நம் இதயத்தில் உறவாடும் ‘பூமாலையில் ஓர் மல்லிகை!’

சிவாஜி - ஸ்ரீதர் கூட்டணியில் உறவாடும் ‘ஊட்டி வரை உறவு’
நம் இதயத்தில் உறவாடும் ‘பூமாலையில் ஓர் மல்லிகை!’

’’சோகப் படமாவே எடுத்திட்டிருக்கோம். ஜாலியா, கலகலன்னு ஒரு காமெடிப் படம் எடுப்போம்’’ என்று நண்பர்கள் சித்ராலயா கோபுவும் இயக்குநர் ஸ்ரீதரும் பேசி முடிவெடுத்தார்கள். செயல்பட்டார்கள். எடுத்து முடித்தார்கள். 1964-ம் ஆண்டு வெளியான அந்தப் படத்தை இன்று வரைக்கும் யாரால்தான் மறக்கமுடியும்? அது.. ‘காதலிக்க நேரமில்லை’. அதன் பின்னர், ‘’ஏம்பா... என்னை வைச்சி எப்பப் பாத்தாலும் வெயிட்டான படங்களா எடுக்கறியே... ஜாலியா ஒரு படம் என்னை வைச்சி எடுப்பா’’ என்று இயக்குநர் ஸ்ரீதரிடம் சிவாஜி கேட்டார். அப்படி 1967-ல் உருவானதுதான் ’ஊட்டி வரை உறவு’.

பாலையாவின் மகன் சிவாஜி. பாலையாவுக்கு முன்னொரு சந்தர்ப்பத்தில், இன்னொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கும். மகளும் பிறந்திருப்பாள். வளர்ந்திருப்பாள். அம்மா இறந்ததும் அப்பா பாலையாவைத் தேடி ஊருக்குக் கிளம்பிவருவாள்.

அதேசமயம், உறவுகளுக்குள் சிக்கல், பிடுங்கல், பிரச்சினை என்பதால் வீட்டைவிட்டு, ஊரைவிட்டு, வெளியேறி கிளம்பியிருப்பார் கே.ஆர்.விஜயா.

பாலையாவின் மகள் எல்.விஜயலட்சுமி. கே.ஆர்.விஜயாவும் விஜயலட்சுமியும் சந்தித்துக்கொள்ள நேரும். பெட்டி கைமாறிவிடும். அதில் எல்.விஜயலட்சுமி பாலையாவின் மகள் என்பதற்கான கடிதங்களையும் புகைப்படங்களையும் வைத்திருப்பார். அவை இப்போது கே.ஆர்.விஜயாவின் கைகளில்!

இதைக் கொண்டு, அங்கே தங்கினால்தான் தனக்குப் பாதுகாப்பு என்று கே.ஆர்.விஜயா நினைப்பார். சிவாஜி அதே ரயிலில், பெட்டியில், பயணம் செய்வார். பெட்டிக்குள் இருக்கும் கடித, புகைப்பட விவரங்களைத் தெரிந்துகொள்வார் சிவாஜி. அதிர்ந்துபோவார். ஆனால் அவருக்குக் குழப்பம் இருக்கும். பாலையாவிடம் வந்து கே.ஆர்.விஜயா ’நான் உங்கள் மகள்’ என்று விஷயம் சொல்வார். கடிதங்களையும் புகைப்படங்களையும் காட்டுவார். ஏற்றுக்கொள்ளும் பாலையா, மனைவிக்கும் மகனுக்கும் இந்த விஷயம் தெரியக் கூடாது என்று, கே.ஆர்.விஜயாவை தன் நண்பரின் மகள் என்று அறிமுகப்படுத்தி அங்கேயே தங்கவைப்பார் பாலையா.

அதேசமயத்தில் கே.ஆர்.விஜயா தன் தங்கை அல்ல என்பது சிவாஜிக்குத் தெரியவரும். இருவருக்கும் காதல் மலரும். இதனிடையே, அங்கே சிவாஜியின் நண்பர் முத்துராமன். இவருக்கும் எல்.விஜயலட்சுமிக்கும் ஏற்கெனவே காதல் பூத்திருக்கும். இவர்கள் காதலுக்காகவும் எல்.விஜயலட்சுமி தங்குவதற்கு இடம் தேவை என்பதற்காகவும் முத்துராமனின் தந்தை வி.கே.ராமசாமியிடம் சிவாஜியும் இவர்களும் சேர்ந்து நாடகம் போடுவார்கள்.

சிவாஜி டாக்டரென்றும் விஜயலட்சுமிக்கு சித்தபிரமை என்றும் அதற்கு முத்துராமன் காரில் மோதியதுதான் காரணம் என்றும் சொல்லி அவர்கள் வீட்டிலேயே விஜயலட்சுமியை தங்கச் செய்துவிடுவார் சிவாஜி. மேலும் அப்பாவின் இன்னொரு மனைவிக்குப் பிறந்தவர்தான் எல்.விஜயலட்சுமி என்றும் தெரிந்துகொள்வார்.

இங்கே, சிவாஜியும் கே.ஆர்.விஜயாவும் நெருங்கிப் பழகியதைக் கண்டு மகனும் மகளும் இப்படிச் செய்கிறார்களே என்று நொந்துகொள்வார் பாலையா. அப்படி அவர் நொந்துகொள்கிற இடங்களெல்லாம் நமக்குத்தான் வயிறு புண்ணாகிப் போகும்.

பாலையாவுக்கு கே.ஆர்.விஜயா உண்மையான மகள் இல்லை என்பது தெரிந்ததா, எல்.விஜயலட்சுமியை மகளாக ஏற்றுகொண்டாரா. இரண்டு ஜோடிகளுக்கும் திருமணம் நடந்ததா என்பதைச் சொன்னதுதான் ‘ஊட்டி வரை உறவு’.

‘ஊட்டி வரை உறவு’ படத்தை குளுகுளு ஊட்டியில் ஜிலுஜிலுவென வண்ணப்படமாக எடுத்து கலகலக்க வைத்திருப்பார் இயக்குநர் ஸ்ரீதர். நடுவே, கே.ஆர்.விஜயா பற்றி விளம்பரம், அதைப் பார்க்கும் உள்ளூர் டாக்டர் நாகேஷ், அவர் அதைச் சொல்வதற்காக பாலையாவிடம் வரும் தருணம், இதைத் தெரிந்துகொண்டு சிவாஜி நாகேஷை முறுக்கி மிரட்டுவார். நாகேஷின் மனைவி சச்சு. இந்த இரண்டுபேரும் காமெடி தனி ரகளை கிளப்பும்.

படத்துக்கு வழக்கம்போல ஸ்ரீதரின் ஆஸ்தான ஒளிப்பதிவு இயக்குநர் வின்சென்ட் தன் கேமரா ஜாலத்தைக் கொடுத்திருந்தார். ’ஹேப்பி இன்று முதல் ஹேப்பி’ என்றொரு பாடல் பிரமாதமாகப் படமாக்கப்பட்டது. ‘தேடினேன் வந்தது நாடினேன் தந்தது’ என்ற பி.சுசீலாவின் பாடல், கே.ஆர்.விஜயாவின் ஆட்டத்தில் பாடல் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கும்.

கே.ஆர்.விஜயா ஆடிக்கொண்டிருப்பதை சிவாஜி ஸ்டைலாக, சிகரெட் பிடித்தபடி பார்த்துக்கொண்டிருப்பார். பாடலில் நான்கைந்து இடங்களில், சிவாஜி ஸ்டைலுக்காகவே கைத்தட்டல்களை அள்ளினார். தியேட்டரில் இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் தயாராக இருப்பார்கள்.

முத்துராமனுக்கும் எல்.விஜயலட்சுமிக்கும் ஒரு பாடல். ‘ராஜராஜஸ்ரீ ராஜன்’ என்ற பாடல். பி.பி.ஸ்ரீநிவாஸும் எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடினார்கள். அட்டகாசமான பாடல் அமைந்தது. ’அங்கே மாலை மயக்கம் யாருக்காக?’ என்ற பாடலும் இனிமையானதாக, அருமையானதாக இருக்கும்.

படத்தில் மிகப்பெரிய ஹைலைட்டான பாடல்... ‘பூமாலையில் ஓர் மல்லிகை’ பாட்டு! எல்லோரும் ஊட்டியில் காத்திருக்க, டான்ஸ் மாஸ்டர் சென்னையில் வேறொரு படத்தில் மாட்டிக்கொண்டாராம். எல்லோரும் இரண்டு மூன்று நாட்கள் காத்திருந்த வேளையில், கோபமான ஸ்ரீதர், ‘இந்தப் பாட்டே இன்னிக்கே எடுத்துடலாம்’ என்று ஒரேநாளில், ‘பூமாலையில் ஓர் மல்லிகை’ பாடலை எடுத்துமுடித்து அசத்தினாராம். சிவாஜியும் கே.ஆர்.விஜயாவும் அழகுறக் காட்சி தருவார்கள்.

மிகப்பெரிய ஹிட்டைக் குவித்து எல்லோரையும் ஈர்த்தது இந்தப் பாட்டு. பாடலுக்கு முந்தைய ‘ஹம்மிங்’கே நம்மைக் குதூகலப்படுத்திவிடும். டி.எம்.எஸ்., சுசீலா இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பாடியிருப்பார்கள்.

1967 நவம்பர் 1-ம் தேதி வெளியானது ‘ஊட்டி வரை உறவு’. இதேநாளில், சிவாஜி, பத்மினி, கே.ஆர்.விஜயா நடித்து, ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய ‘இரு மலர்கள்’ படமும் ஒன்றாக, தீபாவளி வெளியீடாக வந்தது. சிவாஜி ரசிகர்களுக்கு இது புதிதல்ல. இதேபோல், ‘சொர்க்கம்’ படமும், ‘எங்கிருந்தோ வந்தாள்’ படமும் ஒரே நாளில்தான் வெளியாகின. அதேபோலத்தான் இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. இந்தப் பக்கம் சிவாஜியை ரசித்து ரசித்து இயக்குகிற திருலோகசந்தர், அந்தப் பக்கம் ரசித்து ரசித்து டைரக்ட் செய்கிற ஸ்ரீதர்... என இருவரின் படங்களுமே வெற்றிபெற்றன. கறுப்பு வெள்ளையில் மலர்ந்த ‘இருமலர்கள்’ படமும் வெற்றிதான். வண்ணத்தில் ஜொலித்த ‘ஊட்டி வரை உறவு’ம் வெற்றி பெற்றது. இதோ, 55 ஆண்டுகளாகியும் இன்றைக்கும் நம்முடன் உறவாடிக்கொண்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in