‘மன்னவனே அழலாமா’ என ஒத்தடம் தந்த ‘கற்பகம்!’

59 ஆண்டுகளாகியும் மறக்க முடியாத தாலாட்டு... ‘அத்தைமடி மெத்தையடி!’
‘மன்னவனே அழலாமா’ என ஒத்தடம் தந்த ‘கற்பகம்!’

ஒரு படத்தை வைத்துக்கொண்டு பல படங்களை உருவாக்கிவிட முடியுமா? இந்தப் படத்தை பகுதி பகுதியாக எடுத்துக்கொண்டு, அதை ஒவ்வொரு படமாக என பல படங்களை உருவாக்கிவிட முடியும். உருவாக்கியும் இருக்கிறார்கள். முதல் மனைவி இறந்தும்கூட அந்த மனைவியின் நினைப்பிலேயே வாழ்கிற கணவன். இரண்டாவது மனைவியாக வந்தவள், மீள முடியாத கணவனைப் பொறுத்துக்கொண்டு, ‘காலம் வரும்’ என்று வாழ்கிறாள். பல கிராமங்களுக்கே பணக்காரராக இருப்பவர், பண்பை மட்டுமே நேசித்து மரியாதை செலுத்துகிறார். மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையே அப்படியொரு பாசப் பிணைப்பு. இன்னொருவர் குழந்தையைத் தன் குழந்தை போல் வளர்க்கிற அருமையான தம்பதி. பணத்திமிரிலும் உடல் திமிரிலும், கெட்டவனின் கையில் சிக்கிக்கொண்டு, அவர்கள் வீட்டுப் பெண்ணையும் திருமணம் செய்துகொண்டு சுற்றிவிட்ட பம்பரமாக ஆடுகிற இளைஞன். விவசாயத்தை நேசிக்கிற இளைஞன். உழைப்பவர்களுக்கு மதிப்பு கொடுக்கிற நாயகன். உறவுகளை விட்டுக்கொடுக்காமல் சகலத்தையும் சமாளிக்கிற ஹீரோ... என்று ‘கற்பகம்’ படத்தை வைத்துக்கொண்டு, நூறு படங்களை எடுத்துவிடலாம்.

மிகப்பெரிய பணக்காரர் நல்லசிவம். அவரின் மகள் கற்பகம். மகன் ராஜாங்கம். பணமிருந்தாலும் பண்பையும் அன்பையும் கிராமத்தையும் நிலத்தையும் முக்கியமாக மனிதர்களையும் நேசிப்பவர் நல்லசிவம். அவர் மகள் அமுதாவும் அப்படித்தான்! ஆனால் ராஜாங்கம் பட்டணத்தில் படிக்கப் போகிறேன் என ஊதாரித்தனத்தில் ஈடுபடுகிறான். தாண்டவத்தின் தொடர்பு அவன் குணத்தையே மாற்றுகிறது. தாண்டவம், தன் மகள் பங்கஜத்தை ராஜாங்கம் பணக்கார வீட்டுப் பையன் என்று தெரிந்து பழக அனுமதிக்கிறான். இருவரும் காதலிக்கிறார்கள்.

அந்தக் கிராமத்தில் விவசாயத்தை தெய்வமாக நினைத்து பூமியைச் செழிக்கச் செய்யும் இளைஞன் சுந்தரம். அவனுடைய பண்பைப் பார்த்துவிட்டு, தன் மகள் கற்பகத்தை திருமணம் செய்துவைக்கிறார். அதேநாளில், ராஜாங்கத்துக்கும் பங்கஜத்துக்கும் திருமணம் நடக்கிறது. மகனின் திருமணத்திலும் அவனுடைய நடத்தையிலும் திருப்தி இல்லாத நல்லசிவம், பண்ணை பொறுப்புகளை மருமகனிடம் ஒப்படைக்கிறார்.

இந்த நிலையில் பங்கஜத்துக்குக் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையைத் தங்கள் குழந்தை போல் பாசமும் நேசமும் ஊட்டி வளர்க்கிறார்கள் சுந்தரமும் கற்பகமும். அந்த மாவட்டத்தில் ஆட்சியராக இருந்து ஓய்வு பெற்றவர் சுப்ரமணியன். அவரின் மகள் அமுதா. சுப்ரமணியனும் நல்லசிவமும் பால்ய நண்பர்கள். நல்லசிவம் வீட்டு கணக்குப்பிள்ளையும் நேர்மையானவர்.

வீட்டில் அடங்காத முரட்டுத்தனம் பண்ணிக்கொண்டிருந்த, எவருக்குமே கட்டுப்படாத காளையை முன்பொருமுறை நல்லசிவம் விற்றிருப்பார். அந்தக் காளையை மீண்டும் விற்பனைக்குக் கொண்டுவர, ‘முதலாளி நீயா, நானா’ எனும் போட்டியில் மாமனாரின் சொல்லைக் கேட்டு ராஜாங்கம் வீம்புக்கு வாங்கிவைக்கிறான்.

ஒருகட்டத்தில், மகன், மருமகள், சம்பந்தியை வீட்டைவிட்டு அனுப்புகிறார் நல்லசிவம். அதனால் குழந்தைதான் ரொம்பவே வாடிப்போய்விடுகிறாள். அத்தை கற்பகத்தையும் மாமா சுந்தரத்தையும் தேடி குழந்தை ஓடிவருகிறாள். அந்தத் தருணத்தில் ஏற்படுகிற சிக்கல், சண்டை... அப்போது திமிறிக்கொண்டிருக்கிற மூர்க்கக் காளை, கட்டினை அறுத்துக்கொண்டு ஓடிவந்து கற்பகத்தைக் குத்திச் சாய்க்கிறது. இதில் கற்பகம் இறக்கிறாள்.

தன் மருமகன் ஒண்டிக்கட்டையாக இருப்பதை சகிக்கமுடியாத நல்லசிவம், அவருக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்க முயல்கிறார். ஆனால் அவரோ மறுக்கிறார். இறுதியான போட்டியில், மாமனார் வெல்கிறார். தன் நண்பரின் மகளான அமுதாவிடம் சம்மதம் கேட்டு தன் மருமகனுக்குத் திருமணம் செய்துவைக்கிறார்.

ஒருபக்கம், அமுதாவை மனைவியாக ஏற்கமுடியாமல் தவிக்கிறார் சுந்தரம். இன்னொரு பக்கம், அந்தக் குழந்தை, கற்பகத்தை அம்மாவாக ஏற்றுக்கொண்டது போல, அமுதாவை அம்மாவாக ஏற்க மறுக்கிறது. இந்தப் போராட்டங்களுக்கு நடுவே மகன் அப்பாவுக்கு அனுப்புகிற வக்கீல் நோட்டீஸ், சுந்தரத்தைப் பழிவாங்க தாண்டவம் போடும் திட்டம், நிலங்களை அழிக்கவும் நெல்மூட்டைகளைத் திருடுகிற செயல் எனும் களேபரங்களுக்கு மத்தியில், அமுதாவை ஏற்கிறான் சுந்தரம். அந்தக் குழந்தையும் அமுதாவை அம்மா என்றழைக்கிறது. கெட்டவனாக இருக்கும் ராஜாங்கமும் அவன் மனைவியும் திருந்துகிறார்கள் என்று ‘சுபம்’ போடுவார் இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

நல்லசிவமாக எஸ்.வி.ரங்காராவ். அவரின் மகள் கற்பகமாக கே.ஆர்.விஜயா. மகன் ராஜாங்கமாக முத்துராமன். மருமகன் சுந்தரமாக ஜெமினி கணேசன். அமுதாவாக சாவித்திரி. அவருடைய அப்பாவாக நாகையா. முத்துராமனின் மனைவியாக ஷீலா. மாமனாராக எம்.ஆர்.ராதா. கணக்குப்பிள்ளையாக வி.கே.ராமசாமி. குழந்தையாக பேபி ஷகீலா.

இந்த ஏழெட்டு கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு காவியமே படைத்திருந்தார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். ஜெமினியின் நடிப்பில் மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. சாவித்திரியும் மிகச்சிறப்பாக நடித்திருப்பார். சகஸ்ரநாமமும் இதில் அற்புதமான ரோல் பண்ணியிருக்கிறார். ரங்காராவ் நடிப்புக்குத் தீனி போடுகிற கதாபாத்திரம் கொடுக்கிற கே.எஸ்.ஜி, இந்தப் படத்திலும் அப்படித்தான் கொடுத்தார்.

பல இடங்களில் எல்லா கேரக்டர்களையும் கடந்து ஸ்கோர் செய்திருப்பார் ரங்காராவ். கே.ஆ.விஜயாதான் ‘கற்பகம்’. இதுதான் அவருக்கு முதல் படம். வெளியான தருணத்தில் அவரின் நடிப்பை அசந்துபோய் பார்த்து பாராட்டினார்கள். இப்போது அந்தப் படத்தைப் பார்த்தால், ‘கே.ஆர்.விஜயாவின் முதல் படம் இதுவாக இருக்காது. பொய் சொல்கிறீர்கள்’ என்பீர்கள். அந்த அளவுக்கு, தன் சிறப்பான நடிப்பை, முதல் படத்திலேயே வழங்கினார் கே.ஆர்.விஜயா. குழந்தை ஷகீலாவும் நடிப்பில் அசத்தினாள்.

வி.கே.ராமசாமி, நாகையா என படத்தில் நடித்த அனைவருமே தங்களுக்கான பங்களிப்பை வெகு அழகாகச் செய்தார்கள். மெல்லிசை மன்னர்களின் இசையில் கவிஞர் வாலி எல்லாப் பாடல்களையும் எழுதினார். எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ‘ஒரேயொரு பாடல் எழுதட்டும்’ என்று கே.எஸ்.ஜி. சொல்லிவிட்டார். வாலியும் ஒரு பாடலை எழுதிக்கொடுத்தார். வரிகளில் ஜாலங்களைக் கொட்டியிருந்த வாலியின் சொற்களில் சொக்கிப்போன கே.எஸ்.ஜி. எல்லாப் பாடல்களையும் வாலியையே எழுதவைத்தார். எல்லாப் பாடல்களுமே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. எம்.ஆ.ராதாவின் வில்லதனமும் காமெடியும் ரகளை பண்ணின. முத்துராமனும் ஷீலாவும் சிறப்புற நடித்தார்கள்.

காமெடிக்கென டிராக்கெல்லாம் வைக்கமாட்டார் கே.எஸ்.ஜி. மேலும், பாட்டுக்குள்ளே கதையின் ஜீவனைப் புகுத்திவிடவேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பார். ’அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா/ ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா’ என்ற பாடலில், ’மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி/ முல்லை மல்லிகை மெத்தையிட்டு/ தேன் குயில் கூட்டம் பண் பாடும்/ இந்த மான் குட்டி கேட்டு கண் மூடும்’ என்று எழுத... ‘ம்.... அத்தைமடி மெத்தையடி’ என்று சுசீலா தன் குரலால் தாலாட்டியிருப்பார்.

’வேறோர் தெய்வத்தை போற்றவில்லை/ வேறோர் தீபத்தை ஏற்றவில்லை/ அன்றோர் கோயிலை ஆக்கி வைத்தேன் / அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்’ என்று சொல்லிப் பாடும்போது, குழந்தை ஷகிலாவின் அப்பா முத்துராமனும், அவர் மனைவி ஷீலாவும் வந்துவிடுவார்கள். கே.ஆர்.விஜயா பாடலை நிறுத்தியிருப்பார். ‘அத்தை யாருன்னு சொல்லு’ என்று குழந்தையிடம் கேட்க, குழந்தை அம்மாவை அத்தை என்று கைகாட்டும். அத்தை கே.ஆர்.விஜயாவை அம்மா என்று காட்டும். உடனே ‘அன்னை மடி மெத்தையடி’ என்று ‘அத்தை’யை ‘அம்மா’ என்றாக்கிப் பாடுவார். பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள், நெகிழ்ந்து கரைந்து போனார்கள்.

’பக்கத்து வீட்டு பருவ மச்சான்’ என்றொரு பாடலும் ஹிட்டடித்தது. படத்தில் இன்னொரு பாடலாக ‘ஆயிரம் இரவுகள் வருவதுண்டு’ என்ற பாடலில் மெல்லிசை மன்னர்களும் கவிஞர் வாலியும் சுசீலாம்மாவும் கூட்டு சேர்ந்து விளையாடியிருப்பார்கள். ‘ஆயிரம் இரவுகள் வருவதுண்டு/ ஆனால் இதுதான் முதல் இரவு/ ஆயிரம் உறவுகள் வருவதுண்டு/ ஆனால் இதுதான் முதல் உறவு’ என்ற பாடலில், ’வயதில் வருவது ஏக்கம்/ அது வந்தால் வராது….ம்ம்ம்’ என்று அந்த வார்த்தையை நம் சிந்தனைக்கே நிரப்பக் கொடுத்துவிடுவார்கள். ‘வந்ததம்மா மலர் கட்டில்/ இனி வீட்டினில் ஆடிடும்...’ என்று நிறுத்திவிட்டு, ஆஹா…ஆஹா…ஆரி….ஆரி ….ஆராரோ …. என சுசீலா பாடுவார்.

’வருவார் வருவார் பக்கம்/ உனக்கு வருமே வருமே…’ என்று கடைசி வரியை விட்டிருப்பார். ‘தருவார் தருவார் நித்தம்/ இதழ் தித்திக்க தித்திக்க….’ என்று கடைசி வரியை முடிக்காமல் முடித்திருப்பார் வாலி. ’யாரோ சொன்னார் கேட்டேன்/ நான் கேட்டதை உன்னிடம் சொன்னேன்/ நானாய் சொன்னது பாதி/ இனி தானாய் தெரியும் மீதி’ என்று முதலிரவு அறைக்குள் சென்ற மணமகளுக்கு, மணமாகாத பெண் பாடி முடிக்கின்ற வரிகள் எத்தனைப் பொருத்தமானவை.

'மன்னவனே அழலாமா/ கண்ணீரை விடலாமா / உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க/ மன்னவா மன்னவா மன்னவா’ என்ற பாடலில் தங்கள் துக்கம் சேர்த்து அழாதவர்களே இருக்க முடியாது.

’கண்ணைவிட்டுப் போனாலும் கருத்தை விட்டுப் போகவில்லை / மண்ணைவிட்டுப் போனாலும் உன்னைவிட்டுப் போகவில்லை / இன்னொருத்தி உடலெடுத்து இருப்பவளும் நானல்லவா/ கண்ணெடுத்தும் பாராமல் கலங்குவதும் வீண் அல்லவா/ மன்னவா மன்னவா மன்னவா’ என்று கதையுடன் சேர்ந்த பாட்டு, பாட்டோடு சேர்ந்த வரிகள், வரிகளுடன் இணைந்த இசை... இவற்றில் கலந்த ஜீவன் மிக்க நடிப்பு... என ‘கற்பகம்’ மிகப்பெரிய விருட்சமாக நம் மனதுக்குள் வளர்ந்திருக்கிறாள்.

இந்தப் படம் அடைந்த வெற்றி சாதாரணமானதல்ல. தீபாவளி வெளியீடாக எம்ஜிஆர், சிவாஜி படங்கள் வெளியானபோதும், ‘கற்பகம்’தான் மக்களின் மனதிலும் வசூலிலும் முதலிடம் பிடித்தது. தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. ஜெமினி கணேசனுக்கு சிறந்த நடிகருக்கான விருதை சென்னை திரைப்பட ரசிகர்கள் சங்கம் வழங்கியது. வெளியிட்ட தியேட்டர்களில், 100 நாட்களுக்கு மேல் ஓடியது. படம் பார்க்க வந்து திரும்பிப் போனவர்களை வைத்து ஒரு காட்சியே நடத்தலாம். அதேபோல, அந்தக் காலத்தில் பெண்கள் ‘ரீப்பீடட் ஆடியன்ஸ்’ என இந்தப் படத்துக்குத்தான் பெருமளவில் வந்து வந்து பார்த்தார்கள்.

அமர்ஜோதி பிலிம்ஸ் எனும் பேனரில் கே.எஸ்.ஜி-யின் சகோதரர் சபரிநாதன் தயாரித்தார். இந்தப் படத்தின் வெற்றியையும் வசூலையும் கொண்டு, ‘கற்பகம் ஸ்டூடியோ’வை உருவாக்கினார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

1963 நவம்பர் 15-ம் தேதி ’கற்பகம்’ வெளியானது. இந்தப் படத்தை, 1965-ல் இந்தியில் ரீமேக் செய்தார்கள். அதே வருடத்தில் தெலுங்கிலும் ரீமேக் செய்தார்கள். பிறகு படம் வெளியாகி, 14 வருடங்கள் கழித்து மலையாளத்திலும் ரீமேக் செய்தார்கள். எல்லா மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

படத்தில் இன்னொரு மிகப்பெரிய ஆச்சரியம்... ஜெமினி கணேசன், முத்துராமன் என முக்கியமான நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்குப் பாடல்கள் இல்லை. ஆக, ஆண் குரல் பாடவே இல்லை. ஒரேயொரு பெண்குரல்தான். மொத்தப் பாடல்களையும் பி.சுசீலாதான் பாடினார். இந்தப் படத்தின் மூலம், கே.எஸ்.ஜி.க்கு ஸ்டூடியோ கிடைத்தது. கவிஞர் வாலிக்கு எல்லாப் பாடல்களும் எழுதுகிற வாய்ப்பு கிடைத்தது.

தமிழகத்துப் பெண்களுக்கு, ‘அத்தைமடி மெத்தையடி ஆடிவிளையாடம்மா’ கிடைத்தது. துக்கித்துக் கிடக்கும் ஆண்களுக்கு ‘மன்னவனே அழலாமா’ கிடைத்தது. புதுமணத் தம்பதிக்கு ‘ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதலிரவு’ கிடைத்தது. மொத்தத் தமிழ்த் திரையுலகிற்கும் ரசிகர்களுக்கும் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா எனும் அற்புதமான நடிகை கிடைத்தார்!

வரும் 2023-ம் ஆண்டு நடிகை கே.ஆர்.விஜயாவின் திரைப்பயணத்தின் 60-வது ஆண்டு ஆகும். அவருக்கு தமிழ்த் திரையுலகமும் அரசும் இணைந்து விழா நடத்தி கெளரவித்தால், நமக்குத்தானே பெருமை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in