வசூல் மழையில் நனைந்த அலமேலுவின் ஆடு!

45-ம் ஆண்டில் ‘ஆட்டுக்கார அலமேலு’
‘ஆட்டுக்கார அலமேலு’
‘ஆட்டுக்கார அலமேலு’

’ஆத்தா ஆடு வளர்த்துச்சு, கோழி வளர்த்துச்சு, நாய் வளர்க்கலை. இந்த சப்பாணியைத்தானே வளர்த்துச்சு’ என்றொரு வசனம் ‘16 வயதினிலே’ படத்தில் இடம் பெற்றது. மிகவும் பிரபலமான வசனம் இது. ‘ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்’ என்பன முதலான ‘ஆடு’ குறித்தான எத்தனையோ பழமொழிகளும் உள்ளன. ‘தோள்ல ஆட்டை வைச்சிக்கிட்டே அதைத் தேடுன கதையாப் போச்சு’ என்றும் சொல்லுவார்கள். ‘ஆடு... கதை...’ என்பதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அந்த ‘ரூட்’டில் ஒரு கதையை அமைத்தால், அந்த ஆடு கதைக்கும் கதையின் குழப்பங்களுக்கும் தீர்வு சொல்லும் விதமாக, தீயாய் வேலை செய்கிறது என்று அமைத்தால் எப்படியிருக்கும்? இப்படியெல்லாம் சாண்டோ சின்னப்பா தேவரைத் தவிர வேறு யார் நினைக்க முடியும்? செயல்படுத்த முடியும்? இந்தக் கட்டுரை ‘ஆட்டுக்கார அலமேலு’ படம் பற்றித்தான் என்பதைச் சொல்லவே தேவையில்லை.

அழகிய கிராமம். பச்சைப்பசேல் வயல்வெளிகள். தென்னந்தோப்புகள். அந்த ஊரில் ஏகப்பட்ட சொத்துகளையும் எஸ்டேட்டையும் வைத்துவிட்டு, வேறொரு ஊரில் குடியிருக்கிறார் தர்மலிங்கம் (அசோகன்). இவர்களுக்கு விஜய் (சிவகுமார்) என்றொரு மகன். ராதா (கவிதா) என்றொரு மகள். எஸ்டேட் விஷயங்களைப் பார்த்துக்கொள்ள பாலுவை (ஜெய்கணேஷ்) நியமித்திருக்கிறார் தர்மலிங்கம்.

ஆனால் பாலுவின் அடாவடிகளுக்கு அளவே இல்லை. தோட்டத்தில் வேலை பார்க்கும் பெண்களை பங்களாவுக்கு வரச் செய்வார். அடுத்த நான்கைந்து நாட்கள் கழித்து வேறொரு பெண்ணைத் தேர்வுசெய்து வரவைப்பார். நெல் விற்ற காசு, தேங்காய் விற்ற பணம் என பல விதமாக வரும் பணத்தில் முக்கால்வாசியை அமுக்கிக்கொள்வார். இந்த பாலுவின் அத்தனை செயல்களுக்கும் கையாள் வேலு (சுருளிராஜன்). பாலு நினைப்பதை வேலு செய்து கொடுப்பார்.

அந்த கிராமத்தில் வசிக்கும் அலமேலு (ஸ்ரீப்ரியா). துடுக்கானவள். நேர்மை குணத்தைப் போற்றுபவள். கூடவே தம்பியைப் போல, ‘ராமு’வை ( ராமு என்பது ஆடு. ஆடு என்று சொன்னால் அலமேலு கோபித்துக்கொள்வார் அல்லவா!) வளர்க்கிறார். அலமேலு சொன்னதையெல்லாம் கேட்கும் கிளிப்பிள்ளை போல் ராமு எனும் ஆடு படு சுட்டியாகவும் கெட்டியாகவும் அலமேலு கூடவே வந்துகொண்டிருக்கும்.

அலமேலுவை ஒருநாள் பார்ப்பார் மேனேஜர் பாலு. எப்படியாவது அடையத் துடிப்பார். ஆனால் அடியும் உதையும் வாங்கியதுதான் மிச்சம். இந்த சமயத்தில் எஸ்டேட் முதலாளியின் மகன் விஜய் அங்கு வருவார். அலமேலுவுக்கும் அவருக்கும் காதல் அரும்பும். பிறகு தந்தையின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொள்வார்.

இதே கட்டத்தில், விஜய்யின் தங்கை ராதா, ஒருவனால் ஏமாற்றப்படுவாள். அவனை வெறுப்பேற்றுவதற்காக, மேனேஜர் பாலுவை அழைத்துக்கொண்டு ஊர் சுற்றுவாள். அவனுக்கு எதிரில் ஹோட்டலுக்கெல்லாம் போவாள். அவன் இதையெல்லாம் பார்த்து வருந்த வேண்டும் என்பது திட்டம். இதனை பாலு பயன்படுத்திக்கொள்ள, ஒருகட்டத்தில் பாலுவுக்கும் எஸ்டேட் முதலாளி மகள் ராதாவுக்கும் திருமணம் நடக்கும்.

இதன் பின்னர், அலமேலு மீது இல்லாததும் பொல்லாததுமாக ஏதேதோ சூழ்ச்சிகள் செய்வார் பாலு. இதெல்லாம் தெரியாத அப்பாவியான விஜய், அலமேலுவை வெறுப்பார். வீட்டை விட்டே துரத்துவார். போதாக்குறைக்கு விஜய்க்கு, குடிப்பழக்கத்தையும் பெண் தொடர்பையும் ஏற்படுத்திக்கொடுப்பார் என்று கதை அந்த அழகிய ஊரைச் சுற்றிச்சுற்றி, சுற்றிச் சுற்றி, சுற்றிச்சுற்றி வரும். இறுதியில் ஆடு செய்த புண்ணியத்தால் அலமேலு குற்றமற்றவள் என்பது தெரியவரும். மேனேஜர் பாலு செய்த அட்டூழியங்கள் அம்பலமாகும். அவர் தண்டிக்கப்படுவார். அலமேலுவும் விஜய்யும் இணைவார்கள். ஆட்டுக்கு நன்றி சொல்லுவார்கள். பிறகு, வணக்கம் போடுவார்கள்.

ஸ்ரீப்ரியா படம் முழுவதும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். சொல்லப்போனால், அலமேலுவுக்கும் ஆட்டுக்கும்தான் முக்கியமான ரோல். படம் மிகப்பெரிய அளவுக்கு சுவாரசியம் கொடுத்தது. காரணம்... ஆடு. ஆடு பாட்டு கேட்கும். டேப் ரிக்கார்டரை எடுத்துக்கொண்டு வரும். நாயுடன் பயங்கரமாக சண்டை போடும். கடிதத்தை பத்திரமாகக் கவ்விக்கொண்டு, சேர்க்க வேண்டிய இடத்தில் குறித்த நேரத்துக்குள் கொண்டுபோய்ச் சேர்க்கும். இரண்டரை மணி நேரப் படத்தில், ஆட்டுக்காகவே இருபது முப்பது இடங்களில் கைத்தட்டினார்கள் ரசிகர்கள். அதைப் பார்த்த ஆட்டுக்காரர் ரொம்பவே சந்தோஷப்பட்டிருப்பார்.

குடும்பத்துடன் வந்து படத்தைப் பார்த்தார்கள். குழந்தைகள் குதூகலமாகி படம் பார்த்து கரவொலி எழுப்பினர். பள்ளிக்குச் சென்று, ஆடு செய்த சாகசங்களையெல்லாம் நண்பர்களிடம் சொல்லிச் சொல்லி வியந்தார்கள்.

தேவரின் தண்டாயுதபாணி பிலிம்ஸ் தயாரித்த படம். ஆர்.தியாகராஜன் இயக்கினார். சங்கர் கணேஷ் இசையமைத்தார்கள். கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.

’ஒத்தையடிப் பாதையிலே ஒருத்தி நான் போகையிலே/ பித்தனைப்போல நித்தம் நித்தம் சுத்தி சுத்தி வந்தாயே... /

/சுத்தி சுத்தி வந்ததினால் சொந்தமாகி போனவளே/ சித்தம் குளிர இப்போ சேர்த்தணைக்கப் போறேண்டீ/ என் சித்தம் குளிர இப்போ சேர்த்தணைக்கப் போறேண்டீ’ என்று எழுதியிருப்பார் கவிஞர்.

’சேர்த்தணைக்கும் வேளையிலே சென்றவர்கள் வந்து விட்டால்/ பார்த்து சிரித்திடுவார் பழிபோட்டுப் பேசிடுவார்/ சிரிப்போரும் பழிப்போரும் சேர்ந்து வந்து வாழ்த்திடவே/ சிரிப்போரும் பழிப்போரும் சேர்ந்து வந்து வாழ்த்திடவே/ திருமுருகன் அருளாலே திருமணம்தான் செய்திடுவோம்’ என்று தேவருக்குப் பிடித்த முருகப்பெருமானை பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பார். ‘பருத்தி எடுக்கையிலே’ பாட்டு பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

’தாகம் தீர்ந்ததடி அன்னமே... என் மோகம் தீரவில்லை இன்னுமே’ என்ற பாடலும் மிகப்பெரிய ஹிட்டடித்தது.

’ஆத்துல மீன் புடிச்சு ஆண்டவனே உன்ன நம்பி அக்கரையில் வாழ்ந்த பொண்ணு/ இக்கரைக்கு வந்த கதை விடுகதை அது தொடர்கதை’ என்ற பாடலை பி.சுசீலா அழகாகப் பாடியிருப்பார்.

’தேன் கூடு நல்ல தேன் கூடு/ திருமகள் வாழ்ந்திடும் என் வீடு/ காணும்போது இனிக்கும்/ மதுரை கதம்பம் போலே மணக்கும்/ கண்ணைக் கவ்வி இழுக்கும்/ தன்னை உண்ண சொல்லி அழைக்கும்/ என்ற பாடலில்,

’வாடும் மனதை மூடும் கவலை மதுவில் கரைந்தே பறந்தோட/ வாழ்வில் நிம்மதி தேடும் செல்வ சீமான் மயங்கி உறவாட’ என்று பாடல் வரிகள் அமர்க்களமாக இருக்கும். சிவகுமாரும் ஜெயமாலினியும் நடித்தார்கள்.

‘ஆட்டுக்கார அலமேலு’ படம் தொடர்பாக இன்னும் பல சுவாரசியங்கள் இருக்கின்றன.

இந்தப் படத்துக்கு என்ன தலைப்பு வைப்பது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தார் தேவர். உதவியாளர்கள் ஒவ்வொரு தலைப்பைச் சொல்ல எதுவுமே திருப்தி தரவில்லை அவருக்கு. அப்போதெல்லாம், அதாவது அந்தக் காலத்திலெல்லாம் பழைய படங்கள், தியேட்டரில் ஒருவாரம், பத்துநாள் என்றெல்லாம் ஓடும். 90-கள் வரை இவையெல்லாம் நிகழ்ந்தன. பழைய படங்கள், அறுபதுகளின் படங்கள், எழுபதுகளில் வந்த படங்கள் என்றெல்லாம் தியேட்டருக்கு வரும்.

’ராமு’ ஆடு
’ராமு’ ஆடு

தேவர், காரில் வேடிக்கை பார்த்தபடியே போய்க்கொண்டிருந்தபோது, ஒரு போஸ்டரைப் பார்த்தார். சட்டென்று அவருக்குள் ‘ஆட்டுக்கார அலமேலு’ எனும் டைட்டில் வந்தது. அப்படி அவர் பார்த்த சினிமா போஸ்டர் ‘மாட்டுக்கார வேலன்’. எம்ஜிஆர் நடித்த ‘மாட்டுக்கார வேலன்’ ஈர்க்கவே, ‘ஆட்டுக்கார அலமேலு’ எனும் டைட்டில் உருவானது.

இன்னொரு தகவல்...

‘இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியாவுக்கு பதிலாக வேறு யாரையாவது போடலாம்’ என்று உதவி இயக்குநர்கள் சொல்ல, கோபமாகி மறுத்துவிட்டாராம் தேவர். ‘அந்தப் பொண்ணுதான் நடிக்கணும். நல்லாத்தானே நடிக்குது, அப்புறமென்ன...’ என்றார் தேவர். ஸ்ரீப்ரியா அப்போதுதான் வளர்ந்துகொண்டிருந்த தருணம். படத்தையும் கதையையும் சொன்னார்கள். கேட்டுக்கொண்டார் ஸ்ரீப்ரியா. படத்தின் தலைப்பு ‘ஆட்டுக்கார அலமேலு’ என்று சொல்ல குஷியாகி சம்மதம் தெரிவித்தார். அதற்குக் காரணம்... ஸ்ரீப்ரியாவின் நிஜப்பெயர் அலமேலு.

அப்போதெல்லாம் சிவகுமார் படிப்படியாக வளர்ந்துகொண்டிருந்த காலம். அப்போது புதிதாகப் படம் கிடைத்ததும், உடனே நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பார்த்து ஆசி பெறுவது சிவகுமாரின் வழக்கம். ’தேவர் பிலிம்ஸ்’ படத்தில் நடிக்கும் விவரத்தைச் சொல்லி, ’ஆட்டுக்கார அலமேலு’ படத்தில் நடிப்பதைச் சிவகுமார் சொல்லி முடிப்பதற்குள், சிவாஜி கேட்டாராம்... ‘நீ ஆடா நடிக்கிறியா? ஹீரோவா நடிக்கிறியா?’ என்று! இப்படியான குசும்பும் குறும்பும் நிறைந்த பேச்சுகள் சிவாஜியிடம் இருந்து சர்வசாதாரணமாக வரும் என்பதையும் சிவகுமார் மேடையில் பலமுறை சொல்லியிருக்கிறார்.

1977 நவம்பர் 10-ம் தேதி வெளியாகி சக்கைப்போடு போட்டது ‘ஆட்டுக்கார அலமேலு’. திருச்சியில் முதல் குளிர்சாதன திரையரங்கம் எனும் பெருமை பெற்ற ‘கலையரங்கம்’ தியேட்டரில் படம் பார்த்தபோது எனக்கு வயது ஒன்பது. படம் வெளியாகி, பல தியேட்டர்களில் நூறு நாள், 150 நாள், 200 நாள் என்றெல்லாம் ஓடி வசூல் குவித்தது. வசூல் மழையில் நனைந்தது ஆடு. எழுபதாவது நாளின்போது, ஒரு பிரத்யேக கார் ஒன்றைத் தயார் செய்தார் தேவர். காரின் ‘டாப்’ எடுக்கப்பட்டு, திறந்தபடியே இருந்தது. ஆடு நிற்பதற்கும் அமருவதற்கும் வசதியாக இடம் வைக்கப்பட்டது. அதேசமயம், மக்கள் பார்க்கும் வகையில் ஆடு நிறுத்தப்பட்டது.

சென்னையில் தொடங்கி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ‘ஆட்டுக்கார அலமேலு’ ஓடுகிற தியேட்டர்களில் இந்த ஆடு வந்து நின்றது. ரசிகர்கள் சுற்றிச்சுற்றி வந்து ‘ராமு’ ஆட்டினை ரசித்தார்கள். ஊருக்குள் ஊர்வலமாக வந்ததால் கிடைத்த ‘ஆடு தரிசனம்’... படம் பார்க்க இன்னொரு முறை இன்னொரு முறை என்று எல்லோரையும் ஈர்த்தது. பார்க்காதவர்களையும் பார்க்கவைத்தது. முதல்நாள் கூட்டம் போல, எண்பதாவது, 90-வது, 100-வது நாட்களைக் கடந்தும் கூட்டம் அள்ளியது.

’ஆட்டுக்கார அலமேலு’ படத்தின் வெற்றியால் தெலுங்கு, இந்தி என்றும் ‘ராமு’ ஆடு ரீமேக் செய்யப்பட்டு, இந்தி, தெலுங்கெல்லாம் பேசாமலேயே அங்கேயும் வெற்றி வாகை சூடியது.

ஒவ்வொரு தியேட்டருக்கும் ‘ஆடு’ வந்ததும் மக்கள் வெள்ளத்தில் ஆடு இருந்ததும் நாளேடுகளில் பரபரப்புச் செய்திகளாகின. இதையெல்லாம் பார்த்துவிட்டு கவிஞர் இன்குலாப் கவிதை ஒன்று எழுதினார்.

அந்தக் கவிதை இதுதான்..!

‘ஆடு கம்பீரமாக நின்றது.

மக்கள்தான்

மந்தையாகிப் போனார்கள்!’

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in