உலகம் சுற்றும் சினிமா - 6: புரட்சியும் பாலியல் தேர்வும்

ஸ்ட்ராபெர்ரி அண்ட் சாக்லேட் (1994)
உலகம் சுற்றும் சினிமா - 6: புரட்சியும் பாலியல் தேர்வும்

ஹாலிவுட் சினிமா வணிக நோக்கத்தையே கொண்டிருக்கிறது என்ற விமர்சனம் காலம்காலமாக உண்டு. அதற்கு மாற்றாக அல்லது எதிராகப் பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. லத்தீன் அமெரிக்கத் திரைக்கலைஞர்கள் முன்னெடுத்த ‘மூன்றாவது சினிமா’ எனும் புதிய அலையும் அம்முயற்சிகளில் ஒன்று. 1960-களிலும், 1970-களிலும் அற்புதமான படைப்புகளைத் தந்த அந்த அலையில் முகிழ்த்த முத்துக்களில் ஒன்று ‘ஸ்ட்ராபெர்ரி அண்ட் சாக்லேட்' (1994) எனும் ஸ்பானிய மொழித் திரைப்படம்.

லத்தீன் அமெரிக்க சினிமாவின் முன்னோடியான தோமஸ் குடியரஸ் அலேயாவும், ஜுவான் கார்லோஸும் இணைந்து இயக்கிய இந்தப் படம் கியூபாவில் தன்பாலின உறவாளர்கள் மீது காட்டப்பட்ட ஒடுக்குமுறையைப் பதிவுசெய்தது. ஸ்பானிய எழுத்தாளரான செனல் பாஸ் எழுதிய ‘தி வுல்ஃப், தி ஃபாரஸ்ட் அண்ட் தி நியூ மேன்' என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்துக்குத் திரைக்கதை எழுதியதும் செனல் பாஸ்தான்.

தோமஸ் குடியரஸ் அலேயாவின் படங்கள் பெரும்பாலும் கியூபப் புரட்சிக்கு பிந்தைய கம்யூனிஸ்ட் ஆட்சியின் சமூகச் சீர்கேட்டை விமர்சிப்பவையாகவே இருந்தன. அவரின் ‘தி டெத் ஆஃப் பியூராக்ரட்’, ‘மெமரீஸ் ஆஃப் அண்டர் டெவலப்மென்ட்', ‘குவான்டனமேரா' போன்ற படங்கள், அனைத்து மக்களுக்குமான பூமியாகக் கியூபா மாற வேண்டும் என்ற அவரது பெருங்கனவின் வெளிப்பாடே ஆகும். இப்படி கியூப அரசின் போக்கை விமர்சிக்கும் அலேயா, அந்நாட்டின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பர் என்பது சுவாரசியமான விஷயம். கடும் விமர்சனங்களுடன் அலேயா எடுத்த படங்கள் அவருக்கும் காஸ்ட்ரோவுக்குமான நட்பைக் குலைக்கவே இல்லை. நேர்மையான கலைக்கும் அதை உருவாக்கிய கலைஞனுக்கும் காஸ்ட்ரோ அளித்த அங்கீகாரம் அது.

ஸ்ட்ராபெர்ரி பெண்மை, சாக்லேட் ஆண்மை 

ஹவானா தீவில் 1979-ல் நடக்கும் கதை இது. பல்கலைக்கழக மாணவனான டேவிட், கம்யூனிஸக் கோட்பாடுகள் மீதும், புரட்சியின் மீதும் அதீத நம்பிக்கையுள்ளவன். எழுத்திலும், இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்ட டேவிட் தன் காதலியால் கைவிடப்படுகிறான். ஒரு நாள் உணவகத்தில், தனக்கு எதிரே அமர்ந்து ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீமைச் சுவைத்துக்கொண்டிருக்கும் டியேகோவை அருவருப்பாகப் பார்ப்பான் டேவிட். டியேகோ ஓர் ஓவியன். தன்பாலின உறவாளன். டேவிட்டைப் பொறுத்தவரை ஸ்ட்ராபெர்ரி சுவை என்பது பெண்களுக்கு மட்டுமே விருப்பமானது.

டேவிட் மேல் ஆசை கொள்ளும் டியேகோ, அவனிடம் நட்பாகப்பழக ஆரம்பிப்பான். தனது ஜெர்மன் நண்பனுடன் சேர்ந்து டியேகோ சிலை கண்காட்சி ஒன்றை நடத்தப்போகிறான் என்று அறிந்ததும், அவன் வெளிநாட்டு கைக்கூலியாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் டேவிட்டுக்கு வரும். டியேகோவைக் கண்காணிப்பதற்காக, அவனுடன் நண்பனாகப் பழக ஆரம்பிப்பான் டேவிட். ஆனால், பாலியல் ரீதியாகத் தன்னை அணுகக் கூடாது, பொது இடங்களில் தன்னைப் பார்த்தாலும் தெரிந்த மாதிரி காட்டிக்கொள்ளக் கூடாது என்று பல நிபந்தனைகளை டேவிட் விதிப்பான். டியேகோ வாழும் குடியிருப்பில், அரசின் கண்காணிப்பு அதிகாரியான நான்ஸி இருப்பாள். நான்ஸி, சமூகத்தில் பொறுப்பான அதிகாரியாக வேஷம் போட்டுக்கொண்டு, ரகசியமாக வெளிநாட்டுப் பொருட்களை விற்பவள், கட்டுப்பாடற்ற பாலுணர்வைக் கொண்டவள். ஆனால், தனிமையில் வாடும் ஒரு பாவப்பட்ட ஜீவன். இவர்கள் மூவருக்கும் இடையில் நடக்கும் வாழ்க்கை நிகழ்வுகளே இந்தப் படம்.

என்ன கதை?

எளிமையான நடிகர்கள், யதார்த்தமான வாழ்க்கைப் பதிவு இவையெல்லாம் சேர்ந்து இந்தப் படத்துக்கு ஒரு வசீகரத்தை உண்டு பண்ணிவிட்டது. கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. தன்பாலின உறவாளன் என்று டியேகோவும், நடத்தைக் கெட்டவள் என்று நான்ஸியும் சமூகத்தால் ஒதுக்கப்படுகிறார்கள். வலி தாளாத தருணங்களில் அவர்கள் சரணடைவது கன்னி மரியாளிடமும் ஏசுவிடம்தான். டியேகோ தன் இயல்பு பற்றி தெளிவான சிந்தனையுடையவன். ஆஸ்கர் வைல்டு, கார்ஸியா லோர்க்கா, எர்னெஸ்ட் ஹெமிங்வே போன்ற இலக்கிய உலக ஜாம்பவான்களும், அலெக்சாண்டர், ஹெர்குலிஸ் போன்ற மாவீரர்களும்கூட தன்பாலின உறவாளர்கள்தான் என்று வாதிடுபவன்.

ஒருகட்டத்தில், டேவிட் மீதான தனது ஒருதலைக் காதலை நட்பாக மாற்றிக்கொள்வான் டியேகோ. டேவிட்டுக்குப் பெண் துணை தேவை என்பதை அறிந்துநான்ஸியிடம் அவனை அன்புடன் பார்த்துக்கொள்ளுமாறு கேட்கும் அளவிற்குப் பெரிய மனது காட்டுவான். கலையை உயிராக நேசிக்கும் டியேகோ, படத்தில் பேசும் ஒரு வசனம் மிக முக்கியமானது - “கலை என்பது எதையும் நம்முள் கடத்த வேண்டாம், பிரச்சாரம் செய்ய வேண்டாம். பிரச்சாரம் செய்ய வானொலியும் தொலைக்காட்சியும் இருக்கின்றன. கலை என்பது நம்மை உணரச் செய்ய வேண்டும்.

அதுதான் கலையின் கடமை.” உண்மையில், இயக்குநர் தோமஸ் குடியரஸ் அலேயாவின் கலை வாழ்க்கையை அப்பட்டமாகப் பிரதிபலிக்கும் வசனம் இது.

மூன்று கதாபாத்திரங்கள், மூன்று விதமான வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள். இவர்களுக்குள் உள்ள கவித்துவமான உறவு இவை
யனைத்தையும் இப்படம் நம்மை உணரச் செய்து லயிக்க வைத்துவிடுகிறது. தன்பால் ஈர்ப்பாளர்களைப் புனிதப்படுத்தாமல், அவர்
களின் வலியையும் வேதனையையும் அவர்களின் சமூகப் பார்வையையும் நியாயத்தின் மையக் கோட்டில் நின்று விவாதிப்பதே இப்படத்தின் சிறப்பு. அதுவே இப்படத்தை சமூகத்திற்கான படமாக உயர்த்தியுள்ளது.

மனிதத்தின் அடையாளம்

அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக நாட்டைவிட்டு வெளியேற நினைக்கும் டியேகோவைடேவிட் இறுக்கி அணைத்துக் கொள்வான். முன்னொருமுறை தன்னை அணைத்துக்கொள்ளுமாறு டியேகோ கேட்கும்போது கோபமாக அவனைத் திட்டிவிட்டுச் சென்றுவிடுவான் டேவிட். ஆனால், இம்முறை அவனே டியேகோவை அணைத்துக்கொள்ளும்போது, அந்த அணைப்பில் காமம் இல்லை, நட்பும் இல்லை... மனிதம் மட்டுமே வியாபித்திருக்கும்.

டேவிட்டும் டியேகோவும் ஒருவருக்கொருவர் அறிமுகமான உணவகத்தில்தான் அவர்களது இறுதிச் சந்திப்பு நிகழும். அங்கே டேவிட் என்ன சாப்பிடுவான் தெரியுமா?

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in