53 ஆண்டுகளாகியும் தளும்பாத ‘நிறைகுடம்!’

53 ஆண்டுகளாகியும் தளும்பாத ‘நிறைகுடம்!’

நடிகர்திலகம் சிவாஜிகணேசனுக்கு ஜோடி என்று சொல்லும்போது சட்டென்று பத்மினி, சரோஜாதேவி, தேவிகா, கே.ஆர்.விஜயா என்றெல்லாம் சொல்லுவோம். இந்த நடிகையரையெல்லாம் கடந்து, சிவாஜிக்கு ஏற்ற ஜோடி என்று பல இயக்குநர்களைச் சொல்லலாம். 1952-ம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில், கருணாநிதியின் வசனத்தில் ‘பராசக்தி’யில் சிவாஜி அறிமுகமான காலகட்டம் தொடங்கி ஒவ்வொரு தருணத்திலும் இயக்குநர்கள் சிவாஜிக்கு ஜோடிபோட்டிருக்கிறார்கள். சிவாஜி எனும் அசுரப்பசி கொண்ட நடிப்பு ராட்சஷனுக்கு பெருந்தீனி போட்டிருக்கிறார்கள். அவரை, ரசித்து ரசித்துப் படமாக்கியிருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் உள்ளவர்... முக்தா வி.சீனிவாசன்.

அண்ணன் முக்தா வி.ராமசாமி தயாரிப்பில், தம்பி முக்தா வி.சீனிவாசன் இயக்கத்தில் வந்த படங்களெல்லாம் கதையம்சமும் கருத்தாழமும் கொண்ட படங்கள்தான். கொஞ்சம் காமெடியும் குழைத்துக் கொடுப்பதில் கில்லாடி இவர்.

சிவாஜி - முக்தா சீனிவாசன் ஜோடி கொடுத்த படங்களும் ஏராளம். வெற்றிகளும் தாராளம். அதில் ரகளையாகவும் மெல்லிய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விதமாகவும் சொன்னதுதான் ‘நிறைகுடம்’. இதில், சிவாஜி, வாணிஸ்ரீ, முத்துராமன், வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், சோ, மனோரமா முதலானோர் நடித்திருந்தனர்.

இயக்குநர் மகேந்திரன் இந்தப் படத்துக்கான கதையை எழுதியிருந்தார். மூலக்கதை மகேந்திரன் என்று டைட்டிலில் இடம்பெற்றிருப்பார். வசனத்தை நடிகர் சோ எழுதினார்.

நிறைகுடம்
நிறைகுடம்

முத்துராமனும் வாணிஸ்ரீயும் அண்ணன் - தங்கை. முத்துராமனும் சிவாஜியும் நல்ல நண்பர்கள். சிவாஜியும் வாணிஸ்ரீயும் எப்போதும் ஜாலியும் கேலியுமாக இருப்பார்கள். எதையும் ஒரு சவாலாக, பந்தயமாகச் செய்வது சிவாஜியின் குணம். எதற்கு எடுத்தாலும் பந்தயம் செய்து அதில் வெற்றிபெறவேண்டும் என நினைப்பார் சிவாஜி. “நான் உன்னை ஏமாற்றிக் காட்டுகிறேன் பார்” என்று வாணிஸ்ரீயிடம் சவால்விடுவார். இதையொட்டி நண்பர்களான சிவாஜியும் முத்துராமனும் வாணிஸ்ரீக்கு முன் நின்றுகொண்டு, வேண்டுமென்றே சண்டைபோட்டுக் கொள்வார்கள். அது பொய்ச் சண்டை. ஆனால், நிஜ சண்டை போல் செட்டப் செய்திருப்பார்கள்.

அடுத்ததாக, வாணிஸ்ரீ வருவதைத் தெரிந்துகொண்டு, சிவாஜி முத்துராமனிடம் ஆக்ரோஷமாகப் பேசுவார். அடிப்பார். “உன்னைக் கொல்லாம விடமாட்டேன்” என்று மூர்க்கமாகக் கத்துவார். இதையெல்லாம் கேட்டுவிட்டு, சிவாஜி மேல் கோபம் வரும் வாணிஸ்ரீக்கு. படிப்பு முடிந்து ஊருக்குக் கிளம்பும்போது, சிவாஜி, முத்துராமனைக் கொண்டு ஒரு கடிதம் எழுதுவார்.

வாணிஸ்ரீ
வாணிஸ்ரீ

அதில் கொன்றுவிடுவேன், சாகடித்துவிடுவேன் என்பது போலெல்லாம் சிவாஜி சொல்கிறார் என்றும் எனக்கு பயமாக இருக்கிறது என்றும் எழுதும்படி சொல்லுவார். ஆனால், அந்தக் கடிதத்தில், முத்துராமன் அப்படி எழுதியிருக்கமாட்டார். “உன்னை ஏமாற்றுவதற்காக சிவாஜி போடுகிற நாடகம் இது. ஏமாந்து விடாதே. அப்படியெல்லாம் எங்களுக்குள் எந்தச் சண்டையுமில்லை. நாங்கள் நடிக்கிறோம்” என்று எழுதியிருப்பார்.

இதை ஊருக்குக் கிளம்பும்போது வாணிஸ்ரீயிடம் கொடுத்து, “ரயிலில் ஏறியதும் தான் இதைப் படிக்கவேண்டும்” என்று முத்துராமன் சொல்ல, காரில் சிவாஜி மாறுவேடத்தில் டிரைவராக இருக்க, முத்துராமனும் வாணிஸ்ரீயும் காரில் செல்வார்கள். அப்போது கார் விபத்துக்குள்ளாகிவிடும். இதில் சிவாஜி, வேடமிட்டு வந்தது தெரியவர, முத்துராமன் விபத்தில் இறக்க, வாணிஸ்ரீக்கு பார்வை பறிபோக... அந்தக் கடிதம் படிக்கப்படாமலேயே இருக்கும். உண்மை தெரியாமலேயே, சிவாஜியை வெறுத்துக்கொண்டே இருப்பார் வாணிஸ்ரீ.

இந்தநிலையில், சிவாஜி டாக்டராகிவிட, வேறொரு பெயருடன் வாணிஸ்ரீ குடும்பத்துக்கு பழக்கமாகி, அவரைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்லி, கல்யாணமும் செய்துகொள்வார். வாணிஸ்ரீக்கு மீண்டும் கண்பார்வை கிடைக்கும். அப்படி பார்வை கிடைக்க, சிவாஜி ஆபரேஷன் செய்தால்தான் சக்ஸஸாகும் என மற்ற மருத்துவர்கள் சொல்ல, சிவாஜிக்கு குழப்பம். தவிப்பு. கலக்கம். ‘பார்வை வந்ததும் தான் யார் எனும் உண்மை தெரிந்துவிடுமே’ என்று! போதாக்குறைக்கு, “பார்வை வந்ததும் முதல்வேலையாக, அண்ணன் எனக்குத் தந்த கடிதத்தைப் படிக்கவேண்டும்” என வாணிஸ்ரீ சொல்லியிருப்பார்.

அதை சிவாஜி சொன்னது போல் முத்துராமன் எழுதவில்லை என்பது சிவாஜிக்குத் தெரியாது. மாறாக நாடகத்தை அப்படியே எழுதியிருப்பதும் தெரியாது. இதனால் உண்மை தெரிந்து, நாம்தான் முத்துராமனை கொலை செய்துவிட்டோம் என்று நம்பிவிடுவாளே... என்று சிவாஜி ஆபரேஷன் செய்ய மறுப்பார்.

ஒருவழியாக ஆபரேஷன் நடக்கும். பார்வை கிடைக்கும். சிவாஜியைப் பார்த்ததும் கத்திக்கதறி ‘கொலைகாரா’ என்று பேசுகிற வாணிஸ்ரீ, அந்தக் கடிதத்தைப் படிப்பார். அவை அனைத்தும் நாடகம் என்பதையும் சிவாஜி உண்மையாகவே தன்னை நேசிக்கிறார் என்பதையும் புரிந்து உணர்ந்து சிவாஜியை ஏற்றுக்கொள்வார்.

நடுவே சோவும் மனோரமாவும் காட்சியை காமெடியாக்கிக் கொண்டிருப்பார்கள். சிவாஜிக்கு அப்பாவாக வரும் வி.கே.ராமசாமி, மகன் மீது கொண்ட பாசத்தில் நெகிழவைத்து விடுவார். வாணிஸ்ரீயின் அப்பாவாக வரும் மேஜர் சுந்தர்ராஜன், கனகச்சிதமாக நடித்திருப்பார். கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட இசையமைப்பாளர் வி.குமார் இந்தப் படத்துக்கு இசையமைத்திருப்பார். ஒளிப்பதிவு மேதை எம்.கர்ணன் ஒளிப்பதிவு செய்திருப்பார்

. ’உலகைக் காண நினைத்தேன் தேவா’ என்றொரு பாடல். ’விளக்கே நீ கொண்ட ஒளி நானே, விழியே நீ கண்ட நிழல் நானே’, ’கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது’ முதலான பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்தப் படத்தில், மிகையில்லாமல் தனது இயல்பான நடிப்பை வழங்கியிருப்பார் சிவாஜி. வாணிஸ்ரீ, பார்வையற்றவராக அற்புதமாக நடித்திருப்பார். அற்புதமாக இயக்கியிருப்பார் முக்தா சீனிவாசன்.

முக்தா சீனிவாசன்
முக்தா சீனிவாசன்

1969-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வெளியானது ‘நிறைகுடம்’. படம் வெளியாகி, 53 ஆண்டுகளாகிவிட்டன. ’நிறைகுடம் தளும்பாது’ என்பார்கள். இந்தப் படமும் நிறைவான படமாக வந்து, இன்றைக்கும் ரசிக்கும் வகையில் தளும்பாமல், அப்படியே இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in