‘எனது ராஜசபையிலே ஒரே சங்கீதம்’ பாடலுக்கு 59 வயது!

சிவாஜி, சரோஜாதேவி நடிப்பில் வெளியான ‘கல்யாணியின் கணவன்’
‘எனது ராஜசபையிலே ஒரே சங்கீதம்’ பாடலுக்கு 59 வயது!

ஏனோ தெரியவில்லை... ‘கல்யாணி’ எனும் பெயர் தமிழ் சினிமாவில் மறக்க முடியாததாக அமைந்துவிட்டது. ‘பராசக்தி’ படம் வந்த பிறகு தமிழகத்தில், நிறைய பேர் தங்கள் வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால், ‘குணசேகரன்’ என்று பெயர் வைத்தார்கள். பெண் குழந்தை பிறந்தால் ‘கல்யாணி’ என்று பெயர் சூட்டினார்கள். ‘பராசக்தி’யில் சிவாஜியின் பெயர் குணசேகரன். அவரின் தங்கை கதாபாத்திரத்துக்கு ‘கல்யாணி’ என்று பெயர். டி.ராஜேந்தர் கூட தன் படத்துக்கு ‘என் தங்கை கல்யாணி’ என்று பெயர் வைத்தார். கழுதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்துக்கு, ‘பஞ்ச கல்யாணி’ எனப் பெயர் வைத்திருந்தார்கள். இப்படியாக, ‘கல்யாணி’ எனும் பெயர் தமிழ் சினிமாவில் நிலைத்து நின்றுவிட்டது.

பணக்காரப் பெண்ணும் ஏழை ஆணும் காதலித்தால், அந்தக் காதலுக்கு அந்தஸ்துதானே குறுக்கே நிற்கும். ஆனால் அதெல்லாம் இல்லாமல், சூழ்ச்சிகளும் பழிக்குப் பழியும் தேவையே இல்லாமல் காதலர்களைப் பிரித்துப் போடுகின்றன. இறுதியில், சூழ்ச்சிகள் தெரிந்தனவா, பழிக்குப் பழி குணம் விடுபட்டதா என்பதை விறுவிறுப்புடன் சொன்னது படம்தான் ‘கல்யாணியின் கணவன்’.

மிகப்பெரிய பணக்காரர் எஸ்.வி.ரங்காராவ். அவரின் மகள் சரோஜாதேவி. ரங்காராவை ‘அண்ணன் அண்ணன்’ என்று அன்புடன் அழைக்கும் பாத்திரத்தில் எம்.ஆர்.ராதா.

சரோஜாதேவியின் முறைப்பையன் டி.ஆர்.ராமச்சந்திரன். சரோஜாதேவி தோழிகளுடன் ஆற்றில் குளிக்கச் செல்வார். நீரில் மூழ்கி தத்தளிப்பார். சிவாஜி அந்தக் கிராமத்தில் விவசாயப் பணிகளைச் செய்துகொண்டிருப்பார். அவர் ஆற்றில் குதித்து சரோஜாதேவியைக் காப்பாற்றுவார். நன்றிக்கடனாக சரோஜாதேவி தன் அப்பா ரங்காராவிடம் சொல்லி, செகரட்டரியாக சிவாஜியை வேலைக்குச் சேர்த்துவிடுவார்.

இருவருக்கும் காதல். இதனால் டி.ஆர்.ராமச்சந்திரன் கோபமாவார். எம்.ஆர்.ராதா தனக்குத் தெரிந்தவர்களுக்குப் பணம் தேவையென்றால் புரோநோட்டு கொடுத்தோ நகைகள் கொடுத்தோ அவர்களுக்கு ரங்காராவிடம் பணம் வாங்கித் தருவார். சிவாஜி - சரோஜாதேவி காதலுக்கு ரங்காராவ் பச்சைக்கொடி காட்டுவார். அந்தச் சமயத்தில் சிவாஜிக்கு ஒரு மொட்டைக்கடுதாசி. அதில், சரோஜாதேவிக்கு கள்ளக்காதல் இருப்பதாக எழுதப்பட்டிருக்கும். இதேபோல், சரோஜாதேவிக்கு ஒரு மொட்டைக்கடுதாசி. அதில், சிவாஜிக்கு கள்ளக்காதல் இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கும். ஓரிடத்தில் சந்திக்க வரச்சொல்லியும் கடிதம் இருக்கும்.

அப்போது அந்த இடத்துக்கு வரச்சொல்லி, மணிமங்கலம் ஜமீனுக்கு போன் வரும். அங்கே ஜமீன் கொல்லப்படுவார். சிவாஜி மீது பழிபோடப்படும். தலைமறைவாக, ஓடிக்கொண்டிருப்பார். சகலத்துக்கும் காரணம்... வேறு யார்... எம்.ஆர்.ராதாதான்.

‘நான் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற சமயத்தில், உன்னைக் கெடுத்து, நம் குழந்தையையும் கொன்றுவிட்ட ரங்காராவைப் பழிவாங்கத்தான் இதைச் செய்கிறேன்’ என்று மனைவியின் புகைப்படத்துக்கு எதிரே நின்றுகொண்டு சொல்லிப் புலம்புவார்.

இறுதியில், பல வருடங்களுக்கு முன்பு வீட்டில் வேலை பார்த்த பெண்மணி, நடந்தது மொத்தத்தையும் சொல்வார். ‘ஜமீன் துன்புறுத்தினார், மனைவியை அடைய நினைத்தார், ரங்காராவ் காப்பாற்றினார், மனைவி இறந்துவிட்டார், உங்கள் மகள்தான் சரோஜாதேவி’ எனும் விவரங்களைச் சொல்ல எம்.ஆர்.ராதா நொந்துபோவார்; மனம் திருந்துவார். இறுதியில் சிவாஜியையும் சரோஜாதேவியையும் சேர்த்து வைப்பார். ‘நான்தான் கொலை செய்தேன்’ என்று ஒப்புக்கொண்டு ஜெயிலுக்குச் செல்வார்.

’குங்குமம்’ படத்திலும் ‘அண்ணன் ஒரு கோவில்’ படத்திலும் ’நான் வாழவைப்பேன்’ படத்திலும் தப்பித்து ஓடிக்கொண்டே இருப்பாரே சிவாஜி. இதிலும் இப்படித்தான். ஆனால், இயல்பான நடிப்பில் அசத்தியிருப்பார். சரோஜாதேவியும் நம்மை ஈர்த்திருப்பார். சரோஜாதேவிதான் கல்யாணி. ரங்காராவ் நடிப்புக்குச் சொல்லவா வேண்டும்!

எம்.ஆர்.ராதா நடிப்பு வழக்கம் போல் மிரட்டலாக இருக்கும். படத்தில் காமெடியோ காமெடிக்கு நடிகர்களோ இல்லை. ஒருவேளை இது குறையாக அப்போது பேசப்பட்டிருக்கலாம். ஆனால் போரடிக்காமல், யதார்த்த சம்பவங்களுடன், தெளிவான திரைக்கதையுடன் நகரும் படம்.

புகழ் பெற்ற பட்சிராஜா ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த படம்தான் ‘கல்யாணியின் கணவன்’. ஸ்ரீராமுலு நாயுடு இயக்கியிருந்தார். கதை வசனத்தை வேலவன் எழுத, கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார். எல்லாப் பாடல்களும் மெலடியில் நம்மைக் கவர்ந்து முணுமுணுக்க வைத்தன. ‘எனக்கு வாய்க்கும் மாப்பிள்ளை இருபது வயது ஆண்பிள்ளை’ என்ற பாடலை சுசீலா கொஞ்சிப் பாடியிருப்பார். ’அய்யா உன் கருணை’ எனும் நான்கு வரிப் பாடல் கூட நம்மை ரசிக்கவைத்திருக்கும். ‘கையிருக்குது காலிருக்குது முத்தையா - இங்கே கடவுள் தந்த நிலமிருக்குது முத்தையா, பொய்யில்லாத நாக்கு இருக்குது முத்தையா - நம்ம புன்னகைக்கு பொருள் இருக்குது முத்தையா’ என்ற பாடல் அப்போது எல்லோருக்கும் பிடித்த பாடலாக, எல்லோரும் முணுமுணுக்கும் பாடலாக அமைந்தது. டிஎம்எஸ் அருமையாகப் பாடியிருப்பார்.

படத்தின் மிகப்பெரிய ஹிட் பாடல்... ‘எனது ராஜசபையிலே ஒரே சங்கீதம் - அதில் இரவும் பகலும் தூக்கமில்லை ஒரே சந்தோஷம்’. இனிமையான இந்த டூயட் பாடல் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. அன்றைக்கு கல்யாண வீடுகளில் நிச்சயமாக ஒலிபரப்புகிற பாடல்களில் இந்தப் பாடலும் இருந்தது. அதேபோல், விவிதபாரதியிலும் சிலோன் ரேடியோவிலும் இந்தப் பாடலை தினமும் ஒலிபரப்பிய காலமெல்லாம் உண்டு.

1963 செப்டம்பர் 20-ல் வெளியானது ‘கல்யாணியின் கணவன்’. படம். வெளியாகி 59 ஆண்டுகளாகின்றன. நம் மனமெனும் ராஜசபையில் ஓயாத சங்கீதமாக இசைத்துக் கொண்டே இருக்கிறது ‘எனது ராஜசபையிலே ஒரே சங்கீதம்’.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in