’உயர்ந்த மனிதன்’: நடிப்பிலும் ஸ்டைலிலும் விளையாடிய சிவாஜி!

இன்றும் நினைவில் ஓடும் ‘அந்தநாள் ஞாபகம்!’
’உயர்ந்த மனிதன்’: நடிப்பிலும் ஸ்டைலிலும் விளையாடிய சிவாஜி!

தமிழ் சினிமாவில், ஏழை மேற்கு என்றால் பணக்காரர் கிழக்கு. இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை வைத்துக்கொண்டு, அந்தஸ்தையும் கெளரவத்தையும் முன்னே நிறுத்திவைத்து, எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. செல்வம் இருக்கிற செருக்கும் கர்வமும் மட்டுமே வில்லத்தனம் செய்கிற கதைகள் நிறையவே உண்டு. இந்தக் காசு பண பேதத்தால், தன் காதலையும் காதல் மனைவியையும் இழந்து, உடைந்து நிற்கிறவர், இன்னொரு பெண்ணை மணந்துகொண்டு, வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சியுடன் வாழ்கிற வாழ்க்கையை ராஜலிங்கம் எனும் கதாபாத்திரத்தின் மூலமாக நமக்கு உணர்த்திய படம்தான், ‘உயர்ந்த மனிதன்.’

மதுரையைச் சேர்ந்த மிகப்பெரிய செல்வந்தர் சங்கரலிங்கம் பிள்ளை (எஸ்.வி.ராமதாஸ்). இவரின் ஒரே மகன் ராஜலிங்கம் (சிவாஜி). ராஜலிங்கம் என்கிற ராஜூவின் பால்ய சிநேகிதன் சுந்தரம் (மேஜர் சுந்தர்ராஜன்), அவர்கள் வீட்டிலே பரம்பரை பரம்பரையாக வேலை செய்கிறார். இன்னொரு நண்பர் டாக்டர் கோபால் (எஸ்.ஏ.அசோகன்).

படிப்பெல்லாம் முடித்திருந்த நிலையில், கொடைக்கானலில் உள்ள எஸ்டேட்டைச் சுற்றிப்பார்க்க தன் நண்பர்கள் டாக்டர் கோபாலுடனும் சுந்தரத்துடனும் செல்கிறார் ராஜூ. அங்கே பார்வதியை (வாணிஸ்ரீ) பார்க்கிறார். பார்வதியைக் கோபாலும் பார்க்கிறார். ராஜூவுக்கும் அவள் மீது காதல். கோபாலுக்கும் அவள் மீது விருப்பம். பார்வதியின் அப்பா ராஜூவின் எஸ்டேட்டில் வேலை பார்க்கிறார். ஒருகட்டத்தில் ராஜூவும் பார்வதியும் விரும்புகிறார்கள். தன் அப்பா, பணமும் செல்வமும் இருக்கிற பகட்டுக்குச் சொந்தக்காரர் என்பதால், திருமணம் முடிந்த பிறகு சொல்லி சமாதானம் செய்துவிடலாம் என்று நம்பி, பார்வதியைத் திருமணம் செய்துகொள்கிறார் ராஜூ. பார்வதியும் கர்ப்பமாகிறார்.

இருவரும் எஸ்டேட் பங்களாவில் ஒன்றாக வாழ்கிறார்கள். இந்த விஷயமெல்லாம் சங்கரலிங்கம் பிள்ளைக்குத் தெரியவர, கொடைக்கானலுக்கு வருகிறார். அப்போது பார்வதி, தன் வீட்டுக்குச் சென்றிருக்க, இங்கே அப்பாவுக்கும் மகனுக்கும் கடும் வாக்குவாதம்; சண்டை. அன்றிரவு, பார்வதியின் குடிசைக்கு தீவைக்கிறார் சங்கரலிங்கம். இதைக் கண்டு அப்பாவை எதிர்க்க முடியாமலும் பார்வதியைக் காப்பாற்ற முடியாமலும் கலங்கிக் கதறி மயங்கிச் சரிகிறார் ராஜூ.

மதுரைக்கு வந்த பிறகும் பார்வதியின் மரணத்தை ராஜூவால் ஏற்கவே முடியவில்லை. இந்த நிலையில், உறவுக்கார முறைப்பெண் விமலாவை (செளகார் ஜானகி) திருமணம் செய்துகொள்ளச் சொல்கிறார் சங்கரலிங்கம். முடியாது என ராஜூ மறுக்கிறார். அதட்டி, உருட்டி, மிரட்டி, ‘தற்கொலை செய்துகொள்கிறேன்’ என அட்டூழிய ‘பிளாக்மெயில்’ செய்து, மகனைத் திருமணத்துக்குச் சம்மதிக்கவைக்கிறார்.

உயர்ந்த மனிதன்
உயர்ந்த மனிதன்

ராஜூவும் மனைவி விமலாவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தாலும் ஒட்டுதல் இல்லாமல்தான் வாழ்கிறார் ராஜூ. அவர்களுக்குக் குழந்தையும் இல்லை. இந்த சமயத்தில், வி.எஸ்.ராகவனால் வளர்க்கப்படுகிற சத்யன் (சிவகுமார்), படிப்பில்லாமல் இருக்கிறார். சரியான வேலையும் இல்லை. அவரை டாக்டர் கோபால் சந்திக்கிறார். ராஜூவிடம் அழைத்துச் சென்று, சத்யனுக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறார்.

சத்யன் பேருக்கேற்ற மாதிரியே சத்யன். கடுகளவும் பொய் பேசாதவன். ‘சாகும் வரை நான் பொய் பேசவே மாட்டேன் அம்மா’ என்று அம்மாவின் படத்தில் ஒட்டி வைத்திருக்கிற அளவுக்கு நல்லவன். ஒருகட்டத்தில், சத்யன் பார்வதி - ராஜூ இருவருக்கும் பிறந்த மகன் என்பதும் அப்பாவின் வீட்டிலேயே பையன், ஒரு வேலைக்காரனைப் போல் இருக்கிறான் என்பதும் டாக்டர் கோபாலுக்குத் தெரியவருகிறது. அதைத் தன் நண்பனிடம் சொல்ல முற்படும் தருணத்தில், டாக்டர் இறந்துவிடுகிறார்.

சத்யனுக்கு முதலாளி ராஜூதான் அப்பா என்பது தெரிந்ததா... ‘பார்வதிக்கும் எனக்கும் பிறந்த மகனா சத்யன்’ என்பது ராஜூவுக்குத் தெரிந்ததா... கணவருக்கு ஏற்கெனவே திருமணமாகி, அவள் இறந்துவிட்ட விஷயத்தையும் அவர்களுக்குப் பிறந்தவனே இந்த சத்யன் என்பதையும் விமலா அறிந்துகொண்டாளா... என்பதை விவரித்ததுதான் ‘உயர்ந்த மனிதன்’ கதை!

கதையை இப்படி மூன்று நான்கு பாராவுக்குள் சொல்லிவிட்டாலும் படத்தின் தாக்கம் நம் மூளையில் நினைவிருக்கும் வரை அப்படியே பதிந்திருக்கும். ஒவ்வொரு காட்சிகளும் உணர்வுபூர்வமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் செதுக்கப்பட்டிருக்கும்.

முதல் காட்சியிலேயே தன் அப்பா எவ்வளவு அதிகார போதை மிக்கவர், பண மிதப்பு கொண்டவர் என்பதை சிவாஜி உணர்ந்து சலித்துக்கொள்வார். செருப்பு போட்டுக்கொண்டு வந்த வேலைக்காரனை அடிவெளுத்தெடுப்பார் அப்பா. அதைப் பார்த்துவிட்டு, அப்பாவை எதிர்க்கத் திராணியில்லாத கையறு நிலையில் காரில் ஏறுவார் மகன். அசோகனும் ஏறிக்கொள்வார். பால்ய நண்பன் மேஜர் சுந்தர்ராஜன், சிவாஜி வீட்டில் வேலை செய்பவரல்லவா... அவர்தான் காரோட்டி.

அப்போது அப்பாவைப் பற்றிப் புலம்பிக்கொண்டே ‘ப்ளடி ஃபூல்’ என்று ‘ப்ளடி’க்கு ஒரு அழுத்தம் கொடுத்துச் சொல்லியபடி, விரக்தியுடன் சிகரெட்டைப் பற்றவைப்பார். அசோகனுக்குத் தருவார். மேஜருக்கும் தருவார். ‘வேணாம் முதலாளி’ என்பார் மேஜர். “டேய்... வீட்ல இருக்கறவரைக்கும்தான் இந்த முதலாளி தொழிலாளியெல்லாம். வெளியே வந்துட்டா நாம நண்பர்கள்தான். சிகரெட்டை எடுடா’’ என்று தோழமையும் செல்லக் கோபமும் கலந்து சிவாஜி சொல்வார். நமக்குக் கண்கள் கலங்கிவிடும்.

சிவாஜியின் உடல் ஆரோக்கியத்தைக் காரணம் காட்டி, உப்புச் உறைப்பில்லாத உணவாகச் சமைத்து அனுப்புவார் செளகார் ஜானகி. அதை வேண்டாவெறுப்பாக சாப்பிடுவார் சிவாஜி. இதையெல்லாம் பார்த்துவிட்டு, சிவகுமார், “நல்லா சுள்ளுன்னு சமைச்சு எடுத்து வரட்டுமா முதலாளி?” என்று கேட்பார். அப்போது சிவாஜியைப் பார்க்க வேண்டுமே... சிவகுமாரை ஒரு பார்வை பார்ப்பார். லேசாக புன்னகைத்தபடி, சரியென்று தலையாட்டுவார்.

காரஞ்சாரமாக உணவு வரும். கண்களில் நீர் வழிய சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டே, “என் அம்மா கையில சாப்பிட்டதெல்லாம் ஞாபகத்துக்கு வருது. இன்னும் கொஞ்சம் ரசம் ஊத்து’’ என்று சொல்லியபடி வாங்கிக் குடிப்பார். ‘முதல் மரியாதை’ படத்தில் மீன் சோறு சாப்பிடும் காட்சி உண்டு. ஆனாலும் அந்தக் காட்சிக்கும் இந்தக் காட்சிக்கும் ஆயிரத்துச் சொச்ச வித்தியாசங்களைக் காட்டியிருப்பார் சிவாஜி!

’சாப்பிட்டுவிட்டு, அப்படியே கைதுடைத்துக்கொண்டு நடந்துவருகிறீர்கள்’ என்று மட்டும்தான் இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு சொல்லியிருப்பார்கள். ஆனால், சாப்பிடும்போது ஒரு எக்ஸ்பிரஷன். கையலம்பும்போது ஒரு மேனரிஸம். துண்டால் கைதுடைக்கும் போது தனி பாணி. நடந்து வரும்போது, பல் குத்தும் போது பல் குத்தும் குச்சியைக் கொண்டும் பல்லிடுக்கில் மாட்டிக்கொண்டிருப்பதை எடுக்கும் பாவனையில் ஒரு ஸ்டைல்... என்று நடிகர் திலகத்தின் நடிப்பு காட்சிக்குக் காட்சி உயர்ந்துகொண்டே இருக்கும்.

காதலியாக வந்து சிவாஜியின் மனதில் இடம்பிடிக்கும் வாணிஸ்ரீ, தன் நடிப்பால் அசத்தியிருப்பார். அவர் சிவாஜிக்காக தயாரித்துக் கொடுத்த ஸ்வெட்டர் படத்தில் வரும்போதெல்லாம் நம் கண்ணுக்கு முன்னேயும் மனசுக்குள்ளேயும் ‘பார்வதி’யாகவே வந்துசெல்வார் வாணிஸ்ரீ. சிவாஜியின் பால்ய நண்பனாக மேஜர் சுந்தர்ராஜனும் பின்னர் நண்பராகும் டாக்டரான அசோகனும் இருதரப்பட்ட நட்பை மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பார்கள். மேஜர் சுந்தர்ராஜனின் நட்பில் அந்நியோன்யம் கலந்த அடக்கம் இருக்கும். அசோகனின் நட்பில், நெருக்கத்துடன் கூடிய அலட்டல் இருக்கும். இருவருமே அசத்தியிருப்பார்கள்.

அதிலும் படத்தில், விழா ஒன்றில், அசோகன் முழு போதையுடன் உண்மைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசுவதும் பிறகு அவரை தனியறைக்கு சிவாஜி அழைத்துச் செல்லுவதும் அப்போது அசோகனிடம், “டேய் ராஜி (ராஜலிங்கம் என்கிற ராஜூவை ராஜி என்று கொச்சையாக, நம்மூரில் நாம் அழைப்பது போல் அசோகன் கூப்பிடும் அழகே அந்த நட்பின் பலத்தைக் காட்டிவிடும்), நெருப்புல எரிஞ்சதைத்தான் நீ பாத்தே. நான் விளைஞ்சதையே பாத்தேன்’’ என்று சொல்லிவிட்டு இறக்கிற காட்சி மொத்தமும் அசோகன், தன் நடிப்பால் அப்ளாஸ் வாங்கியிருப்பார்.

சிவகுமாரும் அப்படித்தான். அவரின் ஆரம்பகாலப் படங்களில் மிக முக்கியமான படம் இது. சத்யன் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். அப்பா என்றே தெரியாமல் சிவாஜியை அவர் ரசித்தும் மதித்தும் பார்ப்பது அழகு. வேலைக்காரரான வி.கே.ராமசாமி கொடுக்கும் தொந்தரவால், வேலையை விட்டுச் செல்லும்போது, சிவாஜி தடுப்பார். ‘’உன் அப்பா ஸ்தானத்துல இருந்து சொல்றேன். போ... போய் வேலையைப்பாரு’’ என்பார். பிறகு சிவாஜிக்கும் செளகார் ஜானகிக்கும் சின்னதான சண்டை பெரிதாக வெடிக்கும் தருணத்தில், சிவாஜி விருட்டென்று கிளம்பி வெளியே செல்வார்.

அப்போது சிவாஜியின் காலை சிவகுமார் பிடித்துக்கொண்டு, ‘’அன்னிக்கி அப்பா ஸ்தானத்திலேருந்து சொல்றேன். வீட்டுக்குள்ளே போடான்னு சொன்னீங்க. அதேபோல, நானும் இன்னிக்கு உங்க பையன் ஸ்தானத்திலேருந்து சொல்றேன்... தயவு செஞ்சு வீட்டுக்குள்ளே போங்க முதலாளி’’ என்று சொல்ல, மனமிரங்கி சிவாஜி உள்ளே செல்ல... பார்த்துக்கொண்டிருக்கிற நமக்குத்தான் துக்கம் தொண்டையை அடைத்துக்கொள்ளும்.

மேஜரின் மகளாக, சிவகுமாரின் காதலியாக பாரதி நடித்தார். அவருக்குக் கொடுத்த பணியைச் செம்மையாகவே செய்திருப்பார். ஒவ்வொரு முறையும் சிவகுமாருக்குப் பரிந்து பேசுவதும், நியாயங்களை முதலாளியிடம் எடுத்துரைப்பதும் அழகான கட்டமைப்பு; அசத்தலான நடிப்பு.

சிவாஜியின் அப்பாவாக வரும் எஸ்.வி.ராமதாஸ், பணக்கார மிடுக்குடன் மிரட்டுவார். செளகார் ஜானகியின் அப்பாவாக வரும் பூரணம் விஸ்வநாதன், அமைதியே உருவாக வந்து கலக்குவார். ‘இந்தக் கதாபாத்திரத்தை இவரை விட வேறு எவரும் செய்யவே முடியாது’ என்று சொல்லுவோமே... செளகார் ஜானகியைத் தவிர வேறு எவரும் இத்தனை அழகுடனும் பணக்கார மிடுக்குடனும் ஆங்கில ஞானம் கொண்ட லேசான செருக்குடன் நடிக்கவே முடியாது.

லேடீஸ் கிளப்பில், ஜி.சகுந்தலாவும் அவரும் பேசிக்கொள்கிற ஒவ்வொரு வசனமும் சரசத்தையும் ஊடலையும் சொல்லும் ரசமானவை! ‘’இதுக்கு மேலே என்ன நடந்துச்சுன்னு சொன்னா, நான் அசடு; கேட்டாக்க நீ பைத்தியம்’’ என்பார் சகுந்தலா. ‘’என் புருஷன் ’ஊட்டிக்கு வேலை விஷயமா போறேன்... நீயும் வா’ன்னு கூப்பிட்டார். பிரிஞ்சிருந்தாத்தான் புருஷாளுக்கு பொண்டாட்டியோட அருமை தெரியும். ஒருவாரம் பிரிஞ்சிருந்தார். ஊட்டிலேருந்து குளுகுளுன்னு வந்தார். கொழுகொழுன்னு பையன் பொறந்தான்’’ என்பார் சகுந்தலா. இப்படி படம் முழுக்க வசனங்களால், நம் செவிகளையும் சிந்தனைகளையும் நிறைந்து ஜொலித்து ஜெயித்திருப்பார் ஜாவர் சீதாராமன்.

கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு சிவாஜி நடித்த படங்கள் ஏராளம். ஆனால், கோட் சூட்டைப் பார்த்தே, ‘இது, வசந்தமாளிகை, இது, கெளரவம், இது, பாசமலர், இது, தெய்வமகன், இது, சொர்க்கம், இது, பார்த்தால் பசி தீரும் என்றெல்லாம் சொல்லிவிடுவோம். இந்தப் படத்தில் சிவாஜியின் ’விக்’கும் அழகு. அவர் கோட்சூட் அணிந்திருப்பதும் கொள்ளை அழகு. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ‘’நம்ம கண்ணே பட்ரும் போல இருக்கு. அன்னிக்கி சிவாஜியோட மனைவி கமலாம்மா எத்தனை முறை திருஷ்டி சுத்திப் போட்ருப்பாங்களோ’’ என்று என் அம்மாவும் சித்திகளும் பேசிக்கொண்டது நன்றாக நினைவிருக்கிறது.

ஏவி.எம். தயாரித்த ‘உயர்ந்த மனிதன்’, ‘உத்தவ் புருஷ்’ என்கிற வங்கப் படத்தின் ரீமேக். கிருஷ்ணன் பஞ்சு இயக்கினார்கள். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கவிஞர் வாலி எல்லாப் பாடல்களையும் எழுதினார். எல்லாப் பாடல்களையும் டி.எம்.எஸ்., பி.சுசீலா பாடினார்கள். சிவாஜிக்கும் டி.எம்.எஸ்., சிவகுமாருக்கும் டி.எம்.எஸ். அதேபோல் வாணிஸ்ரீக்கும் சுசீலா. பாரதிக்கும் சுசீலா.

'பால் போலவே/ வான் மீதிலே/ யார் காணவே/நீ காய்கிறாய்/ நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா / இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா/ தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு’ என்று எழுத, சுசீலாம்மா நிலவையும் காதலையும் காதலனையும் கொஞ்சிக் கொஞ்சிப் பாடினார். ரிக்கார்டிங் முடிந்து, கண்ணாடிக் கூண்டில் இருந்து சுசீலாம்மா வந்ததும். விறுவிறுவென ஓடிப்போய், கைக்கூப்பிய எம்.எஸ்.விஸ்வநாதன், ‘’அடடடா... என்ன அழகா பாட்டுக்கு உயிர் கொடுத்திட்டேம்மா. எழுதி வைச்சுக்கோம்மா. இந்தப் பாட்டுக்கு உனக்கு தேசிய விருது கிடைக்கப்போவுது பாரு’’ என்றார்.

அந்த வருடம் இந்தப் பாடலுக்கு தேசிய விருது பெற்றார் பி.சுசீலா.

’அந்த நாள் ஞாபகம்/ நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே/ இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் ஏன் நண்பனே’ என்ற பாடலை டி.எம்.எஸ். பாடினாரா, அல்லது சிவாஜியே பாடினாரா என்று ஆயிரம் முறை கேட்டாலும் எனக்கு சந்தேகம் வரும். அந்த மூச்சிரைப்பெல்லாம் சரியாக வரவேண்டும் என்பதற்காக, ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் வேகவேகமாக ஓடிவிட்டு, உள்ளே வந்துவிட்டு பாடினாராம் டி.எம்.எஸ்.

’அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே/ இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே/ பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம் இதை தவிர வேறு எதை கண்டோம்/ புத்தகம் பையிலே/ புத்தியோ பாட்டிலே/ பள்ளியை பார்த்ததும் ஒதுங்குவோம் மழையிலே/ நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம்/ உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்’ என்று பாடும்போது, சிவாஜி தன் கையில் இருக்கும் வாக்கிங் ஸ்டிக்கை ‘உயர்ந்தவன்’ என்று சொல்லும்போது வானம் பார்த்து உயர்த்துவார். ‘தாழ்ந்தவன்’ என்று சொல்லும்போது, ஸ்டைலாக ‘ஸ்டிக்’கை வைத்து கீழே பூமியைக் காட்டுவார். தியேட்டரில் கரவொலி தட்டாதவர்கள் என எவரும் இருக்க முடியாது.

' வெள்ளிக்கிண்ணம்தான் தங்க கைகளில்/ முத்து புன்னகை அந்த கண்களில்/ வைர சிலைதான் எந்தன் பக்கத்தில்/ தொட்டுக்கலந்தால் அதுதான் சுகம்/ என்ற பாடலில் கவிஞர் வாலி, மொத்தக் கதையையும் உள்ளே புகுத்திக் கொடுத்திருப்பார்.

’சித்திர விழிகளென்ன மீனோ மானோ/ செவ்விதழ் வடித்ததென்ன பாலோ தேனோ/ முத்திரை கன்னங்கள் என்ன பூவோ பொன்னோ/ முத்திரை கன்னங்கள் என்ன பூவோ பொன்னோ/ மோகத்தில் துடித்ததென்ன நீயோ நானோ/ இன்னும் சொல்லவோ இன்பமல்லவோ’ என்ற பாடலில், மீன் - மான், பால் - தேன், பூ - பொன், நீ - நான் என்று சேரமுடியாத விஷயங்களையெல்லாம் சேர்த்துக் கோர்த்து, ‘அதேபோல நாயகனும் நாயகியும் சேர்ந்து வாழமாட்டார்கள்’ என்பதை சூட்சுமமாகச் சொல்லியிருப்பார் வாலி. மேலும் ஒவ்வொரு வார்த்தையை டி.எம்.எஸ் பாட, ’ஹாஹா ஹா ஹாஹா’ என்று சுசீலாம்மா ஹம்மிங் செய்ய, நமக்குள் காதல் உணர்வு கபடி விளையாடும்.

அந்தப் பாடலில், ‘கட்டுடல் சுமந்த மகள் முன்னே செல்ல (முன்பே இறந்துவிடுகிறாள் அல்லவா) காய் தொட்டு தலைவன் அவள் பின்னே செல்ல (வாணிஸ்ரீயின் நினைவாகவே சிவாஜி இருக்கிறார்) காலத்தை நில் என்று சொன்ன மாயம் என்ன (வாணிஸ்ரீயின் காலம் நின்றுவிட்டதாம். படத்தின் பாதியிலேயே இறந்துவிடுகிறார் அல்லவா) காலத்தை நில் என்று சொன்ன மாயம் என்ன/ கண்பட்டு கலந்து கொண்ட வேகம் என்ன (எல்லாமே வேகவேகமாக முடிந்துவிட்டதாம்) என்று எழுதி பாட்டுக்கு அர்த்தமும் ஜீவனும் கொடுத்திருப்பார் வாலி.

’என் கேள்விக்கென்ன பதில்’ பாடலை சிவகுமார் பாடுவது போலவே இருக்கும். க்ளைமாக்ஸ் காட்சியில், செளகாரின் வைர நெக்லஸை, சிவகுமாரின் பெட்டிக்குள் வி.கே.ராமசாமியும் மனோரமாவும் மறைத்து வைக்க, சிவகுமார்தான் திருடன் என சிவாஜியும் நம்ப, சிவகுமாரை விளாசித்தள்ளுவதைப் பார்க்கும்போதே நமக்கே வலிக்கும். போதாக்குறைக்கு பிரம்பால் அடித்து முடித்துவிட்டும், ஆவேசம் அடங்காமல், எட்டி ஒரு உதைவிடுவார் சிவாஜி. நடுங்கிப்போய் அலறுவது சிவகுமார் மட்டுமா? நாமும்தான்!

எல்லாப் பாடல்களும் ஹிட்டடித்தன. படமும் பெரிய அளவில் பேசப்பட்டது. சிறந்த தயாரிப்பு, இயக்கம், பாடகி என பல விருதுகளை வென்றது ‘உயர்ந்த மனிதன்.’ 1968-ம் ஆண்டு, நவம்பர் 29-ம் தேதி, வெளியானது இந்தப் படம். அதே வருடத்தில் பிறந்த நான், அடுத்த பத்து வருடங்கள் கழித்துத்தான் இந்தப் படத்தைப் பார்த்தேன். திருச்சியிலும் சுற்றுவட்டாரங்களில் உள்ள தியேட்டர்களிலும் எங்கு திரையிட்டாலும் நானும் என் நண்பர்கள் வட்டமும் போய்ப் பார்த்துவிடுவோம். அதேபோல், காரைக்குடி கோட்டையூரில் படித்துக் கொண்டிருந்தபோது, புதுவயல் சங்கர் திரையரங்கில் ஐந்து நாட்கள் ஓடியது படம். நான் மூன்று நாட்கள் போய்ப் பார்த்தேன். பிறகு திருச்சியில் மே.க.கோட்டை சண்முகா தியேட்டரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, இந்தப் படம் வந்து ஏழு நாட்கள் ஓடியது. ஏழு நாளும் எனக்கு தீபாவளிதான்.

சிவாஜி கணேசன், வங்கப் படத்தைப் பார்த்துவிட்டு, டாக்டர் கதாபாத்திரத்தில் (அசோகன் கேரக்டர்) நடிக்க ஆசைப்பட்டார். பிறகு நாயகனாக நடிக்க சம்மதித்தார். மேலும் சிவாஜிக்கு இது 125-வது படம். மிகப்பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்து மகுடம் சூட்டியது சிவாஜிக்கு! படம் வெளியாகி, 54 ஆண்டுகளாகின்றன. பண்பிலும் பண்பட்ட நடிப்பிலும் ‘உயர்ந்த மனிதன்’ என எல்லோரும் கொண்டாடும் நடிகர் திலகத்தின் ‘உயர்ந்த மனிதன்’ படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். ம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in