சினிமாவிற்கு வந்து 45 ஆண்டுகள்: முதியவர்களுடன் கொண்டாடிய நடிகர் மோகன்

சினிமாவிற்கு வந்து 45 ஆண்டுகள்:  முதியவர்களுடன் கொண்டாடிய  நடிகர் மோகன்

திரைப்படத்துறையில் 45-வது ஆண்டு அடியெடுத்து வைக்கும் நடிகர் மோகன் சென்னையில் உள்ள காப்பக முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இயக்குநர் பாலுமகேந்திரா முதன் முதலாக இயக்கிய 'கோகிலா' படத்தின் மூலம் கன்னட சினிமாவில் நடிகர் மோகன், கமல்ஹாசனுடன் அறிமுகமானார். இதன் பின் 'மூடுபனி', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'கிளிஞ்சல்கள்', 'காதோடு தான் நான் பேசுவேன்', 'கடவுளுக்கு ஒரு கடிதம்', 'தீராத விளையாட்டுப் பிள்ளை', 'பயணங்கள் முடிவதில்லை' உள்பட பல படங்களில் நடித்தார்.

ஒரே ஆண்டில் அதிக படங்களில் நடித்தவர் என்ற சாதனையை நடிகர் மோகன் செய்துள்ளார். 1984-ம் ஆண்டு இவர் நடித்த 15-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. இதில் பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்டின.

இதன் காரணமாகவே தமிழ் சினிமாவில் 'வெள்ளிவிழா நாயகன்' என்று மோகன் கொண்டாடப்பட்டார். இசை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இவரது படத்தின் பாடல்கள் ஹிட்டடித்ததால் இவருக்கு ஏராளமான ரசிகர் மன்றங்கள் இருந்தன. திரையிசையில் அதிக மேடைப்பாடல்களில் நடித்தவர் என்ற பெருமை மோகனுக்கு உண்டு. இதன் காரணமாகவே 'மைக் மோகன்' என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கப்பட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த மோகன், தற்போது 'ஹரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது சினிமா பயணத்தின் 45-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள அன்னை உள்ளம் முதியவர்கள் காப்பகத்தில் மோகன் இன்று, அன்னதானம் வழங்கினார்.

இதற்கான ஏற்பாட்டினை அவரது ரசிகர் மன்றத்தினர் செய்திருந்தனர். நடிகர் மோகன் ரீ என்ட்ரி ஆகும் 'ஹரா' திரைப்படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி, இசையமைப்பாளர் லியாண்டர் மார்டி உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in