ஒரேநாளில் இரண்டு படம் ரிலீஸ்: சிறப்பான தொடக்கம் கண்ட சிவாஜி!

தூக்கு தூக்கி
தூக்கு தூக்கி

1954-ம் ஆண்டு சிவாஜியின் திரையுலக வாழ்வில் மறக்க முடியாத ஆண்டு என்றே சொல்ல வேண்டும். அந்த ஆண்டில், சிவாஜியின் திரைவாழ்வில், அடுத்தடுத்து நிகழ்ந்தவையெல்லாம் சரித்திரமாகவும் சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்னதாக 1952-ல் இருந்தே பார்ப்போம்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ மூலம் அறிமுகமானார் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் கொஞ்சம் தாமதமாக வந்திருந்தால், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கத்தில் சிவாஜி நடித்த ‘பணம்’ முதல் படமாக வந்திருக்கும். 1952 அக்டோபர் 17-ம் தேதி வெளியானது ‘பராசக்தி’. கலைவாணரின் ‘பணம்’ அதே வருடத்தில் டிசம்பர் 27-ம் தேதி வெளியானது. ஆக, ‘பராசக்தி’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே சிவாஜி நடிப்பில் ‘பணம்’ படப்பிடிப்பும் நடந்தது. இந்தப் படத்தை ஏ.எல்.சீனிவாசன் தயாரித்தார். இன்னொரு கூடுதல் தகவல்... பின்னாளில் ‘சிவாஜி - பத்மினி பிரமாதமான ஜோடிப்பொருத்தம்’ என்று பேசப்பட்டது நினைவிருக்கிறதா? இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம் இதுதான்!

1953-ல், இரண்டு படங்களில் சிவாஜி நடித்தார். ‘திரும்பிப்பார்’ படம் மிகப்பெரிய அளவில் அந்தக் காலத்தில் பேசப்பட்டது.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இந்தப் படம், ‘பராசக்தி’, ‘பணம்’ மூன்றுக்குமே கலைஞர் கருணாநிதிதான் வசனம் எழுதினார்.

நடிகை அஞ்சலிதேவி தயாரித்த ‘பூங்கோதை’ படத்தில் நாகேஸ்வரராவுடன் சிவாஜிகணேசன் நடித்தார். ஆக, 1952-ம் ஆண்டு இரண்டு படங்கள், 1953-ல் இரண்டு படங்கள் என மொத்தம் நான்கு படங்கள் வெளியாகியிருந்தன.

கலைவாணர் இயக்கிய ‘பணம்’
கலைவாணர் இயக்கிய ‘பணம்’

சிவாஜி அறிமுகமாகி மூன்றாவது வருடம்... 1954-ம் ஆண்டு. சிவாஜி வாழ்வில் மிக முக்கியமான ஆண்டு. பிற்காலத்தில், சிவாஜி நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகியிருக்கின்றன. ஆனால், திரையுலகில் அறிமுகமாகி மூன்றாவது வருடத்திலேயே இது நிகழ்ந்திருக்கிறது. அதற்கு முன்னதாக, மூன்றாவது வருடமான 1954-ல் ஏவி.எம். தயாரிப்பில் வீணை பாலசந்தர் இயக்கத்தில் ‘அந்த நாள்’ வந்தது. 22 ரீலில் 20 பாடல்கள் கொண்ட தமிழ் சினிமாவில், பாடல்களே இல்லாமல் வந்த முதல் படம் இது எனும் பெருமை, இந்தப் படத்துக்கு உண்டு. மேலும், ஃப்ளாஷ்பேக் உத்தியில் ஒவ்வொருவரின் கதை சொல்லும் பாணியும் தமிழ் சினிமாவுக்குப் புதுசு. ஆங்கிலப்படத்துக்கு இணையாக இருக்கிறது அப்போது விமர்சனத்தில் குறிப்பிட்டுப் பாராட்டியிருந்தன பத்திரிகைகள்.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் ஜி.ஆர்.ராவ் இயக்கத்தில், ஜி.ராமநாதன் இசையில், பத்மினியுடன் சிவாஜி நடித்த ‘இல்லற ஜோதி’ இந்த வருடத்தில்தான் வந்தது.

ஸ்ரீதரின் கதையில், சி.எச்.நாராயணமூர்த்தி இயக்கத்தில், பத்மினியுடன் சிவாஜி நடித்த ‘எதிர்பாராதது’ படமும் 1954-ம் ஆண்டில்தான் வெளியானது.

‘பொறுத்தது போதும் மனோகரா பொங்கியெழு’ என்ற புகழ்மிக்க வசனம் இடம்பெற்ற ‘மனோகரா’ படத்தின் கதை பம்மல் சம்பந்த முதலியார். வசனம் கலைஞர் கருணாநிதி. எல்.வி.பிரசாத் இயக்கினார். ‘பராசக்தி’ படம் வெளியாவதற்கு முன்பே ‘மனோகரா’ படத்துக்கான பணிகளைத் திட்டமிடத் தொடங்கி வேலைகளும் நடக்க ஆரம்பித்துவிட்டன’ என்று கலைஞர் கருணாநிதி ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்.

மனோகரா
மனோகரா

பி.ஆர்.பந்துலு தயாரிப்பில், ப.நீலகண்டன் இயக்கத்தில், டி.ஜி.லிங்கப்பா இசையில், ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’யும், ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில், கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை இசையில் கே.ஆர்.ராமசாமியுடன் இணைந்து சிவாஜி நடித்த ‘துளிவிஷம்’ படமும் இதே வருடத்தில் வெளியாகின.

இந்த வருடத்தில்தான் எம்ஜிஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த ‘கூண்டுக்கிளி’ வெளியானது. கே.வி.மகாதேவன் இசையமைக்க, டி.ஆர்.ராமண்ணா தயாரித்து இயக்கினார். 1954-ம் ஆண்டு, ‘அந்த நாள்’, ‘இல்லற ஜோதி’, ‘எதிர்பாராதது’, ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’, ‘துளிவிஷம்’, ‘மனோகரா’, ‘கூண்டுக்கிளி’ என ஏழு படங்களுடன் எட்டாவது படமாக ‘தூக்கு தூக்கி’ வெளியானது. லலிதா, பத்மினி, ராகினி, பாலையா முதலானோர் நடிப்பில், ஜி.ராமநாதன் இசையில் வெளியான ‘தூக்கு தூக்கி’ படத்தில் இரண்டு சிறப்புகள்.

1954 ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி சிவாஜிக்கு ‘கூண்டுக்கிளி’, ‘தூக்கு தூக்கி’ என இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகின. 1952-ல் இரண்டு படங்கள், ’53ல் இரண்டு படங்கள் என மொத்தம் நான்கு படங்கள், ’54-ல் மட்டுமே எட்டு படங்கள் வெளியாகி, சிவாஜியின் மார்க்கெட் உயர்ந்துகொண்டே போனது. ஆக, அந்தக் காலத்தில், அறிமுகான மூன்றாவது வருடத்துக்குள் 12 படங்களில் நடித்தார் சிவாஜி.

இன்னொரு சிறப்பும் ‘தூக்கு தூக்கி’ படத்துக்கு உண்டு. தனக்கு சிதம்பரம் ஜெயராமன் பாடினால்தான் சரியாக இருக்கும் என்பது சிவாஜியின் கணக்காக இருந்தது. ஆனால் புதிய பாடகராக வந்திருக்கும் இளைஞனுக்கு வாய்ப்பு கொடுப்பதாக ஜி.ராமநாதன் வாக்குக் கொடுத்துவிட்டார். சிவாஜிக்கோ சங்கடம். மறுத்துப் பார்த்தார். ‘ஒரேயொரு பாட்டு. பிடிச்சிருந்தா வச்சுக்குவோம். இல்லேன்னா ஜெயராமனையே பாடவச்சிருவோம்’ என்று ராமநாதன் சொன்னார். சிவாஜியும் சம்மதித்தார். அவரும் பாடினார்.

அந்தநாள்
அந்தநாள்

மறுநாள்... சிவாஜியை அழைத்த ஜி.ராமநாதன், ‘பாட்டைக் கேளுங்க. பிடிக்கலேன்னா மாத்திருவோம்’ என்று பாடலை ஒலிக்கவிட்டார். சிவாஜி முகத்தில் அப்படியொரு பரவசம். பாடல் முழுவதையும் கேட்டார்.

‘ராமுண்ணா... ஒண்ணு செய்யலாமா?’ என்று சிவாஜி கேட்டார். ‘என்ன’ என்பது போல் சிவாஜியைப் பார்த்தார் ஜி.ராமநாதன். ‘இந்தப் படத்துல எனக்கு வர்ற எல்லாப் பாட்டையும் இவரையே பாடவைச்சிருங்க’ என்றார். அவரும் பாடினார். படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன.

‘பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே’, ‘கண் வழி புகுந்து’, ’ஏறாத மலைதனிலே’, ’குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்’, ’அபாய அறிவிப்பு ஐயா அபாய அறிவிப்பு’ என எல்லாப் பாடல்களையும் அந்தப் பாடகர் பாடினார்.

பிறகு சிவாஜிக்கு அவர் பாடினால், ‘சிவாஜியே பாடுறாப்ல இருக்குய்யா’ என்று எல்லோரும் ரசித்துக் கொண்டாடினார்கள்; இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாடகர் டி.எம்.செளந்தர்ராஜன் என்று சொல்லவும் வேண்டுமா என்ன?

ஆக திரையுலகில் நுழைந்து மூன்றாவது ஆண்டில், ஒரே வருடத்தில் எட்டு படங்கள், பாடலே இல்லாமல் ஒரு படம், எம்ஜிஆருடன் சேர்ந்து ஒரு படம், ஒரே நாளில் இரண்டு படங்கள் ரிலீஸ், அந்த வருடத்தில் இணைந்த டி.எம்.எஸ். கூட்டணி என சத்தமே இல்லாமல் 1954-ல் சிவாஜி கணேசன் வாழ்வில் நிகழ்ந்த சரித்திரப் பதிவுகள் இவை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in