மலர்ந்து மணம் வீசும் ‘தொட்டால் பூமலரும்!’

- எம்ஜிஆரின் ‘படகோட்டி’; கவிஞர் வாலிக்கு புகழ் தந்த ‘பாட்டுக்கு படகோட்டி!
மலர்ந்து மணம் வீசும் ‘தொட்டால் பூமலரும்!’

ஊரை ரெண்டுபடவைத்து, அதில் ஜமீன்தார் குளிர்ந்து காய்ந்தால் எப்படியிருக்கும்? அப்படி ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் பணமுதலையை, மீனவர்களின் தலைவன் தட்டிக்கேட்டால் எப்படியிருக்கும்? அந்த மீனவர் தலைவன் எம்ஜிஆராக இருந்து, சூழ்ச்சிகள் செய்யும் வில்லத்தனம் கொண்டவர் நம்பியாராக இருந்தால் எப்படியிருக்கும்? ‘படகோட்டி’ மாதிரி இருக்கும்!

சுறாமீன் குப்பம், திருக்கை மீன் குப்பம் என்று இரண்டு குப்பங்கள் ஜென்மப் பகையுடன் வாழ்கின்றன. அதற்குக் காரணம் ஜமீன்தார் நம்பியார். சுறாமீன் குப்பத்து ஆட்கள், திருக்கை மீன் குப்பத்துத் தலைவரை அடித்துக் கொன்றுவிடுகிறார்கள். அப்படி கொல்லப்படுபவர்தான் எம்ஜிஆரின் அப்பா. இறக்கும் தருணத்தில், ‘மக்களுக்காகப் போராட வேண்டும். மக்கள் நலனுக்காக உன்னையே நீ தியாகம் செய்ய வேண்டும். இந்த இரண்டு குப்பங்களையும் இணைக்க வேண்டும்’ என்று எம்ஜிஆரிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு இறக்கிறார்.

அன்று முதல் குப்பத்து மக்களுக்காக உருகுகிறார் எம்ஜிஆர். வெறும் பத்திரத்தில் கைநாட்டு வைத்துவிட்டு, நம்பியாரிடம் பணம் கடன் வாங்குவதைத் தடுத்து நிறுத்துகிறார். புயலும் மழையுமாக இருக்கும்போது கடலுக்குள் செல்கிறார். சிக்கிக்கொள்கிறார். கரை ஒதுங்கியவரை சரோஜாதேவி காப்பாற்றிப் பாதுகாக்கிறார். எதிரிக் குப்பமான சுறாமீன் குப்பத்தின் தலைவனாகத் திகழும் ராமதாஸின் மகள்தான் சரோஜாதேவி.

ஆக, இந்தக் குப்பத்தில் எம்ஜிஆர். அந்தக் குப்பத்தில் சரோஜாதேவி. அதேபோல் இந்தக் குப்பத்தில் மனோரமா. அந்தக் குப்பத்தில் நாகேஷ். காப்பாற்றிய எம்ஜிஆருக்கு சரோஜாதேவி மீது மலருகிறது காதல். சரோஜாதேவிக்கும்தான்!

ஜமீன் நம்பியாரின் கையாள் அசோகன். அவர், மனோரமாவைச் சீண்டுகிறார். அப்போது வரும் நாகேஷ் காப்பாற்றுகிறார். அப்புறமென்ன... நாகேஷ் - மனோரமா காதல் தொடங்குகிறது.

மீன் விலையை ஏற்றுவோம் என்று எம்ஜிஆரும் சரோஜாதேவியும் சொல்லிவைத்து விற்பார்கள். வேறுவழியே இல்லாமல், அதிக விலைக்கு நம்பியார் வாங்க நேரிடும். பிறகு, சரோஜாதேவி குப்பத்து ஆட்களிடம் மட்டும் மீனை வாங்கி, எம்ஜிஆரின் திருக்கைக் குப்பத்தை நம்பியார் புறக்கணிப்பார். சென்னைக்கு வந்து புதிய வியாபாரியைச் சந்தித்துப் பேசி வருவார் எம்ஜிஆர். ஆனால் அந்தப் புதிய வியாபாரியையும் நம்பியார் தன் வலைக்குள் கொண்டுவந்துவிடுவார்.

அரசாங்கத்திடம் உதவி கேட்டுச் செல்வார் எம்ஜிஆர். இரண்டு குப்பங்களும் ஒன்றாக இருந்தால் உதவி செய்யத் தயார் என்று அரசாங்கம் சொல்லும். அதனால் சுறாமீன் குப்பத்துக்குச் சென்று ராமதாஸைச் சந்திப்பார் எம்ஜிஆர். அங்கே சண்டை மூளும்.

அதையும் சமாளித்து, ராமதாஸிடம் ‘பேசறதுக்காக வந்திருக்கேன். நான் சொல்றதைக் கேளுங்க’ என்று எம்ஜிஆர் சொல்லும்போது, நம்பியாரும் அசோகனும் வந்துவிடுவார்கள். எம்ஜிஆரை அடித்து, வலையில் கட்டி, கடலுக்குள் போட்டுவிடுவார்கள்.

அதில் தப்பி, வயதான கிழவர் போல் வேடமிட்டுக்கொண்டு ராமதாஸைக் காப்பாற்றுவார் எம்ஜிஆர். பின்னர் ராமதாஸ் வீட்டிலேயே தங்கியிருப்பார். இரண்டு குப்பத்துக்கும் படகுப் போட்டி நடக்கும். குப்பத்தின் தலைவரான எம்ஜிஆர் இல்லாமல் தவிப்பார்கள் குப்பத்து மக்கள். உடனே கிழவர் வேடத்திலிருக்கும் எம்ஜிஆர், ’நான் இந்தக் குப்பத்து மக்களுக்காக கலந்துக்கறேன்’ என்று தன் திருக்கை மீன் குப்பத்து மக்களுடன் கலந்து, படகுப்போட்டியில் கலந்துகொள்வார். வெற்றிபெறுவார். ‘இனிமேல் இரண்டு குப்பங்களும் எல்லாப் பகுதியிலும் மீன் பிடித்துக்கொள்ளலாம். ஒற்றுமையாக இருங்கள்’ என்று சொல்லும்போது, கிழவர் வேடத்தில் இருப்பது எம்ஜிஆர் என்பது தெரியவரும்.

இதையடுத்து நம்பியார் அடுத்த சூழ்ச்சி செய்வார். ‘உன் மகளை எனக்குத் திருமணம் செய்துகொடு. உன் குப்பத்து ஆட்கள் கைநாட்டு வைத்த பத்திரங்களையெல்லாம் கொடுத்துவிடுகிறேன்’ என்று ஆசைவார்த்தையில் ராமதாஸை மயக்கிச் சம்மதிக்கவைப்பார். இறுதியில், நம்பியாரிடம் சிக்கியிருக்கும் சரோஜாதேவியும் காப்பாற்றுவார். பத்திரங்களை மீட்பார். இரண்டு குப்பங்களும் ஒன்றுசேரும். நம்பியார் ஜெயிலுக்குப் போவார். தலைவாழை இலை போட்டு ஒரு ’ஃபுல்மீல்ஸ்’ சாப்பிட்ட திருப்தியுடன் தியேட்டரை விட்டு வெளியே வந்தார்கள் ரசிகர்கள்!

எம்ஜிஆர், சரோஜாதேவி, நம்பியார், அசோகன், ராமதாஸ், ஜெயந்தி, நாகேஷ், மனோரமா என பலரும் நடித்திருந்த மகா வெற்றிப் படம் ‘படகோட்டி’. சரவணா பிலிம்ஸ் ஜி.என்.வேலுமணி எனும் மிகப்பெரிய தயாரிப்பாளர் படத்தை எடுத்தார். டி.பிரகாஷ்ராவ் இயக்கினார். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்தார்கள்.

சக்தி கிருஷ்ணசாமி படத்துக்கான வசனங்களை எழுதினார். ஒவ்வொரு வசனமும் ‘அப்ளாஸ்’ அள்ளியது. அதேபோல் நாகேஷ், ஏ.வீரப்பன், மனோரமா வருகிற நகைச்சுவைக் காட்சிகளை ஏ.எல்.நாராயணன் எழுதினார். இந்த ஏ.வீரப்பன், பின்னாளில் ஏராளமான படங்களுக்கு நகைச்சுவைப் பகுதிக்கான வசனங்களை எழுதினார் என்பது கொசுறுத் தகவல். ஏ.எல்.நாராயணனின் நகைச்சுவை வசனங்கள் கலகலப்பூட்டின. கைத்தட்டவைத்தன. நாகேஷுக்கும் அசோகனுக்கும் சண்டை. அடிவெளுத்துவிடுவார் அசோகன். ரிக்கார்டு மியூஸிக் போடப்படும். நாகேஷுக்கு வீரம் வரும். அசோகனைப் புரட்டியெடுப்பார். ஏ.வீரப்பன் தெரியாமல் மியூஸிக்கை நிறுத்துவார். மீண்டும் நாகேஷ் அடிவாங்குவார். ரகளையான காமெடியில் தியேட்டரே குலுங்கிச் சிரித்தது.

Ramji

படத்தின் பெரும்பாலான காட்சிகள், கேரளா, ஆலப்புழா, சுற்றுவட்டார கடலோரப் பகுதிகள் என எடுக்கப்பட்டன. பிரபல ஒளிப்பதிவாளர் பி.எல்.ராய் தன் ஒளிப்பதிவுக் கோணங்களால் படத்தை அழகுறக் காட்டினார். கூறிப்பாக, நம்பியார் வீட்டு பங்களாவையும் படகுப் போட்டி காட்சிகளையும் கடலோரப் பகுதிகளையும் இயல்பு மாறாமல் காட்டினார்.

இன்றைக்கும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவக் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று பார்த்தால், பலரின் வீடுகளிலும் படகுகளிலும் சுவர்களிலும் எம்ஜிஆர், சிரித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். ‘படகோட்டி’க்குப் பின்னர், எம்ஜிஆருக்கு இந்தப் பகுதி மக்களிடம் மவுசு எகிறியது.

இந்தப் படம் வெளியான தருணத்தில் ‘பாட்டுக்கு படகோட்டி’ என்றே மக்கள் கொண்டாடி மகிழ்ந்து ரசித்தார்கள். அந்த அளவுக்கு பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. ஒரு பாட்டு எழுத வந்த வாலியை எல்லாப் பாடல்களையும் எழுதச் சொன்னார் எம்ஜிஆர். அதுமட்டுமா? ‘படகோட்டி’ எனும் டைட்டிலை வைத்ததே கவிஞர் வாலிதான்!

’கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை/ உறவைக் கொடுத்தவர் அங்கே/ அலை கடல் மேலே அலையாய் அலைந்து/ உயிரைக் கொடுப்பவர் இங்கே/ வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு/ முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இதுதான் எங்கள் வாழ்க்கை’ என்று ‘தரைமேல் பிறக்கவைத்தான்’ பாடலில் மீனவ வாழ்க்கையை மிக யதார்த்தமாகச் சொல்லியிருப்பார்.

’மண்குடிசை வாசலென்றால் தென்றல்வர வெறுத்திடுமா?/ மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம்தர மறுத்திடுமா?/ உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை!/

படைத்தவன்மேல் பழியுமில்லை/ பசித்தவன்மேல் பாவமில்லை/ கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார்/ உழைத்தவர்கள் தெருவில் நின்றார்/பலர் வாட வாட சிலர் வாழ வாழ/ ஒருபோதும் தெய்வம் பொறுத்ததில்லை’ என்று ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’ என்ற வரிகளில் உணர்ச்சிப்பிழம்பென வரிகளைக் கொடுத்தார் கவிஞர் வாலி.

’நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்து போனவன் போனாண்டி... ஹோய்/ நீரை எடுத்து நெருப்பை அணைக்க வந்தாலும் வருவாண்டி.. ஹோய்ஹோய் ஹோய்.. வந்தாலும் வருவாண்டி/’ என்று ‘என்னை எடுத்து தன்னைக் கொடுத்து’ எனும் பாடலில் காதலுக்கு அகராதியே எழுதியிருப்பார்.

’ஊரறியாமல் உறவறியாமல்/ யார் வரச் சொன்னார் காட்டுக்குள்ளே/ ஓடிய கால்கள் ஓடவிடாமல் யார் தடுத்தார் உன்னை வீட்டுக்குள்ளே/ ஆவி துடித்தது நானுமழைத்தேன் நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே/ பவளக்கொடியே வா சிந்தாமணியே வா/ மணிமேகலையே வா மங்கம்மாவே வா’ என்று ‘நானொரு குழந்தை நீயொரு குழந்தை/ ஒருவர் மடியிலே ஒருவரடி/ நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் ஒருவர் மனதிலே ஒருவரடி’ என்ற பாடலுக்குள் புதுசங்கதிகளை வைத்தார். ரசிக்கவைத்தார் வாலி.

’தொட்டால் பூ மலரும்/ தொடாமல் நான் மலர்ந்தேன்/ சுட்டால் பொன் சிவக்கும்/ சுடாமல் கண் சிவந்தேன்’ என்ற பாடலைப் பாடாதவர்களே இல்லை. ’கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை/ நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை ஹோய் ஆசை விடுவதில்லை/’ என்ற வரிகளில் காதலர்கள் மட்டுமல்ல... படம் பார்த்த அனைவருமே இந்தப் பாடலையும் வரிகளையும் காதலிக்கத் தொடங்கினார்கள். பாடலின் வரிகளும் அந்தக் கைத்தட்டுகிற இசையும் ரொம்பவே கவர்ந்தன.

‘அழகு ஒரு ராகம்’ என்ற பாடலும் இனிமை கூட்டியது. ஜெயந்திதான் பாடுவார்; ஆடுவார். ஆனால் போதையில் இருக்கும் நம்பியாருக்கு சரோஜாதேவிதான் தெரிவார். அமர்க்களமாக படமாக்கப்பட்டிருக்கும், இந்தப் பாடல்.

’அத்தானின் காதல் முத்தாமல் இருந்தால் பித்தாக செய்யும் வளையல்/ சில சித்தாணை உடம்பு வத்தாமல் இருந்தால் ஒத்தாசை செய்யும் வளையல் / அன்ன நடை பின்னி வர சின்ன இடை மின்னி வர முன்னாடி வரும் வளையல்/ இது அத்தை மகள் ரத்தினத்தின் அச்சடித்த சித்திரத்தின் கையோடு வரும் வளையல்.’ என்கிற ‘கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்’ என்ற பாடலில் கவிஞர் வாலி, வளையல்களை வைத்துக் கொண்டு விளையாடியிருப்பார். இப்படி படத்தின் அனைத்துப் பாடல்களிலும் வாலி தெரிந்தார். தன் திறனைக் காட்டினார். எல்லாப் பாடல்களின் எல்லா வரிகளும் அன்றைக்கு பலராலும் மனப்பாடமாகவே பாடப்பட்டன. அதனால்தான் ‘பாட்டுக்கு படகோட்டி’ என்றே கொண்டாடியது தமிழ்த்திரையுலகம். அத்தனைப் பாடல்களையும் டி.எம்.எஸ். மற்றும் பி.சுசீலா இருவரும் தங்கள் குரலால் அமர்க்களம் பண்ணியிருப்பார்கள்.

1964 நவம்பர் 3-ம் தேதி வெளியானார் ‘படகோட்டி’. படம் வெளியாகி, 58 ஆண்டுகளாகின்றன. இன்றைக்கும் எல்லாப் பாடல்களும் இன்றைய தலைமுறையினருக்கும் தெரியும். ‘தொட்டால் பூமலரும்’ பாடல் ஏ.ஆர்.ரஹ்மானால் ரீமிக்ஸ் கூட செய்யப்பட்டது.

‘படகோட்டி’ திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் ஓடுஓடென பிய்த்துக்கொண்டு ஓடி வெற்றி பெற்றது. ’படகோட்டி’யைப் பார்க்க கடல் அலையென மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள். மாபெரும் வசூலைக் குவித்தது. ‘பாட்டுக்கு படகோட்டி’ என்பதை இப்போது படம் பார்த்தாலும் பாடல்களைக் கேட்டாலும் சிலிர்த்துச் சொல்லுவோம் ‘ஆமாம்... ஆமாம்...’ என்று!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in