‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே’ பாட்டுக்கு 51 வயது!

‘வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா’ என்று கலக்கியெடுத்த ‘பாபு’!
‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே’ பாட்டுக்கு 51 வயது!

பாசத்தையும் துரோகத்தையும் சொன்ன படங்கள் நிறையவே உண்டு. காதலையும் பக்தியையும் சொன்ன படங்களும் இருக்கின்றன. நன்றியுணர்வைச் சொன்ன படங்கள் மிகமிகக் குறைவுதான். அவற்றில் ஒன்றுதான் ‘பாபு’ திரைப்படம். தன் உழைப்பாலும் அன்பாலும் பாதுகாப்பாலும் ஒரு குடும்பத்துக்கு நன்றியைச் செலுத்தி, இறுதியில் எல்லாவற்றையும் செய்துவிட்ட மனநிறைவுடன் மரணத்தைத் தழுவுகிறான் பாபு. நன்றிக்கு உதாரணமாக வாழ்ந்த ‘பாபு’வை எல்லோரும் கொண்டாடினோம்; இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

சிவாஜியை ரசித்து ரசித்துப் படம் எடுத்த இயக்குநர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். பீம்சிங், பந்துலு, ஏ.பி.நாகராஜன் தொடங்கி, ஸ்ரீதர், சி.வி.ராஜேந்திரன், ஏ.சி.திருலோகசந்தர், பி.மாதவன், கே.விஜயன் என்று மிகப்பெரிய பட்டியலே உண்டு. இதில் பந்துலுவைப் போல, ஏ.பி.நாகராஜனைப் போல, ஸ்ரீதரைப் போல, பி.மாதவனைப் போல, சொந்தமாகத் தயாரித்து சிவாஜியை இயக்கிய இயக்குநர்களின் பட்டியலில் ஏ.சி.திருலோகசந்தரும் இடம்பெறுகிறார்.

‘சினி பாரத்’ கம்பெனி மூலமாக சிவாஜியை வைத்து பல படங்களைத் தயாரித்த ஏ.சி.திருலோகசந்தர், ‘பாபு’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கினார்.

அனாதையான சிறுவன் பாபு, எவருக்கும் பயப்படாமல் வாழ்கிறான். அடுத்தவர் காசுக்கு ஆசைப்படாமல் லட்சியத்துடன் இருக்கிறான். பணக்காரப் பெண்மணியின் பணத்தை ஒருவன் திருடிவிட, அவனைப் பிடித்து, அவனிடமிருந்து பணத்தைக் கைப்பற்றி, ஓடிப்போய் அந்தப் பெண்மணியிடம் கொடுக்கிறான். பதிலுக்கு, பெண்மணி கொடுக்கும் பணத்தை வாங்க மறுக்கிறான். இப்படியான உணர்வுடனும் குணத்துடனும் வளரும் ‘பாபு’ கைரிக்‌ஷா ஓட்டிப் பிழைக்கிறான்.

மிகப்பெரிய பணக்காரர் பாலாஜி. அவரின் மனைவி செளகார் ஜானகி. மகள் பேபி ஸ்ரீதேவி. கார் ரிப்பேராகி நடுவழியில் நிற்க, பாபுவின் கைரிக்‌ஷாவில் ஏறிக்கொள்கிறார்கள். வீட்டில் இறக்கிவிடும் பாபுவின் குணம் கண்டு நெகிழ்கிறார்கள். பேபி ஸ்ரீதேவியும் ‘மாமா மாமா’ என்று பாசம் பொழிகிறாள். அவர்களின் நட்பு கிடைக்கிறது. அவர்களிடம் இருந்து பாசம் கிடைக்கிறது. கைரிக்‌ஷாக்காரன் என்றெல்லாம் நினைக்காமல், வீட்டுக்குள் அழைத்து உணவு பரிமாறுகிறார்கள். நெகிழ்ந்து போகிறான் பாபு.

ஒருகட்டத்தில் பாலாஜி இறக்கிறார். சொத்துகள் பறிபோகின்றன. செளகார் ஜானகியும் பேபி ஸ்ரீதேவியும் ஆதரவின்றி தெருவில் நிற்கிறார்கள். அவர்களைத் தன் குடிசைக்கு அழைத்துவந்து, காவல் தெய்வமாகத் திகழ்கிறான் பாபு. அவர்களுக்காகவே வாழ்கிறான். படிக்கவைக்கிறான். கல்லூரியில் சேர்க்கிறான். பேபி ஸ்ரீதேவி வளர்ந்து ரோஜாரமணியாகிறார். இன்னும் வளர்ந்து வெண்ணிற ஆடை நிர்மலாவாகிறார்.

அவருக்கும் பணக்கார மேஜர் சுந்தர்ராஜன் மகன் சிவகுமாருக்கும் திருமணம். முதலில் மறுக்கும் பாபு, பிறகு சம்மதிக்கிறார். பெரிய இடத்தில் திருமணம் செய்துவைத்த திருப்தியுடன் மரணத்தைத் தழுவுகிறார். செளகாரும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் சிவகுமாரும் மேஜரும் நெகிழ்ந்துபோய் அவரைப் பார்க்கிறார்கள். நாமும் நெகிழ்ந்து அன்பில் கரைந்து கனத்த மனதுடன் ‘பாபு’வைப் பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியே வந்தோம்.

கைரிக்‌ஷா பாபுவாக சிவாஜிகணேசன் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? மலையாளப் படமாக வந்து பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது ‘பாபு’வின் கதை. கேசவதேவ் என்பவரின் கதை. அதை மூலக்கதையாக வைத்துக்கொண்டு, தமிழில் கொஞ்சம் மாற்றங்கள் செய்து இயக்கினார் ஏ.சி.திருலோகசந்தர்.

சில காட்சிகளே வந்தாலும் கே.பாலாஜியின் யதார்த்த நடிப்பு நம்மை ஈர்த்துவிடும். செளகார் ஜானகியின் நடிப்பையும் ஆற்றலையும் சொல்லவும் வேண்டுமா? பிரமாதமான நடிப்பை வழங்கியிருப்பார்.

ஏ.எல்.நாராயணன் வசனம். பல இடங்களில் கைத்தட்டல் கிடைத்திருக்கும். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் பாடல்கள் இனிமையாக இருந்தன.

'வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா / கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா / நகையும் நட்டும் போட்டிருந்தா சொர்ண லட்சுமி / நமக்கு நஞ்சையும் புஞ்சையும் வாரித் தந்தா தான்ய லட்சுமி/ மானங்காக்க துணிஞ்சு நின்னா வீர லட்சுமி/ எதிலும் மனசு வச்சு ஜெயிச்சு வந்தா விஜய லட்சுமி / எத்தனை லட்சுமி பாருங்கடா... / இவ என்ன லட்சுமி கூறுங்கடா.../ நம்ம அத்தனை பேருக்கும் படியளக்கும் அன்ன லட்சுமி ஆகுமடா’ என்ற வரிகளும் டப்பாங்குத்து இசையும் அமர்க்களப்படுத்தும்.

’பாபு’ படத்தில் சிவாஜி
’பாபு’ படத்தில் சிவாஜி

’தண்டைச் சத்தம் கலகலன்னு முன்னால் வருகுது / வாழைத் தண்டு போல கால் நடந்து பின்னால் வருகுது / பாக்குறப்போ பசி மயக்கம் தன்னால் வருகுது / பேச்சைக் கேக்கிறப்போ வந்த மயக்கம் தானாக் குறையுது / சாதம் போல சிரிக்கிறா.../ மீன் கொழம்பு போல மணக்குறா.../ ரகசியமா ஏதும் சொன்னா ரசத்தைப் போல கொதிக்கிறா’ என்ற வரிகள் அற்புதம்.

‘குலாம் காதர் புலாவிலே கறி கெடக்குது /அனுமந்த ராவ் அவியலிலே கலந்திருக்குது/ மேரியம்மா கேரியரில் எரா இருக்குது/ அது பத்மநாப அய்யர் வீட்டுக் குழம்பில் கெடக்குது / சமையலெல்லாம் கலக்குது.../ அது சமத்துவத்த வளர்க்குது... ஜாதி சமய பேதமெல்லாம் சோத்தக் கண்டா பறக்குது’ என்று ஒவ்வொரு வரியும் சமத்துவம் பேசியிருக்கும். மதமில்லாத மகத்துவத்தைச் சொல்லியிருக்கும்.

’பாபு’ பட டைட்டில்
’பாபு’ பட டைட்டில்

இந்தப் பாடல் நம்மைக் குதூகலப்படுத்திவிடும் என்றால் இதோ... இந்தப் பாடல்.

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே.../ நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே.../ பாசமுள்ள பார்வையில் கடவுள் வாழ்கிறான்/ அவன் கருணை உள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்’ என்று ஆரம்பிக்கும்.

’அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான் / இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான் / குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான் / தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான் / பாசமுள்ள பார்வையில் கடவுள் வாழ்கிறான் / அவன் கருணை உள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்’ என்று டிஎம்எஸ் குரலில் கேட்கக் கேட்க நாம் தெய்வத்தைத் தேடத் தொடங்குவோம்.

‘பல நூல் படித்து நீ அறியும் கல்வி / பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம் / பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம் / இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்’ என்று ‘பிறர் உயர்வினில் இன்பம் காணச் சொல்லி, அதுவே தெய்வம்’ என்கிற வார்த்தைகள் சினிமாவுக்குள் கொண்டுவருவது புதுசுதான்!

தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வைக் கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை / அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன் / அந்தச் சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்’ என்று உழைப்பின் மேன்மையை வலிமையான வார்த்தைகளால் கவிஞர் உணர்த்தியிருப்பார்.

பாடல்களைக் கேட்டுவிட்டு, ‘கண்ணதாசன்னா சும்மாவா? கலக்கிட்டார்பா’ என்று சொல்லாத ரசிகர்களே இல்லை. ஆனால், இவை எல்லாமே கவிஞர் வாலியின் வரிகள். ‘பாபு’ படத்தின் எல்லாப் பாடல்களையும் வாலிதான் எழுதினார்.

ஒவ்வொரு காட்சியிலும் முகபாவனைகளிலும் வசனங்களிலும் நடிகர் திலகம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டே இருப்பார். அவரின் எளிமையான, அலட்டலில்லாத நடிப்பையும் கைரிக்‌ஷா இழுப்பவரின் மேனரிஸத்தையும் பார்த்து, பத்திரிகைகள் வியந்து பாராட்டின.

’பாபு’ திரைப்படம்
’பாபு’ திரைப்படம்

‘இதோ எந்தன் தெய்வம்’ பாடலை, விவிதபாரதியில் விரும்பிக் கேட்ட நேயர்கள் பட்டியல் பெரிது. அதேபோல, இந்தப் பாடலை காலர் டியூனாக வைத்திருப்பவர்களும் அதிகம்.

1971 அக்டோபர் 18-ம் தேதி தீபாவளி வெளியீடாக வந்தது ‘பாபு’. படம் வெளியாகி 51 ஆண்டுகளாகின்றன. பல தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடியது. சிவாஜியின் ஆகச்சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த படங்களில் ‘பாபு’வும் இருக்கிறான்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in