எம்ஜிஆரின் ‘தனிப்பிறவி’; எம்ஜிஆரும் ‘தனிப்பிறவி!’

56 ஆண்டுகளாகியும் ‘கன்னத்தில் என்னடி காயம்’ பாட்டுக்கு மவுசு
எம்ஜிஆரின் ‘தனிப்பிறவி’; எம்ஜிஆரும் ‘தனிப்பிறவி!’

எம்ஜிஆர் எல்லாப் படங்களிலுமே க்ளீன் ஷேவில்தான் இருப்பார். லேசான மீசையும் கன்னக்கதுப்புகளும் தனி அழகைக் கொடுக்கும். வயதான கதாபாத்திரங்கள், கல்லூரி வயதில் உள்ள மகனுக்கோ மகளுக்கோ அப்பா என்றெல்லாம் எம்ஜிஆர் நடித்ததே இல்லை. அவரின் விக் மற்றும் ஆடை வடிவமைப்பைக் கொண்டு, இது ’எங்கவீட்டு பிள்ளை’ எம்ஜிஆர், ‘அன்பே வா’ எம்ஜிஆர், ‘படகோட்டி’ எம்ஜிஆர் என்று சொல்லிவிட முடியும்.

‘நாடோடி மன்னன்’ படத்தில் இரண்டு எம்ஜிஆரில் நாடோடி எம்ஜிஆர் தாடி வைத்திருப்பார். இப்படி எம்ஜிஆர் படம் முழுக்க தாடியுடன் நடித்த படங்கள் குறைவுதான். அந்த வரிசையில் தனித்துத் தெரிவது... ‘தனிப்பிறவி’.

கொல்லுப்பட்டறை வைத்து நடத்திவரும் எளிய மனிதராக எம்ஜிஆர் முத்தையன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அப்பா அசோகன். எம்ஜிஆருக்கு அப்பாவாக அசோகன் இருந்தாலும், அசோகன் அசோகன்தானே! சாண்டோ சின்னப்பா தேவரின் கொள்ளைக்கூட்ட கும்பலில் அசோகனும் ஒருவர். ஆனால் மகனுக்கு இதெல்லாம் தெரியாது.

அவர் பாட்டுக்கு ஆடுவதும் பாடுவதும் ஜெயலலிதாவைக் காதலிப்பதுமாக நம்மையெல்லாம் குதூகலப்படுத்திக் கொண்டிருப்பார். எம்ஜிஆருக்கு ஒரு தங்கை. அவர், நம்பியாரைக் காதலிக்கிறார். நம்பியார் போலீஸ். நம்பியார் போலீஸாக இருந்தால் மட்டும் நல்லவராகிவிடுவாரா? அவரும் கெட்டவர்தான்.

ஆக, தந்தை கொல்லுப்பட்டறை வைத்திருந்தாலும் கொள்ளைக்கூட்டத்தில் இருக்கிறார். தங்கையை மணம் முடிப்பவன் காவல் துறையில் இருந்தாலும் கொள்ளைக் கூட்டத்தில் இருக்கிறான். இந்தச் சிக்கல்களெல்லாம் ஒருகட்டத்தில் தெரியவருகிறபோது, அதிர்ச்சிக்கு ஆளாகிறார் எம்ஜிஆர். அந்தக் கூட்டம் என்னவெல்லாம் செய்கிறது, அவற்றை எப்படியெல்லாம் முறியடித்துக் கண்டுபிடிக்கிறார் என்பதை எம்ஜிஆர் படத்துக்கே உண்டான பாணியில் சொல்லியிருப்பார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா, அசோகன், நம்பியார், நாகேஷ், மனோரமா, வி.கே.ராமசாமி முதலானோர் நடித்திருந்தார்கள்.

தேவர் பிலிம்ஸின் படம். எம்.ஏ.திருமுகம் வழக்கம் போலவே இயக்கியிருப்பார். தேவர் பிலிம்ஸ் என்றாலே அப்போதெல்லாம் கே.வி.மகாதேவன்தான் இசை. வழக்கம் போலவே, இசையிலும் ரசிக்க வைத்திருப்பார் கே.வி.எம்.

அசோகன் அட்டகாசமாக நடித்திருப்பார். நம்பியார் வழக்கம்போல் மிரட்டியிருப்பார். பாய்ந்து பாய்ந்து சண்டைக்காட்சிகள் நடக்கும். மேலேயிருந்தும் அந்தரத்தில் இருந்தும் தொப்தொப்பென்று எம்ஜிஆரிடம் அடிவாங்கி விழுவார்கள். ஆனால், எவருக்கும் ரத்தகாயமெல்லாம் இருக்காது. ஒருவேளை... ‘ரத்தம் காட்ட வேண்டாம்’ என்று நினைத்து எடுத்திருந்தார்களோ என்னவோ!

நாகேஷ் - மனோரமா, வி.கே.ராமசாமி - மனோரமா காமெடிகள் படத்துக்கு சுவை கூட்டின. எம்ஜிஆர் கொல்லுப்பட்டறை ஆசாமியாக, தாடியெல்லாம் வைத்துக் கொண்டு புது கெட்டப் போட்டு நடித்திருந்தது, படத்துக்குத் தனி அடையாளத்தைக் கொடுத்தது. இந்தப் படத்தில், இன்னொரு தனி அடையாளமும் இருக்கிறது. இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு எம்ஜிஆர், முருகன் வேடத்தில் நடித்திருப்பார். சின்னப்பா தேவர் முருக பக்தர் அல்லவா. அதனால்தானோ என்னவோ, படத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குமான பாடலை இப்படி முருக வேடப் பாடலாக்கியிருப்பார்கள். ’எதிர்பாராமல் நடந்ததடி புதுக்கண்ணுக்குள் விழுந்ததடி, புதிய சுகமொன்று புகுந்ததடி,அது பொழுதுக்குப்பொழுது வளருதடி’ என்ற பாடலில்தான் எம்ஜிஆர் முருகர் வேடத்தில் வருவார். ’நேரம் நல்ல நேரம்’ என்ற பாடலும் நல்ல ஹிட் பாடல் வரிசையில் இடம்பிடித்தது.

’உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. எம்ஜிஆருக்கு ஓப்பனிங் பாடல் இதுதான். இந்தப் பாடலில், கொல்லுப்பட்டறைக் காட்சிகள் அழகுற செட் போடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ‘ஒரேமுறைதான் உன்னோடு பேசிப்பார்த்தேன்... நீயொரு தனிப்பிறவி’ என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் பாடலாக அமைந்தது.

எல்லாப் பாடல்களையும் விட, ‘கன்னத்தில் என்னடி காயம் இது வண்ணக்கிளி செய்த மாயம்’ பாட்டு, அந்தக் காலத்தில் பெரிய ‘கிக்’கையே கொடுத்தது. அப்போதெல்லாம் பாட்டுப் புத்தகம்தான். அதை வாங்கி வைத்துக்கொண்டு, இந்தப் பாடலை பாடிப்பாடி மனப்பாடம் செய்த இளைஞர்கள் உண்டு.

1966 செப்டம்பர் 18-ம் தேதி வெளியானது ‘தனிப்பிறவி’. அப்போதெல்லாம் பிரின்ட் போட்டு, ரீல் பெட்டியை அனுப்புகிற முறைதானே இருந்தது. அதிலென்ன அவசரமோ... என்னவோ... தெரியவில்லை. சில ஊர்களில் 17-ம் தேதியே ரிலீஸ் செய்யப்பட்டது. சென்னை முதலான பெரும்பான்மையான ஊர்களில், 18-ம் தேதி அன்று வெளியிடப்பட்டது.

கொள்ளைக்கூட்டத்தைப் பிடிக்க, கொள்ளைக்கூட்டத் தலைவனாக வேடமிட்டு உள்ளே புகுந்து எல்லோரையும் பிடித்து போலீஸில் ஒப்படைக்கிற ‘தனிப்பிறவி’யாக கடைசி இருபது நிமிடங்கள் அட்டகாசம் பண்ணியிருப்பார் எம்ஜிஆர்.

அதே வருடத்தில் எம்ஜிஆருக்கு வரிசையாக படங்கள் வந்தன. ஆனாலும் ‘தனிப்பிறவி’ நூறுநாள் படமாக அமைந்தது. படம் வெளியாகி, 56 வருடங்களாகியும் ‘கன்னத்தில் என்னடி காயம்’ என்றும் ‘ஒரேமுறைதான் உன்னோடு பேசிப்பார்த்தேன் நீயொரு தனிப்பிறவி’ என்றும் பாடிக்கொண்டும், பாடல்களைக் கேட்டுக் கொண்டும் இருக்கிறார்கள் ரசிகர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in