60-ம் ஆண்டு கொண்டாடும் படங்கள்; அற்புதமான பாடல்கள்!

காலத்தால் அழியாத காவியப் படைப்புகள் குறித்த அலசல்
பலே பாண்டியா
பலே பாண்டியா

அந்தக் காலங்களில், ‘காலத்தால் அழிக்க முடியாத காவியம்’ என்கிற வாசகத்துடன் பல திரைப்படங்களை விளம்பரப்படுத்துவார்கள். நாளிதழ் விளம்பரம், போஸ்டர், போஸ்டர் ஒட்டிய உருட்டுச் சக்கரத்தை தள்ளியபடியே தருகிற பிட் நோட்டீஸ் என எல்லா விளம்பரங்களிலும் இந்த வாக்கியம் இடம்பெற்றிருக்கும். அப்படி காலத்தால் அழிக்க முடியாத காவியப் படங்கள் நிறையவே இருக்கின்றன. இப்போது 2022-ல் இருக்கிறோம். 1962-ல் வந்த படங்களை எடுத்துக்கொண்டால், இப்போது அந்தப் படங்கள் வெளியாகி 60 ஆண்டுகளாகின்றன. திரைப்படங்கள் 60 ஆண்டுகளாகியும் நம் மனதில் நீங்காத இடம் பிடித்து அப்படியே இருப்பதெல்லாம் சாதாரணமானதல்ல. இந்த மாதிரியான படங்களைத்தான் ‘காலத்தால் அழிக்க முடியாத காவியம்’ என்று சொல்லிவைத்தார்களோ என்னவோ.

1962-ம் ஆண்டு வெளியாகி, நம்மால் மறக்கவே மறக்க முடியாத திரைப்படங்களைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

‘அறுபதுகள்’ - எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர் என கோலோச்சிய காலம். ஏ.பீம்சிங், ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதலானோர் இயக்கிய படங்களுக்கு வரவேற்பு ஏகத்துக்கும் இருந்த காலம். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை ஒருபக்கம், கே.வி.மகாதேவன் இசை இன்னொரு பக்கம் என சக்கைப்போடு போட்ட காலம். சாவித்திரியும் பத்மினியும் செளகார் ஜானகியும் விஜயகுமாரியும் சரோஜாதேவியும் தேவிகாவும் என நடிகைகள் அசத்திய காலம்.

1962-ம் ஆண்டு, பானுமதிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட ‘அன்னை’ வெளியானது. ஏவி.எம். தயாரிக்க, கிருஷ்ணன் பஞ்சு இயக்கினார்கள். டிசம்பர் 15-ம் தேதி படம் வெளியானது. ஆர்.சுதர்சனம் இசையமைத்தார். ’பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ என்கிற சந்திரபாபு பாடிய பாடல் என இன்றைக்கும் முணுமுணுக்கப்படுகின்றன.

எம்ஜிஆர், ‘குடும்பத்தலைவன்’, ‘தாயைக் காத்த தனயன்’, ‘விக்ரமாதித்தன்’ முதலான படங்களில் நடித்தார். இதில் முதல் இரண்டு படங்களும் தேவர் பிலிம்ஸ். இரண்டிலுமே சரோஜாதேவி ஜோடி. ‘குடும்பத்தலைவன்’ ஆகஸ்ட் 15-ல் வெளியானது. ‘தாயைக் காத்த தனயன்’ ஏப்ரல் 13 அன்று வெளியானது. ’மாறாதய்யா மாறாது’, ’திருமணமாம் திருமணமாம்...’, ‘ஏதோ ஏதோ ஏதோவொரு மயக்கம்’ என ‘குடும்பத்தலைவனில்’ எல்லாப் பாடல்களும் ஹிட். கே.வி.மகாதேவன் இசை. ’மூடித்திறந்த இமையிரண்டும்’, ‘சிரித்துச்சிரித்து என்னை’, ’காட்டுராணிக் கோட்டையிலே’, ’கட்டித்தங்கம் வெட்டியெடுத்து’ என அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற்றன. தேவர் பிலிம்ஸ் என்றாலே அப்போது கே.வி.மகாதேவன் தான் இசை.

சிவாஜி கணேசன், ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘பார்த்தால் பசி தீரும்’, ‘பலே பாண்டியா’, ‘நிச்சயதாம்பூலம்’, ‘ஆலயமணி’, ‘வடிவுக்கு வளைகாப்பு’ முதலான படங்களில் நடித்தார். பி.எஸ்.வீரப்பா தயாரிப்பில் கே.சங்கர் இயக்கத்தில் வெளியான ‘ஆலயமணி’, நவம்பர் 23-ம் தேதி வெளியானது. சிவாஜியுடன் சரோஜாதேவி, எஸ்.எஸ்.ஆர்., விஜயகுமாரி நடித்தனர். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில், ’கண்ணான கண்ணனுக்கு அவசரமா’, ‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா’, ’பொன்னை விரும்பும் பூமியிலே’, ’தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’, ’சட்டி சுட்டதடா’ முதலான பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. படமும் பாடல்களும் இன்று வரை மறக்க முடியாத இடத்தில் இருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

‘நிச்சயதாம்பூலம்’ படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியானது. ஜமுனா நாயகி. பி.எஸ்.ரங்கா இயக்கினார். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை. ‘படைத்தானே’ பாடலையும் ‘பாவாடை தாவணியில்’ பாடலையும் இன்றைக்கும் ரசித்துக்கொண்டுதான் இருக்கிறோம். பி.ஆர்.பந்துலு இயக்கத்தில், மே 26-ம் தேதி வெளியான ‘பலே பாண்டியா’ படத்தில் சிவாஜியுடன் தேவிகா, பாலாஜி, எம்.ஆர்.ராதா முதலானோர் நடித்தார்கள். மூன்று சிவாஜியையும் முத்தான பாடல்களையும் அவ்வளவு எளிதாகக் கடந்துவிடமுடியுமா என்ன?

விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில், ‘வாழ நினைத்தால் வாழலாம்’, ‘ஆதிமனிதன் காதலுக்குப் பின்’, ‘நான் என்ன சொல்லிவிட்டேன்’, ‘அத்திக்காய் காய் காய்’, ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ என எல்லாப் பாடல்களும் ஒவ்வொரு ரகத்தில் நம்மை ஈர்த்தன. கண்ணதாசனே பெரும்பான்மையான படங்களுக்கும் பாடல்களை எழுதினார். மூன்று சிவாஜி, இரண்டு எம்.ஆர்.ராதா என்று கலக்கியிருப்பார்கள்

’படித்தால் மட்டும் போதுமா?’ ஏப்ரல் 14-ம் தேதி வெளியானது. சிவாஜி, பாலாஜி, சாவித்திரி, ராஜசுலோசனா நடித்தார்கள். ‘ஓஹோஹோஹோ மனிதர்களே’, ‘நான் கவிஞனுமில்லை’, ‘தண்ணிலவு தேனிறைக்க’, நல்லவன் எனக்கு நானே நல்லவன்’, ‘அண்ணன் காட்டிய வழியம்மா’, ‘பொன்னொன்று கண்டேன் பெண் அங்கு இல்லை’ என்பன முதலான எல்லாப் பாடல்களும் இன்றைக்கும் கேட்கலாம்; ரசிக்கலாம்!

ஏவி.எம் தயாரித்த ‘பார்த்தால் பசி தீரும்’ படத்தில் சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, செளகார் ஜானகி, சரோஜாதேவி முதலானோர் நடித்தார்கள். பீம்சிங் இயக்கினார். கமல் சிறுவனாக இரட்டை வேடங்களில் நடித்தார். ‘அன்று ஊமைப்பெண்ணல்லோ’, ‘கொடி அசைந்ததும்’, ‘பார்த்தால் பசி தீரும்’, ‘பிள்ளைக்குத் தந்தை ஒருவன்’, ‘உள்ளம் என்பது ஆமை’, ‘யாருக்கு மாப்பிள்ளை யாரோ’ என்று எல்லாப் பாடல்களுமே இன்றளவும் நம் காலர் டியூனாகவும் நம் செல்போன் ஸ்டோரேஜ் பாடல்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. ஏ.பி.நாகராஜன் முதன்முதலாக இயக்கிய ‘வடிவுக்கு வளைகாப்பு’ சிவாஜி நடித்து ஜூலை 7-ம் தேதி வெளியானது. நடிகை வடிவுக்கரசியின் பெரியப்பாவான ஏ.பி.நாகராஜன் தான் படத்தின் இயக்குநர். இந்தப் படத்தின் போது பிறந்ததால் ‘வடிவுக்கரசி’ எனப் பெயரிட்டார்.

கே.சங்கர் இயக்கத்தில் ஜெமினி, சாவித்திரி, அசோகன், மாஸ்டர் கமல் நடிப்பில் ஜூலை 14-ம் தேதி வெளியானது, ‘பாதகாணிக்கை’. ‘அத்தை மகனே போய் வரவா’, ‘ஆஹா காதல் என்பது எதுவரை’, ‘பூஜைக்கு வந்த மலரே வா’, ‘தனியா தவிக்கிற வயசு’, ‘உனது மலர் கொடியிலே’, ’எட்டடுக்கு மாளிகையில்’, ‘வீடு வரை மனைவி’ என்று பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், கவியரசரின் வரிகளில் கல்வெட்டுகளாக, நம் மனதில் பதிந்திருக்கின்றன.

பாத காணிக்கை
பாத காணிக்கை

’அன்னையின் அருளே வா வா வா... ஆடிப்பெருக்கே வா வாவா’ என்ற பாடல் இடம்பெற்ற ‘ஆடிப்பெருக்கு’ ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியானது. ஜெமினியும் தேவிகாவும் நடித்த படம். கே.சங்கர் இயக்கினார். ஏ.எம்.ராஜா இசையமைத்தார். ’காத்திருந்த கண்கள்’ எனும் ஜெமினியும் சாவித்திரியும் (இரு வேடங்கள்) நடித்து, டி.பிரகாஷ்ராவ் இயக்கினார். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை. ‘ஓடம் நதியினிலே’, ‘காற்று வந்தால் தலை சாயும் நாணல்’, ‘வளர்ந்த கலை மறந்துவிட்டாள்... கேளடா கண்ணா’ முதலான அனைத்துப் பாடல்களும் அசத்தல் பாடல்கள்!

ஏவி.எம்மின் முருகன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சி.எல்.ஆனந்தன், ஈ.வி.சரோஜா, சச்சு நடித்த ‘வீரத்திருமகன்’ மே 3-ம் தேதி வெளியானது. விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில், ‘அழகுக்கு அழகு’ பாடல் மனதை அள்ளியது. ‘பாடாத பாட்டெல்லாம்’ கேட்டும் ‘ரோஜா மலரே ராஜகுமாரி’ பாடலைக் கேட்டும் உருகிப் போனார்கள் ரசிகர்கள். ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார்.

எம்.வி.ராமன் இயக்கத்தில் ஜெமினியும் சாவித்திரியும் நடித்து, எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் குலுங்கிய ‘கொஞ்சும் சலங்கை’ நவம்பர் 14-ம் தேதி வெளியானது. எஸ். ஜானகியின் ‘சிங்காரவேலனே தேவா’ பாடலை இன்றைக்கும் ரசிக்கலாம். ஜானகியம்மாவின் இளமைக் குரலைக் கேட்டு வியக்கலாம்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், எஸ்.எஸ்.ஆர்., விஜயகுமாரி, அசோகன் முதலானோர் நடித்த ‘சாரதா’ மார்ச் 16-ம் தேதி வெளியானது. கே.வி.மகாதேவன் இசை. ‘மணமகளே மணமகளே வா வா’, ‘ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்’, ‘கண்ணானால் நான் இமையாவேன்’, ’ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்’, ‘மெல்ல மெல்ல அருகில் வந்து’ என்று எல்லாப் பாடல்களும் வெற்றி பெற்றன. இதுதான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய முதல் படம்!

வீரத்திருமகன்
வீரத்திருமகன்

இத்தனை வருடங்களைக் கடந்தும் மறக்க முடியாத படங்களாகவும் பாடல்களாகவும் இவையெல்லாம் அமைந்திருக்கின்றன. ‘காலத்தால் அழியாத காவியம்’ என்ற வார்த்தை இந்தப் படங்களுக்கெல்லாம் பொருந்தும்தானே!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in