பட்டத்து ராணியின் பார்வையில் சிவந்த மண்: சிவாஜி - ஸ்ரீதர் இணைந்து வழங்கிய புரட்சிக் காவியம்!

பட்டத்து ராணியின் பார்வையில் சிவந்த மண்: சிவாஜி - ஸ்ரீதர் இணைந்து வழங்கிய புரட்சிக் காவியம்!

அந்தக் காலத்தில் வெளியூரில் படமெடுத்தாலே, ‘மதுரைக்குப் பக்கம் எடுத்திருக்காங்க’. ‘செங்கல்பட்டுக்குப் பக்கத்துல எடுத்திருக்காங்க’ என்று வியந்து பேசுவார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். இன்றைக்கு ‘ஒரு பாட்டுக்கு அமெரிக்கா, ஒரு பாடலுக்கு லண்டன்’ என்றெல்லாம் படமெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காதலியைத் தேடி வெளிநாட்டுக்குச் செல்வதும், மதுரையில் இருந்து விமானம் ஏறி வெளிநாட்டு தாதாக்களுடன் மோதுவதும் சர்வ சாதாரணமாகிவிட்டன. ஆனால் தமிழ் சினிமாவில் முதன்முதலாக வெளிநாட்டில் படமாக்கப்பட்ட திரைப்படம் ‘சிவந்த மண்’ எனும் பெருமை, இயக்குநர் ஸ்ரீதருக்கும் சிவாஜி கணேசனுக்கும் கிடைத்தது!

வசந்தபுரி என்பது மிகப்பெரிய சமஸ்தானம். அந்த சமஸ்தானத்தின் ராஜா நல்லவர்தான். ஆனால் சமஸ்தானத்தின் திவான் ரொம்ப ரொம்ப கெட்டவர். ஒருகட்டத்தில் ராஜாவை டம்மியாக்கிவிட்டு, திவான் தன் ராஜாங்கத்தை பலப்படுத்திக் கொண்டிருப்பார். போர்த்துகீசியர்கள் வசந்தபுரியில் ராணுவத் தளம் அமைக்க விரும்புவார்கள். ஊழல் செய்யும் திவான் ஒப்புக்கொள்வார். ஆனால் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க... அங்கே புரட்சி வெடிக்கிறது!

சமஸ்தானத்தின் இளவரசி சித்ரலேகா, வெளிநாட்டில் படிக்கிறார். அந்த சமஸ்தானத்தின் இன்ஸ்பெக்டர் ஜெனரலின் மகனான பாரத் (சிவாஜி) அங்கே படிக்கிறார். இவர்தான் இளவரசி என்று பாரத்துக்குத் தெரியாது. இருவரும் காதலிக்கிறார்கள். இதையடுத்து, வெளிநாட்டில் இருந்து இருவரும் வருகிறார்கள். வெளிநாட்டில் இருக்கும்போதே தன் நண்பனும் புரட்சியாளருமான ஆனந்த் (முத்துராமன்) மூலம், நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை அறிந்துவைத்திருக்கும் பாரத், தேசத்துக்குத் திரும்பியதும் புரட்சிப் படையில் இணைகிறார். படையை வலுவாக்குகிறார்.

விமானம் விபத்துக்குள்ளாகும். இதில் இளவரசியும் பாரத்தும் இறந்துவிடுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், இருவரும் தப்பித்து, தீவில் உள்ளவர்களால் காப்பாற்றப்படுவார்கள். அதற்குப் பின்னர்தான் புரட்சிப் படை, போராட்டம் என்பதெல்லாம்! இந்தப் போராட்டத்தில் இளவரசி சித்ரலேகாவும் நாட்டுக்காகப் போராடுகிறாள். போராட்டத்தில் திவான் துப்பாக்கிச்சூடு நடத்த, நண்பன் ஆனந்த் உயிர் துறக்கிறார். பாரத்தின் போராட்டம் இன்னும் வலுக்கிறது.

மிகப்பெரிய போராட்டங்கள், சூழ்ச்சிகள், தந்திரங்கள், சாமர்த்தியங்களுக்குப் பின்னர், கடும் சண்டைக்குப் பிறகு திவானிடம் இருந்து வசந்தபுரி சமஸ்தானம் மீட்கப்படுகிறது. பாரத்தும் சித்ரலேகாவும் திருமணம் செய்துகொள்கின்றனர் என்று சுபமாக முடிகிறது ‘சிவந்த மண்’ திரைப்படம்.

பாரத் எனும் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். சித்ரலேகாவாக (சிவாஜியிடம் வசந்தி என்று சொல்லியிருப்பார்) காஞ்சனா நடித்தார். புரட்சிக்காரர் ஆனந்தாக முத்துராமன் கெளரவத் தோற்றத்தில் நடித்தார். சமஸ்தானத்தின் மன்னராக ஜாவர் சீதாராமன், திவானாக நம்பியார், இன்ஸ்பெக்டர் ஜெனரலாக எஸ்.வி.ரங்காராவ் நடித்திருந்தார்கள். சாந்தகுமாரி, இயக்குநர்கள் தாதா மிராஸி, கே.விஜயன், செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி, தேங்காய் சீனிவாசன், மாலி ஆகிய நடிகர்களும் இடம்பெற்றிருந்தார்கள். நாகேஷ், சச்சு முக்கிய வேடங்களில் படம் முழுக்க வந்தார்கள்.

பல காட்சிகளில் சிவாஜி மேக் அப் இல்லாமலேயே நடித்தார். விமானக் காட்சிகள், ஹெலிகாப்டர் காட்சிகள், விமானம் விபத்துக்குள்ளாகும் காட்சிகள் என பல காட்சிகள் மிரட்டலாக இருந்தன. புரட்சி, போராட்டம் என நீளும் படத்தில் தெறிக்கவிடுகிற வசனங்கள் கூடுதல் பலம் சேர்த்தன. சிவாஜியிடம் தேச விடுதலை குறித்த ஆழ்ந்த சிந்தனையும் போராட்ட குணமும் வெறியும் இருப்பதை, சிவாஜியின் பார்வையும் நடையும் முகமும் சொல்லிக்கொண்டே இருந்தன.

எம்ஜிஆரை வைத்து ஸ்ரீதர் ஒரு படம் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தின் பெயர் ‘அன்று சிந்திய ரத்தம்’. ஆனால் சில காரணங்களால், அந்தப் படம் கைவிடப்பட்டது. எம்ஜிஆர் நடிக்கவில்லை. பிறகு அந்தக் கதையில் பல மாற்றங்களைச் செய்து சிவாஜி கணேசனை நாயகனாக்கினார் ஸ்ரீதர். ‘பாரத்’ எனும் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டி, திரையில் உலவவிட்டார் சிவாஜி.

காதல், முக்கோணக் காதல், முன்ஜென்மக் காதல், காமெடி கலந்த காதல் என்றெல்லாம் வரிசையாகப் படங்கள் பண்ணிக்கொண்டிருந்த ஸ்ரீதருக்கு, ‘சிவந்த மண்’ மாறுபட்ட படம். இந்த அளவுக்கு ஆக்‌ஷன், போராட்டம், புரட்சி, விமானத் தாக்குதல், ஹெலிகாப்டர் தாக்குதல், சண்டைக்காட்சிகள் என்றெல்லாம் இதுவரை செய்யாத ஸ்ரீதர், இதில் முற்றிலும் வித்தியாசம் காட்டி இயக்கினார். ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஆல்ப்ஸ் மலை, ஈபிள் டவர் எனப் பல காட்சிகள் பிரமிப்பூட்டின!

ஒளிப்பதிவாளர் என்.பாலகிருஷ்ணன் அழகாகவும் மிரட்டலாகவும் ஒளிப்பதிவு செய்திருந்தார். எம்.என்.சங்கரின் எடிட்டிங்கும் படத்துக்கு முக்கியத்துவத்தைச் சேர்த்து, விறுவிறுப்பைக் கூட்டியது.

படத்தில், ஒரு காட்சியில், “இவ்வளவு பெரிய விமான விபத்து. ஆனால் உங்களுக்கு ஒரு காயம்கூட ஏற்படவில்லையே...’’ என்று நம்பியார் கேட்பார். சிவாஜி உடனே தன் கையைக் காட்டுவார். அதில் காயத்தின் தழும்புகள் இருக்கும். அப்போது மிகச்சாதாரணமாக இந்தக் காட்சியைக் கடந்து போவோம். ஆனால், திவான் நம்பியாரைக் கொல்லும் திட்டத்துடன், எகிப்து பிரமிடுகள் செட்டப்பில், மேடையில் ‘பட்டத்து ராணி’ பாடல் காட்சி அரங்கேறும். அப்போது சிவாஜி அரேபியர் வேடத்தில் இருப்பார். நம்பியாரிடம் கைகுலுக்குவார். அந்தக் காயத்தைப் பார்த்துவிட்டு, ‘இது பாரத்’ என்று சுதாரித்துக்கொள்வார் நம்பியார்.

படத்தின் எல்லாப் பாடல்களையும் மிகப்பெரிய வெற்றியாக்கிக் கொடுத்தார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். கண்ணதாசன் எல்லாப் பாடல்களையும் எழுதினார். எல்லாப் பாடல்களும் இன்றைக்கும் கேட்டு ரசிக்கலாம் எனும் ரகத்தில் நம்முடன் இரண்டறக் கலந்திருக்கின்றன.

’முத்தமிட நேரமெப்போ’ என்ற பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார். ’பார்வை யுவராணி கண்ணோவியம்’ என்ற பாடலை டி.எம்.எஸ், பி.சுசீலா இருவரும் பாடினார்கள். ’சொல்லவோ’ என்ற பாடலை பி.சுசீலா பாடினார்.

’ஆனந்தமாக’ என்றொரு பாடல். ’அம்மா உன் மகனோடு’ எனும் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல். டி.எம்.எஸ், சுசீலா பாடிய ‘ஒரு ராஜா ராணியிடம்’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஒவ்வொரு டியூனாக மாறிக்கொண்டே வரும். வெவ்வெறு இடங்களில், வெளிநாட்டில் படமாக்கப்பட்டிருக்கும். காட்சியும் சிவாஜி, காஞ்சனாவின் காதல் உணர்வு ததும்பும் முகபாவனைகளும் படம் பார்த்த அனைவரையுமே ஈர்த்தன.

படத்தின் மிகப்பெரிய ஹைலைட் பாடல், ‘பட்டத்து ராணி பார்க்கும் பார்வை’ என்கிற பாடல் இன்றைக்கு வரை முக்கியமான பட்டியலில், தனித்துவத்துடன் இருக்கிறது. எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார். முன்னதாக ஆஷா போஸ்லேவை இந்தப் பாடலுக்கு அழைத்தார்கள். பாடலின் உச்சஸ்தாயியையும் அதில் சாட்டையடிக்கு அடிவாங்குவது போல் கதறலும் அழுகையுமாக நடுநடுவே செய்துகொண்டே பாடுவதையும் விளக்கிச் சொல்ல, ‘மன்னிக்கணும், என்னால அந்த அளவுக்குப் பாட முடியாது’ என்று சொல்லிவிட்டாராம். பிறகு எல்.ஆர்.ஈஸ்வரிதான் பாடினார். அப்போது விமர்சனங்களில் எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடியதைப் பாராட்டி பலரும் எழுதினார்கள். அதேபோல, ஈஸ்வரி பாடியதைக் கேட்ட ஆஷா போஸ்லே, ‘’எல்.ஆர்.ஈஸ்வரி அளவுக்கு நான் மட்டுமில்லை, வேறு யாருமே பாடமுடியாது’’ எனப் பாராட்டினார்.

‘பட்டத்து ராணி’ பாடல் ‘மேக்கிங்’ தமிழ் சினிமாவில் ரொம்பவே ஸ்பெஷல். மேடையில், தரையில், இரண்டு சக்கரங்கள் இருக்கும். ஒருசக்கரம் சுழலாமல் அப்படியே இருக்கும். இன்னொரு சக்கரம் சுழன்றபடியே இருக்கும். சுழலாமல் இருக்கும் சக்கரத்தில் ஒரு கையில் சாட்டை, இன்னொரு கையில் துப்பாக்கி என்று அரேபிய டிரஸ்ஸில் ஒரு நடை நடப்பார் சிவாஜி. சுழலும் சக்கரத்தில், அதே அரேபியன் உடை. சாட்டை, துப்பாக்கி சகிதமாக, சுழலும் சக்கரத்துக்குத் தக்கபடி நடப்பார் சிவாஜி. ஆவேசமும் தேசத்தின் மீதான பிரியமும் திவானைக் கொல்லும் வெறியும் அந்த நடையில் தெரியும். பாடலின் படமாக்கம் கண்டும், சிவாஜியின் நடை மற்றும் பார்வையைக் கண்டும், காஞ்சனாவின் துள்ளலான நடனத்தைக் கண்டும், கரவொலி எழுப்பாத ரசிகர்களே இல்லை.

இன்னொரு விஷயம்... எம்.எஸ்.வி. இந்தப் படத்துக்குப் பயன்படுத்திய எகிப்து ஸ்டைல் இசையை, மணிரத்னத்தின் ‘பம்பாய்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ‘ஹம்மா ஹம்மா’ என்ற பாடலின் இடையே ‘ஒரு பிட்’ சேர்த்திருப்பார். இரண்டு பாடல்களையும் அடுத்தடுத்துக் கேட்டுப் பாருங்கள். வியந்துபோவீர்கள்.

1969 நவம்பர் 9-ம் தேதி வெளியானது ‘சிவந்த மண்’. சிவாஜியின் நடிப்பு, நாகேஷின் காமெடி, காஞ்சனா, சச்சுவின் கிளாமர், படத்தின் வண்ணம், வெளிநாட்டுக் காட்சிகள் என பலதும் பேசப்பட்டன. படத்தின் பட்ஜெட் ரொம்பவே அதிகம். ஆனால் பட்ஜெட்டுக்குத் தக்க வசூலைத் தராவிட்டாலும் படம் வெற்றிதான். சிவாஜிக்காகவும் ஸ்ரீதருக்காகவும் வெளிநாட்டுக் காட்சிகளுக்காகவும் மக்கள் ரசித்து ரசித்துப் பார்த்தார்கள். 100 நாட்களைக் கடந்து ஓடியது. இந்தப் படம் இந்தியில் ‘தர்த்தி’ எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் முத்துராமன் நடித்த புரட்சிக்காரர் வேடத்தில் இந்தியில் சிவாஜி நடித்திருந்தார். சிறிய வேடம் என்றாலும் அதிலும் கம்பீர முத்திரையைப் பதித்தார்!

’சிவந்த மண்’ வெளியாகி, 53 ஆண்டுகளாகின்றன. இன்றைக்கும், மேடைகளில், ‘பட்டத்து ராணியை எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் பாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஈஸ்வரியம்மாவின் கச்சேரிகளில் கூட, இந்தப் பாடலைப் பாடச் சொல்லி கோரிக்கை விடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ‘ஒரு ராஜா ராணியிடம்’ பாடலின் இசைக்கோர்வையும் மெட்டும் தாளலயமும் ஒவ்வொன்றாக மாறிவரும் ஜாலத்தையும் ரசித்து மெல்லிசை மன்னரைக் கொண்டாடிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in