கடன் சுமையில் இருந்த வி.கே.ராமசாமிக்கு சிவாஜி கொடுத்த ‘செல்வம்'!

கே.எஸ்.ஜி - சிவாஜி கூட்டணியின் ‘செல்வம்’ நினைவுகள்
கடன் சுமையில் இருந்த வி.கே.ராமசாமிக்கு சிவாஜி கொடுத்த ‘செல்வம்'!

அத்தை மகனைத் திருமணம் செய்துகொள்வதும், பிறந்ததுமே ‘என் பொண்ணு உங்க பையனுக்குத்தான்’ என்று சொல்லிச் சொல்லி வளர்ப்பதும் நம் சமூகத்தில் அப்போதெல்லாம் மிகச் சாதாரணம். அதேபோல், மாமன் பொண்ணாக இருந்தாலும், அத்தை மகனாக இருந்தாலும் திருமண வயது வந்ததும், ‘சும்மா பேருக்கு, ஒரு சாஸ்திரத்துக்கு ஜாதகப் பொருத்தம் பாத்துருவோம்’ என்று மணமகன் ,மணமகள் ஜாதகத்தை வாங்கிப் பொருத்தம் பார்ப்பதும் இயல்பாக நடப்பதுதான். ஆனால், ஜாதகத்தில் பொருத்தமில்லையென்றால் என்ன நிகழும்?

சிறுவயதில் இருந்தே ‘இவனுக்கு இவள்தான்... இவளுக்கு இவன்தான்’ என்று சொல்லிச் சொல்லி வளர்த்துவிட்டு, பொருத்தத்தைக் காரணம் காட்டி திருமணம் வேண்டாம் என்று சொன்னால் எப்படியிருக்கும்? இதை வைத்துக்கொண்டுதான் இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், சிவாஜியை வைத்து ‘செல்வம்’ படத்தைக் கொடுத்தார்.

சிவாஜி வெளிநாட்டில் படித்துவிட்டு வருவார். அவரின் அம்மா எம்.வி.ராஜம்மா, தொட்டதற்கெல்லாம் ஜாதகம், ஜோதிடம் என்று பார்க்கும் குணம் கொண்டவர். வெளிநாட்டில் இருந்து வந்த சிவாஜி, தன் மாமன் மகள் கே.ஆர்.விஜயாவைப் பார்க்கச் செல்வார். இருவரும் சிறுவயதிலிருந்தே ஒருவரையொருவர் விரும்புவார்கள்.

கே.ஆர்.விஜயாவின் அப்பா நாகையா. அவருக்கு ஜோதிடத்திலெல்லாம் நம்பிக்கை இல்லை. அதேசமயம் அதையெல்லாம் புறக்கணிப்பவருமில்லை. சிவாஜியின் வீட்டிலேயே இருக்கும் தாய்மாமாவான சகஸ்ரநாமம், எம்.வி.ராஜம்மா முதலானோர் மணமக்கள் இருவரின் ஜாதகத்தையும் பொருத்தம் பார்ப்பார்கள். ‘பெண்ணுக்கு மாங்கல்ய தோஷம் உள்ளது’ என்றும் ‘திருமணம் நடந்தால், மணமகனின் உயிருக்கு ஆபத்து’ என்றும் ஜோதிடர் சொல்ல, திருமணப் பேச்சை நிறுத்திவிடுவார் ராஜம்மா.

போதாக்குறைக்கு, “என் பையன் இதுக்கெல்லாம் ஒத்துக்கமாட்டான். நீதான் அவனை எப்படியாவது புறக்கணிக்கணும். உன் கையிலதான் இருக்கு, என் புள்ளையோட எதிர்காலம்” என்று ராஜம்மா, கே.ஆர்.விஜயாவிடம் சொல்ல... தர்மசங்கடத்தில் தவிப்பார். திடீரென்று சிவாஜியைப் புறக்கணிப்பார். ஒருகட்டத்தில், ஜாதகம், ஜோதிடம், பொருத்தம், மாங்கல்ய தோஷம் என்பவையெல்லாம் சிவாஜிக்குத் தெரியவரும்போது மனிதர் கொந்தளித்துவிடுவார். “பாத்துப்பாத்து செஞ்ச திருமணம் மட்டும் நல்லபடியா இருந்துருக்கா?” என்றெல்லாம் கேள்வி எழுப்புவார்.

பிறகு, கே.ஆர்.விஜயாவுக்கு இதையெல்லாம் எடுத்துச் சொல்லிப் புரியவைப்பார். யாருக்கும் தெரியாமல் கோயிலில் வைத்து இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள். வீடு ரணகளமாகிவிடும். ராஜம்மா துடித்துக் கதறுவார். ஜோதிடரை அழைப்பார். ‘இதுக்குப் பரிகாரம் உண்டு. ஒரு வருஷம் இருவரும் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். இதுதான் பரிகாரம்’ என்பார் ஜோதிடர். அந்த ஒரு வருடம் இவர்கள் பிரிந்திருப்பார்கள். அவரவர் வீட்டில் இருப்பார்கள்.

ஆனால், ஒரு தருணத்தில், சிவாஜிக்கு விருப்பம் அதீதப்பட்டிருக்கும். கே.ஆர்.விஜயாவைப் பார்ப்பார். கொஞ்சிக் கேட்பார். கெஞ்சிக் கேட்பார். அதட்டலாகக் கேட்பார். அழுதுகொண்டே கேட்பார். கே.ஆர்.விஜயா மனமிரங்குவார். இருவருக்கும் தாம்பத்தியம் நடந்தேறும்.

இதையடுத்து உள்ளுக்குள் சிவாஜிக்கு பயம் வந்துவிடும். ‘பரிகாரத்தை மீறிவிட்டோமே... மரணம் சம்பவிக்குமோ?’ என்கிற பீதியில் இருப்பார். கே.ஆர்.விஜயாவும்தான். சிவாஜி வீட்டின் குடும்ப மருத்துவர் எஸ்.வி.ரங்காராவிடம் நடந்ததையெல்லாம் சொல்லி முறையிட, சிவாஜிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று கூடவே இருப்பார். பிறகு ஜோதிடம் பலித்ததா இல்லையா... இருவரும் சேர்ந்தார்களா... மாங்கல்ய தோஷம் விளைவுகளைத் தந்ததா என்பதுதான் ‘செல்வம்’ படத்தின் கதை!

கதையைப் படித்துப் பார்த்தால், சோகத்தைப் பிழிந்தெடுக்கிற அழுகாச்சி கதையாக இருக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. படம் முழுக்க, காமெடியில் கிச்சுகிச்சு மூட்டியிருப்பார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். தொடர்ந்து சீரியஸ் படங்களையே எடுத்துவந்த கே.எஸ்.ஜி-க்கு இந்தப் படம் புதிய அனுபவம்தான். ஜாதகம், ஜோதிடம், மூடநம்பிக்கை அனைத்தையும் கேலியாகவும் சொல்லியிருப்பார். கிண்டலும் பண்ணியிருப்பார். அதன் பாரம்பரியத் தன்மைக்கும் பங்கம் வராமல் பேலன்ஸ் செய்திருப்பார்.

சிவாஜியின் முந்தைய படங்கள்கூட பெரும்பாலும் சீரியஸ் படங்கள்தான். ‘லைட்’ சப்ஜெக்ட்டுகள், காமெடி கதைகள் என நுழையவே இல்லை. ‘சபாஷ் மீனா’, ‘பலே பாண்டியா’, ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என்று சில காமெடிப் படங்கள் பண்ணியிருந்தாலும் அந்த ஜானருக்குள் அதிகம் செல்லவில்லை சிவாஜி. ’செல்வம்’ வந்த பிறகு, இந்த மாதிரி காமெடிப் படங்களில் சிவாஜி ரொம்பவே ஆர்வம் கொண்டார். ‘ஊட்டி வரை உறவு’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘அஞ்சல்பெட்டி 520’ மாதிரியான படங்களையும் ‘சுமதி என் சுந்தரி’ மாதிரியான படங்களையும் தந்தார்.

நடிப்பு ராட்சஷன் சிவாஜிக்கு, ‘செல்வம்’ கதாபாத்திரம் ஒரு மேட்டரே இல்லை. அசால்ட்டாக நடித்து அசத்தியிருப்பார். ஒருபக்கம் அம்மாவின் உணர்வுகளை கேலி செய்து காயப்படுத்திவிடக் கூடாது என்று நினைப்பார். இன்னொரு பக்கம், தன் முறைப்பெண் கே.ஆர்.விஜயாவை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டுமே எனத் துடிப்பார். சின்னச் சின்ன அசைவுகளிலும் முகபாவங்களிலும் மனிதர், நடிப்பில் வெளுத்துக்கட்டியிருப்பார்.

கே.ஆர்.விஜயாவைச் சந்திக்கும் இடத்திலெல்லாம், அதிகம் காதல், அசடு வழிதல், நாணிக்கோணுதல், அதேசமயம் ஸ்டைல் பண்ணுதல் என்று நொடிக்குநொடி மாற்றிக்கொண்டே இருக்கிற ஜாலவித்தையை சிவாஜி கையாண்டிருப்பார்.

“டேய் செல்வம், குளிச்சிட்டு வாடா, நல்லநேரம் போயிடப்போவுது” என்று அம்மா சொல்ல, “இந்த ரெண்டுவருஷத்துல நல்ல இம்ப்ரூவ்மென்ட்டும்மா” என்கிற ஒற்றைவார்த்தையில் கிண்டலுமடித்து ஜாலியாகவும் சொல்லிச் செல்கிற அழகே அழகு. கல்யாணம் குறித்து கே.ஆர்.விஜயாவிடம் பேசிக்கொண்டிருப்பார் சிவாஜி. அப்போது, கே.ஆர்.விஜயா, ‘’பத்துக்குள்ளே ஒரு நம்பர் சொல்லுங்க’’ என்று கேட்க, நொந்துபோகும் சிவாஜி ‘’நாசமாப் போச்சு போ’’ என்று அலுத்துக்கொள்ளும் இடமும் அப்படித்தான்!

“என்னைத் திருமணம் செய்துகொள்ள ஏன் மறுக்கிறாய்?” என்று கே.ஆர்.விஜயா வீட்டுக்கு வந்து கோபத்துடன் கேட்பார் சிவாஜி. பதில் சொல்லமுடியாமல் தவிப்பார். ஒருகட்டத்தில் கே.ஆர்.விஜயாவின் கழுத்தை நெரிப்பார். ‘’இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கப்போறவளைத் தொடாதே’’ என்று நாகையா சொல்வார்.

அப்போது சிவாஜிக்கு வருகிற ஆத்திரத்தைப் பார்க்க வேண்டுமே! “வேற ஒருத்தனுக்கா? கல்யாணமா? ‘பாக்கறேன்... அதையும் பாக்கறேன்” என்று சொல்லிவிட்டு, விருட்டென்று வீட்டுக்கு வருவார். அம்மாதான் அதற்குக் காரணம் என்பது தெரியாமல், அவரிடம் புலம்புவார். கதறுவார். விறுவிறுவெனப் படியேறுவார். பிறகு விறுவிறுவென படியைவிட்டு இறங்கி அம்மாவிடம் வருவார். ’’அவ ஏம்மா இப்படிச் சொன்னா?’’ என்று அழுகை கலந்த குரலில் கேட்டுவிட்டு, மீண்டும் படியேறுவார். இந்த படியேறும் காட்சி மூன்றுமுறை இருக்கும். மூன்றுமுறையும் உணர்வுகளின் வெளிப்பாட்டை தன் நடையிலேயே வெளிக்காட்ட, சிவாஜியைத் தவிர, வேறு எவரால் முடியும்?

கே.ஆர்.விஜயா பாந்தமான நடிப்பை வழங்கியிருப்பார். ஏற்கெனவே ‘சரஸ்வதி சபதம்’ படத்தில் சிவாஜியுடன் நடித்தார். ஆனால் ஜோடியாக அல்ல. அதேபோல், ‘கைகொடுத்த தெய்வம்’ படத்தில் எஸ்.எஸ்.ஆருக்குத்தான் கே.ஆர்.விஜயா மனைவி. சிவாஜி - கே.ஆர்.விஜயா சூப்பர் ஜோடி என்று பேரெடுத்ததற்கு அஸ்திவாரமாக அமைந்ததுதான் ‘செல்வம்’. முதன்முதலாக இருவரும் ஜோடியாக இதில்தான் நடித்தார்கள். நாகையா, எம்.வி.ராஜம்மா, சகஸ்ரநாமம், ஒரு காட்சியில் மட்டும் கதாகாலட்சேப நாகேஷ் என அனைவரும் சிறப்புற நடித்திருந்தார்கள். கே.எஸ்.ஜி-யின் படங்களில் தொடர்ந்து நடிக்கும் எஸ்.வி.ரங்காராவின் காமெடி அலப்பறை, பட்டையைக் கிளப்பியது.

பி.எஸ்.ராமையா கதையை எழுதினார். திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். அவரின் முதல் படமான ‘சாரதா’, கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்திய ‘கற்பகம்’, இப்போது’செல்வம்’ படம் மூன்றிலும், திருமணமாகியும் ‘உறவு’ கொள்ளாமல் இருப்பதை மையப்படுத்தியே கதையைச் சுழலவிட்டிருப்பார் கே.எஸ்.ஜி. ஆனால், ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு காரணம்.

கே.வி.மகாதேவன் இசையில் கவிஞர் வாலி பாடல்களை எழுதினார். ’என்னடி இத்தனை வேகம்’ பாடல் மட்டும் ஆலங்குடி சோமு எழுதினார். டி.எம்.எஸ்-சுசீலா பாடினார்கள். படத்தில் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த பாடல்... ‘அவளா சொன்னாள் இருக்காது’ பாட்டுதான்! வாலியின் வார்த்தைகள் கதையையும் கதாபாத்திரத்தின் உணர்வையும் பாடலாகக் கொண்டு வந்தன. ’உப்புக் கடல் நீரும் சக்கரையாகலாம்/ முப்பது நாளும் நிலவை பார்க்கலாம்/ சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்/ என்று எழுதினார்.

அன்னை தந்த பால் விஷமுமாகலாம் / என்னை பெற்ற தாய் என்னைக் கொல்லலாம் / நீ சொன்னது எப்படி உண்மையாகலாம்’ என்று கைகளை உயர்த்தி, உடலைக் குறுக்கிக்கொண்டு சோகமும் கோபமுமாக சிவாஜி நடிக்க, மொத்தத் திரையரங்கும் கரவொலியில் அதிர்ந்தது. திருச்சி கல்லணையில் படமாக்கப்பட்டிருக்க பாடல் இது. திருச்சியில் இருக்கும்போது, ‘கல்லணை’ என்கிற போர்டு போட்டுக்கொண்டு, பஸ் போவதைப் பார்க்கும்போதெல்லாம் இந்தப் படமும் பாட்டும் எனக்கு நினைவுக்கு வந்துவிடும்.

‘ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல...’ என்றொரு பாடல். தவிப்பை உணர்த்துகிற பாடல். டி.எம்.எஸ்ஸும் சுசீலாவும் வேதனையை வெளிப்படுத்திப் பாடியிருந்தார்கள்.

’நினைவும் கனவும் எனக்காக; என் நெற்றியில் குங்குமம் உனக்காக!’ எனும் வரிகள் அற்புதமானவை. நடிகர் திலகம் நகத்தை கடித்தபடி லேசாக நடை போட்டு கே.ஆர்.விஜயாவின் பக்கம் வருவார். அந்த ஸ்டைலில் மிரண்டுபோய்விடுவோம்.

படத்தின் முக்கியமான மற்றொரு பாடல்... ’எனக்காகவா நான் உனக்காகவா’ பாட்டு. தாராபுரம் சுந்தரராஜன் ஜமுனா ராணி இருவரும் பாடினார்கள். இந்தப் பாடலை பல படங்களில், ரேடியோவில் ஒலிபரப்பாவது போல் பயன்படுத்தியிருப்பார்கள் பல இயக்குநர்கள்.

’மலர் மீது பனி தூங்க / மரம் மீது கனி தூங்க / மலை மீது முகில் தூங்க / மடி மீது நீ தூங்க / நீராட நதியா இல்லை?/ இளைப்பாற நிழலா இல்லை? / பசியாற உணவா இல்லை? / பகிர்ந்துண்ண துணையா இல்லை? எனும் ஒவ்வொரு வரிகளும் கதையைச் சொல்லிவிடும்.

இந்தப் படத்தைத் தயாரித்தவர் வி.கே.ராமசாமி. பணப்பிரச்சினையில் தவித்துக் கலங்கிய வி.கே.ராமசாமி, சிவாஜியிடம் சொல்லி வருந்தினார். உடனே கே.எஸ்.ஜி-யை அழைத்த சிவாஜி, ‘’நம்ம ராமசாமிக்காக நான் ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன். ரொம்ப சிக்கனமான படமா இருக்கணும். சீக்கிரமே முடிக்கணும். உடனே ஆரம்பிங்க’’ என்று சொல்ல... அப்படி சிவாஜிகணேசன் தன் இனிய நண்பர், வி.கே.ராமசாமிக்கு பண்ணிக்கொடுத்ததுதான் ‘செல்வம்’ திரைப்படம். ஏனோ தெரியவில்லை... இதில் வி.கே.ராமசாமி நடிக்கவில்லை.

1966 நவம்பர் 11-ம் தேதி வெளியானது ‘செல்வம்’ திரைப்படம். படத்துக்கு நல்ல பெயர் கிடைத்தது. வசூலும் நன்றாகவே இருந்தது. ஆனால் பொங்கலுக்குப் பல படங்கள் வந்ததால், இரண்டாவது கட்டமாக பல திரையரங்குகளில் தொடர்ந்து ஓடியது. வி.கே.ராமசாமிக்கு நிம்மதியைக் கொடுத்தது. படம் பார்த்த ரசிகர்கள் கவலைகளை மறந்து ரசித்துச் சிரித்தார்கள்!

பிறகு எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ‘புத்தம் புதிய காப்பி’ எனும் விளம்பரத்துடன் ‘ரீபிரிண்ட்’ செய்து திரையிட்டபோது, எல்லா ஊர்களிலும் திரையிட்ட தியேட்டர்கள் அனைத்திலும் ஓடி வசூலைக் கொடுத்துக் கொண்டே இருந்தான் ‘செல்வம்’. இதை அறிந்துதானோ என்னவோ, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், படத்துக்கு ‘செல்வம்’ என்று பெயர் வைத்தாரோ என்னவோ?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in