56 ஆண்டுகளுக்குப் பிறகும் சாரம் குறையாத ‘சரஸ்வதி சபதம்’

சரஸ்வதி சபதம்
சரஸ்வதி சபதம்

பட்டிமன்றம், நிறைய விவாதங்களுடன் நடக்கும். பல விஷயங்களை தங்கள் பக்கத்தின் வாதமாக எடுத்துரைப்பார்கள். ஒவ்வொன்றும் நாம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கும். ‘இது உயர்வா, அது தாழ்வா?’ என்பன முதலான பட்டிமன்றங்கள் பரபரப்புச் சூட்டைக் கிளப்பி, நடுவரின் தீர்ப்பு வரும்வரை, வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்போம். ‘தீர்ப்பு இதுவாத்தான் இருக்கும்’ என்றும் ‘அதுவாத்தான் இருக்கணும்’ என்றும் நாமே ஒரு பட்டிமன்றம் நடத்துவோம். அப்படித்தான் ஒரு மும்முனைப் போட்டி, அந்தப் படத்தில் அரங்கேறியது. ‘கல்வியா, செல்வமா, வீரமா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. மூவருக்கும் உரியவர்கள் அவரவர் லீலைகளைக் கொண்டு, உரிய நியாயம் கற்பிக்க முனைந்தார்கள். இறுதியில் நடுவராகத் தீர்ப்பெழுதி திரைப்படத்துக்கு வணக்கம் போட்டார். அந்த நடுவர்... ஏ.பி.நாகராஜன். அந்தப் படம்... ‘சரஸ்வதி சபதம்’.

1962-ம் ஆண்டு ‘வடிவுக்கு வளைகாப்பு’ படத்தின் மூலம் இயக்குநரானார் ஏ.பி.நாகராஜன். சிவாஜியை ரசித்து ரசித்து இயக்கிய இயக்குநர்களில் இவரும் ஒருவர். இந்தப் படத்தின் நாயகனும் சிவாஜிதான். 1963-ல் ‘குலமகள் ராதை’ எடுத்தார். அதிலும் சிவாஜியே நாயகன். 1964-ல், சிவாஜியின் 100-வது படமான ‘நவராத்திரி’யை இயக்கினார் நாகராஜன். 1965-ல், வண்ணப்படமாக சிவாஜியை வைத்து ‘திருவிளையாடல்’ படத்தை இயக்கினார். தயாரிப்பாளரும் இவரே. கதை வசனகர்த்தாவும் இவரே. இயக்குநரும் இவரே. 1966-ல் ‘திருவிளையாடல்’ எடுத்ததுதான் சிவாஜிக்கும் ஏ.பி.நாகராஜனுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

சரஸ்வதி சபதம்
சரஸ்வதி சபதம்

இதன் பின்னர், ‘புராணப் படத்தை எடுக்கும் விதத்தில் எடுத்தால், சொல்லும் விதத்தில் சொன்னால், அதை எல்லா தரப்பினரும் ஏற்றுக்கொள்வார்கள்’ என்று நம்பிக்கையும் உறுதியும் கொண்டார்கள். ‘திருவிளையாடல்’ ஒலிச்சித்திரம் தமிழகத்தில் ஒலிக்காத ஆலயங்களோ திருவிழாக்களோ இல்லை. ஏன்... கல்யாண வீடுகளில் கூட, எல்லோருக்கும் பொழுதுபோக வேண்டும் என்று ஒலிச்சித்திரமாக ‘திருவிளையாடல்’ படத்தைத்தான் போடுவார்கள். அவ்வளவு ஏன்... கோயில் விழா, பொங்கல் விழாக்கள் 16 எம்.எம். திரையை வெட்டவெளியில் கட்டி, புரொஜக்டர் வைத்து, ‘திருவிளையாடல்’ ஒளிபரப்பினால், படத்தைப் பார்க்க, ஏழூர்க் கூட்டம் வரும்.

இப்படியான வெற்றியைத் தொடர்ந்து, 1966-ல், சிவாஜி, ஏ.பி.நாகராஜன் கூட்டணியில் மற்றுமொரு படமாக, வண்ணக் காவியமாக வந்ததுதான் ‘சரஸ்வதி சபதம்’. கல்விக்கடவுள் சரஸ்வதியாக சாவித்திரி. செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியாக தேவிகா. வீரத்துக்குப் பெயர் பெற்ற பார்வதி தேவியாக பத்மினி. இந்த மூவருக்கும் கல்வி பெரிதா, செல்வம் பெரிதா, வீரம் பெரிதா என்று திரி கொளுத்திப் போடும் நாரத முனிவராக சிவாஜி கணேசன்.

‘கல்விதான் பெரிது. வாய் பேச முடியாத ஒருவனுக்குப் பேச்சு கொடுத்து, கவிஞானம் கொடுத்து, புலவனாக்கி அவன் காலடியில் செல்வம் படைத்தவர்களை விழ வைக்கிறேன்’ என்பார் சாவித்திரி.

‘பிச்சை எடுக்கும் பெண்ணொருத்தியை அரசியாக்கி ஆளச் செய்து, படித்தவர்களை அவள் முன் மண்டியிடச் செய்கிறேன்’ என்பார் தேவிகா. ‘வீரம் இல்லாவிட்டால் எதுவுமே செல்லுபடியாகாது. அப்படியொரு வீரனிடம் மண்டியிடச் செய்ய இப்போதே நானும் பூலோகம் செல்கிறேன்’ என்பார் பத்மினி.

இதன் பிறகு கல்வியின் மகத்துவத்தையும் செல்வச் செழிப்பின் அருளையும் வீரத்தின் குணாதிசயங்களையுமாகச் சொல்லி படம் விரியும். ‘நாராயணா நாராயணா...’ என்று முகத்தில் சிரிப்பும் பேச்சுக்குள் ‘போட்டுக்கொடுக்கிற’ புத்தியுமாக நாரதராக சிவாஜி அசத்திக்கொண்டே வருவார். வித்யாபதி எனும் கவியாகவும் நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பார். சாவித்திரி, தேவிகா, பத்மினி, கே.ஆர்.விஜயா என நால்வரும் நடிப்பில் பிரமாதப்படுத்தியிருப்பார்கள். சிவகுமார், நாகேஷ், நாகையா, மனோரமா முதலானோரும் நடித்திருந்தார்கள்.

வீர இளைஞனாக, வீரமல்லனாக ஜெமினி கணேசன், தன் இயல்பான நடிப்பால் அமர்க்களப்படுத்துவார். பிச்சையெடுக்கும் கே.ஆர்.விஜயா, பட்டத்தரசியாவார். வாய் பேச முடியாத சிவாஜி, கலைமகளின் அருளால், மகாகவியாவார். இந்த மும்முனைப் போட்டியில், கல்வி ஜெயித்ததா, செல்வம் வென்றதா, வீரம் வாகை சூடியதா... என்பதை கலகலப்பாகவும் கவிநயத்துடனும் அதேசமயம் பொறுப்புணர்வுடனும் இயக்கியிருப்பார் ஏ.பி.நாகராஜன்.

‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’, திருவருட்செல்வர்’ மாதிரியான புராணப் படங்களை எடுக்கும்போது, ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ என்று போட்டுக்கொள்ளாமல், ‘திரைக்கதை, வசனம், இயக்கம்’ என்று மட்டுமே போட்டுக்கொள்வார் ஏ.பி.நாகராஜன். இதிலும் அப்படித்தான்!

கே.வி.மகாதேவனின் இசையில் கண்ணதாசனின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. வண்ணப்படமாக, ஆர்ட் டைரக்டர் கங்காவின் கைவண்ணத்தில் பிரம்மாண்டமான செட்டுகள் போடப்பட்டு மிரட்டியிருப்பார்கள்.

’அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி’ என்ற பாடல் அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கும். பி.சுசீலா பாடிய ‘கோமாதா எங்கள் குலமாதா’ பாடலும் இசையும் நமக்குள் அமைதியைக் கொடுக்கும். ’தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா’ என்ற சுசீலாவின் குரலும் கவியரசரின் வரிகளும் நம்மை என்னவோ செய்யும். ’உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி’ என்ற பாடல் இனிக்கவைக்கும். ’ராணி மகாராணி’ என்ற பாடல் கலகலக்க வைக்கும். ’தெய்வம் இருப்பது எங்கே’ பாடலும் ‘கல்வியா செல்வமா வீரமா’ பாடலும் பாடல் வரிகளும் நம்மை ஆழ்ந்த யோசனைக்கு இட்டுச் செல்லும்.

இயக்குநர் ஏ.பி.நாகராஜனின் விஜயலட்சுமி பிக்சர்ஸ் தயாரித்த ‘சரஸ்வதி சபதம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. படத்தின் பிரமாண்ட செட்டுகளுக்காகவும் வசனங்களுக்காகவும் இவ்வளவு பெரிய உச்ச நட்சத்திரங்களின் கூட்டணியில் மலர்ந்த படம் என்பதற்காகவும் திரும்பத் திரும்பப் பார்த்து வியந்தார்கள் தமிழக மக்கள்.

கல்வி அவசியம். செழிப்புடன் இருக்க செல்வமும் அவசியம். கல்வியும் செல்வமும் களவாடாமல் இருக்க நம் தேசத்தைக் காக்க வீரமும் முக்கியம். எனவே மூன்றும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என போதித்திருப்பார் ஏ.பி.நாகராஜன். அதேவேளையில், படத்தில் டைட்டில் போடப்படும் போது, டைட்டில் முழுக்க கீழே வீணை இருக்கும். சரஸ்வதி, மகாலக்ஷ்மி, பார்வதிதேவி மூவரும் சபதம் எடுத்தாலும் ‘சரஸ்வதி சபதம்’ என்றுதான் படத்துக்கே பெயர் வைத்திருக்கிறார். எனவே கல்வியின் மகத்துவத்துக்கே முக்கியத்துவம் தந்திருக்கிறார் ஏ.பி.என்.

1966 செப்டம்பர் 3-ம் தேதி வெளியானது ‘சரஸ்வதி சபதம்’. படம் வெளியாகி 56 வருடங்களாகின்றன. இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் புராண நாயகன் ஏ.பி.நாகராஜனையும், காவிய நாயகன் சிவாஜி கணேசனையும், இவர்கள் இணைந்து படைத்திட்ட ‘சரஸ்வதி சபதம்’ படத்தையும் மறக்கவே முடியாது என்பதை சபதம் போட்டுச் சொல்லலாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in