சுந்தர்ராஜனுக்கு ‘மேஜர்’ பட்டம் தந்த ‘சந்திரகாந்த்!’

கே.பாலசந்தர் இயக்கத்தில் ‘ஸ்ரீகாந்த், ரஜினிகாந்த், சந்திரகாந்த்!’
சுந்தர்ராஜனுக்கு ‘மேஜர்’ பட்டம் தந்த ‘சந்திரகாந்த்!’

பார்வைக் குறைபாடு கொண்ட கதாபாத்திரத்தில் அந்தக் காலம் தொடங்கி, இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் வரைக்கும் ஏகப்பட்ட நடிகர்களும் நடிகைகளும் நடித்திருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகில், பார்வைக்குறைபாடு கதாபாத்திரத்துக்கு ஒரு கம்பீரத்தையும் கெளரவத்தையும் கொடுத்து, தமிழ் சினிமாவில் அற்புதமாகத் தடம் பதித்த படம்தான் ‘மேஜர் சந்திரகாந்த்’.

அரசுப் பணியில் நல்ல சம்பளத்துடன் வேலை பார்த்துக்கொண்டிருந்த கே.பாலசந்தருக்கு நாடகமும் எழுத்தும்தான் கனவு, ஆசை, விருப்பம், லட்சியம் எல்லாமே! வேலை பார்த்துக்கொண்டே பல நாடகங்களை அரங்கேற்றி வந்தார். ஒவ்வொரு நாடகத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 1964-ல் எம்ஜிஆர் நடித்த ‘தெய்வத்தாய்’ படத்துக்கு வசனம் எழுதி திரையுலகில் பாலசந்தர் அறிமுகமானார். அதே வருடத்தில் ஏவி.எம். தயாரிப்பில் இவரின் கதை, வசனத்தில், கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் ‘சர்வர் சுந்தரம்’ வெளியானது.

1965-ல் ‘நீர்க்குமிழி’யையும் அதே வருடத்தில், ‘நாணல்’ படத்தையும் எடுத்தார். 1966-ம் ஆண்டு, ஏவி.எம் நிறுவனம் பாலசந்தரின் இயக்கத்தில் படமெடுக்கிற தன் ஆசையை நிறைவேற்றிக்கொண்டது. அதுதான் ‘மேஜர் சந்திரகாந்த்’.

ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றி, கண்களை இழந்து வீட்டில் இருக்கிறார் மேஜர் சந்திரகாந்த். இவருக்கு ஸ்ரீகாந்த் (முத்துராமன்), ரஜினிகாந்த் (ஏவி.எம்.ராஜன்) என்று இரண்டு மகன்கள். ஸ்ரீகாந்த் போலீஸ். ரஜினிகாந்த் கல்லூரியில் படிக்கிறார்.

ஏழ்மையான நிலையில் தையல் தொழிலில் இருப்பவர் மோகன் (நாகேஷ்). இவரின் தங்கை விமலா (ஜெயலலிதா). தங்கையின் மீது உயிரையே வைத்திருக்கிறார். கஷ்டப்பட்டு கல்லூரியில் படிக்கவைக்கிறார்.

ஒருகட்டத்தில், விமலாவுக்குத் திருமண ஏற்பாடுகள் செய்கிறார். இந்தத் தகவலை அண்ணன் சொன்னதும், விக்கித்துப் போகிறார் விமலா. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்து மருகுகிறார். மாப்பிள்ளை வீட்டார் வரவிருக்கும் நேரத்துக்கு முன்பு வரை, அந்த வீட்டில் மோகன் ஆடிப்பாடி துள்ளாட்டம் போடுகிறார். மாப்பிள்ளை வீட்டாரும் வந்துவிடுகிறார்கள். அலங்கரித்துக்கொள்ளச் சென்ற விமலா, வெளியே வரவில்லை. நேரமும் ஆகிக்கொண்டிருக்கிறது. பார்த்தால்... விமலா தற்கொலை செய்துகொள்கிறாள். அதிர்ந்துபோகிறார் அண்ணன் மோகன்.

இதன் பின்னர்தான், கல்லூரியில் படிக்கும் ரஜினிகாந்த் என்பவன் தன் தங்கையை ஏமாற்றிவிட்ட விஷயம் மோகனுக்குத் தெரிகிறது. ஆத்திரமும் கோபமுமாக, பழிவாங்கும் உணர்வுடன் சென்று அவனைக் கொல்கிறார். போலீஸ் துரத்துகிறது. தப்பித்து எங்கெல்லாமோ ஓடுகிறார்.

அப்படி ஓடுகிற மோகன், மேஜர் சந்திரகாந்தின் வீட்டுக்கே வந்து ஒளிந்துகொள்கிறார். பார்வை இல்லாதபோதும் புதிய நபர் வந்திருக்கிறார் என்பதை ஊகித்து மோகனிடம் பேசுகிறார் சந்திரகாந்த். கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் பரஸ்பரம் அன்பு பாராட்டிக் கொள்கிறார்கள். மோகனின் சூழலும் அவருக்குப் புரிகிறது.

இந்த நிலையில், தம்பியைக் கொன்ற மோகனைத் தேடி அலைகிறார் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த். அதேபோல, தன் மகன் ரஜினிகாந்தைக் கொன்றது மோகன் தான் எனும் விவரமும் மேஜருக்குத் தெரியவருகிறது. மகன் செய்த தவறும் புரிகிறது. நிலைகுலைந்து தவிக்கிறார். அதேசமயம், தன் இன்னொரு மகனான போலீஸிடம் சொல்லாமல், மோகன் மறைந்திருக்கவும் இடம் கொடுக்கிறார். இறுதியில் எல்லாமே தெரிகிறது இன்ஸ்பெக்டருக்கு!

நேர்மையும் கடமையும் தவறாத மேஜர், கொலையாளிக்கு உதவிய குற்றத்துக்காக, கொலையாளி மோகனுடன் சேர்ந்து மனநிறைவுடன் கைதாகிச் செல்கிறார் என்பதுதான் ‘மேஜர் சந்திரகாந்த்’ திரைப்படம்!

நாகேஷ் தன் குணச்சித்திர நடிப்பால் உச்சம் தொட்டிருப்பார். தங்கையின் மீது பாசம், ஏழ்மை நிலையில் இருந்தாலும் கலகலப்பு, தங்கையை ஏமாற்றியவன் மீது ஆத்திரம், கொலை செய்துவிட்ட குற்ற உணர்ச்சி, ஆனாலும் போலீஸை ஏமாற்றுகிற சாதுர்யம், மேஜர் சுந்தர்ராஜனுடன் ஏற்படுகிற பழக்கம், அவரின் மகனைக் கொன்றுவிட்டோமே... எனும் கலக்கம் என சகல உணர்வுகளையும் காட்டி நடிப்பால் பிரமிக்கவைத்திருப்பார் நாகேஷ்.

ஜெயலலிதாவும் கொடுத்த கதாபாத்திரத்தை நிறைவாகவே செய்திருப்பார். அண்ணன் காட்டுகிற அன்பிலும் காதலனிடம் ஏமாந்த துக்கத்திலும் கலங்கடித்திருப்பார். ஏவி.எம்.ராஜனும் முத்துராமனும் கச்சிதமாக நடித்திருந்தார்கள்.

படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் உரிய நாயகன் மேஜர் சந்திரகாந்த். மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார் மேஜர் சுந்தர்ராஜன். டிப்டாப் டிரஸ்ஸும், கையில் வாக்கிங் ஸ்டிக்குமாக மேஜர் எனும் உயர்ந்த பதவியில் இருந்த மிடுக்கும் கம்பீரமும் கொஞ்சம் திமிருமாக அவரின் உடல்மொழியே பாதி நடித்துவிடும். மீதமுள்ள நடிப்பை தன் டயலாக் டெலிவரியால் நிறைவு செய்து கதாபாத்திரத்துக்கு கெளரவம் சேர்த்திருப்பார்.

கண் தெரியாவிட்டாலும் இப்படி நடக்கிறீர்களே... என்று நாகேஷ் வியந்து கேட்பார். ‘வீட்டில் எல்லாமே அடிக்கணக்கில் நடப்பதுதான் காரணம்’ என்று ஸ்டைலாகச் சொல்லிவிட்டு, ‘டக் டக் டக் டக் டக்’ என்று நடந்து திரும்புவார். அங்கே உள்ள பொருட்களைச் சொல்லுவார், மீண்டும் நடப்பார். அங்கேயிருக்கும் பொருட்களைச் சொல்வார். ஸ்டைலாகத் திரும்பி, அடியெடுத்துவைத்து, சோபாவில் அமருவார். ஆனால் அங்கே சோபா இருக்காது. கீழே விழுந்துவிடுவார். அந்த சோபா வழக்கமான இடத்தில் இல்லாமல் நகர்த்திப் போடப்பட்டிருக்கும். ‘கர்வம் மட்டும் கூடவே கூடாது’ என்பார் மேஜர். கலங்கிப் போய் அவரின் நடிப்புக்காக கரவொலி எழும்பியது.

மேஜருடன் இருக்கும் நாய் ஒன்று அசத்தியிருக்கும். அதற்குக் கொடுக்கப்பட்ட பயிற்சியும் அமர்க்களமாக இருக்கும். அந்த வீட்டுக்கு வந்து அடிக்கடி புலம்பலுடன் கதாபாத்திரத்தை படத்தின் ரிலாக்ஸ்க்கு பயன்படுத்தியிருப்பார் பாலசந்தர். இந்தக் கதாபாத்திரத்தை நடிப்பதற்கு முன் அவர் சுந்தர்ராஜன் தான். இதையடுத்துதான் அவர் மேஜர் சுந்தர்ராஜன் என்றானார். அந்த அளவுக்கு மேஜர் சந்திரகாந்தாகவே வாழ்ந்தார் மேஜர் சுந்தர்ராஜன்.

‘மெல்லிசை மாமணி’ எனும் பட்டத்துடன் அழைக்கப்பட்ட, அதேசமயம் தமிழ்த் திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாத அற்புத இசையமைப்பாளர் வி.குமார்தான் படத்துக்கு இசை. தனது நாடகங்களில் இசையமைத்த வி.குமாரை ‘நீர்க்குமிழி’ மூலம் திரைக்குக் கொண்டுவந்த கே.பாலசந்தர், மிகப்பெரிய ஏவி.எம். தயாரித்த இந்தப் படத்திலும் அவரையே பயன்படுத்தினார். ஒரு த்ரில்லர் படத்துக்கு உண்டான இசையை அத்தனை நேர்த்தியுடன் வழங்கினார் வி.குமார்.

மேஜர் சந்திரகாந்த்
மேஜர் சந்திரகாந்த்

அதேபோல, படத்தின் பாடல்களை கவிஞர் வாலி எழுத, எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார் வி.குமார். ’நேற்று நீ சின்னப்பப்பா இன்று நீ அப்பப்பா’ என்ற பாடல், ஏவி.எம்.ராஜனுக்கும் ஜெயலலிதாவுக்கும்! டி.எம்.எஸ்., சுசீலா இருவரும் பாடினார்கள். ’நானே பனி நிலவு வருவேன் பல இரவு’ என்ற பாடலும் ஜெயலலிதாவுக்கு. பி.சுசீலா பாடினார்.

’கல்யாண சாப்பாடு போடவா / தம்பி கூட வா/ ஒத்து ஊதவா/ இந்த ஊருக்கெல்லாம் பாக்கு வச்சி மேளம் கொட்டவா’ என்ற பாடல் ஹிட்டடித்தது. நாகேஷுக்கு டி.எம்.எஸ் பாடினார்.

படத்தில் மிகப்பெரிய ஹிட் பாடலாக அமைந்த ‘ஒருநாள் யாரோ...’ அப்படியொரு மெலடிப் பாடலாக அமைந்தது. ’ஒரு நாள் யாரோ…./ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ/ கண்ணுக்குள் ராகம் நேசுக்குள் தாளம்/என்னென்று சொல் தோழி/ என்ற பாடலில்,

’உள்ளம் விழித்தது மெல்ல/ அந்தப் பாடலில் பாதையில் செல்ல/ மெல்லத் திறந்தது கதவு/ என்னை வாவென சொன்னது உறவு/ நில்லடி என்றது நாணம்/ விட்டு செல்லடி என்றது ஆசை என்று வாலி ஜாலம் காட்டியிருப்பார்.

’செக்கச் சிவந்தன விழிகள்/ கொஞ்சம் வெளுத்தன செந்நிற இதழ்கள்/ இமை பிரிந்தது உறக்கம்/ நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்/ உன்னிடம் சொல்லிட நினைக்கும்/ மனம் உண்மையை மூடி மறைக்கும்’ என்ற வரிகளில் பெண்ணின் ஏக்கத்தை, காதலை, வெட்கத்தை அழகுறச் சொல்லியிருந்தார் வாலி. இந்தப் பாடலில் நாகேஷின் சேஷ்டைகள் கலகலக்கவைக்கும்.

நாடகத்திலும் மேஜர் சந்திரகாந்தாக மேஜர் சுந்தர்ராஜனே நடித்தார். நாடகத்தில் வெங்கி என்கிற ஸ்ரீகாந்த் நடித்த வேடத்தை, ஏவி.எம்.ராஜன் செய்தார்.

இன்னொரு சுவாரசியத் தகவல்... நாடகம் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும்போது, கதை உரிமையை பாலசந்தரிடம் கேட்க, ’நித்ய கல்யாணி பிலிம்ஸ்’ எனும் தயாரிப்பு நிறுவனத்துக்கு விற்றுவிட்டார் பாலசந்தர். அந்த நிறுவனமும் பட வேலையில் இறங்கியது. பி.மாதவன் இயக்கத்தில் ‘மேஜர் சந்திரகாந்த்’ கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகர் யார் தெரியுமா? நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஆனால் ஏனோ ஆரம்பித்த வேகத்திலேயே நின்றுவிட்டது. பிறகு இந்தியில் உரிமை வாங்கி, நாடகத்தை சினிமாவாக்கினார்கள்.

அதன் பிறகுதான் ஏவி.எம் தயாரிக்க, பாலசந்தர் இயக்கத்தில், மேஜர் சுந்தர்ராஜனே நடிக்க, ‘மேஜர் சந்திரகாந்த்’ உருவாகி வெளியானது. ரஜினிகாந்த் எனும் பெயர் பாலசந்தரை மட்டுமின்றி திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் ரொம்பவே ஈர்த்தது. ‘கெளரவம்’ படத்தில் சிவாஜியின் பெயர் ‘பாரீஸ்டர் ரஜினிகாந்த்’. பல வருடங்களுக்குப் பிறகு, சிவாஜிராவ் கெய்க்வாட்டைப் பார்த்து, தன் படத்தில் (அபூர்வ ராகங்கள்) அறிமுகப்படுத்திய கே.பாலசந்தர், சிவாஜிராவுக்கு ‘ரஜினிகாந்த்’ என்று பெயர் சூட்டினார்.

இன்னொரு தகவல்... கே.பாலசந்தர் இந்தப் படத்துக்குப் பிறகு ஜெயலலிதாவை வைத்து இயக்கவே இல்லை.

படம் வெளியான போது நான் பிறக்கவில்லை. அதன் பிறகு இந்தப் படத்தைத் தெரிந்துகொண்டதும் படம் பார்க்க வேண்டுமே எனும் ஆவல் எழுந்தது. இந்தப் படம் பற்றி என்னுடைய தாத்தா வியந்து சொல்லிக்கொண்டே இருந்தார். பிறகு திருச்சியில் இருந்த எனக்கு தஞ்சாவூரில் இந்தப் படம் ஒரு தியேட்டரில் ஓடுகிறது என்பது தெரிய, ஒருமணி நேரம் பயணித்து, இந்தப் படத்தைப் பார்த்து மலைத்துப் போனேன். அதன் பிறகு திருச்சியில் எந்தத் தியேட்டரில் திரையிட்டாலும் முதல்நாள், மறுநாள், மூன்றாம் நாள் என்று பார்த்ததெல்லாம் நடந்திருக்கிறது. தொலைக்காட்சியில் இந்தப் படத்தை ஒளிபரப்புகிறபோதெல்லாம், மீண்டும் மீண்டும் பார்ப்பேன். வேலைக்குச் சென்ற தருணத்தில் படம் ஒளிபரப்பானதை வீட்டார் எனக்குச் சொல்லும்போது, ‘அடடா... ஞாயிற்றுக்கிழமைல போட்டிருக்கக்கூடாதா’ என்று அங்கலாய்ப்பேன்.

1966 நவம்பர் 11-ம் தேதி வெளியானது ‘மேஜர் சந்திரகாந்த்’. படத்தில் நடித்த எல்லோருக்கும் நல்ல பெயரும் கிடைத்தது; புகழும் கிடைத்தது. முக்கியமாக, இயக்குநர் கே.பாலசந்தருக்கு, சிறந்த இயக்குநர் எனும் நற்பெயர் கிடைக்க இந்தப் படம் அச்சாரமிட்டது.

படம் வெளியாகி 56 ஆண்டுகளானாலும் கம்பீரம் காட்டி நிற்கிறார்கள் மேஜர் சந்திரகாந்தும் மேஜர் சுந்தர்ராஜனும்! அந்த ’ஒருநாள் யாரோ’ மெலடியையும் ‘உள்ளம் விழித்தது மெல்ல’ என்கிற வரிகளையும் இரவுகளில் ஒருநாள் கேட்டுப்பாருங்கள். ஒவ்வொரு நாளும் கேட்பீர்கள்; ரசிப்பீர்கள்; வியப்பீர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in