’எங்கே நிம்மதி’ என்று கேட்ட ‘புதிய பறவை’க்கு 58 வயது!

- மறக்கவே முடியாத கோபால், லதா, சித்ரா!
’எங்கே நிம்மதி’ என்று கேட்ட ‘புதிய பறவை’க்கு 58 வயது!

பெரும்பாலான படங்கள், படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே ‘இதுதான் கதை, இப்படித்தான் முடிவு இருக்கும்’ என்றெல்லாம் நம்மால் யூகித்துவிடமுடியும். ஆனால், சில படங்கள் மட்டுமே, கதையின் முடிச்சுகள் வலுவாகப் போடப்பட்டிருக்கும். அடுத்து என்ன நடக்கும் என்பதை நம்மால் யூகிக்கமுடியாமல் போகும். ஒருகட்டத்தில், திரைக்கதை ஒருபுள்ளியில் வந்து குவியும்போதுதான், முக்கியமான அந்த முடிச்சு அவிழ்க்கப்படும். ‘அட...’ என்று எல்லோருமே வாய்பிளந்து அதிர்ச்சியில் உறைந்து, கரவொலி எழுப்புவோம். ‘வணக்கம்’ போட்டதும் ‘கொன்னுட்டான்யா, செம படம்’ என்று சொல்லியபடியே வெளியே வருவோம். முதல் முறை பார்க்கும்போது மட்டுமில்லாமல், எத்தனை முறை பார்த்தாலும் அப்படிச் சொல்லவைப்பது அதிசயம்தான். எப்போது பார்த்தாலும் புதிதாகத் தெரிகிற கதையும் திரைக்கதையும்தான், ‘புதிய பறவை’யின் பலம்!

சிங்கப்பூரில் இருந்து கதையின் நாயகன் சிவாஜி கப்பலில் இந்தியா வருவார். அதில், நாயகி சரோஜாதேவியும் அவரின் அப்பா வி.கே.ராமசாமியும் வருவார்கள். அறிமுகமாகிக் கொள்வார்கள். அதையடுத்து ஊட்டியில் உள்ள தன் பங்களாவுக்கு வரும் சிவாஜி, குதிரைப் பந்தயத்தின் போது, மீண்டும் சந்திப்பார். வீட்டுக்கு அழைப்பார். வீட்டிலேயே தங்கிக் கொள்ளச் சொல்வார்.

அப்படித் தங்குகிற வேளையில், எம்.ஆர்.ராதாவிடம் இருந்து போன் வரும். போனில், சிவாஜியையும் சரோஜாதேவியையும் இணைத்துப் பேசிக் கலாய்ப்பார் எம்.ஆர்.ராதா. ஆரம்பத்தில் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார் சிவாஜி.

பிறகு ஒரு சந்தர்ப்பத்தில், இருவரும் காரில் செல்லும்போது, ரயில்வே கேட் போடப்பட்டிருக்கும். அப்போது சிவாஜிக்கு படபடப்பாகும். அதை ஏதோ சொல்லி சமாளிப்பார். பின்னர், சிவாஜிக்கும் சரோஜாதேவிக்கும் காதல் வரும். அதன் பின்னரும் இதேபோல் நிகழ்வு. அப்போது தனக்கு ஏற்கெனவே திருமணமாகிட்டது என்று சொல்ல, ஃப்ளாஷ்பேக் விரியும். அதில் சிங்கப்பூர் கிளப்பில் பாடகியாக அறிமுகமாகிற செளகார் ஜானகி மீது சிவாஜி காதல்வயப்படுவார். திருமணமும் செய்துகொள்வார். ஆனால், முதலிரவின் போது முழு போதையில் செளகார் வர, அதிர்ந்து போவார் சிவாஜி. அடுத்தடுத்து இதேபோல் கருத்து மோதல்களும் ஒழுக்க மீறல்களும் நடக்க, ஒருநாள் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுவிட்டார் சௌகார் என்பதுடன் ஃப்ளாஷ்பேக் முடியும்.

சிவாஜி - சரோஜாதேவி நிச்சயதார்த்தம். அப்போது எம்.ஆர்.ராதா வருவார். கூடவே, செளகார் ஜானகியும் வர, மொத்தப் பேருக்கும் அதிர்ச்சி. “அத்தான்” என்பார் செளகார். சிவாஜியோ நம்பவே மாட்டார். “என் மனைவி இறந்துவிட்டாள்” என்று ஒவ்வொரு சாட்சியாகச் சொல்ல, ஒவ்வொன்றையும் முறியடிப்பார் எம்.ஆர்.ராதா. இந்த விஷயத்தால், நிச்சயதார்த்தம் நடக்காமல் போகும். பிறகு, ‘இந்த செளகார்தான் சிவாஜியின் மனைவி’ என்பது உறுதியாகிக் கொண்டே வரும். இறுதியாக, செளகார் ஜானகியின் அண்ணன் ராமதாஸ் வர, அவரும் “ஆமாம், இதுதான் என் தங்கை” என்று சொல்ல, போலீஸ் நண்பர் ஓ.ஏ.கே.தேவர், வி.கே.ராமசாமி, செளகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, ராமதாஸ், சரோஜாதேவி என எல்லோரையும் வைத்துக் கொண்டு, “நான்தான் என் கையால என் மனைவியைக் கொன்றேன்” என நடந்தது மொத்தத்தையும் சொல்லுவார் சிவாஜி.

இதைக் கேட்ட சரோஜாதேவி, “இவரை கைது செய்யுங்கள்” என்பார். அதிர்ந்து போவார் சிவாஜி. அவர் மட்டுமா? படம் பார்க்கிற நாமும்தான்! ஏற்கெனவே சிவாஜிதான் கொலையாளி என்கிற அதிர்ச்சி. அடுத்த அதிர்ச்சியாக, வி.கே.ஆர்., எம்.ஆர்.ராதா, சரோஜாதேவி என எல்லோரும் போலீஸ் என தெரியவருவது பேரதிர்ச்சி.

சிவாஜியை கைது செய்வதுடன் படம் முடியும். எழுந்திருக்க மனமே இல்லாமல் நாமும் ‘புதிய பறவை’யின் அழகில், சிலிர்த்துத் திகைத்து கைதியாகி நிற்போம்.

சிவாஜியின் பெயர் கோபால். சரோஜாதேவியின் பெயர் லதா. செளகார் ஜானகியின் பெயர் சித்ரா. சிவாஜியின் புருவம் கூட நடிக்கும் என்போமே! இதில் சிவாஜி ஸ்டைலாக சிகரெட் புகைக்க, அதிலிருந்து வரும் புகை கூட ஸ்டைல் காட்டி நடிக்கும். மிகப்பெரிய கோடீஸ்வரரை அப்படியே கண்முன் நிறுத்திவிடுவார் சிவாஜி.

அம்மாவை இழந்த விரக்தியில் இருக்கும்போது ஒரு சோகம், செளகார் ஜானகியின் பாடலைக் கேட்டதும் வருகிற பரவசம். பிறகு அவரால் ஏற்படுகிற மான அவமானங்களால் விளைகிற துக்கம், அதில் அப்பாவையே பறிகொடுக்கிற கொடுமை, அதன் பின்னர், சரோஜாதேவியை சந்தித்ததும் கிடைக்கிற ஆறுதல். இருவருக்கும் காதல் மலருகிற போது கொஞ்சம் தயக்கம், கொஞ்சம் கூச்சம், கொஞ்சம் சந்தோஷம், கொஞ்சம் நிம்மதி என உணர்ச்சிகளை சட்சட்டென்று நமக்குக் கடத்துக்கிற சிவாஜியின் நடிப்புதான் முதலும் முழுமையுமான பிரம்மாண்டம். அவர், ‘சித்ரா...’ என்றும் ‘லத்தா... லத்தா...’ என்றும் அழைப்பதே தனி பாணியாக இருக்கும்.

சரோஜாதேவி, காதலை மட்டுமே முகத்தில் காட்டிவிட்டு, உள்ளே வேறொரு முகம் வைத்திருப்பதை கடைசிவரை காட்டவே மாட்டார். ஒவ்வொரு தருணத்திலும் காதலில் உருகுவதும் செளகார் வந்துவிட்ட பிறகு மருகுவதும் என சிறப்பான நடிப்பை வழங்கியிருப்பார். சிவாஜிக்குப் பிறகு அசத்தலான நடிப்பென்றால், அது செளகார் ஜானகியின் நடிப்புதான்!

முதலில், “செளகார்ஜானகியை இந்தக் கேரக்டருக்குப் போடலாம்” என சிவாஜி சொன்னபோது, இயக்குநர் தாதாமிராஸி, “செளகார் வேணாம்” என்று சொல்லிவிட்டார். ஆனால், “செளகார்தான் சிறப்பாக இருக்கும்” என்பதில் சிவாஜி உறுதியாக இருந்தார். செளகார் என்றாலே அழுகாச்சி கதாபாத்திரம் என்பதையெல்லாம் கடந்து, உடனிருப்பவரை தன் கதாபாத்திரத்தில் அழவைத்து கதறச் செய்துவிடுவார் செளகார் ஜானகி. ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாட்டுக்கு இந்தப் பக்கம் கேட்டுக்கொண்டிருக்கிற சிவாஜி ஸ்டைல் காட்ட, அந்தப் பக்கம் பாடிக்கொண்டிருக்கும் செளகார் புது ஸ்டைல் காட்டி அசத்துவார். அந்தப் பாடலுக்கு செளகார் உடுத்தி இருக்கும் புடவை கூட காஸ்ட்யூமர் கொடுத்தது இல்லை. கதாபாத்திரத் தன்மையைப் புரிந்து உணர்ந்து, தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு ஆளனுப்பி, அந்த கறுப்புப் புடவையை எடுத்து வரச் செய்து, அதில் உடனடியாக எம்ப்ராய்டரிங் செய்து உடுத்திக் கொண்டு நடித்தாராம்.

எம்.ஆ.ராதா. மிரட்டியிருப்பார். நாகேஷும் மனோரமாவும் சிரிக்கவைத்திருப்பார்கள். ஓ.ஏ.கே.தேவர் போலீஸாக வந்து, கண்ணியமாக நடித்திருப்பார். வி.கே.ராமசாமியின் இயல்பான நடிப்புக்குச் சொல்லவா வேண்டும். ஆரூர்தாஸின் வசனங்கள், ஒவ்வொன்றும் நறுக்குத் தெறித்தாற் போலிருக்கும். வசனங்களுக்காகவும் பல இடங்களில் கைத்தட்டல் எழுப்பி, ரசித்தது கூட்டம்.

சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவானது ‘புதிய பறவை’. மெல்லிசை மன்னர்களின் இசை படத்துக்கு பெரிய பலம் சேர்த்தது. ’உன்னை ஒன்று கேட்பேன்’, ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’, ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’, ‘ஆஹா மெல்ல நட மெல்ல நட’, ’எங்கே நிம்மதி எங்கே நிம்மதி’ என எல்லாப் பாடல்களும் ரசிகர்களின் மனங்களை அள்ளிக் கொண்டன. ‘உன்னை ஒன்று கேட்பேன்’ பாடலில் சரோஜாதேவி கொள்ளை அழகுடன் நடித்திருப்பார். ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’வில் செளகார் ஜானகி அசத்தியிருப்பார். பியானோவை ரொம்ப ஸ்டைலாக வாசிப்பார் சிவாஜி. ஏராளமான வயலின்களைக் கொண்டு இசையமைக்கப்பட்ட ‘எங்கே நிம்மதி எங்கே நிம்மதி’ பாடலை பாட்டுக்கச்சேரிகளில் எப்போது பாடுவார்கள் எனக் காத்திருந்தார்கள்.

வேற்று மொழிக்கதை. இயக்குநர் தாதா மிராஸியும் வங்க இயக்குநர். ’அவரே இயக்கட்டும்’ என்று சிவாஜி சொல்ல, அப்படித்தான் இயக்கத்தில் பிரமிப்பூட்டியிருப்பார் தாதா மிராஸி. இவரின் கதை சொல்லும் ஸ்டைலை வைத்துத்தான், ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நாகேஷ் கதை சொல்லும் காட்சியை உருவாக்கினார்கள் ஸ்ரீதரும் சித்ராலாயா கோபுவும்!

எல்லாப் பாடல்களும் கவியரசர் கண்ணதாசன். வார்த்தைகளில் கவிதையையும் கதையையும் சோகத்தையும் ஆறுதலையும் காதலையும் பிழிந்து ஜூஸ் போட்டுக் கொடுத்திருப்பார். ஒளிப்பதிவு, எடிட்டிங், செட்டுகள், வண்ணம் என அனைத்துமே அழகில் பிரம்மாண்டம் ஏற்படுத்தும். இந்தப் படத்தில் இருபது காட்சிகளுக்கும் மேலாக, சிவாஜி அப்ளாஸ் வாங்கிக்கொண்டே இருப்பார். அதிலும் ‘முகம் ஒன்னா இருக்கலாம், ஆனா ரேகை, ரேகை, ரேகை...’ என்று எல்லோரிடமும் கை விரல் காட்டியபடியே, கெத்துக் காட்டி, பூரிப்புடன் சிவாஜி வருகிற அந்தவொரு காட்சி போதும்... நடிகர் திலகம் மகா கலைஞன் என கட்டியம் கூறும்!

சிவாஜி ‘லத்தா... லத்தா’ என்று லதாவைச் சொல்லுவது போல, சரோஜாதேவி ‘கோப்பால் கோப்பால்’ என்று பேசியதும் அப்போது ஹிட்டாயிற்று. பிற்காலத்தில், இந்த ‘கோப்பால்’ நகைச்சுவைக்காகப் பயன்படுத்தப்பட்டதுதான் கொடுமை!

வெளியான சில தியேட்டர்களில், வெள்ளிவிழா கண்டது புதிய பறவை. பல தியேட்டர்களில் நூறு நாட்களைக் கடந்து ஓடியது. ‘சிவாஜி பிலிம்ஸ்’ எனும் பேனரில் சிவாஜி தயாரித்த முதல் படம் ‘புதிய பறவை’தான். 1964 செப்டம்பர் மாதம் 12-ம் தேதி வெளியானது ‘புதிய பறவை’.

படம் வெளியாகி, 58 ஆண்டுகளாகின்றன. இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும், ஒழுக்கம் மீறிய மனைவியை கொலைச் செய்துவிட்டு, அதை மறைத்து வாழுகிற, அன்புக்கு ஏங்குகிற கோபாலின் ‘புதிய பறவை’யாய் இன்றும் இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in