கண்ணதாசனின் ‘எறும்புத்தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா!’

சிவாஜி, பி.எஸ்.வீரப்பா, சரோஜாதேவி கூட்டணியில் இன்னமும் ஒலிக்கும் ‘ஆலயமணி!’

கண்ணதாசனின் ‘எறும்புத்தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா!’

’எனக்குள்ளே தூங்கிட்டிருக்கிற மிருகத்தைத் தட்டி எழுப்பிடாதே’ என்று ‘தேவர்மகன்’ படத்தில், நாசரிடம் கமல் சொல்லும் காட்சியும் வசனமும் நமக்கு இன்றைக்கும் நினைவில் இருக்கிறதுதானே! யோசித்துப் பார்த்தால் இப்படியொரு மிருக குணம் எல்லோருக்குள்ளேயும் இருக்கும். அந்த மிருக குணம் வெளியே வந்து செய்கிற செயலால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாமல் ஒருவரும் தப்பிவிட முடியாது. குற்ற உணர்ச்சி என்பதுதான் மிகப்பெரிய வலியும் வேதனையும். ஒரு தவறை யாருக்குச் செய்தாலும், எங்கு செய்தாலும், எதற்காகச் செய்தாலும் செய்கிற தவறு யாருக்கும் தெரியவில்லை என்று நிம்மதியாக நாம் இருந்துவிட முடியாது. நமக்குள் இருக்கிற மனசாட்சி, சந்தர்ப்பம் கிடைக்கிறபோதெல்லாம் குத்திக் கிழித்துக்கொண்டே இருக்கும். இந்த உளவியல் சிக்கலை வைத்துக்கொண்டு, நட்பையும் காதலையும் சேர்த்து ஓங்கி ஒலிக்கச் செய்ததுதான் ‘ஆலயமணி.’

மிகப்பெரிய பணக்காரர் தியாகு. கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரைக்கும் எஸ்டேட், பங்களா, பணம் காசு என்று குறைவற வாழ்கிறார். ஆனால் உறவென்று சொல்லிக்கொள்ள எவருமில்லை. அவரிடம் எல்லா நல்ல குணங்களும் உண்டு. இருக்கிற ஒரேயொரு கெட்ட குணம்... ‘நாம்தான் ஜெயிக்க வேண்டும்... எதிலும்... எப்போதும்’ எனும் மனோபாவம். முரட்டுப் பிடிவாதமும் அவருக்குக் கூடப்பிறந்த குணம்!

அந்த ஊரில் கடலையொட்டி மரணப்பாறை என்று உண்டு. வாழ வழியின்றி தவித்த தியாகுவின் தந்தை, மரணப்பாறையில் குதித்து இறக்க முனைகிறார். ஆனால் எங்கிருந்தோ கேட்ட ஆலயமணிதான் அவரைத் தற்கொலைச் சிந்தனையில் இருந்து வெளியே கொண்டு வருகிறது. உழைக்கிறார். பிழைக்கிறார். மிகப்பெரிய செல்வந்தராகிறார். மகனை வளர்க்கிறார். பிறகு இறக்கிறார். அந்த மகன்தான் தியாகு.

விளையாட்டாக, ஒரு டென்னிஸ் விளையாட்டின்போது சேகர் (எஸ்.எஸ்.ஆர்) எனும் இளைஞரைச் சந்திக்கிறான் தியாகு. விளையாட்டில் தியாகுவுக்கு விட்டுக்கொடுத்து வெற்றி பெறச் செய்கிறான் சேகர். நட்பு மலருகிறது. சேகருக்கு ஒரு பெண்ணின் மீது காதல். அவள் தன் பெயரை வானம்பாடி என்று சொல்லிக்கொள்கிறாள். உண்மையில் அவள் பெயர் மீனா (சரோஜாதேவி). தியாகுவின் எஸ்டேட் கணக்குப்பிள்ளையின் (நாகையா) மகள். ஒருகட்டத்தில், சேகரின் உயிரை ரத்தம் கொடுத்துக் காக்கிறான் தியாகு. இன்னொரு சந்தர்ப்பத்தில், சேகரின் அம்மாவையும் (எம்.வி.ராஜம்மா) காப்பாற்றுகிறான். இந்தச் சமயத்தில்தான் மீனாவைச் சந்திக்கிறான். ‘மீனா’ எனும் பெயரைக் கேட்டதும் பழசெல்லாம் நிழலாடுகிறது தியாகுவுக்கு. பீரோவுக்குள்ளிருந்து ஒரு பெண் பொம்மையை எடுத்து, ‘மீனா மீனா மீனா’ என அரற்றிக் கலங்குகிறான்.

தியாகு மீனாவை விரும்புவது தெரிந்ததும், சேகர் தன் காதலை மறைக்கிறான். தியாகுவிற்காக விட்டுக்கொடுக்கிறான்.

அந்த ஊரில் இருக்கும் ஆட்கொண்டான் (எம்.ஆர்.ராதா) வில்லங்கம் கொண்டான். அவருக்கு ஒரு மகன், மகள். மீனாவின் சகோதரிக்கும் (புஷ்பலதா) ஆட்கொண்டான் மகனுக்கும் திருமணம் நடக்க பண உதவி செய்கிறார். இதேசமயம் சேகருடன் படிக்கும் சக மாணவியும் தோழியுமானவள் (விஜயகுமாரி) சேகரை விரும்புகிறாள். ஆனால் சேகர் அவளைப் புறக்கணிக்கிறான்.

இந்த நிலையில் தியாகுவின் வீட்டிலேயே எல்லோரும் தங்குகிறார்கள். மீனாவுக்கு கார் ஓட்டக் கற்றுக் கொடுக்கும்போது ஒரு விபத்து. அதில் மீனாவைக் காப்பாற்றுகிறான் தியாகு. ஆனால் அவனது கால்கள் செயலிழக்கின்றன. அவனுக்கு எல்லாப் பணிவிடைகளையும் செய்கிறாள் மீனா. தன்னை மணக்கப்போகும் மீனாவிடம் ‘மீனா பொம்மை’யைக் காட்டி ஃப்ளாஷ்பேக் சொல்கிறான் தியாகு. அந்த பொம்மை தியாகுவினுடையது. சிறுவயதில் அதற்கு மீனா எனப் பெயரிட்டு விளையாடி வருகிறான் தியாகு. அவனுடைய பால்ய தோழன் பாபு என்பவன், அந்த பொம்மையைப் பிடுங்கிக்கொண்டு ஓட, புதைகுழி ஒன்றில் விழுகிறான். பொம்மையை வாங்கிக்கொள்கிற தியாகு, வெறிகொண்ட சிரிப்புடன் அவன் புதைகுழியில் மூழ்குவதை ரசித்துச் சிரிக்கிறான். அந்த பாபு இறக்கிறான். சிறுவர் ஜெயிலில் இருந்துவிட்டு வந்தவன் தியாகு. இதையெல்லாம் முழுமையாகச் சொல்கிறான் தன் காதலியிடம்!

இதனிடையே சேகர், தனக்கு மனைவியாகப் போகும் மீனாவை தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பதாகப் புரிந்துகொள்கிறான் தியாகு. மரணப்பாறைக்கு அழைத்துச் சென்று சேகரைக் கொல்லத் திட்டமிடுகிறான். ஆனால் அங்கே உண்மையெல்லாம் தெரியவர, சேகரையும் மீனாவையும் சேரும்படி சொல்லிவிட்டு, மரணப்பாறையில் இருந்து குதித்துவிடுகிறான் தியாகு.

முன்பொருநாள், தியாகு தனது வீட்டுக்குள் புகுந்து கத்தியால் குத்த வந்தவனை மன்னித்து பணமும் கொடுத்து உதவுகிறான். மரணப்பாறையில் விழுந்த தியாகுவை அவன் காப்பாற்றி தன் வீட்டில் வைத்துப் பாதுகாப்பு அளிக்கிறான். கால்கள் இப்போது மெதுவாக நடக்கத் தொடங்கிவிட்டன. அதேசமயம் தியாகு இறந்துவிட்டதாக எல்லோரும் நம்புகின்றனர். இறுதியில் சேகர் தன் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவளைத் திருமணம் செய்கிறான். மரணப்பாறையில் குதித்து தற்கொலை செய்யும் எண்ணத்துடன் மீனா செல்ல, தியாகு தடுக்கிறான். இருவரும் இணைகிறார்கள். ஆலயமணி ஓசை ஒலிக்கிறது.

பி.எஸ்.வி.பிக்சர்ஸ் பேனரில் நடிகர் பி.எஸ்.வீரப்பா தயாரித்து, இயக்குநர் கே.சங்கர் இயக்கிய மாபெரும் வெற்றிப்படம் ‘ஆலயமணி’. எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி, நாகையா, எம்.ஆர்.ராதா, டி.ஆர்.ராமச்சந்திரன், புஷ்பலதா, பி.எஸ்.வீரப்பா எனும் பலரும் சிறப்பாக நடித்திருப்பார்கள். தியாகு எனும் பணக்கார இளைஞராக, ஆவேசமும் மூர்க்கமும் அதேசமயம் அன்பும் கொண்ட மாறுபட்ட குணாதிசயம் கொண்டவராக சிவாஜி பிரமாதப்படுத்தியிருப்பார்.

ஜாவர் சீதாராமன் திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் எல்லாப் பாடல்களையும் எழுதினார். எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று இன்றைக்கும் எல்லோராலும் முணுமுணுக்கும் பாடல்களாக அமைந்திருக்கின்றன. படத்தில் வசனங்கள் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். ஒரு காட்சியில் வேலைக்காரர்கள் இருபக்கமும் வரிசையாக நிற்க, சிவாஜி மிக ஸ்டைலாக நடந்துவருவார். படம் பார்த்துக்கொண்டிருந்த நான், என்னுடன் வந்த நண்பனிடம், ‘அடடா! செம அழகு நடைடா’ என்று சொன்னேன். அப்போது, வேலைக்காரர்களில் ஒருவர், இன்னொருவரிடம், ‘நம்ம முதலாளி நடையைப் பாத்தியாடா. என்ன ஸ்டைல்டா’ என்பார். சிவாஜி திரும்பிப் பார்த்துவிட்டு, ஸ்டைலாகச் சிரித்தபடி நடப்பார். பிறகு கால்கள் செயலிழந்த நிலையில், வீல்சேரில் வருவார் சிவாஜி. அந்த வேலைக்காரரிடம், ‘உன் முதலாளி நடையழகைப் பாத்தியாடா’ என்று பரிதாபத்துடன் கேட்பார். வேலைக்காரர்களுடன் சேர்ந்து நாமும் அழுவோம். இப்படி சிவாஜியின் நடிப்பின் சிறப்பை வெளிப்படுத்தும் பல காட்சிகள் இப்படத்தில் உள்ளன.

மானாட்டம் தங்க மயிலாட்டம்/ பூவாட்டம் வண்ணத் தேராட்டம்/ தானாடும் மங்கை சதுராட்டம்/ கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்’ என்ற பாடல் மிகச்சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கும்.

கண்ணான கண்ணனுக்கு அவசரமா/ கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா/ பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா/ அது பேசாமல் பேசுவது புரியலையா’ என்ற பாடலை சுசீலாவுடன் சீர்காழி கோவிந்தராஜன் இணைந்து பாடியிருப்பார்.

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே/ அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே/ காலையில் நான்ஓர் கனவு கண்டேன்/ அதை கண்களில் இங்கே எடுத்து வந்தேன்/ எடுத்ததில் ஏதும் குறைந்து விடாமல்/ கொடுத்து விட்டேன் உந்தன் கண்களிலே’ என்ற பாடலை எஸ்.ஜானகி விஜயகுமாரிக்காகப் பாடினார். எஸ்.எஸ்.ஆர். தூங்க வேண்டும் என்பதற்காகப் பாடுவார். நம்மையெல்லாம் தூங்கச் செய்திருப்பார்கள் எல்லோருமே!

பூந்தோட்டக் காவல்காரா/ பூப்பறிக்க இத்தனை நாளா/ மாந்தோப்புக் காவல்காரா.../ மாம்பழத்தை மறந்துவிட்டாயா’ என்ற பாடல் செம ஹிட்டடித்தது.

’பொன்னை விரும்பும் பூமியிலே/ என்னை விரும்பும் ஓருயிரே/ புதையல் தேடி அலையும் உலகில்/ இதயம் தேடும் என்னுயிரே’ என்ற பாடல் அந்தக் காலத்துக் காதலர்களுக்கு இதம் தரும் பாடலாகவே அமைந்தது.

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா/ கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா’ என்ற பாடலில் சிவாஜியின் நடிப்பும் சரோஜாதேவியின் நாணம் கலந்த நடனமும் படத்தின் காட்சி அமைப்பும் நம்மை என்னவோ செய்யும். முக்கியமாக பாடலின் நடுவே வருகிற ஹம்மிங், நம்மை மயக்கிப் போடும். டி.எம்.எஸ் தன் குரலால் காதல் சொல்லியிருப்பார். கண்ணதாசனும்தான்!

படத்தின் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பாடல்கள்தான் என்றாலும் முக்கியமான பாடல்... ‘சட்டி சுட்டதா’ பாட்டு!

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா/ மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டிவைத்ததடா/ ஆட்டிவைத்த மிருகம் இன்று அடங்கிவிட்டதடா/ அமைதி தெய்வம் முழுமனதில் கோயில் கொண்டதடா’ என்ற வரிகளில் கண்ணதாசன், மனித குண விசித்திரங்களைச் சொல்லியிருப்பார்.

ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா/ ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா/ தர்மதேவன் கோயிலிலே ஒலி துலங்குதடா/ மனம் சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா’ என்ற வரிகளும்...

‘எறும்புத்தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா/ நான் இதயத்தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா’ என்று சொல்லிவிட்டு, அடுத்ததாக... ‘பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் வந்துவிட்டதா/ இறந்த பின்னே வரும் அமைதி வந்துவிட்டதடா’ என்ற வரிகளில் சித்த புருஷ தத்துவம் சொல்லியிருப்பார் கவியரசர்!

இந்தப் படம் வெளியாகி மூன்று வருடங்கள் கழித்து தெலுங்கில் ரீமேக் செய்து ஹிட்டடித்தது. அடுத்த சில வருடங்களில் இந்தியில் எடுத்து அங்கேயும் வெற்றியைப் பெற்றது.

1962-ம் ஆண்டு, நவம்பர் 23-ம் தேதி வெளியானது. பி.எஸ்.வீரப்பா தயாரித்த ‘ஆலயமணி’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் சிவாஜி சரோஜாதேவி கூட்டணி வெற்றியையும் உறுதி செய்தது. நூறு நாட்களைக் கடந்து ஓடியது. சரோஜாதேவியின் நடிப்பு பேசப்பட்டது. எஸ்.எஸ்.ஆர் சிறப்பாக நடித்திருந்தார். எம்.ஆர்.ராதா வழக்கமான சேட்டைகளையும் லொள்ளுகளையும் செய்து வில்லத்தனம் பண்ணியிருந்தார்.

படம் வெளியாகி 60 ஆண்டுகளாகின்றன. இன்னும் ‘பொன்னை விரும்பும் பூமியிலே’ என்று வீல்சேரில் செல்லும் சிவாஜிக்குப் பின்னே நடந்துகொண்டுதான் இருக்கிறோம். ‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா’ என்று பாடிக்கொண்டுதான் இருக்கிறோம். ‘சட்டி சுட்டதடா கைவிட்டதடா’ என்ற கண்ணதாசனின் ஜீவ வரிகளைக் கேட்டு வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயன்றுகொண்டேதான் இருக்கிறோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in