‘கண்ணதாசன்’ எழுதிய ‘ராமன் எத்தனை ராமனடி!’

54-ம் ஆண்டில் ’லட்சுமி கல்யாணம்’ படத்தின் கெட்டிமேள நினைவுகள்
‘கண்ணதாசன்’ எழுதிய ‘ராமன் எத்தனை ராமனடி!’

சொந்த சகோதரிக்குத் திருமணம் நடக்க வேண்டுமே என்று ஒரு சகோதரன் கலங்கித் தவித்துக் கதறினாலே, அந்தத் துக்கத்தை நம் துக்கமாக நினைத்து வருந்துவோம். வேறொரு குடும்பத்தில் பிறந்த பெண்ணை, தன் சகோதரியாக நினைத்து, அவளுக்குத் திருமணம் செய்துவைக்க ஒருவன் போராடினால் எப்படியிருக்கும்? நாம் அவனுக்காகவும் அந்தப் பெண்ணுக்காகவும் உருகி உருகிப் பிரார்த்தனை செய்வோம்தானே. அந்த லட்சுமி எனும் பெண்ணுக்காக, அவளின் திருமணத்துக்காக அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு போராடும் அண்ணனின் கதைதான் ‘லட்சுமி கல்யாணம்’.

வி.கே.ராமசாமியின் மகன் சிவாஜி கணேசன். அவர்கள் வீட்டுக்கு ரொம்பவே வேண்டப்பட்டவர்கள் சௌகார் ஜானகியும் அவரது கணவர் மேஜர் சுந்தர்ராஜனும். இவர்களின் மகள் வெண்ணிற ஆடை நிர்மலா. ஒரு சிக்கலில் தேடும் குற்றவாளியாக மேஜர் சுந்தர்ராஜன் இருக்க அவர் தலைமறைவாகிவிடுவார். வி.கே.ராமசாமிதான் அடைக்கலம் கொடுப்பார். அப்போது வெண்ணிற ஆடை நிர்மலாவைத் தன் தங்கையாகவே பாவித்து அன்பைப் பொழிவார் சிவாஜி.

அதே கிராமத்தில் இருக்கும் எம்.என்.நம்பியாருக்கு வெண்ணிற ஆடை நிர்மலா மீது கண். எப்படியாவது அவரைத் திருமணம் செய்துகொள்ள நினைப்பார். ஆனால் அவரின் அட்டூழியங்கள் ஊருக்கே அத்துபடி. சிவாஜி மறுப்பார்.

நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்ப்பார். முதலில் பாலாஜி வருவார். வி.எஸ்.ராகவன் அவருக்கு அப்பா. பேசி முடிவாகி சரியாகப் போய்க்கொண்டிருக்கும் தருணத்தில் நம்பியார் ஏதேதோ சொல்லிப் போட்டுக்கொடுக்க, திருமணப் பேச்சு நின்றுவிடும். ‘16 வயதினிலே’ படத்தில், மயிலுக்குத் திருமணம் நடக்காமல் பரட்டை போட்டுக்கொடுத்துக் கொண்டே இருப்பாரே. அந்த நம்பியார்த்தனத்தை, நம்பியார் இதில் செய்துகொண்டேஇருப்பார்.

ஒவ்வொரு மாப்பிள்ளையாகப் பார்த்துக்கொண்டே இருப்பார் சிவாஜி. நம்பியாரின் கொட்டத்தை ஒடுக்கவும் போராடிக்கொண்டே இருப்பார். வி.கோபாலகிருஷ்ணன் பெண் பார்க்க வருவார். ஆனால் அவர் ஒரு கண்டிஷன் போடுவார். ‘’என் தங்கை கால் ஊனமானவள். அவளை நீ திருமணம் செய்துகொள். உன் தங்கையை நான் திருமணம் செய்துகொள்கிறேன்” என்பார். சிவாஜி அதற்கும் ஒத்துக்கொள்வார். திருமண மேடையிலும் உட்கார்ந்துவிடுவார்கள். ஆனால் வேலை பார்த்த இடத்தில் பண மோசடி செய்ததற்காக, வி.கோபாலகிருஷ்ணனை போலீஸ், மணமேடையில் வைத்துக் கைது செய்துவிடும். திருமணமும் நின்றுவிடும்.

வெண்ணிற ஆடை நிர்மலாவின் கேரக்டர் பெயர் லட்சுமி. லட்சுமிக்குக் கல்யாணம் நடக்க வேண்டும் என அண்ணன் சிவாஜி போராடுவார். கடைசியில் நம்பியாரின் தடைகளையெல்லாம் கடந்து வென்றாரா, தங்கைக்குத் திருமணம் செய்துவைத்தாரா என்பதை உணர்ச்சிபூர்வமாகச் சொல்லியிருப்பதுதான் ‘லட்சுமி கல்யாணம்’.

சுருட்டு சுந்தரம் பிள்ளை எனும் கதாபாத்திரத்தில் நம்பியார் கலக்கியடித்திருப்பார். செளகார் ஜானகி தன் பண்பட்ட நடிப்பால் கலங்கடித்திருப்பார். வி.கே.ராமசாமி, வெண்ணிற ஆடை நிர்மலா, சோ, வி.கோபாலகிருஷ்ணன், கே.பாலாஜி, வி.எஸ்.ராகவன் எனப் பலரும் சிறப்பாகவே நடித்தார்கள்.

கதிர்வேலு எனும் கதாபாத்திரத்தில் நாயகனாக சிவாஜி கணேசன். எத்தனையோ மலை போன்ற கதாபாத்திரங்களையும் அசால்ட்டாக ஏற்று அசத்தியெடுக்கும் சிவாஜிக்கு, ‘லட்சுமி கல்யாணம்’ படத்தின் அண்ணன் கேரக்டர், இருட்டுக் கடை அல்வா சாப்பிடுவது மாதிரி! இளமையான சிவாஜியாக தங்கைக்காக உருகிற வேடத்தை, வெளுத்து வாங்கியிருப்பார். காட்சிக்குக் காட்சி சிவாஜியின் பல விதமான நடிப்பை, முகபாவங்களை ரசித்து வியக்கலாம்.

ஒவ்வொரு முறை நம்பியாரும் சிவாஜியும் மோதிக்கொள்வதே காமெடி ரகளையாக இருக்கும். நம்பியாரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, வி.எஸ்.ராகவன் கல்யாணத்தை நிறுத்திவிடுவார். அப்போது சிவாஜியின் நடிப்பு, புதுவிதமானது. முதலில் சமதையான குரலில், நியாயம் சொல்லுவார். பிறகு, கொஞ்சம் கெஞ்சிப் பேசுவார். அடுத்துக் கோபமாகப் பேசத் தொடங்கிவிடுவார்.“நீ கோபமா பேசிருக்கக் கூடாது, இதோ கிளம்பிப் போறாங்க பாரு” என்று செளகார் ஜானகி சொன்னதும் மன்னிப்புக் கேட்க வாசலுக்குப் பதறியபடி ஓடுவார். ஆனால் அவர்கள் போயிருப்பார்கள். ஆத்திரமும் கோபமுமாக, மண்ணை வாரி தூற்றிவிட்டு கலங்குவார். அத்தனை விதமாகவும் செய்ய சிவாஜியால்தான் முடியும்.

இன்னொரு மாப்பிள்ளை. அந்தக் கல்யாணமும் தடைபடும். அப்போது செளகார் உட்பட எல்லோரும் வேதனையில் இருப்பார்கள். சிவாஜி வருவார். செளகார் ‘என்ன’ என்பது போல் கேட்பார். ஒரு வார்த்தை கூட வசனம் இருக்காது சிவாஜிக்கு! கண்கள் சிவக்க, உதடுகள் துடிக்க, கண்ணீர் மல்க, குறுகி நிற்பார். வெண்ணிற ஆடை நிர்மலா வருவார். தங்கையைப் பார்த்ததும் இன்னும் பேச்சு வராது சிவாஜிக்கு. அவரிடம் ஜாடையில் உணர்த்துவார். ஆனால் செளகாருக்கும் வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கும் ஒரே விஷயத்தை இரண்டுவிதமாக உணர்த்துவதில், நடிப்பின் உச்சம் தொட்டிருப்பார் சிவாஜி.

நண்பனான வி.கோபாலகிருஷ்ணன் வீட்டில், தன் தங்கையைப் பற்றியும் அவளின் வெட்கம் கலந்த நடையைப் பற்றியும் சிலாகித்துச் சொல்லிக்கொண்டிருப்பார் சிவாஜி. அப்போது உள்ளேயிருந்து, சக்கர நாற்காலியில் ஒரு பெண் வருவார். அப்போது ஒரு தன் உடல்மொழியை சட்டென்று மாற்றி கரவொலி வாங்கியிருப்பார் சிவாஜி. படம் முழுக்க சிவாஜி ராஜ்ஜியம். அதிலும் இளமை பொங்க குதூகலத்துடன் இருக்கிற நடிகர் திலகம்!

கவியரசர் கண்ணதாசனின் சகோதரர் ஏ.எல்.எஸ் தயாரித்தார். ஒளிப்பதிவாளரான ஜி.ஆர்.நாதன் இயக்கினார். படத்தின் கதை வசனத்தை கவியரசர் கண்ணதாசன் எழுதினார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். எல்லாப் பாடல்களும் ஹிட்டடித்தன!

'மனிதரில் நாய்கள் உண்டு/ மனதினில் நரிகள் உண்டு/ பார்வையில் புலிகள் உண்டு/ பழக்கத்தில் பாம்பும் உண்டு/ நாயும் நரியும் புலியும் பாம்பும் வாழும் பூமியிலே/ மானம் பண்பு ஞானம் கொண்ட மனிதனை காணவில்லை’ என்று ‘யாரடா மனிதன் இங்கே/ கூட்டிவா அவனை இங்கே/ இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே’ என்ற பாடலில் கவிஞர் சாட்டை வரிகளால் விளாசியிருப்பார்.

சிரிப்பினில் மனிதன் இல்லை/ அழுகையில் மனிதன் இல்லை/ உள்ளத்தில் மனிதனில்லை/ உறக்கத்தில் மனிதனுண்டு/ வாழும் மிருகம் தூங்கும் தெய்வம் நடுவே மனிதனடா/ எங்கோ ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குதடா’ என்கிற வரிகள், எல்லாக் காலத்துக்கும் பொருந்துகிற கல்வெட்டு வரிகள்.

'தங்கத் தேரோடும் வீதியிலே/ ஊர்கோலம் போகுதடா/ செவ்வாழைப் பந்தலிலே லட்சுமி கல்யாணம்/ நல்ல சிங்கார மேடையிலே லட்சுமி கல்யாணம்/ கால நேரம் சேரும் போது கழுதை வந்து மறிச்சாலும்/ காரியங்கள் நடக்குமடா சுருட்டு சுந்தரம் பிள்ளே’ என்ற பாடலும் வெற்றி பெற்றது.

'போட்டாளே உன்னையும் ஒருத்தி பெத்துப் போட்டாளே/ நாட்டுக்கும் வீட்டுக்கும் லாபம் இல்லாம/ நல்லதைச் சொல்லவும் மூளை இல்லாம/ கொட்டானை போட்டாளே’ என்றொரு பாடலும் வரவேற்பைப் பெற்றது.

பகவான் கிருஷ்ணர் மீது கொண்ட மிகப்பெரிய பக்தியால் தன் பெயரான முத்தையாவை, கண்ணதாசன் என்று மாற்றிக்கொண்டவர், இந்தப் படத்தில் எழுதிய ‘ராமன் எத்தனை ராமனடி’ என்று எழுதிய பாடல்தான், மிகப்பெரிய ஹைலைட் பாடலாகவும் இன்றைக்கும் பலரின் செல்போன்களில் இருக்கிற, ஒலிக்கிற பாடலாகவும் கம்பீரமாக இருக்கிறது.

’ராமன் எத்தனை ராமனடி அவன்/ நல்லவர் வணங்கும் தேவனடி’ என்ற பாடலில், ’கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்/ காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்/ அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்/ அலங்கார ரூபன் அந்த சுந்தர ராமன்‘ என்று எழுதினார்.

‘தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்/ தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்/ வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்/ வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெய ராமன்’ என்று எழுதிவிட்டு,

’வம்சத்திற்கொருவன் ரகு ராமன்/ மதங்களை இணைப்பவன் சிவ ராமன்/ மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன்/ முடிவில் ஆதவன் அனந்த ராமன்/ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்/ நம்பிய பேருக்கு ஏது பயம்/ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்/ ராமனின் கைகளின் நான் அபயம்’ என்று எழுதி பிரமிக்க வைத்திருப்பார் கவிஞர். சுசீலாவின் குரலில் இந்தப் பாடலைக் கேட்டு ஸ்ரீராமரே சொக்கிப் போயிருப்பார். இந்தப் பாடலுக்கு தமிழக அரசின் விருது கிடைத்தது சுசீலாவுக்கு! ’பிருந்தாவனத்திற்கு வருகின்றேன்’ என்ற பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நிர்மலாவை பார்த்ததும் பாலாஜிக்கு பிடித்துவிடும். சிவாஜியும் உணர்ந்து விடுவார். அவருக்கு சந்தோஷம் பிடிபடாது. அதேநேரத்தில் பாட்டு. ஒரு சரணத்தின் இடையில் நிர்மலா அந்த ஹாலில் தனியாக ஒரு இடத்தில் போய் ஆட, ஆசையுடன் பாலாஜி அங்கே சென்று நிர்மலாவின் கைப்பற்ற முயற்சி செய்வார். இதை கவனித்துவிடும் சிவாஜி, இயல்பாக இருவருக்கும் இடையில் நுழைவார். அண்ணனின் நிலையிலிருந்து நிர்மலாவின் கையைப் பற்றிக்கொள்வார். பாலாஜியை ஒரு பார்வை பார்ப்பார். அப்படியே ஸ்டைலாக ஒரு ஸ்டெப்... கிறுகிறுத்துப் போனார்கள் சிவாஜி ரசிகர்கள்!

1968 நவம்பர் 15-ம் தேதி வெளியானது ‘லட்சுமி கல்யாணம்’. அந்த வருடத்தின் தொடக்கத்தில் வருவதாகத் திட்டமிட்டார்கள். பிறகு அக்டோபர் 21-ம் தேதி தீபாவளிக்கு வெளியிடலாம் என முடிவு செய்தார்கள். ஆனால் ‘எங்க ஊர் ராஜா’ தீபாவளிக்கு வந்தார். சரி... பொங்கலுக்கு வெளியிடலாம் என்றால், அடுத்தடுத்த படங்கள் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தன.போதாக்குறைக்கு ’உயர்ந்த மனிதன்’ நவம்பர் 29 என அறிவித்துவிட்டார்கள். அதனால், தீபாவளிக்கும் இல்லாமல், பொங்கலுக்கும் இல்லாமல், நவம்பர் 15-ம் தேதி, படத்தை வெளியிட்டார்கள்.

ஒருபக்கம், அதே வருடத்தில் ‘தில்லானா மோகனாம்பாள்’ சக்கைப்போடு போட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், 1952-ம் ஆண்டு வெளியான ‘பராசக்தி’ மீண்டும் வெளியிடப்பட்டு, தீயாய் பற்றிக்கொண்டு பரபரப்புடன் ஓடியது. தீபாவளிக்கு ‘எங்க ஊர் ராஜா’ வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் வெளியாகி ஒருமாதம் கூட முழுமை பெறாத நிலையில் ’லட்சுமி கல்யாணம்’ வந்து ஓடிக்கொண்டிருந்தது. இதையடுத்த 14 நாட்களில், ஏவி.எம்மின் ‘உயர்ந்த மனிதன்’ வேறு வந்து அடுத்த பாய்ச்சலுடன் போய்க்கொண்டிருந்தது. இப்படியாக, தமிழகத்தின் பல ஊர்களிலும் சிவாஜி நடித்த நான்கு படங்கள் ஓடிக்கொண்டே இருந்தன. இலங்கை கொழும்பு முதலான பல தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்தும் ஓடியது ‘லட்சுமி கல்யாணம்!’

இந்தப் படத்தின் இன்னொரு ஹைலைட்... சிவாஜிக்கு இதில் ஜோடியே இல்லை. க்ளைமாக்ஸில், பாலாஜிக்கும் வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கும் திருமணம் நடந்தேறும். அதையடுத்து, தன் நண்பன் வி.கோபாலகிருஷ்ணனுக்கு கொடுத்த வாக்கின்படி, ஊனமுற்ற பெண்ணை சக்கர நாற்காலியில் உட்கார வைத்துக்கொண்டு தள்ளியபடி செல்வார் சிவாஜி என்று முடித்திருப்பார்கள்!

படம் வெளியாகி, 54 வருடங்களாகின்றன. இன்னமும் ‘ராமன் எத்தனை ராமனடி’ என்று கல்யாண வீடுகளிலும் மண்டபங்களிலும் பெண் பார்க்கும் படலங்களில் யாரோ ஒரு அத்தையோ பாட்டியோ பெரியம்மாவோ பாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in