மூன்று சிவாஜிகள்... ஒரேயொரு ‘தெய்வமகன்’

மூன்று சிவாஜிகள்... ஒரேயொரு ‘தெய்வமகன்’

’பராசக்தி’ வந்ததிலிருந்தே நடிப்புக்கு சக்தி என்றும் சக்கரவர்த்தியென்றும் சிவாஜியை இன்று வரைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். ஒரு படத்தில், ஒரு கேரக்டரை, சிறப்பாக நடித்துக் கொடுத்தாலே மிகப்பெரிய விஷயம். ஒரே படத்தில், மூன்று கேரக்டர்கள் என்றால் நம் ஆச்சரிய அதிர்வுக்கும் பாராட்டுகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் சொல்லவா வேண்டும்?! அந்த மூன்றுமே முத்துக்களாக நடிப்பில் ஜொலித்தன. தனக்குத் தானாகவே போட்டி போட்டுக்கொள்வது என்பார்களே... அப்படியொரு வித்தையைத்தான் ‘தெய்வ மகன்’ படத்தில் கையாண்டு ஜெயித்தார் நடிகர் திலகம்!

இரட்டை வேடம் என்பதை 'உத்தம புத்திரன்’ காலத்திலேயே சிவாஜி பண்ணிவிட்டார். மூன்று வேடம் ஏற்று, தன் முழு அர்ப்பணிப்பையும் திறமையையும் வெளிக்காட்டிய படமாக அமைந்தது தெய்வ மகன். சில் ஆண்டுகள் முன்னதாக, அதாவது கொஞ்சம் பூசின உடம்புடன் ‘பலே பாண்டியா’ படத்தில் மூன்று கதாபாத்திரங்களை ஏற்று அசத்தியிருப்பார் சிவாஜி. ‘தெய்வமகன்’ படத்தில் அவர் காட்டிய ஜாலம் வேறு மாதிரியானது!

கதை சொல்லும் பாணியே அமர்க்களமாக இருக்கும். அந்தக் காலத்திலேயே ஒளிப்பதிவுக் கோணங்களுக்கும் கறுப்பு வெள்ளையில் உணர்வுகளை இன்னும் பிரகாசிக்கச் செய்ய லைட்டிங் முதலான பங்களிப்புக்கும் பெயர் பெற்றது ‘தெய்வமகன்’.

சிவாஜியின் நடிப்பைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். மிகப்பெரிய கட்டிடம். சுழல் நாற்காலியின் முதுகு. ’யெஸ்... கம்மிங் என்று ஸ்டெனோவை அழைப்பார். ஸ்டெனோவின் முகம் மட்டுமே காட்டப்பட்டும். நாற்காலியில் அமர்ந்திருப்பவரின் குரல் மட்டுமே கேட்கும். ‘சார், மணி ஏழு சார்’ என்பாள் ஸ்டெனோ. ‘எல்லாரும் போயிட்டாங்களா? கார் ரெடியா இருக்கா?’ என்று கேட்டுவிட்டுக் கிளம்புவார். வீட்டுக்குச் சென்றால், பிரசவ வேதனை வந்ததால், அவரின் மனைவி ஆஸ்பத்திரிக்கு சென்ற தகவலை வேலையாள் சொல்ல, பீரோவைத் திறந்து கோட் பாக்கெட்டுகளிலும் பேண்ட் பாக்கெட்டுகளிலும் பணத்தையும் தங்கக்காசுகளையும் திணித்து வைத்துக்கொண்டு, ஆஸ்பத்திரிக்கு பறப்பார். அதுவரை சிவாஜியின் முகம் காட்டப்படாது.

ஆஸ்பத்திரியில், அழகழகாய் குழந்தைகளின் படங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் அழகு. அப்படிப் பார்க்கிற போது, டைட்டில் தொடங்கும். டைட்டிலின் சைடிலும் அழகழகான குழந்தைகளின் முகங்கள். டைட்டில் முடிந்ததும் காட்சி விரியும். ‘பையன் பொறந்திருக்கான்’ என்று டாக்டரும் நண்பருமான மேஜர் சுந்தர்ராஜன் சொல்ல, சிவாஜி உற்சாகத்துடன் குழந்தையைப் பார்க்கச் செல்வார். திரும்பும். சோகம் அப்பியிருக்கும் முகத்தை, அவரின் நடையே காட்டிக்கொடுத்துவிடும். அப்போதுதான் நாயகனின் முகம் காட்டப்படும். ‘என்னைப் போலவே விகாரமான முகம் கொண்ட எம்புள்ளையைக் கொன்னுடு’ என்பார் சிவாஜி. மேஜருடன் கடும் வாக்குவாதம் நடக்கும். இறுதியில், ’நீ சொன்னது மாதிரியே இந்தக் குழந்தை, இருக்காது. இதோட உனக்கும் எனக்குமான நட்பும் இனி அவ்வளவுதான்’ என்று கோபமாகப் பேசுவார் மேஜர். ’குழந்தை இறந்தே பொறந்தது’ என்று மனைவி பண்டரிபாயிடம் சொல்லிவிடுவார் சிவாஜி.

ஆனால் குழந்தையைக் கொல்லாமல், நாகையாவின் ஆசிரமத்தில் வளர்ப்பார் மேஜர். அடுத்து அழகான, விகாரமில்லாத ஆண் குழந்தை சிவாஜி - பண்டரிபாய் தம்பதிக்குப் பிறக்கும். இப்போது, வீடே குதூகலமாகிவிடும். ஆக, தந்தையும் இரண்டு மகன்களுமாக மூன்று சிவாஜிகள்.

பணக்காரத் தந்தை. அந்த மிடுக்கு, அலட்டல், கர்வம், அலட்சியம் என சகல கெட்டகுணங்களையும் உள்ளடக்கிய அதேசமயம் நல்லவனாகக் கலக்கியெடுத்திருப்பார் அப்பா சிவாஜி.

ஆசிரமத்தில் முரட்டுத்தனமும் அதேசமயம் சாத்வீக குணம் தரும் இசையையும் ஒருசேரக் கொண்டு வளர்ந்திருப்பார் மூத்த பையன் சிவாஜி. அப்பாவும் இவரும் ஒரேசாயல்; அதாவது முகத்தில் ஒரே மாதிரி விகாரம். அங்கே, இரண்டாவது மகன் அழகன். குறும்பன். செல்லம். சேட்டைக்காரன்.

அப்பா சிவாஜியின் பெயர் சங்கர். மூத்த மகனான சிவாஜியின் பெயர் கண்ணன். இளைய மகனான இன்னொரு சிவாஜியின் பெயர் விஜய். மூன்று சிவாஜிகளுக்கும் ஒவ்வொரு மேனரிஸங்கள், நடை உடை பாவனைகள். கடைசி சிவாஜி, ஜெயலலிதாவைக் கண்டதும் துறுதுறு, சுறுசுறு... சட்டென்று காதல் வந்துவிடும்.

குடும்பம், பிள்ளை மீது பிரியம், அளவற்ற செல்வம்,வியாபாரம் என அப்பா இருப்பார். இளைய மகனுக்கோ கூடாநட்பாய் எம்.என்.நம்பியார். அப்பாவிடம் பணம் வாங்கி ஹோட்டல் பிசினஸ் செய்வார். தொட்டதெல்லாம் நஷ்டம். போதாக்குறைக்கு சிவாஜி ஏமாளி என்பதைப் புரிந்துகொண்டு பணத்தைக் கறந்துகொண்டே இருப்பார் நம்பியார்.

அங்கே... ஆசிரமத்தில் நாகையா இறந்துவிட, இறந்த போகிற தருணத்தில், டாக்டர் மேஜர் சுந்தர்ராஜன் (படத்தில் அவரின் பெயர் ராஜூ. ‘ராஜூ ராஜூ’ என்று சிவாஜி உச்சரிப்பதே தனி ஸ்டைலாக இருக்கும்) குறித்து அவர் சொல்லிவைக்க, அவரைத் தேடி ஆசிரமத்தில் இருந்து சிவாஜி வெளியேறுவார். மேஜரைத் தேடிச் செல்வார். மேஜரும் அவருக்கு அடைக்கலம் கொடுப்பார். தன் வீட்டு மாடியிலேயே தங்கவைப்பார்.

மேஜரின் மகள் ஜெயலலிதா. இவருக்கும் குறும்புக்கார சிவாஜிக்கும் காதல். அதேசமயம், அன்புக்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் ஆசிரம சிவாஜிக்கு, ஜெயலலிதாவின் அண்மையும் பேச்சும் அன்பும் இதம், தரும். காதல் என நினைத்து உருகுவார். காதலாக இருக்கக் கூடாதா என்று மருகுவார்.

அதேசமயம் தொழிலில் நஷ்டம், நண்பன் நம்பியாரின் நம்பிக்கைத் துரோகம், சட்டவிரோத வணிகம் என்றெல்லாம் மாட்டிக்கொள்ள, ஒருகட்டத்தில் பையனைப் பிடித்து வைத்துக்கொண்டு, பணம் கொடு என்று அப்பாவிடம் மிரட்ட, பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பிக்கொண்டிருக்கும் வேளையில், மூத்த பையன் வந்துவிடுவார். ‘நான் போறேம்பா. தம்பியை மீட்டுக் கொண்டுவரேன்’ என்பார். அப்பா கேட்கமாட்டார். ‘நான் இல்லாதவன். இல்லாதவனாவே போயிடுறேன். நான் போறேன்’ என்று மூத்த மகன் சொல்லியும் கேட்கமாட்டார் அப்பா. கடைசியில், அப்பாவை அடித்து மயங்கச் செய்து, கட்டிப்போட்டுவிட்டு, தம்பியை மீட்கக் கிளம்புவார் மூத்த மகன். அங்கே தம்பியை மீட்கிறான்; அப்படி மீட்கும்போது தன்னையே இழக்கிறான்; தெய்வமகனாகிறான்.

இதைத் துள்ளத்துடிக்க, நம் மனம் கனக்க, உணர்ச்சிபூர்வமான காட்சிகளாலும் உணர்வுபூர்வமான வசனங்களாலும் இரண்டையும் பிரதிபலிக்கிற நடிப்பாலும் வெளிக்கொண்டு வந்த அழகு மகன்தான் ’தெய்வமகன்’

சிவாஜி, பண்டரிபாய், மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், நம்பியார், ஜெயலலலிதா, நாகையா. கிட்டத்தட்ட தெய்வமகனின் முக்கியக் கதாபாத்திரங்கள் அவ்வளவே. வேண்டுமென்றால் இன்னும் இரண்டு சிவாஜிகளையும் சேர்த்துக்கொண்டாலும் கூட, அத்துடன் கேரக்டர்கள் பட்டியல் ஓவர். ஆனால், படம் முழுக்க, சிவாஜியின் நடிப்பு சாம்ராஜ்ஜியம் நம்மை அசரவைக்கும்!

‘பெத்த புள்ளையக் கொன்னுட்டோமே’ எனும் குற்ற உணர்வு அவ்வப்போது எட்டிப்பார்ப்பதையும் பண்டரிபாயுடன் வயதான காலத்திலும் ரொமான்ஸ் செய்வதிலும் தனி முத்திரை பதித்திருப்பார் தந்தை சிவாஜி. ஜெயலலிதா காதல், நம்பியாருடன் ஹோட்டல் என்று ஜாலியும் கேலியுமாக ரவுசு பண்ணுகிற இளைய மகன் சிவாஜியும் புது ஸ்டைல். ஆடிக்கொண்டே, நகம் கடித்துக்கொண்டே பேசுகிற இங்கிலீஷ் கலந்த வசனங்கள் அமர்க்களம்.

அதேபோல், மூத்த மகன் சிவாஜி மேஜருடன், ஜெயலலிதாவுடன், அப்பாவுடன் எனப் பேசுகிற காட்சிகள் அனைத்து இடங்களிலுமே வசனங்கள் அப்ளாஸ் அள்ளும். அந்த ’ப்ளாங்க் செக்’ காட்சி அற்புதம். அப்போது நாற்காலியில் ஒரு சிவாஜி, அவருக்கு அருகில் இன்னொரு சிவாஜி, பின்னே பீரோவையொட்டி இடுக்கில் ஒரு சிவாஜி என்று மூன்று சிவாஜியும் ஒன்றாக ஃப்ரேமில் தெரிவார்கள். அதிலும் குறிப்பாக, அங்கே அந்த பீரோவில் கண்ணாடி இருக்கும். அந்தக் கண்ணாடியில் நிற்கிற, கிளம்புகிற மூன்றாவது சிவாஜி தெரிவார். அதேபோல், அதையடுத்து பீரோ சைடில் இருந்து தந்தைக்குப் பக்கத்தில் வந்து பேசிவிட்டு மூத்த பையனான சிவாஜி கிளம்பும்போதும், கண்ணாடியில் உருவம் தெரியும் காட்சி... ஒளிப்பதிவாளர் தம்புவின் ஜாலம், அப்படியான அற்புதம்; அபாரம்!

சிவாஜியின் ‘சாந்தி பிலிம்ஸ்’ பேனரில் தயாரிக்கப்பட்டது. மெல்லிசை மன்னரின் இசை படத்துக்குக் கூடுதல் அழகைச் சேர்த்தது. ஏ.சி.திருலோகசந்தர், சிவாஜியின் ஒவ்வொரு அசைவையும் கதையின் ஒவ்வொரு நகர்வையும் ரசித்து ரசித்துச் செதுக்கியிருப்பார். கோயிலில் அம்மாவை ஒளிந்திருந்து பார்க்கிற சிவாஜியும் அந்த உணர்வுகளும் சென்டிமென்ட்டுக்கு மட்டுமே பயன்படுத்தாமல், கதையை நகர்த்தவும் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர்.

தான் ஆசைப்படும் ஜெயலலிதாவை, தன் தம்பி காதலிக்கிறான் எனத் தெரிந்ததும் அப்படியே துடைத்தெறியும் அண்ணன் சிவாஜியின் பாத்திரம் நம்மை உருகவைத்துவிடும்.

படத்தில் அற்புதமான காட்சிகளில் இதுவும் ஒன்று... அந்தக் காட்சியில் சிவாஜியும் மேஜரும் பல வருடங்கள் கழித்து சந்திப்பார்கள். இன்றைக்குப் பார்த்தாலும் எத்தனை முறை பார்த்தாலும் மிரண்டு போய்விடுவோம். ஒளிப்பதிவுக் கோணங்கள் ஒருபக்கம் மிரட்டும்; சிவாஜியும் மேஜரும் நடிப்பால் மிரட்டுவார். மாடியில் நின்று ‘பைப்’ பற்றவைப்பார் மேஜர். வாசல் கதவைத் தட்டுவார் சிவாஜி. ‘கம் இன்’ என்பார் மேஜர். கதவு திறந்து உள்ளே வருவார். மேஜர் படியில் இருந்து இறங்குவார். அப்போது சிவாஜிக்கு க்ளோஸப் ஷாட். அவரின் பார்வை கொஞ்சம்கொஞ்சமாகக் கீழிறங்கும். மேஜர் படியில் நடந்து வருவதை சிவாஜியின் பார்வையே நமக்கு உணர்த்திவிடும்.

இருவரும் நண்பர்கள். ஆனால் பிரிந்துவிட்டார்களே! சிறிது நேரம் மெளனம். ‘என்னைத் தெரியுதா. நான் சங்கர்’ என்பார் சிவாஜி. ‘தெரியுது’ என்பது போல் தலையாட்டுவார் மேஜர். ‘பாத்து பல நாள் ஆச்சு’ என்று சிவாஜி சொல்ல, ‘பல வருஷம் ஆச்சு’ என்பார் மேஜர். ‘அன்னிக்கி பெத்த பையனைப் பாக்கறதுக்காக வந்தீங்க’ என்று மேஜர் சொல்ல, ‘இன்னிக்கி அந்தப் பையனைப் பத்தி தெரிஞ்சிக்கறதுக்காக வந்துருக்கேன்’ என்று சொல்ல... பேச்சும் ஆவேசமாகவும் பூடகமாகவும் செல்லும்.

ஒருகட்டத்தில், ‘ராஜூ... நீ ரொம்ப அழகா பொய் சொல்றே. நீ மட்டும் டாக்டருக்குப் படிக்காம, வக்கீலுக்குப் படிச்சிருந்தா, இன்னும் பெரியாளா வந்திருப்பே’ என்று சிவாஜி சொல்ல, அந்த நக்கலைக் கேட்டுவிட்டு மேஜர் வெடித்துச் சிரிக்க, பழைய நட்பு மலரும் விதத்தைக் கவிதை போல் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர். மேஜர் சுந்தர்ராஜன் மிகச்சிறந்த, பண்பட்ட நடிகர் என்பதை இந்தப் படத்தில் நிரூபித்திருப்பார்.

படம் முழுக்கவும் சரி... இந்தக் காட்சியிலும் சரி ஆரூர்தாஸின் வசனங்கள் படத்தையும் கதையையும் காட்சியையும் தூக்கிக்கொண்டு வந்து நம் மன அலமாரியில் வைத்துவிடும்.

‘இது பிளாங்க் செக். என் பையனுக்காக. அவனுடைய எதிர்காலத்துக்காக’ என்று அப்பா சிவாஜி மேஜரிடம் கொடுக்க, அதை மகன் சிவாஜியிடம் கொடுப்பார் மேஜர். ‘பாத்தீங்களா டாக்டர்... என் தலையெழுத்தையே அலங்கோலமாக்கிய எங்க அப்பாவோட கையெழுத்து எவ்ளோ அழகா இருக்கு பாருங்க டாக்டர்’ என்பார். இப்படி படம் நெடுகிலும் வசனங்களால், கதையைக் கனப்படுத்தி, கரவொலி வாங்கிக்கொண்டே இருப்பார் ஆரூர்தாஸ்.

’காதல் மலர்க்கூட்டம் ஒன்று’, ’காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்’, ’தெய்வமே தெய்வமே...’, ’கூட்டத்திலே யார்தான் கொடுத்துவைத்தவரோ...’ என்று கவியரசு கண்ணதாசனின் பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம்எஸ்வி அட்டகாச இசையைத் தந்து அசத்தியிருப்பார்.

’தெய்வமகன்’ கதையின் பூர்விகம் வங்காளம். டாக்டர் நிகர்குப்தாவின் ‘உல்கா’ எனும் நாடகம் தான் ‘தெய்வமகன்’ ஆனது. ஆனால் அந்தக் கதையின் கருவை உள்வாங்கி, அப்படியொரு தெளிவான, விறுவிறு திரைக்கதையை அமைத்திருப்பார் ஏ.சி.திருலோகசந்தர்.

1965-ல் ‘தாயின் கருணை’ என்றொரு படம் வந்தது, எவருக்கேனும் நினைவிருக்குமா? தெரியவில்லை. முத்தையா தந்தை. எம்.வி.ராஜம்மா அம்மா. கல்யாண்குமார் பையன். முத்துராமன் இன்னொரு பையன். லீலாவதி, நாகேஷ், எம்.ஆர்.ராதா என்று நடித்தார்கள். முத்தையாவுக்குப் பிறக்கும் மூத்த குழந்தை, முகத்தில் விகாரத்துடன் பிறக்கும். கொல்லச் சொல்லுவார். ஆனால், டாக்டர் கொல்லமாட்டார். அந்தக் குழந்தை கல்யாண்குமார். அவரின் தம்பி முத்துராமன். திக்கித்திணறி, படாதபாடுபட்டு, நம்மையும் படுத்தியெடுத்தி, கதை உருண்டு, சிதைந்து, சிதறுதேங்காயாகி, சின்னாபின்னமாகி கடைசியில் ஒரு ஆபரேஷன் மூலம் முகம் பொலிவாகிவிடும். ஒருவழியாய் சுபம் போட்டு படத்தை முடித்து, நம்மை பெருமூச்சுடன் வீட்டுக்கு அனுப்பியிருப்பார்கள். ஜி.வி.ஐயர் என்பவர் தயாரித்து, இயக்கியிருந்தார். புகழ்பெற்ற மா.ரா. வசனம் எழுதினார். கதையைப் படுசொதப்பு சொதப்புகிறோம் என்று அவர்களுக்கே தெரிந்துவிட்டதால்தானோ என்னவோ, கதை யார் என்பதையும் திரைக்கதை யார் என்பதையும் டைட்டிலில் போடவே இல்லை. பிறகு, நான்கு வருடங்கள் கழித்து, 1969-ல், அந்த வங்காளக் கதை தெளிவான திரைக்கதையுடன் ‘தெய்வமகன்’ திரைப்படமாக வெளியாகி எல்லோரையும் ஈர்த்தது.

படம் வெளிவந்து, நூறு நாட்களைக் கடந்து ஓடியது. வசூலை வாரி வழங்கியது. கூடவே விருதுகளையும் வென்றெடுத்தது. ஆஸ்கர் போட்டிக்குச் செல்வதற்கான தகுதிக்குரிய படங்களின் பட்டியலில் இடம்பெற்றது. அந்த வகையில் ஆஸ்கர் விருதுக்கு ஆசியாவில் இருந்து தேர்வான படம் என்றும் தமிழ்ப்படம் என்றும் கொண்டாடினார்கள் ரசிகர்கள். சொல்லப்போனால், அப்போதுதான் ‘ஆஸ்கர் விருது’ என்ற ஒன்று குறித்தே தமிழ் கூறும் நல்லுலகிற்கு தெரியவந்திருக்கும்!

இன்னொரு விஷயம்... 1975-ல் இதே கதையை இந்தியில் எடுத்தார்கள். முக விகாரத்துக்குப் பதில் பார்வையற்றவர் என்று மாற்றினார்கள். கடைசியில், படத்தை யாரும் பார்க்கமுடியாமல் செய்துவிட்டார்கள்.

1969 செப்டம்பர் 5-ம் தேதி வெளியானது ‘தெய்வமகன்’. படம் வெளியாகி, 53 ஆண்டுகளாகிவிட்டன. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, ‘ஒரேயொரு சிவாஜிதான். ஒரேயொரு ‘தெய்வமகன்’தான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in