நடிப்பின் முதல்வன் வழங்கிய ‘தவப்புதல்வன்’

சிவாஜி - முக்தா சீனிவாசனின் மற்றுமொரு வெற்றிப்படம்
’தவப்புதல்வன்’ படத்தில் சிவாஜி
’தவப்புதல்வன்’ படத்தில் சிவாஜி

பார்வையற்ற மனிதர்களின் கதைகளைப் பேசும் எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. நிறைய நடிகர்கள், நடிகைகள் அந்தப் பாத்திரங்களில் தங்களின் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மாலைக்கண் நோய் என்றொரு விஷயத்தை மையமாக வைத்து உருவான படத்தை நினைவிருக்கிறதா? ‘சின்னதம்பி’ படத்தில் அதை அடிப்படையாகக் கொண்ட காமெடி பாத்திரத்தில் கவுண்டமணி அதகளம் பண்ணியிருப்பார். ஆனால், மாலைக்கண் நோய் கதாபாத்திரத்தை உள்வாங்கிக்கொண்டு, தன் நடிப்பால் மெருகூட்டிய கலைஞன் சிவாஜி கணேசன். அந்தப் படம்... ‘தவப்புதல்வன்’. இது கதைக்குப் பொருத்தமான தலைப்பு என்றும் பார்க்கலாம். அதேவேளையில், சிவாஜியை ‘கலைத்தாயின் தவப்புதல்வன்’ என்று சொல்வதற்குப் பொருத்தமாக இருப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

முக்தா வி.ராமசாமி தயாரிக்க, முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளியானது ‘தவப்புதல்வன்’. எழுபதுகளில் வந்த படம் என்பதால்தானோ என்னவோ, சிவாஜிக்கு ஸ்டைலாக நிர்மல் என்று பெயர் சூட்டியிருப்பார் முக்தா சீனிவாசன். படத்தின் கதையை தூயவன் எழுதினார்.

சிவாஜியின் அம்மா பண்டரிபாய். சிவாஜியின் முறைப்பெண் கே.ஆர்.விஜயா. மருத்துவரும்கூட. இசையில் நாட்டம் கொண்ட சிவாஜி, தன் நண்பனுக்காக ஹோட்டலில் இசைக்குழு ஒன்றில் இணைந்து இசையமைப்பு வேலையில் ஈடுபட்டிருப்பார்.

அந்த ஹோட்டலின் நடன மங்கை சி.ஐ.டி சகுந்தலா, தன் அண்ணனுடன் சேர்ந்து பணம் பறிக்கும் பேர்வழி. இப்படியிருக்க, ஒரு மாலை வேளையில் சிவாஜிக்குப் பார்வை தெரியாமல் போகும்.

டாக்டரைப் பார்த்தால், அவர் மாலைக்கண் நோய் என்று சொல்லுவார். அதிர்ந்து போவார் சிவாஜி. அவருடைய அப்பாவுக்கும் இதே நோய் இருந்து, அதன் பிறகு இறந்திருப்பார். ஆக, இந்த பரம்பரை நோய் வந்துவிடக்கூடாது என்று பண்டரிபாய் வேண்டிக்கொண்டே இருக்க, சிவாஜிக்கு அந்த நோய் வந்துவிட, இதை பண்டரிபாய்க்கும் கே.ஆர்.விஜயாவுக்கும் சொல்லாமல் மறைப்பார் சிவாஜி.

இதற்காகவே, வேலை இருப்பதாகச் சொல்லி, இரவில் ஹோட்டலிலேயே தங்கிவிடுவார் சிவாஜி. விடிந்ததும் வீட்டுக்கு வருவார். அப்போது சி.ஐ.டி சகுந்தலாவின் அண்ணன், திருடுவதற்காக சிவாஜியின் ரூமிற்கு வர, சத்தம் கேட்டு மலங்கமலங்க விழிப்பார் சிவாஜி. அவருக்கு மாலையில் கண் தெரியாது எனும் விஷயத்தை வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாடகமாக அரங்கேற்றுவார்கள் அண்ணனும் தங்கையும். சிவாஜியை மணந்துகொள்பவருக்கே சொத்து கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்வார்கள்.

சிவாஜியுடன் நெருக்கமாக இருப்பது போல் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அதை பண்டரிபாயிடம் காட்டி, வீட்டுக்குள்ளேயே வந்துவிடுவார்கள். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்து மருகுவார் சிவாஜி.

இவர்களுக்குள் உறவு இருக்கிறதோ என்று கே.ஆர்.விஜயாவும் சந்தேகப்படத் தொடங்கி குமுறுவார். ஒருகட்டத்தில், சிவாஜிக்கு ‘மாலைக்கண்’ பிரச்சினை இருப்பதை அறிந்துகொண்டு, வெளிநாட்டில் இருந்து டாக்டரை வரவழைத்து, சிவாஜிக்கு ஆபரேஷன் நடக்கும்.

ஆபரேஷனுக்குப் பிறகு அம்மாவிடம் சொல்லி மன்னிப்பு கேட்பார் சிவாஜி. சி.ஐ.டி சகுந்தலாவை வீட்டிலிருந்து விரட்டுவார். கண் தெரியாத தருணத்தில், ஊன்றிக்கொள்ள ஒரு கழி கொடுத்து நக்கலடித்திருப்பார் அவர்.

தவப்புதல்வன்
தவப்புதல்வன்

இறுதியில் அந்தக் கழியைக் கொண்டே அவரை வெளுத்துவாங்குவார் சிவாஜி. கே.ஆர்.விஜயாவும் இவரும் இணைவார்கள் என்பதுடன் படம் நிறைவடையும்.

ஒரு சிம்பிளான விஷயத்தை எடுத்துக்கொண்டு, அதை எந்த விதத்திலும் போரடிக்கவிடாமல் செய்யும் ஜாலம்தான், முக்தா சீனிவாசனின் ஸ்பெஷல். ‘மாலக்கண் நோய்’ என்கிற விஷயத்தை எடுத்துக்கொண்டு, எல்லோருக்கும் புரியும்படியாகவும் எல்லோருக்கும் பிடிக்கும் விதமாகவும் எடுத்திருப்பார்.

இளமையும் துள்ளலுமான சிவாஜி, நடிப்பிலும் துள்ளி விளையாடியிருப்பார். ‘நிறைகுடம்’, பின்னால் வந்த ‘அந்தமான் காதலி’, ‘கீழ்வானம் சிவக்கும்’ உள்ளிட்ட முக்தா சீனிவாசன் படங்களிலெல்லாம் சிவாஜியின் ‘விக்’ ரொம்பவே புதுமாதிரியாகவும் ஸ்டைலாகவும் இருக்கும். ‘நிறைகுடம்’ போலவே இந்தப் படத்திலும் இளைஞனுக்கே உரிய வகையில் ‘விக்’ வைக்கப்பட்டிருக்கும். அப்போது இது பலராலும் மிகவும் ரசிக்கப்பட்டது.

பண்டரிபாய் பாந்தமாக நடித்திருப்பார். மனோரமாவும் சோவும் காமெடியில் கலகலக்க வைத்திருப்பார்கள். எம்.ஆர்.ஆர்.வாசு வில்லத்தனத்தில் புது தினுசு காட்டியிருப்பார். சிவாஜியுடன் சி.ஐ.டி சகுந்தலா பல படங்களில் நடித்திருக்கிறார். அநேகமாக இவர்கள் இருவரும் இணைந்து நடித்த வகையில், ‘தவப்புதல்வன்’ முதல் படமாக இருக்கும்.

சிவாஜியின் உடைகளும் எல்லோரின் கவனத்தையும் ஈர்க்கும். அம்மாவிடமும் கே.ஆர்.விஜயாவிடமும் உண்மையைச் சொல்லவிடாமல் அல்லாடுவது, சி.ஐ.டி சகுந்தலாவை எதிர்க்க முடியாமல் பம்முவது, தனிமையில் விரக்தியில், இயலாமையில் வருந்துவது என ஒவ்வொரு காட்சியிலும் சிவாஜி, தன் நடிப்பு ஆளுமையை உணர்த்திக்கொண்டே வருவார். முக்கியமாக, காலையில் இருந்து மாலை வரை அவரிடம் செம மேனரிஸம் இருக்கும். மாலை வந்ததும் கண் தெரியாமல் போவதும் மனதில் படபடப்புடனும் சப்தம் வரும் திசை நோக்கி காதைக் கூர்மையாக்கித் திரும்பிப் பார்க்கிற ஸ்டைலும், நம்மை கைத்தட்டவும் வைக்கும்; நமக்குக் கண்ணீர் வரவும் செய்யும்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில் கண்ணதாசனின் வரிகளில் எல்லாப் பாடல்களும் இனித்தன. ’கிண்கிணி கிண்கிணி’ எனும் பாடலில் கிறிஸ்துமஸ் தாத்தாவாக வந்து ஆடி நடித்திருப்பார் சிவாஜி. ’லவ் இஸ் ஃபைன் டார்லிங்’ எனும் ஆங்கிலப் பாடலும் படத்தில் உள்ளது. இதில் சிவாஜியின் ஸ்டைலையும் மேனரிஸத்தையும் ரசித்து விசிலடித்தார்கள் ரசிகர்கள். ’உலகின் முதல் இசை தமிழ் இசையே’ என்ற பாடல் கர்நாடக சங்கீதத்தில் அமைந்திருக்கும். சிவாஜியும் மேடையில் அமர்ந்து பாடியபடி அசத்தியிருப்பார். நடுவே ‘கஸல்’ பாடலாகவும் மெட்டுப் போட்டு கலக்கியிருப்பார் மெல்லிசை மன்னர்.

தான்சேன் வேடத்தில் சிவாஜி வரும்போது தியேட்டரே அதிர்ந்தது. ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்’ என்ற பாடலில் சிவாஜியின் நடிப்பு பிரமிப்பைக் கூட்டும். ‘இந்த தான்சேன் கெட்-அப்பிற்காக, சிவாஜி இரண்டு மூன்று நாட்கள் மெனக்கெட்டு, ரெஃபரன்ஸ் எடுத்துக்கொண்டு மேக்கப் போட்டுக்கொண்டு நடித்தது, நடிப்பில் நடிகர் திலகத்துக்குள் இருக்கிற ஆத்மார்த்தமான ஈடுபாட்டைக் காட்டுகிறது’ என்று முக்தா சீனிவாசன் பேட்டியொன்றில் சொல்லி சிலாகித்திருக்கிறார்.

பொழுதுபோக்காகவும் அதேசமயம் ‘மாலைக்கண் நோய்’ எனும் விஷயத்தின் விவரங்களைச் சொல்லியும் கதை அமைத்து, நடிகர் திலகம் நடிப்பதற்கு உண்டான ‘ஸ்கோப்’புகளை திரைக்கதையில் உருவாக்கிக் கொடுத்த வகையில் ‘தவப்புதல்வன்’ நூறுநாள் படமாக அமைந்தது. சில தியேட்டர்களில் அறுபது நாள், எழுபது நாள் வரை ஓடியது.

1972 ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி வெளியானது ‘தவப்புதல்வன்’. படம் வெளியாகி 50 ஆண்டுகளாகின்றன. கலைத்தாயின் தவப்புதல்வனை அடுத்த நூற்றாண்டுக்கும் மறக்க முடியாது. ‘தவப்புதல்வனையும்’ நினைக்காமல் இருக்க முடியாது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in