ரஜினி எனும் அற்புத நடிகரை அடையாளம் காட்டிய ‘புவனா’!

ரஜினி எனும் அற்புத நடிகரை அடையாளம் காட்டிய ‘புவனா’!

நாவலைப் படமாக்குவது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. நாவலின் ஜீவனும் படத்தில் இருக்க வேண்டும். படமும் எல்லோரையும் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்கிற இரட்டைக் குதிரைச் சவாரி அத்தனை சுலபமும் அல்ல. இந்த இரண்டிலும் கைதேர்ந்தவர் பஞ்சு அருணாசலம். அப்படி அவர் முயற்சியில் பல நாவல்கள் திரை வடிவம் கண்டிருக்கின்றன. அந்தத் திரைப்படங்கள் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அப்படியொரு அட்டகாச வரவேற்பைப் பெற்ற படங்களில் ஒன்றுதான் ‘புவனா ஒரு கேள்விக்குறி’.

1975-ல் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் நமக்குக் கிடைத்த ரஜினிக்கு ஆரம்பத்தில் கிடைத்ததெல்லாம் வில்லத்தன கதாபாத்திரங்கள்தான். சொல்லப்போனால் அதில் நடித்துத்தான் நம்மையும் நம் மனதையும் கபளீகரம் செய்திருப்பார் ரஜினி.

அந்த ஆண்டில் ‘அபூர்வ ராகங்கள்’ மட்டும்தான் வந்தது. 1976-ல், பாலசந்தர் ‘மூன்று முடிச்சு’ படத்தில் வில்லனிக் ஹீரோவாக வாய்ப்பைக் கொடுத்தார்.

1977 தான் ரஜினிக்கு மிக முக்கியமான ஆண்டு. அறிமுகமான மூன்றாவது ஆண்டில், கொஞ்சம் படங்கள் வரத்தொடங்கின. கமலுடன் நடித்த ‘ஆடுபுலி ஆட்டம்’ வெளியானது. விஜயகுமாருடன் நடித்த ‘ஆறு புஷ்பங்கள்’ வெளியானது. ஸ்ரீதேவிக்கு அண்ணனாக ‘கவிக்குயில்’ படத்தில் நடித்த ரஜினி, சுஜாதாவின் நாவல் ‘காயத்ரி’ என்று படமாக்கப்பட்டபோது, மனைவியை ரகசியமாக நீலப்படம் எடுக்கும் கெட்டகுணம் கொண்ட கணவனாக நடித்தார்.

இயக்குநர் பாரதிராஜாவின் முதல் படமான ‘16 வயதினிலே’ படத்தையும் சப்பாணி, மயிலு, பரட்டை, குருவம்மாவை எவரால்தான் மறக்க முடியும்?

அநேகமாக ரஜினி பேசிய முதல் பஞ்ச் டயலாக் ‘இதெப்படி இருக்கு?’ என்பதாகத்தான் இருக்கும். விஜயகுமார் நடித்து, துரை இயக்கத்தில் உருவான ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ படமும் இந்த வருடத்தில்தான் வெளியானது.

இதே வருடத்தில்தான் பஞ்சு அருணாசலம் திரைக்கதை வசனத்திலும் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்திலும் சிவகுமார், ரஜினி, சுமித்ரா நடிப்பில் உருவாகி வந்தது ‘புவனா ஒரு கேள்விக்குறி’. அதுவரை பெரும்பாலும் வில்லத்தனம் பண்ணிக்கொண்டிருந்த ரஜினியை முதலில் இதிலும் வில்லத்தனம் பண்ணுவதற்குத்தான் - அதாவது கெட்ட கேரக்டருக்குத்தான் புக் செய்தார்கள். அதாவது இப்போது நாம் பார்க்கிற சிவகுமார் பாத்திரத்தில் ரஜினி, ரஜினியின் பாத்திரத்தில் சிவகுமார் என்றுதான் முடிவுசெய்திருந்தார்கள். பஞ்சு அருணாசலத்துக்கு திடீரென்று ஒரு யோசனை. எஸ்.பி.எம்மை அழைத்தார். ‘நடிகர்களை கொஞ்சம் உல்டா பண்ணிப் போட்டுப் பாத்தா என்ன?’ என்று கேட்டார். புரியாமல் பார்த்தார்கள் எல்லோரும். ‘இதுவரை சிவகுமார் சாஃப்ட் கேரக்டர்லதான் நடிச்சிட்டு வர்றாரு. இதுல அவர் வில்லனா, கெட்டவனா நடிக்கட்டும். இதுவரை வில்லத்தனம் பண்ணிக்கிட்டு, கெட்டவனா நடிச்சிட்டு வர்றாரு ரஜினி. இதுல நல்லவனா, தியாகசீலனா நடிக்கட்டும்’ என்றார். ‘நல்ல ஐடியாவா இருக்கே’ என்றார்கள். சிவகுமாரும் ரஜினியும் சம்மதித்தார்கள். ஒருவேளை, முன்பு சொன்னது போலவே படம் வெளிவந்திருந்தால், ஒரு சராசரிப் பட வரிசையில் சேர்ந்திருக்குமோ என்னவோ? நமக்கு இப்படியொரு படம் கிடைக்க வேண்டும் என்று காலமும் ரஜினியின் எதிர்காலமும் முடிவு செய்துவிட்டது போல!

கதைப்படி சிவகுமாரும் ரஜினியும் நண்பர்கள். சிவகுமார் பல பெண்களுடன் பழக்கம். பாலியல் உறவு வைத்துக்கொண்ட பின்னர் அவர்களைக் கழற்றிவிட்டுவிடுவார். ஆனால் ரஜினியோ அவருக்கு நேர்மாறானவர். ஒருத்தியை உயிருக்கு உயிராகக் காதலிப்பார். ஒரு விபத்தில் அவளும் இறந்துவிடவே அவள் நினைப்பிலேயே காலம் கழிப்பார். நியாய தர்மங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வார்.

பெண்ணாசை, பொன்னாசை எல்லாமும் கொண்ட சிவகுமார், ஒய்.ஜி.மகேந்திரனின் பணத்தைத் திருடிவிடுவார். அதிர்ச்சியில் மகேந்திரன் நெஞ்சுவலியால் இறந்துவிடுவார். அவரின் சகோதரி சுமித்ரா, சிவகுமாரைத் தேடி வர, காதல் வலை வீசி அவரையும் கவிழ்த்துவிடுவார்.

அந்த ஊரில் உள்ள மிகப்பெரிய ஜவுளிக்கடை அதிபர், தன் மகளை சிவகுமாருக்குக் கொடுத்து, கடையையும் கொடுக்க, அவரின் வாழ்க்கை உச்சத்துக்குப் போய்விடும். காதலித்து, கர்ப்பமாகி நிர்க்கதியாய் நிற்கும் சுமித்ராவுக்கு ரஜினி அடைக்கலம் கொடுப்பார். குழந்தையும் பிறந்து வளரும்.

ஒருகட்டத்தில், காதலியை நினைத்து நினைத்து, குடித்துக் குடித்து சீரழிவதைவிட சுமித்ராவை திருமணம் செய்துகொண்டால் என்ன என்று தோன்றும் ரஜினிக்கு. அங்கே சிவகுமாருக்கோ, குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகும். தனக்கும் சுமித்ராவுக்கும் பிறந்த தன் மகனையே தத்து எடுத்துக்கொண்டால் என்ன என்று ரஜினியையும் சுமித்ராவையும் கேட்பார் சிவகுமார். ஆனால் மறுத்துவிடுவார்கள் இருவரும்.

பையனுக்கு உடல்நலமில்லை எனும் நிலையில், அந்த மருந்தை வைத்துக்கொண்டு, ‘பிளாக்மெயில்’ செய்து மிரட்டுவார் சிவகுமார். ஆனால் விரட்டித் திட்டித் தீர்த்துவிடுவார் சுமித்ரா.

அங்கே ஓடியோடிப் போய், தேடித்தேடிப் பார்த்து, கடை கடையாய் அலைந்து மருந்து வாங்கி வரும் ரஜினி, ரத்த வாந்தி எடுத்து இறந்துவிடுவார். ‘அப்பேர்ப்பட்ட சிவகுமாரைவிட இப்பேர்ப்பட்ட ரஜினியே மேல்’ என புரிந்து உணர்ந்து தெளியும் சுமித்ரா, ரஜினியின் விருப்பப்படியே அவருக்கு மனைவியாவாள்.

ரஜினி இறக்க, குழந்தையுடன் வெள்ளைப்புடவை கட்டியபடி நிற்க, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ என்று டைட்டில் போடப்படும். எழுத்தாளர் மகரிஷியின் கதையை அழகிய திரைக்கதையாலும் வசனத்தாலும் ஆச்சரியப்படுத்தி, அசத்தியிருப்பார் பஞ்சு அருணாசலம்.

சிவகுமார், ரஜினி, சுமித்ரா என மூவரைச் சுற்றியே கதை சுழலும். நாகர்கோவில் மற்றுமுள்ள ஊர்களிலும் கடற்கரையிலும் படமாக்கிய விதம் கொள்ளை அழகு. சிவகுமாரின் பெயர் வேறு நாகராஜ் என்று பொருத்தமாக வைக்கப்பட்டிருக்கும்.

அன்றைய தேதிக்கு சிவகுமார் பெரிய நடிகர். ரஜினி வளர்ந்துவந்த நடிகர். ஆனாலும் காட்சிக்குக் காட்சி ஸ்கோர் செய்துகொண்டே இருப்பார் ரஜினி. ‘அண்ணே, நாகராஜ் அண்ணே, கடப்பாரையை முழுங்கீட்டிங்களேண்ணே’ என்று சிவகுமாரை நக்கலடித்துக் கொண்டும், குத்திக்காட்டிக்கொண்டும் இருப்பார். தாடி, ஒரு ஜிப்பா, கண்களில் போதை, உதட்டில் சிரிப்பு என்று எப்போதும் வலம் வரும் ரஜினிக்கு கரவொலி காட்சிக்குக் காட்சி கிடைத்துக்கொண்டே இருந்தது. சுமித்ரா படம் முழுக்கவே தன் நடிப்பால் புவனாகவே வாழ்ந்திருப்பார்.

பஞ்சு அருணாசலம் என்றால் இளையராஜாவைத் தவிர வேறு யார் இசையமைக்கப் போகிறார்கள்? எஸ்.பி.முத்துராமனின் அதே யூனிட், கருப்பு வெள்ளையிலும் ஜாலம் காட்டியிருக்கும்.

‘விழியிலே மலர்ந்தது’ என்ற டூயட் பாடல் இன்று வரை ராத்திரி நேரத்தை கபளீகரம் செய்துகொண்டுதான் இருக்கிறது. ’பூந்தென்றலே நல்ல நேரம்’ என்ற பாடலை வாணி ஜெயராமும் ஜெயச்சந்திரனும் பாடியிருப்பார்கள்.

எஸ்.பி.பி-யின் விரக்தியும் அலட்சியமும் ஏக்கமும் துக்கமும் கலந்த குரலில் ‘ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இங்கு இல்லை’ என்ற பாடலும் பாடலுக்கு ரஜினியின் அசால்ட்டான நடிப்பும் நமக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. ஜானகியின் குரலில், சுமித்ராவின் இயலாமையும் தவிப்பும் தெறித்து விழும்.

இன்றைக்கும் ஐம்பது வயதைக் கடந்தவர்களின் காலர் டியூன் பாடலாக ராஜாவின் ‘ராஜா என்பார்’ வலம் வந்துகொண்டிருக்கிறது.

1977 செப்டம்பர் மாதம் 2-ம் தேதி வெளியானது ‘புவனா ஒரு கேள்விக்குறி’. வில்லத்தனம் பண்ணிக்கொண்டிருந்த ரஜினியை இப்படி மடைமாற்றிவிட்டு, ரஜினி எனும் அற்புத நடிகரை, இயல்பான நடிகரை நமக்கு முதன்முதலில் காட்டியவர்கள் பஞ்சு அருணாசலமும் எஸ்.பி.முத்துராமனும்தான்!

படம் வெளியாகி 45 ஆண்டுகளாகிவிட்டால் என்ன... ரஜினியின் மேஜிக் நடிப்பை ஆச்சரியத்துடன் இன்றைக்கும் ரசித்துக் குதூகலிக்கிறார்கள் ரசிகர்கள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in