உலகம் சுற்றும் சினிமா - 21: உபகாரமாய் ஒரு கொலை!

‘ஸ்ட்ரேஞ்சர்ஸ் ஆன் எ ட்ரெயின்’ (1951)
உலகம் சுற்றும் சினிமா - 21: உபகாரமாய் ஒரு கொலை!

பயணங்கள் தரும் சுவாரசியத்திற்கு ஈடு இணையில்லை. புது இடங்களை மட்டுமல்லாமல் புதுப் புது மனிதர்களையும் பயணங்கள் நமக்கு அறிமுகப்படுத்தும். பயணித்த இடங்கள் நம் நினைவு அடுக்குகளில் நிலைப்பது போல் பயணத்தின்போது நாம் கடந்த எல்லா மனிதர்களும் நம் மனதில் தங்கிவிடுவதில்லை. இப்படி அசுவாரசியமாக நாம் கடக்கும் மனிதர்களில் ஒருவர் நம் வாழ்க்கைக்கே மிகப் பெரும் அச்சுறுத்தலாகிவிட்டால்? அப்படிப்பட்ட விபரீத ரயில் சினேகத்தின் கதைதான் ‘ஸ்ட்ரேஞ்சர்ஸ் ஆன் எ ட்ரெயின்’(1951).

‘மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ்’ என்று அழைக்கப்படும் ஹாலிவுட் மேதை ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் இயக்கிய இத்திரைப்படம், இன்றளவும் திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. 1950-ல்,பாட்ரிக்கா ஹைஸ்மித் என்ற பெண் எழுத்தாளர் எழுதிய ‘ஸ்ட்ரேஞ்சர்ஸ் ஆன் எ ட்ரெயின்’ என்ற நாவலைத் தழுவியே இப்படம் உருவாக்கப்பட்டது.

கொடூர யோசனை

கய் ஹெயின்ஸ் பிரபலமான டென்னிஸ் வீரன்; திருமணமானவன். அவனது மனைவி மிரியம் நடத்தை சரியில்லாதவள். இருவரும் பிரிந்து வாழ்வார்கள். அமெரிக்க செனட் அதிபரின் மகள் ஆனி மோர்டனுக்கும் ஹெயின்ஸுக்கும் இடையே காதல். இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள். மிரியத்திடமிருந்து விவாகரத்து பெற்றால்தான் இந்தத் திருமணம் சாத்தியம். அதனால், மிரியத்தைச் சந்தித்து விவாகரத்து கேட்கச் செல்வான் ஹெயின்ஸ். ரயிலில் அறிமுகமாவான் ப்ரூனோ ஆண்டனி. அதீத செல்வத்துடனும், தாயின் செல்லத்துடனும் வளர்ந்தவன் ப்ரூனோ. தன்னிடம் அளவு கடந்த கண்டிப்பு காட்டும் தனது தந்தையின் மேல் ஒருவித வெறுப்பு. மனச்சிதைவுக்கு உள்ளாகியிருப்பான். ஹெயின்ஸின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாகப் பத்திரிகைகளில் வெளியான தகவல்களை ப்ரூனோ தெரிந்துவைத்திருப்பான். பயணத்தில் இருவரும் நண்பர்களாகிவிடுவார்கள்.

ஒருகட்டத்தில் தங்கள் அந்தரங்க வாழ்க்கையில் இருக்கும் இடர்பாடுகளைப் பற்றிப் பேசிக்கொள்வார்கள். அப்போது, தனக்குத் தோன்றும் விபரீதத் திட்டத்தைப் பற்றி விவரிப்பான் ப்ரூனோ. அதாவது ஹெயின்ஸின் வாழ்வில் இடர்பாடாக இருக்கும் அவனது மனைவி மிரியத்தை ப்ரூனோ கொன்றுவிட வேண்டும். ப்ரூனோவின் வாழ்க்கையில் பிரச்சினையாக இருக்கும் அவனது தந்தையை ஹெயின்ஸ் கொலைசெய்துவிட வேண்டும். இப்படிச் செய்தால் போலீஸில் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்று ப்ரூனோ சொல்வான். அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டான் ஹெயின்ஸ். ப்ரூனோ கணித்தபடி, ஹெயின்ஸுக்கு விவாகரத்து அளிக்க 
மிரியம் மறுத்துவிடுவாள். அப்போதுதான் விவகாரம் முளைக்கும். ஹெயின்ஸுக்குத் தெரிவிக்காமலேயே ப்ரூனோ 
மிரியத்தைக் கொன்றுவிடுவான். “என் பங்கு கொலையை நான் செய்துவிட்டேன். இப்போது நீ என் தந்தையைக் கொல்ல வேண்டும்” என்று ஹெயின்ஸைத் துரத்த ஆரம்பிப்பான். காவல் துறையிடமும் உண்மையைச் சொல்ல முடியாமல், ப்ரூனோவின் பேச்சுக்கு உடன்பட்டு கொலையும் செய்ய முடியாமல் பரிதவிக்கும் ஹெயின்ஸ் எப்படி இந்தச் சிக்கலிலிருந்து மீண்டான் என்பதே மீதிக் கதை!

கருப்பு வெள்ளை கேமரா ஜாலம்

வித்தியாசமான காட்சி அமைப்பு, கேமரா கோணத்தின் மூலம் கதையின் வீரியத்தைக் கூட்டுவதில் கைதேர்ந்தவர் ஹிட்ச்காக். அவர் இயக்கிய ‘சைக்கோ’(1960) படத்தில் வரும் குளியலறையில் நடக்கும் கொலைக் காட்சி அதற்குச் சிறந்த உதாரணம். அதுவரை ஹாலிவுட் சினிமாவில் அப்படியொரு கோரமான கொலைக் காட்சியை யாரும் காட்டியதில்லை.

டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் சுவடே இல்லாத காலகட்டத்தில் வெளிவந்த ‘ஸ்ட்ரேஞ்சர்ஸ் ஆன் எ ட்ரெயின்’ படத்தில் பயன்படுத்தப்பட்ட கேமரா நுணுக்கங்கள் இன்றளவும் திரைப்பட மேதைகளை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. மிரியத்தை ப்ரூனோ கொலைசெய்யும் காட்சி அதற்கு ஓர் உதாரணம்.

மிரியத்தின் கழுத்தை ப்ரூனோ நெரிக்கும்போது கீழே விழும் அவளது மூக்குக் கண்ணாடியின் பிரதிபலிப்பில் அந்தக் கொடூரக் காட்சி தெரிவது போல் படமாக்கப்பட்டிருக்கும். ஏழு ‘டேக்’குகளுக்குப் பிறகு, பல அடி ஃபிலிம்களை வீணாக்கிய பிறகே அக்காட்சியைச் சரியாக எடுக்க முடிந்ததாம். அதே போல் இறுதிக் காட்சியில் அதிவேகமாகச் சுழலும் ராட்டினத்தில் நடக்கும் சண்டைக் காட்சியும் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கும். இந்தப் புகழுக்கெல்லாம் சொந்தக்காரர் இப்படத்தின் ஒளிப்பதிவாளரான ராபர்ட் பர்க்ஸ். இந்தப் படம்தான் ஹிட்ச்காக்குடன் இணைந்து ராபர்ட் பணியாற்றிய முதல் படமாகும். இப்படத்துக்குப் பிறகு ஹிட்ச்காக்கின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகிப் போனார் ராபர்ட். இவர்களின் வெற்றிக் கூட்டணி 13 ஆண்டுகள் தொடர்ந்தது.

சர்வதேசத் தாக்கம்

‘ஸ்ட்ரேஞ்சர்ஸ் ஆன் எ ட்ரெயின்’ படத்தைத் தழுவிப் பல திரைப்படங்கள் உருவாகியுள்ளன. 2011-ல், தமிழில் சேரன், பிரசன்னா நடிப்பில் உருவான ‘முரண்’ படம் இந்தப் படத்தின் அப்பட்டமான தழுவல்தான். 2017-ல், லயாம் நீசன் நடிப்பில் வெளிவந்த ‘தி கம்யூட்டர் (the commuter)’ படம் உருவான பின்னணியிலும் இந்தப் படத்தின் தாக்கம் உள்ளது.

‘மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ்’

பொதுவாக சஸ்பென்ஸ் ஜானர் படங்கள் மற்றும் புதினங்களின் படைப்பாளிகளுக்குச் சவால்கள் அதிகம். கதையின் மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக நேர்த்தியாக அவிழ்க்கப்பட வேண்டும். கொஞ்சம் குழப்பினாலும் ரசிகர்களுக்குக் கதை புரியாது, எளிமையாக இருந்தாலும் முடிச்சு அவிழும் முன்பே ரசிகர்கள் உண்மையைக் கணித்துவிடுவார்கள். இந்த வித்தையைச் சரியாகக் கையாளும் திறமை வாய்க்கப் பெற்றதால்தான் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் ‘மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ்’ என்று இன்றளவும் கொண்டாடப்படுகிறார்.

“துப்பாக்கியின் வெடிச் சத்தத்தில் திகில் இல்லை, அந்த வெடிச் சத்தத்திற்காகக் காத்திருக்கும் மணித்துளிகளில்தான் இருக்கிறது திகில்” என்று கூறிய ஹிட்ச்காக்கின் படங்களின் ஒவ்வொரு மணித்துளியும் நம்மை இருக்கையின் நுனிக்கு அழைத்துச்செல்லத் தவறுவதேயில்லை.

இரட்டை இயக்குநர்களாக இணைந்து பணிபுரியும் புகழ்பெற்ற சகோதரர்களின் படைப்பில் உருவான ஒரு நியோ-வெஸ்டர்ன் க்ரைம் த்ரில்லர் படத்தைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in