் போகிறார் ஜெமினி. இங்கே... ஜெமினி - செளகார் தம்பதிக்கும் ஒரு மகன் உண்டு. அந்தச் சிறுவனும் கமல்ஹாசன்தான்! ஆக, ‘களத்தூர் கண்ணம்மா’வில் சிறுவனாக அறிமுகமான கமல், அதே சிறுவனாக நடிக்கும்போதே, ‘பார்த்தால் பசி தீரும்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். கமலின் வாழ்வில் முதல் டபுள் ஆக்ட் படம் இதுதான்!

ஒருபக்கம்... செளகாரிடம் உண்மையைச் சொல்லமுடியவில்லை. அவருக்கு இதயத்தில் பிரச்சினை. சாவித்திரியிடம் சொல்லலாம் என்றால், அவர்களின் ஜாதி வழக்கப்படி, கணவர், மனைவியை விடுத்து வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டால், அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிடுவாள் என்கிற தங்களின் மரபை முன்னமே சொல்லியிருக்கிறார். இருதலைக் கொள்ளியாக தவித்து மருகிக்கொண்டே இருப்பார் ஜெமினி.

இந்த நிலையில், சிவாஜியின் மீது சரோஜாதேவிக்கு காதல். சிவாஜிக்கும்தான். ஆனால், சிவாஜியைப் பார்த்ததில் இருந்துதான் தன் கணவர் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார் என்பதாலும் ‘பார்வையற்ற பெண்ணுடன் சிவாஜி குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார். அவர்களுக்கு ஒரு பையன் உண்டு’ என்றும் செளகார் ஜானகி சொல்ல, சரோஜாதேவி நேரடியாகச் சென்று பார்க்கிறார். இந்த நிலையில், சொத்தில் சரிபாதியை சிவாஜியின் பேருக்கு ஜெமினி எழுதிய விவகாரமும் கிளம்பி, பிரச்சினையை மேலும் பூதாகரமாக்குகிறது.

‘காதலும் வேண்டாம், இந்த ஊரும் வேண்டாம்’ என்கிற முடிவுடன், ஜெமினியின் வீட்டுக்குச் செல்கிறார் சிவாஜி. அங்கே காரசாரமான விவாதம். மகன் கமலின் துணையுடன், அங்கே சாவித்திரி வருகிறார். பார்வையற்ற சாவித்திரி எல்லா உண்மைகளையும் சொல்லி, ’’பாலு அண்ணா, தியாகமே உருவானவர்’’ என்று சொல்ல, வெடித்துக் கதறுகிற ஜெமினி கணேசன், உண்மைகளையெல்லாம் எல்லோரிடமும் சொல்லுகிறார். செளகார் ஜானகி, மயங்கி விழுகிறார். ‘’என்னுடைய கண்களை இவங்களுக்குக் கொடுங்க. இவங்களோட சேந்து வாழுங்க’’ என்று சொல்லிவிட்டு இறக்கிறார் செளகார் ஜானகி. மேலும், சிவாஜியையும் சரோஜாதேவியையும் சேர்த்துவைக்கிறார் என்பதுடன் படம் நிறைவுறுகிறது.

’பார்த்தால் பசி தீரும்’ படம் முழுக்கவே சிவாஜிக்கும் எல்லா நடிகர்களுக்கும் நடிப்பதற்கு தீனி கொடுத்த படமாக அமைந்தது. சாவித்திரி ஒருபக்கம் கலக்கிக்கொண்டிருப்பார். செளகார் ஜானகி, ஒருபக்கம் புழுங்கித் தவித்து, தன் வேதனையை வெளிப்படுத்திக் கொண்டிருப்பார். சரோஜாதேவி எதை நம்புவது என்றே தெரியாமலும் புரியாமலும் மருகிக் கொண்டிருப்பார். ‘எப்படிச் சொல்வது? யாரிடம் சொல்லிப் புரியவைப்பது?’ என்பதே தெரியாமல், தன் சோகங்களையெல்லாம் அடக்கிக் கொண்டு துடித்துக் கொண்டிருப்பார் ஜெமினி கணேசன். இவர்கள் எவருக்கும் எந்த பங்கமும் காயமும் துயரமும் ஏற்பட்டுவிடக்கூடாது, எல்லாப் பழிகளையும் தான் ஏற்றுக்கொண்டு, பல்லைக் கடித்து தாங்கிக்கொண்டிருப்பார் சிவாஜி. படம் முழுக்கவே, இப்படியான உணர்வுப் போராட்டங்கள்தான் மையமாக இருக்கும்!

ஏவி.எம். நிறுவனம், நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியாருடன் இணைந்து ‘பராசக்தி’ படத்தைத் தயாரித்தது போலவே, ‘பார்த்தால் பசி தீரும்’ படத்தை, ஜி.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தது. சிவாஜியின் ‘பா’ வரிசைப் படங்களைக் கொடுத்த இயக்குநர் ஏ.பீம்சிங் இந்தப் படத்தை இயக்கினார். படம் முழுக்க காட்சிகள் கனமாகிக் கொண்டே இருக்க, அந்தக் காட்சிகளுக்கெல்லாம் வசனங்கள், தூண் போல் அமைந்தன. ஆரூர்தாஸ் அட்டகாசமாக வசனம் எழுதினார். கவியரசு கண்ணதாசன் அனைத்துப் பாடல்களையும் எழுதினார். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்தார்கள்.

ஒவ்வொரு காட்சியும் கதைக்கு வலு சேர்த்துக் கொண்டே இருக்க, தங்கவேலுவின் காமெடி, ரசிகர்களுக்கு மிகப்பெரிய ரிலாக்ஸாக இருந்தது. விட்டல்ராவின் ஒளிப்பதிவு, கதையை இன்னும் மெருகூட்டிக் காட்டியது.

காலில் குண்டடி பட்டதை அடுத்து, படம் முழுக்க சிவாஜி, ஒரு காலை தாங்கித்தாங்கி நடந்து நடித்திருப்பார். படம் முழுக்கவே இதை மெய்ன்டெய்ன் செய்ததெல்லாம் நடிகர் திலக ஆச்சரிய சாதனைகள்! அதேபோல், படம் முழுக்க சிகரெட் புகைத்தபடியே இருப்பார். சிவாஜியின் ஆறாவது விரலாக இருக்கும் அந்த சிகரெட், சிவாஜி உற்சாகப்படும்போது ஸ்டைல் காட்டும். துக்கித்திருக்கும்போது, அது துயரம் காட்டும். விரக்தியும் கோபமுமாக இருக்கும் போது, அந்தச் சிகரெட்டும் சாம்பலும் கூட கோபமாகப் புகைந்து, ஆத்திரத்துடன் உதிரும். சிவாஜியின் ஆகச்சிறந்த நடிப்பிலான படங்களில், மிக முக்கியமான படம் என்கிற வரிசையில், இந்தப் படத்துக்கும் தனியிடம் உண்டு!

எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார்கள் கவிஞரும் மெல்லிசை மன்னர்களும். ‘அன்று ஊமைப்பெண்ணல்லோ’ என்ற பாடல் வித்தியாசமான முறையில், ‘அ ஆ இ ஈ’ சொல்லிக் கொடுப்பது போலவே மெட்டமைக்கப்பட்டது. ஏ.எல்.ராகவனும் பி.சுசீலாவும் பாடினார்கள். ‘பார்த்தால் பசி தீரும்’ என்றொரு பாடல். பி.சுசீலா பாடினார். ‘கொடி அசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா’ என்ற கேள்விகளால் தொடுக்கப்பட்ட பாடலை டி.எம்.எஸ் - சுசீலா பாடினார்கள்.

’யாருக்கு மாப்பிள்ளை யாரோ’ என்ற பாடல். பி.சுசீலா பாடினார். ‘பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்’ என்ற பாடலில், சிவாஜி சிறுவன் கமலைத் தூக்கிவைத்து, தூங்கவைக்கும் போதே, தன் துயரம் சொல்லுகிற பாடலாக அமைந்து உருக்கியெடுத்தது ரசிகர்களை! அதேபோல, ‘உள்ளம் என்பது ஆமை... அதில் உண்மை என்பது ஊமை/ சொல்லில் வருவது பாதி/ நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி/’ என்ற பாடல் கண்ணதாசனின் தத்துவ முத்துகள் கோத்துக் கொடுத்த பாடல்.

படத்தின் எல்லாப் பாடல்களும் ஹிட்டாகின. எல்லாக் கதாபாத்திரங்களும் நெஞ்சைத் தொட்டன. ஒவ்வொருவர் பேசும் வசனங்களும் அவரவர் தர்க்கத்து நியாயங்களை எடுத்துரைத்தன. படத்தில் நடித்த எல்லோருக்கும் உரிய இடங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஏவி.எம் தயாரித்து சிவாஜியும் ஜெமினியும் இணைந்து கலக்கிய, சாவித்திரி, செளகார்ஜானகி, சரோஜாதேவி, மாஸ்டர் கமல், தங்கவேலு என பலரும் நடித்த இந்தப் படத்தில் வில்லன்களே இல்லை. சூழலும் சந்தர்ப்பங்களும்தானே சண்டித்தனம் பண்ணுகின்றன என கதை அமைக்கப்பட்டிருக்கும். பீம்சிங், பிரமாதமாக இயக்கி மாபெரும் வெற்றிபெறச் செய்தார் படத்தை!

1962-ம் ஆண்டு, ஜனவரி 14-ம் தேதி பொங்கல் திருநாளுக்கு வந்து, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது ‘பார்த்தால் பசி தீரும்’.

‘பிள்ளைக்குத் தந்தை ஒருவன்’ பாடலையும் ‘அன்று ஊமைப்பெண்ணல்லோ’ பாடலில் மெல்லிசை மன்னர்கள் குழைத்துக் கொடுத்த இசையையும் ‘கொடி அசைந்ததும் காற்று வந்ததா’ என்ற கவிஞரின் எழுத்து ஜாலத்தையும் படம் வெளியாகி, 61 வருடங்களானாலும் இன்றைக்கும் ரசித்துக்கொண்டே இருக்கிறோம். பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே இருக்கிறோம்!

இந்தப் படத்தைப் பற்றிய இன்னொரு சுவாரஸ்ய தகவலும் உண்டு. இந்தப் படத்துக்கு பூஜை போட்டபோது காமராஜர் தமிழக முதல்வராக இருந்தார். பட பூஜையை பிரம்மாண்டப்படுத்த நினைத்த ஏவி.எம். செட்டியார், பூஜைக்கு காமராஜரையும் அழைத்தார். சினிமா, கேளிக்கைகளில் அவ்வளவாக ஆர்வம் காட்டாத கர்மவீரர், செட்டியாரின் பேச்சை தட்டமுடியாமல் பூஜைக்கு வந்தார். பூஜை எல்லாம் முடிந்த பிறகு படக்குழுவினர் காதுபடும்படியாக பேசிய காமராஜர், “ ‘பார்த்தால் பசி தீரும்’னு படத்துக்கு பேரு வெச்சிருக்கீங்க. இந்தப் படத்தைப் பார்த்தால் படத்தை எடுத்தவங்களுக்கு பசி தீரும்... நடிச்சவங்களுக்கு பசி தீரும். ஆனா, படத்தை பார்க்கும் மக்களுக்கு பசி தீர ஏதாச்சும் வழி இருந்தா சொல்லுங்கன்னே..” என்று சொல்லிவிட்டுச் சென்றார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in