அடுத்த படத்திலும் நான் பேசப்படுவேன்!- - ‘சூப்பர் டீலக்ஸ்’ காயத்ரி

அடுத்த படத்திலும் நான் பேசப்படுவேன்!- - ‘சூப்பர் டீலக்ஸ்’ காயத்ரி

உ.சந்தானலெட்சுமி

எத்தனை படங்களைப் பார்த்தாலும் அதில் நடிக்கும் எல்லாக் கதாபாத்திரங்களும் பேசப்படுவதில்லை. தங்களது யதார்த்தமான நடிப்பால் ஒருசிலர் மட்டுமே ரசிகர்களைக் கொண்டாட வைக்கிறார்கள். அப்படித்தான், சூப்பர் டீலக்ஸ் நாயகி காயத்ரியும்! “ப்ப்ப்பா... யாருடா இந்த பொண்ணு பேய் மாதிரி இருக்கு”என்று நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் வரும் ஒரு டயலாக் வாயிலாக ரசிகர்கள் மனதில் பச்சக் என ஒட்டிக்கொண்டவர், இப்போது சூப்பர் டீலக்ஸ் ஜோதியாக பச்சை குத்திச் செல்கிறார்.

இன்னும் கொஞ்சம் அழகியலோடு சொல்வேமானால், தன் ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் தன் பார்வையாலேயே கடத்துவதிலும் அதிர்ச்சியின் வெளிப்பாட்டை உடல்மொழியால் உணர்த்துவதிலும் ஜோதியாக வாழ்ந்திருக்கும் நடிகை காயத்ரி, மறைந்த இயக்குநர் மகேந்திரன் கதை நாயகிகளை மீண்டும் நம் கண்முன்னே நிறுத்துகிறார்.

“அவனாவது சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டுமே” என்ற வசனத்தில் ஒரு மனைவியின் பரிதவிப்பையும், ஏழுவயது குழந்தையின் தாயின் அரவணைப்பையும் காட்சியில் வெகு இயல்பாகக் கடத்திச் செல்லும் காயத்ரியிடம், சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் குறித்த அனுபவங்களைக் கேட்டேன். “படம் பார்த்த எல்லாருமே நல்ல ரிவியூஸ் தர்றாங்க. எல்லா போர்ஷனுமே சூப்பரா இருக்கு. அதில் என்னோட கேரக்டரும் நல்லாவே வந்திருக்கு. ஜோதி கேரக்டர் இந்த அளவுக்கு நல்லா வந்ததுக்கும், அந்த ரோலுக்குள்ள என்ன முழுசா ஈடுபடுத்திக்கிட்டதுக்கும் டைரக்டர் தியாகராஜன் குமாரராஜா தான் காரணம். எந்தவொரு படத்துலயும் அதோட கதைக்கு நாம பொருத்தமா இருந்தாதான் அந்த கேரக்டரை சரியா பண்ண முடியும். அப்படி, கதை நாயகி ஜோதிக்கும் நிஜ காயத்ரிக்கும் பொருந்திப் போகும் ஒற்றுமை இருக்கான்னு கேட்டா நிச்சயம் இருக்கு. எதையுமே ஆர்ப்பாட்டம் பண்ணாம இயல்பா எடுத்துக்கிற கேரக்டர்தான் அந்த ரோல். கிட்டத்தட்ட நிஜத்தில் நானும் அப்படித்தான்” என்றவரிடம் “அப்போ, இயல்புல நீங்க ரொம்ப அமைதியான பொண்ணா?” என்றதற்கு, “ரொம்ப அமைதின்னு சொல்ல முடியாது. என்னோட வட்டத்துல இருக்கறவங்ககிட்ட நான் ரொம்ப ஜாலியா, வாலுதனம் பண்ணிட்டு இருப்பேன். மத்தபடி, புது இடத்துல சட்டுன்னு மிங்கிளாக மாட்டேன். அதே மாதிரி எதையுமே ரொம்ப செலக்ட்டிவா பண்ணணும்னு ஆசைப்படுவேன். இப்ப நாம யாருக்காவது கிஃப்ட் பண்ண ஆசைப்பட்டோம்னா பொருளை வாங்கிக் கொடுப்போம். ஆனா நான், வாங்கிக்கொடுக்கிறதை விட என் கையாலயே செஞ்சு கொடுக்க விரும்புவேன்” என்கிறார் காயத்ரி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in