அன்பின் ஆழம் சொன்ன  ‘அண்ணன் ஒரு கோயில்’

அன்பின் ஆழம் சொன்ன ‘அண்ணன் ஒரு கோயில்’

45-ம் ஆண்டில் ஒரு மீள்பார்வை

யானை, கடல், குழந்தை, விமானம்... எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது; அலுக்காது என்று சொல்வோம். பார்த்துப்பார்த்து வியப்போம். அப்படித்தான், தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கைக் கதைகளும்! தோசையில், நைஸ் தோசை, ஊத்தப்பம், தக்காளி தோசை என்றெல்லாம் ஒரு மாவை எடுத்துக்கொண்டு, நூறு வித தோசைகள் செய்வது போலத்தான், அண்ணன் தங்கைக் கதைகளும்! அந்த அண்ணன் தங்கைக் கதைக்குள், கொஞ்சம் க்ரைம், த்ரில்லர், தியாகம் என்றெல்லாம் தூவினால், அதுதான் ‘அண்ணன் ஒரு கோவில்’!

டாக்டர் ரமேஷ் (சிவாஜி), மிக அன்பானவர். பண்பானவர். மனிதநேயம் மிக்கவர். இவரின் தங்கை லட்சுமி (சுமித்ரா). அண்ணனே கோயில்; அவரே என் தெய்வம் என்று மதித்துப் போற்றுபவர். முதல் காட்சியிலேயே போலீஸ் துரத்த, டாக்டர் ரமேஷ் ஓடுவார். பல இடங்களில் சென்று ஒளிந்துகொள்வார். தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்கு போலீஸ் துரத்துவதற்கும் என்ன காரணம் என்பது தெரியாமல் ரசிகர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் கொண்டு படம் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

இந்த சமயத்தில், மாமா மற்றும் அத்தையின் அட்டூழியத்தால் அவதிப்பட்டுக்கொண்டிருப்பார் ஜானகி (சுஜாதா). தப்பித்துச் சென்றவரைப் பிடித்து வந்து வீட்டில் ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிடுவார்கள். தான் சொல்லும் மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்பார்கள். மீண்டும் தப்பித்துவிடுவார் ஜானகி.

சிறுவயதில் இருந்தே ரமேஷும் ஜானகியும் பழக்கம். பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்வது எனும் முடிவில் இருப்பார்கள். இங்கே டாக்டரை போலீஸ் துரத்தும். அங்கே அத்தையும் மாமாவும் ஜானகியைத் தேடுவார்கள். இதனிடையே இருவரும் சந்தித்துக்கொள்வார்கள்.

அப்போது போலீஸ் துரத்துவதற்கான காரணத்தைக் கேட்பார் ஜானகி. தங்கை லட்சுமியை மானபங்கப்படுத்தியவனைக் கொன்றுவிட்டதாகவும் அதனால் போலீஸ் துரத்துவதாகவும் தங்கைக்கு புத்திசுவாதீனம் அப்போது போய்விட்டது என்றும் அவளை சிகிச்சைக்காக டாக்டர் ஆனந்திடம் பாதுகாப்பாக விட்டிருப்பதாகவும் சொல்லுவார் டாக்டர் ரமேஷ்.

ஒருகட்டத்தில், டாக்டர் ஆனந்த், லட்சுமியின் நிலையையெல்லாம் அறிந்து, திருமணம் செய்துகொள்வார். டாக்டர் ரமேஷை போலீஸும் பிடித்துவிடும். உண்மையில், அந்தக் கெட்டவனை கொன்றது யார், அதற்கு ஆதாரம் என்ன அல்லது சாட்சி யார் என்பதையெல்லாம் க்ளைமாக்ஸில் விளக்கி ‘சுபம்’ போட்டு முடித்திருப்பார்கள்.

சிவாஜியும் சுமித்ராவும் அண்ணன் தங்கையாகவே வாழ்ந்திருப்பார்கள். சிவாஜியின் காதலியாக சுஜாதா. இன்னொரு டாக்டர் ஆனந்த் வேடத்தில் ஜெய்கணேஷ். சுமித்ராவை மானபங்கப்படுத்துகிற கதாபாத்திரத்தில், மோகன்பாபு. அவரது நண்பராக பிரேம் ஆனந்த். சுஜாதாவின் அத்தையாக வி.ஆர்.திலகம். மாமாவாக எஸ்.வி.ராமதாஸ்.

தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், ஏ.கருணாநிதி முதலானோர் போலீஸாக நடித்திருந்தார்கள். இவர்களுடன் மனோரமா அடிக்கும் லூட்டிதான், த்ரில்லரும் க்ரைமுமாகச் சென்று கொண்டிருக்கும் படத்துக்கு ரிலாக்ஸாக இருந்தது. வக்கீல் கதாபாத்திரத்தில் மேஜர் சுந்தர்ராஜன் நடித்திருந்தார்.

படம் தொடங்கும். சிவாஜி பெரிய சைஸ் மூக்குக்கண்ணாடியும் நீளமான கோட்டுமாக அணிந்தபடி ஓடுவார். போலீஸ் துரத்தும். சிவாஜியின் அந்த ஸ்டைலான ஓட்டத்துக்கே ரசிகர்கள் விசில்களைப் பறக்கவிட்டார்கள். சிவாஜி சுமித்ராவிடம் காட்சிகள், ஜெய்கணேஷிடம் தன் நிலையைச் சொல்லி உதவி கேட்கும் காட்சி, சுஜாதாவிடம் உண்மையைச் சொல்லிப் புலம்பி வருந்தும் காட்சிகள் எனப் பல இடங்களில் சிவாஜியின் நடிப்பு, படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

சுமித்ராவுக்கு ஓரளவு வேலை. அதைச் செவ்வனே செய்திருப்பார். பிறகு புத்திசுவாதீனமாகிவிடுகிறார். அதேபோல ஜெய்கணேஷின் வழக்கம்போலான நடிப்பு கச்சிதமாக இருக்கும். சுஜாதாவின் நடிப்பும், பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் அந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் நடித்திருப்பார்.

கன்னடப் படத்தின் ரீமேக் படம் ‘அண்ணன் ஒரு கோவில்’. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த படம். கே.விஜயன் இயக்கினார். வியட்நாம் வீடு சுந்தரம் வசனம் எழுதினார். பல இடங்களில் வசனங்கள் கரவொலிகளை வாங்கின. ஜி.ஆர்.நாதனின் ஒளிப்பதிவு அழகுற அமைந்திருக்கும். அதேசமயம் பல இடங்களில் லைட்டிங் மாற்றங்களும் கேமராவின் நிழலும் தெரிந்தது அந்தக்கால ரசிகர்களை சற்றே அதிருப்தியில் ஆழ்த்தியது.

கண்ணதாசன் பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். எல்லாப் பாடல்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. 'தொட்டிலிட்ட தாயுமில்லை/ தோளிலிட்ட தந்தையில்லை/ கண் திறந்த நேரம் முதல் கை கொடுத்த தெய்வமன்றோ/ அதன் பேர் பாசமன்றோ /என்றும்,

/ கண்ணன் மொழி கீதை என்று கற்றவர்கள் சொன்னதுண்டு / கண்ணன் மொழி கீதை என்று கற்றவர்கள் சொன்னதுண்டு / அந்த மொழி எனக்கெதற்கு அண்ணன் மொழி கீதையன்றோ / அதன் பேர் பாசமன்றோ / எனும் அற்புதமான வரிகளைக் கொண்ட ‘அண்ணன் ஒரு கோவிலென்றால்’ என்ற பாடலை பி.சுசீலா பாடி உருக்கினார்.

'சூடிக் கொடுத்தாள் பாவை படித்தாள்/ சுடராக எந்நாளும் தமிழ் வானில் ஜொலித்தாள்/ கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்/ கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்/ கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்/ கன்னித் தமிழ் தேவி/ மைக் கண்ணன் அவள் ஆவி/ தன் காதல் மலர் சூடி மாலையிட்டாள்’ என்று கவிஞர் கண்ணதாசன் தனக்கேயுரிய பாணியில் கண்ணனை வைத்துக்கொண்டு அண்ணன் தங்கைப் பாசத்தை நெக்குருக எழுதியிருந்தார்.

’மல்லிகை முல்லை.....’ என்று டி.எம்.எஸ். பாடுவதும் அதற்குத் தகுந்தது போல் சிவாஜி மெல்லிய புன்னகையுடன் வாயசைப்பதும் அத்தனை அழகாக இருக்கும்.

சிவாஜியும் சுஜாதாவும் ஓடி வந்து மரக்கட்டைகளுக்கு உள்ளே ஒளிந்துகொள்வார்கள். போலீஸ் தேடிக்கொண்டிருக்கும். ‘இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா’ என்று வடிவேலு காமெடி வெகு பிரபலம் அல்லவா. இந்தப் படத்திலும் அப்படியொரு காட்சி இப்போது அரங்கேறும்.

அந்த மரக்கட்டைகளுக்கு உள்ளே சிவாஜியும் சுஜாதாவும் இருக்க... அப்போது ஒரு பாடல். ‘நாலுபக்கம் வேடனுண்டு நடுவினிலே மானிரண்டு காதல்... இன்பக்காதல்’ என்ற பாடல். ‘ஆரண்யக் காண்டமிதை தொடங்கு/ அயோத்தி பஞ்சணை போல் மயங்கு / சாகுந்தலம் படிக்க இறங்கு / தலையடியில் கை வைத்து உறங்கு/ அம்மம்மா என்னம்மா’ என்றும்

’பாலோடு பாத்திரத்தை எடுத்து/ பஞ்சாமிர்தம் கலந்து கொடுத்து/ தாகங்கள் தீரும் வரை குடித்து/ சல்லாப நாடகத்தை நடத்து’ என்றும்

’தேனுண்ட செங்கனி வாய் இரண்டு/ ஸ்ருங்கார ராகமென திரண்டு/ நான் உண்ணும் வேளையிலே மிரண்டு/ நாணத்தில் போவதென்ன உருண்டு/ அம்மம்மா என்னம்மா’ என்றும் கவிஞர் காதல் ரசம் சேர்த்து, கவிரசமாக்கிக் கொடுத்திருந்தார். கண்ணதாசனின் காதல் வரிகளும் மெல்லிசை மன்னரின் ‘டொடங்டொடய்ங் டொடங்டொய்ங்’ எனும் இசையும் எஸ்பிபி-யின் வசீகரக் குரலும் வாணி ஜெயராமனின் ஹஸ்கி குரலும் சேர்ந்து குழைந்து என்னவோ செய்தன.

படம் அபார வெற்றி பெற்றது. சென்னையில் சாந்தி, கிரெளன், புவனேஸ்வரி என மூன்று தியேட்டர்களிலும் 100 நாட்களைக் கடந்து ஓடியது. தஞ்சாவூரிலும் கும்பகோணத்திலும் 50 நாள் ஓடினாலே பெரிய வெற்றிதான். ஆனால், தஞ்சையிலும், கோவை கீதாலயாவிலும், கும்பகோணம் செல்வம் தியேட்டரிலும் மதுரை நியூ சினிமா தியேட்டரிலும் என பல ஊர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடியது. திருவாரூர் அம்மையப்பாவில் 51 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. திருச்சியில் பிரபாத் தியேட்டரில் 100 நாட்களுக்கும் மேல் ஓடியது.

அந்தக் காலத்தில், சிலோன் ரேடியோவில் பாடல்களை ஒலிபரப்புவார்கள். கே.எஸ்.ராஜா தொகுத்து வழங்குவார். வாசத்தின், நறுமணத்தின் உயர்வுகளையெல்லாம் சொல்லிவிட்டு, அடுத்து வரும் மணம் வீசும் பாடல்...’ என்று நிறுத்த, ‘மல்லிகை முல்லை’ எனும் டி.எம்.எஸ். குரல் ஒலிக்கும். உடனே ‘கட்’செய்துவிட்டு, ‘இதோ... மணக்க மணக்க வருகிறது வாசமுள்ள பாடல்’ என்று சொல்ல, பிறகுதான் பாடல் ஆரம்பமாகும். இதைக் கேட்டுக் கேட்டுத்தான் அப்போதைய இளைஞர்களும் யுவதிகளும் வளர்ந்தார்கள்

1977 நவம்பர் 10-ம் தேதி ‘அண்ணன் ஒரு கோவில்’ வெளியானது. படம் வெளியாகி, 45 ஆண்டுகளாகின்றன. ஆனாலும், ‘மல்லிகை முல்லை’ இன்னும் நறுமணம் வீசிக்கொண்டுதான் இருக்கிறது. ‘அண்ணன்’ சிவாஜியும் ‘தங்கை’ சுமித்ராவும் இன்னும் மனதில் கல்வெட்டாகப் பதிந்தே இருக்கிறார்கள். ’நாலுபக்கம் வேடனுண்டு நடுவினிலே மானிரண்டு’ மயக்கிக்கொண்டுதான் இருக்கிறது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in