உலகம் சுற்றும் சினிமா - 10: வாழ்க்கைக்காக ஓர் ஓட்டம்

ரன் லோலா ரன் (1998)
உலகம் சுற்றும் சினிமா - 10: வாழ்க்கைக்காக ஓர் ஓட்டம்

காலையில் எட்டு மணிக்கு அவசர அவசரமாக அலுவலகத்திற்குக் கிளம்புகிறீர்கள். தெருமுனையில் திரும்பும்போது, எதிரில் வரும் கார் உங்கள் மீது மோதுகிறது. அந்த ஒற்றை நொடி அடுத்த ஆறு வாரங்களுக்கு ஓய்வெடுக்க வைத்துவிடுகிறது. ஒருவேளை நீங்கள் ஐந்து நிமிடம் தாமதமாகக் கிளம்பியிருந்தால்?

‘ஒருவேளை இப்படி இருந்தால்… ஒருவேளை அப்படி இருந்தால்’ எனும் வார்த்தைகள், நிறைவேறாமல் போன ஆசை வடுக்களுக்கு நாமே பூசிக்கொள்ளும் களிம்புகள். வாழ்க்கைக்கும் நேரத்துக்கும் இடையிலான இந்த ஊடாட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான் ‘ரன் லோலா ரன்’. 1998-ல் ஜெர்மன் மொழியில் ‘லோலா ரென்ட்’ என்ற பெயரில் வெளிவந்த இப்படத்தை இயக்கியவர் டாம் டிக்வர். ‘டெட்லி மரியா’(1993), ‘வின்டர் ஸ்லீப்பர்ஸ்’ (1997) போன்ற படங்களை இயக்கியிருந்த டாம் டிக்வர், இந்தப் படத்தின் மூலம் சர்வதேசப் புகழை அடைந்தார். பின்னாட்களில் இவர் இயக்கிய ‘பெர்ஃபியூம்: தி ஸ்டோரி ஆஃப் எ மர்டரர்’(2006), ‘தி இன்டர்நேஷனல்’ (2009) போன்ற படங்களும் புகழ்பெற்றவை.

‘ரன் லோலா ரன்’ சர்வதேசத் திரையுலகில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தியது என்று சொல்லலாம். வழக்கமான திரைக்கதை அமைப்பு, கதை சொல்லல் பாணி என்று அனைத்தையும் உடைத்தெறிந்து புதிய பாதையில் பயணித்த படம் இது.

படத்தின் கதாநாயகி லோலா, தனது காதலன் மானியின் தொலைபேசி அழைப்பை எடுக்கும் காட்சியில் படம் ஆரம்பிக்கும். வைரக் கடத்தலில் கிடைத்த பணத்தை முதலாளியிடம் கொடுப்பதற்கு முன்பு தொலைத்துவிட்டதாகவும், இன்னும் 20 நிமிடங்களில் ஒரு லட்சம் மார்க்குகள் (ஐரோப்பா முழுமைக்கும் யூரோ வருவதற்கு முன், இதுதான் ஜெர்மனியின் கரன்ஸி!) கொடுக்கவில்லை என்றால் முதலாளி தன்னைக் கொன்றுவிடுவார் என்றும் உதவி கோரி மன்றாடுவான் மானி.

தொலைபேசியை வைத்துவிட்டு ஓடத் தொடங்குவாள் லோலா. தன் அப்பாவிடம் போய் பணம் கேட்பாள். அவர் மறுத்துவிட, காதலனைத் தேடி ஓடுவாள். சொன்ன நேரத்தில் லோலா வராததால், எதிரில் இருக்கும் கடைக்குள் கொள்ளையடிக்க மானி நுழைவான். தாமதமாக வரும் லோலா அவனுடன் கொள்ளையில் இணைந்துகொள்வாள். கொள்ளையடித்துவிட்டு வெளியே வந்ததும் போலீஸார் அவளைச் சுட்டுவிடுவார்கள். படம் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வரும். ஒருவேளை லோலா ஒரு நிமிடம் முன்னதாகக் கிளம்பியிருந்தால் என்னவாகும் என்ற கோணத்தில் கதை சொல்லப்படும்.

இப்படியே ஒரு நிமிடம் முன்பு அல்லது ஒரு நிமிடம் தாமதமாக என்று பல்வேறு சாத்தியக்கூறுகளை இப்படம் காட்டும். ஒவ்வொரு முறை லோலா காதலனைக் காப்பாற்ற முடியாமல் தோல்வியுறும்போதும் படம் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே செல்லும். கடைசியில் எப்படி லோலா தன் காதலனைக் காப்பாற்றுகிறாள் என்பதே இறுதி ஓட்டம். ஒரு நிமிட வித்தியாசத்தில் இந்தப் பிரபஞ்சத்தின் போக்கு எப்படியெல்லாம் மாற்றியமைக்கப்படும் எனும் விசித்திரத்தைப் படு வேகமான காட்சி அமைப்பின் மூலம் சொன்ன படம் இது.

தன் ஓட்டத்தினூடே லோலா கடந்துசெல்லும் மனிதர்களின் வாழ்க்கையையும் படம் சொல்லிக்கொண்டே வரும். குழந்தையுடன் வரும் பெண்மணி, சைக்கிளில் வரும் இளைஞன், வங்கியில் பணிபுரியும் பணிப்பெண் இவர்களின் வாழ்க்கை ஒரு நிமிட வித்தியாசத்தில் எவ்வகையில் மாறுகிறது என்பதை, விறுவிறுப்பாக நகரும் புகைப்படத் தொகுப்பின் மூலம் வெளிப்படுத்தியிருப்பார் இயக்குநர் டாம் டிக்வர். கேயாஸ் தியரி, பட்டர்ஃபிளை எபெக்ட் இவற்றை அடிப்படையாகக் கொண்டு நாம் செய்யும் செயல்கள், எடுக்கும் முடிவுகள் நம் வாழ்வின் பாதையை எவ்வாறெல்லாம் மாற்றியமைக்கும் என்பதை 80 நிமிடப் படத்தில் மிக நேர்த்தியாகச் சொல்லியிருப்பார்.

லோலாவாக நடித்த பிராங்கா பொட்டன்டி படம் முழுக்க ஓட்டத்திற்கு இடையே சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தத் தவறவில்லை. காதலனுடன் கடையைக் கொள்ளையடிக்கத் தீர்மானமாக இறங்குவது, தந்தையிடம் பணத்தைக் கேட்டு அழுவது என்று நடிப்பின் இரு துருவத்தையும் தொட்டிருப்பார்

இயக்குநர் டாம் டிக்வர் சின்ன வயதிலிருந்தே சினிமா ஆசையோடு வளர்ந்தவர். 11 வயதில் தன்னுடைய முதல் குறும்படத்தை இயக்கினார். படம் பார்க்க வேண்டும் என்பதற்காகவே திரையரங்கில் வேலைக்குச் சேர்ந்தவர், சிறிதுகாலம் சினிமா ஆபரேட்டர் வேலை பார்த்துவந்தார். பல முயற்சிகளுக்குப் பிறகு சினிமா இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தார். இன்று ஜெர்மன் சினிமாவின் ஓர் அசைக்க முடியாத அடையாளமாக மாறியுள்ளார். அதற்கு வலுவான ஆரம்பப் புள்ளியாக இருந்ததுதான் ‘ரன் லோலா ரன்’.

இப்படத்தின் தாக்கத்தில் ‘தி பட்டர்ஃபிளை எஃபெக்ட்’ (2004), ‘மிஸ்டர்.நோபடி’ (2009), ‘சோர்ஸ் கோட்’ (2011), ‘எட்ஜ் ஆஃப் டுமாரோ' (2014) போன்ற பல படங்கள் வந்திருக்கின்றன. ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ தமிழ்ப் படமும் இப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டதுதான். ஆனால், கதை சொல்லலில் புதிய உத்தி, திரைக்கதையில் புது வேகம் போன்றவற்றால் முத்திரை பதித்த ‘ரன் லோலா ர’ன்னுக்கு நிகராக அவற்றால் ஓடிவர முடியவில்லை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in