இன்றும் வசீகரிக்கும் வண்ணப்பறவை!

59 ஆண்டுகளாகியும் சாரமிழக்காத ‘குங்குமம்’ திரைப்படப் பாடல்கள்
இன்றும் வசீகரிக்கும் வண்ணப்பறவை!

மஞ்சள், தாலி, குங்குமம் என்பதெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகில் பிரிக்கவே முடியாதவை. வாழ்வின் ஒவ்வொரு சுமங்கலியும் இவற்றைப் போற்றிக் கொண்டாடிக்கொண்டே இருப்பார்கள். கணவனை இழந்துவிட்டால், இவற்றையும் இழப்பார்கள். அப்படி கணவன் இறந்துவிட்டதாக நினைத்து, மனைவி மஞ்சள், குங்குமமின்றி இருக்க, அதைக் கண்டு அவள் மகன் துடிக்க, ஒருகட்டத்தில் மகன் மீது கொலைப்பழி சுமத்தப்படுகிறது. அந்தப் பழியை ஏற்றுக்கொண்டு தலைமறைவாகிறான். அன்னையால் வெறுக்கப்படும் சூழலுக்கு உள்ளானவன், தான் கொலையாளி என்பதை நிரூபித்தானா, அப்பா என்ன ஆனார், இழந்த குங்குமம் அம்மாவுக்குக் கிடைத்ததா என்பதையெல்லாம் சொல்லும் படம்தான் ‘குங்குமம்’.

படத்தின் நாயகனான சிவாஜி வெளிநாட்டுப் படிக்கச் செல்கிறார். அதற்காக அவரது தந்தை ரங்காராவ் கடன் வாங்குகிறார். ஆனால், மோசடி செய்துவிட்டதாக அவரை போலீஸ் கைது செய்து சிறையில் அடைக்கிறது. வெளிநாட்டுப் படிப்பை முடித்துவிட்டு வரும் மகன், அம்மாவைப் பார்க்க, அதிர்ந்துபோகிறார். மஞ்சள், குங்குமம் இல்லாமல் விதவைக் கோலத்தில் அம்மா! சிறையில் இருந்து வெளியே வந்த அப்பா, அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டுவிட்டார் எனும் தகவல் கிடைத்ததை அம்மாவும் உறவுகளும் சொல்ல, உடைந்துபோகிறார் சிவாஜி.

பட்ட கடனை அடைக்க, மும்பைக்கு வேலை விஷயமாகச் செல்கிறார் சிவாஜி. அறை எடுத்துத் தங்குகிறார். அங்கே, பக்கத்து அறையில் வாக்குவாதம். சண்டை. துப்பாக்கிச் சத்தம். சிவாஜி போய்ப்பார்க்க அங்கே இருப்பவரிடமிருந்து துப்பாக்கியை வாங்கிக்கொண்டு, அவரைத் தப்பவைக்கிறார். பின்னர், இவரும் தப்பியோடி வீடு திரும்புகிறார்.

சிவாஜியின் ‘குங்குமம்’
சிவாஜியின் ‘குங்குமம்’

’என் மகன் கொலையாளியா?’ என அம்மா வெறுக்கிறார். வீட்டை விட்டு ஓடுகிறார். முறைப்பெண் விஜயகுமாரி மட்டும் ஆதரவு தருகிறார். அதேசமயம் ஒவ்வொரு வேடமாகப் போட்டுக்கொண்டு, அங்குமிங்கும் அலைகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் எஸ்எஸ்ஆர் நடித்திருப்பார். அவரின் உறவினர் நீதிபதி சகஸ்ரநாமம். நீதிபதியின் மகள் சாரதா. இருவருக்கும் திருமணம் செய்ய நினைக்கிறார் நீதிபதி.

இந்த நிலையில், சிவாஜி டியூஷன் வாத்தியாராக, சுந்தரம் எனும் தன் பெயரை காளமேகம் என மாற்றிக்கொண்டு, நீதிபதி வீட்டுக்கு வருகிறார். அங்கேயே குடியிருக்கிறார். சாரதாவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் தெரிகிறது. கொலை செய்துவிட்டு தப்பியோடச் செய்தவரை இங்கே பார்க்கிறார். விஜயகுமாரி அடிக்கடி சந்தித்து வீட்டுக்கு வரச் சொல்லிக் கேட்கிறார். ஆனால் அவரின் கூட்டாளி ஓ.ஏ.கே.தேவர் அவரை விட மறுக்கிறார். கொலை செய்ததைச் சொல்லியே மிரட்டுகிறார்.

ஒருபக்கம் போலீஸ் தேடுகிறது. இன்னொரு பக்கம் அம்மா வெறுக்கிறார். நடுவே சாரதாவின் காதல் வேறு. நண்பன் முத்துராமன் உதவியால், அம்மாவும் விஜயகுமாரியும் பார்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ‘கொலையாளியைத் தப்பவிட்டவன்’ எனும் உண்மையை சாரதாவிடம் சொல்கிறார் சிவாஜி. ஆனால் கொலையாளி யார் என்பதைச் சொல்லவில்லை. இறுதியில், சாரதா, கொலையாளியை அழைத்துக் கொண்டு அப்பா நீதிபதியிடம் சரணடைய வைக்க, சிவாஜி தப்பித்து ஓடுகிறார் என நினைத்து விஜயகுமாரியை எஸ்எஸ்ஆர் துப்பாக்கியால் சுட, அவர் இறந்து போக, சிவாஜி கைதாகிறார்.

நீதிமன்றத்தில், முழு விவரமும் தெரியவருகிறது. தற்கொலை செய்து கொள்ளப்பட்டதாக சொல்லப்பட்ட ரங்காராவ் தான், மும்பையில் ஒருவரைச் சுட்டிருப்பார். அதைப் பார்த்துத்தான் சிவாஜி அவரைக் காப்பாற்றுவார். இறுதியில் சிவாஜி, ரங்காராவ், ஓ.ஏ.கே. தேவர் மூவருக்கும் சிறைத்தண்டனை கிடைக்க... ரங்காராவ் குங்குமம் எடுத்துக் கொடுக்க, எம்.வி.ராஜம்மா தன் நெற்றியில் இட்டுக்கொள்ள, ஆனந்தக் கண்ணீருடன் சிறைக்குச் செல்வார் சிவாஜி.

’குங்குமம்’ படத்தில் சிவாஜி
’குங்குமம்’ படத்தில் சிவாஜி

ராஜாமணி பிக்சர்ஸ் தயாரித்த ‘குங்குமம்’ படத்துக்கு இசை கே.வி.மகாதேவன். கவியரசு கண்ணதாசனும் பஞ்சு அருணாசலமும் பாடல்களை எழுத, இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் பஞ்சு இயக்கினார்கள்.

படம் அதன்பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கும். காட்சியில் அழுத்தமில்லாமல், திரைக்கதையில் நகர்வு இல்லாமலும் இருக்கும். நாகேஷ், மனோரமா இருந்தும் காமெடியே இல்லை என்பது அப்போது பார்த்த ரசிகர்களுக்குக் குறையாகவும் ஏமாற்றமாகவும் இருந்திருக்கும்.

படத்தின் மிகப்பெரிய பலம் பாடல்கள்தான். எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்திருப்பார்கள் கவியரசர் கண்ணதாசனும் கே.வி.மகாதேவனும். ‘பூந்தோட்டக் காவல்காரா... பூப்பறிக்க இத்தனை நாளா?’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல், டைட்டில் பாடலாக, ‘குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்’ என்ற பாடல் அந்தக் காலத்தில் ஒலிக்காத கல்யாண வீடுகளே இல்லை. ‘தூங்காத கண்ணென்று ஒன்று’ பாடல், இன்றைக்கும் இரவுகளில் பலரும் கேட்கக் கூடிய பாடலாக அமைந்திருக்கிறது. ‘மயக்கம் எனது தாயகம், மெளனம் எனது தாய்மொழி’ என்ற பாடலும் சூழலும் நமக்குள்ளேயும் ஒரு அமைதியைக் கொடுக்கும். படத்தின் மிக முக்கியமான பாடலான, ‘சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா’ என்று சாரதாவும் சிவாஜியும் பாடுகிற பாடலும் நடிப்பும் இன்றைக்கும் மறக்கவே முடியாதவை.

படம் முழுக்க சிவாஜிதான். ஒவ்வொரு வேடமாகப் போட்டுக்கொண்டே வரும் சிவாஜி, ஒருகட்டத்தில் பெண் வேடமிட்டு வந்து, போலீஸை ஏமாற்றுவார். நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த காலத்தில், ஆரம்பத்தில் சிவாஜி ஸ்த்ரீ பார்ட் தான் போடுவார் என்பது பலருக்கும் தெரிந்ததுதானே!

சாரதா
சாரதா

1963 ஆகஸ்ட் 2-ம் தேதி படம் வெளியானது. படம் வெளியானபோது, சுமாரான வெற்றியையும் பின்னர் பல வருடம் கழித்து, புத்தம்புதிய காப்பி என்று வந்த போது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்றும் சொல்வார்கள். படம் வெளியாகி, 59 வருடங்களாகிவிட்டன.

இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் ‘சின்னஞ்சிறிய வண்ணப்பறவை’ பாட்டு, நம் நெஞ்சில், நம் எண்ணத்தில், சின்னஞ்சிறிய வண்ணப்பறவையாகப் பறந்தடித்துக் கொண்டேதான் இருக்கும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in