எம்ஜிஆர் மீட்டிய ‘இதய வீணை!’

50-வது ஆண்டில் ஒரு மீள்பார்வை
’இதய வீணை’ திரைப்பட போஸ்டர்
’இதய வீணை’ திரைப்பட போஸ்டர்

எழுபதுகளில் வந்த எம்ஜிஆர் படங்கள் நிறைய அரசியல் பேசின. முக்கியமாக, எந்தக் கட்சியில் இருந்தாரோ அந்தக் கட்சியையும் நண்பர்களையும் எதிர்த்தே வசனம் பேசினார். இதற்கெல்லாம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ’இதயம் பேசுகிறது’ மணியன் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் எழுதிய நாவலொன்றைப் படமாக்கும் விருப்பத்தை மணியன் தெரிவிக்க, எம்ஜிஆரும் சம்மதித்தார். இப்படித்தான் ‘இதய வீணை’ உருவானது.

படத்தில், சிறுவயது எம்ஜிஆராக மாஸ்டர் சேகர் நடித்திருப்பார். அவரின் அப்பா எம்.ஜி.சக்ரபாணி. கறார் அப்பாவிடம் சேட்டை பண்ணும் பையன் திட்டும் அடியுமாக வாங்கிக்கொண்டே இருக்க, தெரிந்த நண்பன் ‘இதை பாலில் கலந்துகொடு. உங்க அப்பாவை வசியம் பண்ண இதான் வழி’ என துத்தநாகப் பவுடரைக் கொடுத்துவிடுவான். விஷயம் அறிந்த தந்தை, ’துத்தநாகம் கலந்த பாலைக் குடித்தால் நான் செத்திருப்பேனே... இப்படியொரு குணம் படைத்தவனா என் பையன்’ என அடித்து விரட்டியடித்துவிடுவார்.

மாஸ்டர் சேகர் வளர்ந்து எம்ஜிஆராகி விடுவார். காஷ்மீரில் கைடாகப் பணியாற்றிக்கொண்டிருப்பார். அங்கே லட்சுமியையும் மஞ்சுளாவையும் சந்திப்பார். லட்சுமி தன் சகோதரி என்பதைத் தெரிந்துகொள்வார். மஞ்சுளாவுக்கும் எம்ஜிஆருக்கும் காதல் மலரும். ‘’உங்க வாயாலேயே நீதாண்டா என் மகன்னு சொல்லவைக்கிறேன்’’ என்று அப்பாவைப் பார்த்து சபதம் போடுவார் எம்ஜிஆர்.

'இதய வீணை’ டைட்டில்
'இதய வீணை’ டைட்டில்

நடுவே, மஞ்சுளாவுக்கு நம்பியாரால் பிரச்சினை. மனோகர் நடத்தும் கடத்தல் தொழில். தேங்காய் சீனிவாசனின் காமெடி கலாட்டா. லட்சுமிக்கும் சிவகுமாருக்கும் காதல். அதை கல்யாணம் செய்து பார்க்கிற பொறுப்பு. ஆனாலும் அண்ணன் என்று வெளிக்காட்டிக்கொள்ளாத நிலை. ஒருகட்டத்தில், சென்னைக்கு வந்தால், லட்சுமிக்கும் எம்ஜிஆருக்கும் தொடர்பு என சிவகுமார் கொந்தளிப்பார். அதேகோபத்துடன் எம்ஜிஆரை விளாசித் தள்ளுவார். படம் பார்த்த அத்தனைபேரிடம் எவ்வளவு திட்டுகளை வாங்கினாரோ சிவகுமார்?

கடைசியில், ‘’தம்பீ... நிறுத்துப்பா. இவன் யாரு தெரியும்ல. என் பையன். உன் பொண்டாட்டியோட கூடப்பிறந்த அண்ணன்’’ என்று எம்.ஜி.சக்ரபாணி சொல்ல, எல்லோரும் சேர, மீண்டும் காஷ்மீருக்குப் பயணமாவார் எம்ஜிஆர். படமும் நிறைவடையும்.

’இதயம் பேசுகிறது’ மணியன் ‘உதயம் புரொடக்‌ஷன்ஸ்’ எனும் பெயரில் தயாரித்த படம் ‘இதய வீணை’. எம்ஜிஆர், மஞ்சுளா, லட்சுமி, சக்ரபாணி, நம்பியார், மனோகர், தேங்காய் சீனிவாசன், பூர்ணம் விஸ்வநாதன் முதலானோர் நடித்தார்கள். ‘பாரத்’ புரட்சி நடிகர் எம்ஜிஆர் என்று டைட்டிலில் போடுகிறார்கள்.

’இதய வீணை’ டைட்டில்
’இதய வீணை’ டைட்டில்

அதேபோல், எம்ஜிஆர் பெயர் போட்டதும் ‘லட்சுமி’யின் பெயர் வருகிறது. அதற்குப் பிறகுதான் ‘மஞ்சுளா’ பெயர் இடம்பெறுகிறது. வசனத்தை சொர்ணம் எழுதினார். மணியனும் வித்வான் வே.லட்சுமணனும் தயாரித்தார்கள். கிருஷ்ணன் பஞ்சு இயக்கினார்கள்.

படத்தின் பெரும்பகுதிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டன. பல காட்சிகள் குளுகுளுவென இருக்க, மஞ்சுளாவின் அழகும் எம்ஜிஆரின் அழகும் லட்சுமியும் அழகும் கூட அப்படித்தான் இருந்தது. எல்லாப் பாடல்களையும் வாலி எழுதினார். ஒரேயொரு பாடலை புலவர் புலமைப்பித்தன் எழுதினார். இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் - பஞ்சு இயக்க, இரட்டை இசையமைப்பாளர்கள் சங்கர் - கணேஷ் இசையமைத்திருந்தார்கள்.

‘ஆனந்தம் இன்று ஆரம்பம் மெல்ல சிரித்தாலென்ன இதழ் விரித்தாலென்ன’ என்ற பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘ஒரு வாலுமில்லை நாலு காலுமில்லை சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே இந்தக் காட்டுக்குள்ளே உள்ள மிருகமெல்லாம் அதைக் காட்டிலும் எத்தனையோ தேவலை!’ என்ற பாடலும் ஹிட்டானது. 'திருநிறைச்செல்வி அங்கயற்கண்ணி’ பாடலும் மெலடியில் கலக்கியது.

புலமைப்பித்தன் எழுதிய ‘பொன் அந்தி மாலைப்பொழுது பொங்கட்டும் இன்ப நினைவு’ என்ற பாடல் அப்போது மிகப்பெரிய ஹிட் பாடலாக அமைந்தது. ’பொன் அந்தி மாலைப் பொழுது பொங்கட்டும் இன்ப நினைவு / அன்னத்தின் தோகை என்ற மேனியோ / அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ / கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப் பறித்தாய்’ எனும் வரிகள் நம்மைப் பறித்துக் கொள்ளும்.

’மலைமகள் மலருடை அணிந்தாள் / வெள்ளிப்பனி விழ முழுவதும் நனைந்தாள் / வருகென அவள் நம்மை அழைத்தாள் / தன்மடிதனில் துயிலிடம் கொடுத்தாள் / இதயத்து வீணையில் எழுகின்ற பாடலில் / இசை நம்மை மயக்கட்டுமே / உதயத்துக் காலையில் விழித்திடும் வேளையில் மலர்களும் விழிக்கட்டுமே’ என்று புலமையாலும் வார்த்தை ஜாலங்களாலும் காஷ்மீரை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருப்பார் புலமைப்பித்தன்.

எல்லாவற்றையும் விட ஆல் டைம் ஹிட் பாடலாக அமைந்தது... ‘காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்’ பாட்டு! ’வணக்கம் வந்தனம் நமஸ்தே நமோஸ்கார்... காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்’ என்று ஆரம்பிக்கும்போதே விசில் பறந்தது. பாட்டுக் கச்சேரிகளில், ஜிப்பாவை போட்டுக்கொண்டு டிஎம்எஸ் குரலைப் போல, எம்ஜிஆர் ஸ்டைலுடன் இந்தப் பாடலை பாடுவதற்கு குழுவுக்கு ஒருவர் இருப்பார். பாடத்தொடங்கியதும், எம்ஜிஆர் ரசிகர்கள் ஆண் பெண் பேதமில்லாமல் எழுந்து நின்று கரவொலி எழுப்புவார்கள்.

’எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன் / வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன்’ என்று பாடும்போது ‘ஆமா , நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?’ என்று கேட்க... ’சத்தியம்தான் நான் படித்த புத்தகமம்மா / சமத்துவம்தான் நான் அறிந்த தத்துவமம்மா / அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல் / நேருவின் புகழ் சொல்லும் பூமி இது/

’இதய வீணை’ திரைப்படத்தில் எம்ஜிஆர்
’இதய வீணை’ திரைப்படத்தில் எம்ஜிஆர்

யாரும் வந்து சொந்தம் கொள்ளக் கூடுமோ/ வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ / எல்லைக்குக் காவல் நிற்கும் வீரர்கள் / அன்னைக்குத் தொண்டு செய்யும் பிள்ளைகள்’ என்று அண்ணாவையும் கொண்டு வந்திருப்பார். காங்கிரஸ் கட்சியின் நேருவையும் சொல்லியிருப்பார். மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் உற்சாகக் குதியல் போடும் மனசு! அதுதான் எம்ஜிஆர் நமக்குத் தரும் எனர்ஜி.

1972 அக்டோபர் 20-ம் தேதி வெளியானது ‘இதய வீணை’. படம் வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகளாகின்றன. ஆனாலும், ‘வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமோஸ்கார்’ என்பதை மறந்துவிடமுடியுமா என்ன?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in