ரஜினி, சரிதா இசைத்த ‘தப்புத்தாளங்கள்!’

ரஜினி, சரிதா இசைத்த ‘தப்புத்தாளங்கள்!’

ரஜினியின் ஆரம்பகாலப் படங்களை இன்றைய தலைமுறையினர் பார்த்திருக்கிறார்களா, தெரியவில்லை. அந்தப் படங்களிலெல்லாம் ரஜினி எனும் பண்பட்ட கலைஞனின் அபாரமாக நடிப்புத் திறமைவெளிப்பட்டிருக்கும். ரஜினியின் வேகமும் ஸ்டைலுமே அவரை வேறொரு பாதைக்கு கைப்பிடித்து இட்டுச் சென்றுவிட்ட நிலையில், ரஜினி அந்தப் பாதையில் பயணித்தார். குருநாதர் பாலசந்தர் படங்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு விதத்தில் அப்போது ரசிகர்களை ஈர்த்தன. அறிமுகமாகி அடுத்தடுத்து வந்த படங்களில் ‘தப்புத்தாளங்கள்’ படமும் முக்கிய இடம்பிடிக்கிறது.

’இதை ஒரு கதையா பண்ணினா நல்லாருக்காதே’ என்று ஒதுக்கிவைத்துவிடுவார்கள் பலரும். ‘இந்தக் கதையைப் படமா எடுத்தா, பார்க்கமாட்டாங்களே’ என்று புறக்கணித்துவிடுவார்கள். ‘இவங்களோட வேறொரு உலகத்தையும் வாழ்க்கையையும் மனசையும் காட்டினா, சினிமால எடுபடுமா?’ என்று யோசித்து, யோசிக்காமலேயே விட்டுவிடுவார்கள். ஆனால், அப்படி ஒதுக்கப்பட்டவர்களின் உணர்வுகளை, அவர்களின் மனங்களை, வலிகளை, வேதனைகளை, அவமானங்களை, ஆசைகளை, கனவுகளை தைரியமாகவும் உண்மையாகவும் உலவவிட்டார் பாலசந்தர். தமிழ்த் திரையில் ’தப்புத்தாளங்கள்’ மிக முக்கியமான படம்!

வார்த்தைக்குத் தக்க தாளமும் தாளத்துக்கு இணையான வார்த்தைகளும் கொண்டு ராககீதம் இசைக்கும்போது, கேட்போருக்கு அதுவொரு தனி சுகம். பேரானந்தம். ஆனால், தப்புத்தப்பான தாளங்கள் கொண்டவற்றை ரசிக்க முடியாதுதானே. ஆனால் இசையில் தப்பாக இல்லாமல், வாழ்க்கையே தப்புத்தப்பாக அமைந்துவிட்டால்... அங்கே என்னென்ன சோகங்கள், துயரங்கள், வேதனைகள், வலிகள். அப்படியான சகலத்தையும் ஒன்றிணைத்து நம்மை உலுக்கியெடுத்ததுதான் ’தப்புத்தாளங்கள்’. சமூகத்தில் ஒதுக்கிவைக்கப்பட்டவர்களின் வாழ்வியலை, இருட்டில் வாழ்பவர்களின் வாழ்க்கையைச் சொன்னதுதான் ‘தப்புத்தாளங்கள்’ படத்தின் தனித்துவம்!

என் பத்தாவது வயதில், திருச்சி வெலிங்டன் தியேட்டரில் தீபாவளியன்று இந்தப் படத்தைப் பார்த்தேன். ‘பாலசந்தர்’ பெயர் போட்டதும் தியேட்டரே கைத்தட்டியது. படம் தொடங்கிய பிறகு, ஒவ்வொருவரும் இறுகிய முகத்துடன் படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த வயதில் முழுவதுமாகப் புரியவில்லை என்றாலும் ரஜினியும் சரிதாவும் அன்றிரவு என்னைத் தூங்கவிடாமல் செய்தார்கள். அவர்களுக்காக, கடவுளிடம் வேண்டிக்கொண்டதெல்லாம்கூட நடந்திருக்கிறது.

பாலியல் தொழில் புரோக்கரில் இருந்து தொடங்குகிறது கதை. அவன் ’கிராக்கி’ பிடித்து கொண்டுபோய் விடும் இடம் சரிதாவின் வீடு. அவளின் பெயர் சரசு. அதேஊரில் சோமன் என்பவன் இருக்கிறான். ஆணாதிக்கத்தின் மொத்த உருவமும் குணமும் கொண்ட மூர்க்ககுணம் கொண்டவன். பெண்களை வெறும் போகப்பொருளாகப் பார்ப்பவன். அடிமைப்படுத்துகிறவன். அவர்களை ஆள நினைக்கிறவன். அப்படி அடிமைப்படுத்தி ஆள்வதே வெற்றி என எண்ணுகிறவன். அலுக்கும் வரை வீட்டில் வைத்து உல்லாசமாக இருப்பான். சலித்துவிட்டால், அவளுக்குப் பணமெல்லாம் கொடுத்து, அனுப்பிவிடுவான். அப்படி அனுப்புவதாக இருந்தால், அங்கே இன்னொருத்தி வந்திருக்கிறாள் என்று அர்த்தம். இப்படியொரு சைக்கோ குணம் இவனுக்கு!

’அவனை அடிக்கணும்’, ’இவனை உதைக்கணும்’. ’அந்தக் கூட்டத்தைக் கலைக்கணும்’, ’சோடாபாட்டில் வீசணும்’... இப்படி எந்தவொரு வன்முறையாக இருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை வைத்திருப்பவன் தேவு. முறுக்கு மீசையும் சைக்கிள் செயினும் பொடி டப்பாவுமாக வலம் வருபவன். ’தேவு’தான் ரஜினி.

புரோக்கர், பாலியல் தொழிலாளி சரசு, போகத்துக்கு பெண்களைப் பயன்படுத்தும் சோமன், அடித்து உதைத்து காசு பார்க்கும் தேவு… இவர்களே தப்புத்தாளங்கள்.இவர்களின் வாழ்க்கையே ‘தப்புத்தாளங்கள்’.

தேவு, சோமன் ஒருவகையில் சகோதரர்கள்தான். பல ஆண்களுக்குப் பிறந்தவன் தேவு. அவனின் அம்மா திருந்தி ஒருவனுடன் வாழ, அடுத்ததாகப் பிறக்கிறான் சோமன். அதனால் இருவரும் கிழக்கு மேற்கு. எலியும் பூனையும். கீரியும் பாம்பும்! சொல்லப்போனால், தேவுவை ஒருவிதமாகவும் சோமனை ஒருவிதமாகவும் வீடு நடத்தியதால்தான் இப்படியாக ரவுடியாக மாறிப் போயிருப்பான் தேவு.

ஒருமுறை... போலீஸ் துரத்த தேவு ஓடிவந்து ஒளியும் இடம் சரசுவின் வீடு. அப்போதுதான் அறிமுகமாகிக்கொள்வார்கள். வந்த வீடு எப்படியான வீடு என்று அவனுக்குத் தெரிகிறது. அவன் யார் என்பது அவளுக்குப் புரிகிறது. அங்கே சின்னதான நட்பு முளைக்கிறது. அது கொஞ்சம்கொஞ்சமாக வளர்ந்து, ஒருகட்டத்தில், ‘இந்தத் தொழிலே வேணாமே’ என்கிற முடிவுக்கு இருவரையுமே சிந்திக்கவைக்கிறது. அங்கே காதல் என்னவோ, சரியான தாளகதியில்தான் உதிக்கிறது. ‘தப்புத்தாளங்கள்’ என்பதைச் சரி செய்துகொள்ள இதுவே சரி என்று இரண்டுபேரும் முடிவெடுக்கிறார்கள்.

பாலியல் தொழிலை விடச் சொல்கிறான் தேவு. அடிதடியை விடு என்கிறாள் சரசு. இருவரும் தப்பில் இருந்து விலகுகிறார்கள். சேர்ந்து நல்வாழ்வுக்கான பாதையைத் தேடுகிறார்கள். ஆனால் நல்லவர்களை இந்தச் சமூகம் வாழவிடுவதில்லை. குறிப்பாக, திருந்தியவர்களை வாழவேவிடுவதில்லை. இந்தச் சமூகத்தின் தப்புத்தாளங்கள் இவை. இதைத்தான், இந்தச் சமூகத்தைத்தான் பொளேர் என்றும் சுளீர் என்றும் பளீரென்றும் அறைந்து அறைந்து அறைகூவல் விடுத்திருப்பார் கே.பாலசந்தர்.

சரிதா வீட்டில் முதன்முதலாக ரஜினி வந்திருப்பார். முதல் சந்திப்பிலும் அடுத்த சந்திப்பிலும் இருமிக்கொண்டிருப்பார் சரிதா. ’’ஏன் இருமிக்கிட்டே இருக்கே’’ என்று கேட்பார் ரஜினி. ’’இங்கே வர்றவங்க காசை மட்டும் கொடுத்துட்டுப் போறதில்லை. வியாதியையும்தான்’’ என்று சொல்லிமுடிக்கும் முன்பே, மீண்டும் இருமுவார். மிச்சமுள்ள பேச்சையும் இருமிக்கொண்டே முடிப்பார். தியேட்டரில் படம் பார்க்கப் போயிருக்கும் ரஜினி, அங்கே... திரையில் இருமல் மருந்து விளம்பரம் பார்ப்பார். சட்டென்று சரிதாவின் நினைவு வரும். உடனே மருந்துடன் சரிதா வீட்டுக்கு வருவார். நெகிழ்ந்து போவார் சரிதா.

விலைமகள் சரிதாவின் வீட்டின் கண்ணாடியில், ’மீண்டும் வருக’ என்று எழுதப்பட்டிருக்கும். ’’என்ன இது’’ என்பார் ரஜினி. விளக்கம் சொல்லுவார் சரிதா. பிறகு திருந்தியதும் அதை அழித்துவிடுவார். அடுத்து... பிறகொரு தருணத்தில், இருவரும் புரிந்துகொண்டு உடலால் இணையும் தருணம்… சட்டென்று எழுந்துகொள்ளும் சரிதா, ’’ஒருநிமிஷம்’’ என்று சொல்லிவிட்டு உள்ளேபோவார். டம்ளர் தண்ணீரை எடுப்பார். மாத்திரையை எடுப்பார். அது கரு உண்டாகாமல் தடுப்பதற்கான மாத்திரை. ஒவ்வொரு இரவுகளிலும் அவள் விழுங்குகிற மாத்திரை. பழக்கதோஷத்தில் மாத்திரையைச் சாப்பிடப் போனவள், சட்டென்று உணர்ந்து, மாத்திரையைச் சாப்பிடாமல் தேவுடன் கூடுவாள் சரசு. நமக்குத்தான் தொண்டை அடைத்துக்கொள்ளும்.

சரசுவின் வீடு முழுக்க, திரும்பிய இடமெல்லாம் விதம்விதமான குழந்தைப் படங்கள். ஒரு சராசரி வாழ்வுக்கு ஏங்குகிற உள்மனசின் வலியை, வசனமே இல்லாமல் நமக்கு உணர்த்திவிடுவார் இயக்குநர் பாலசந்தர். வீட்டுக்குள் குளித்துக்கொண்டிருக்கும் சரசு, ‘’அடுப்புல பால் வைச்சிருக்கேன். பொங்கியிருக்கும். இறக்கிவைச்சிரு’’ என்று தேவுவை அழைப்பார். தேவு பாலை இறக்கிவைத்துவிட்டுத் திரும்புவார். அங்கே வெற்றுடம்புடன் குளித்துக்கொண்டிருப்பார் சரசு. வெட்கத்தில் திரும்பிக்கொள்ளும் தேவு, ‘’சரசு, முதல்ல நீ வெட்கப்படக் கத்துக்கணும்’’ என்பார். படம் பார்ப்பவர்களை ஒருநிமிடம் என்னவோ செய்யும்; உலுக்கும்.

’’பணம் மட்டும் இருந்துருச்சுன்னா, தப்பே பண்ணாம வாழலாம். பணக்காரப் பொம்பளைங்க மாதிரி…’’ என்பார் சரசு. விழுந்துவிழுந்து சிரிப்பார் தேவு. ‘’ஒருத்தன் காசு கொடுத்து அடிக்கச் சொன்னான். வீடு புகுந்து அடிக்கப் போனேன். அங்கே செம அடி அவனுக்கு. ஆனா ஒருகட்டத்துல என்னை மடக்கிப் போட்டு கட்டிப்போட்டுட்டான். போலீஸுக்கு போன் பண்றேன்னான். உடனே அந்தப் பொம்பள, அவனை தனியாக் கூப்பிட்டா. ‘யாருக்கும் தெரியாம வந்தது அவன் மட்டுமில்ல, நீயும்தான். போலீஸு அதுன்னு போனா, ஊருக்கே தெரிஞ்சிரும்’னு சொன்னா’’ என்று சரசுவிடம் தேவு சொல்ல, இருவருமே சிரிப்பார்கள். அவர்களின் முந்தைய வாழ்க்கை முறையை, மிகச்சாதாரணமாக எடுத்துக் கொண்டு பரஸ்பரம் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்பதை மிக எளிமையாகவும் காமெடியாகவும் சொல்லியிருப்பார் பாலசந்தர்.

அதேபோல, சரசு தனக்கு நேர்ந்த அனுபவம் சொல்லுவாள். ‘’ஒருத்தன் வந்தான். எல்லாம் முடிஞ்சு வெளியேபோகும்போது இன்னொருத்தன் வந்தான். ரெண்டுபேரும் பாத்துக்கிட்டாங்க. பயங்கர சண்டை. ஏன் தெரியுமா? அந்த ரெண்டுபேரும் அப்பாவும் பையனும். இதுல என்ன கூத்து தெரியுமா. இங்கே வந்ததுக்காக சண்டை இல்ல. அப்பாவை விட பையன் அஞ்சு ரூபா கூடுதலாக் கொடுத்துட்டதுக்காக சண்டை’’ -இப்படி படம் நெடுக, சமூகத்தின் மீது சாட்டை சுழற்றி விளாசிக்கொண்டே இருப்பார் இயக்குநர்.

அந்த புரோக்கரின் மனைவி உடம்பு முடியாமல் படுத்திருப்பாள். கணவர் வெளியே போய்விட்டு வருவார். ’’ஏன் லேட்டு’’ என்று மனைவி கேட்பார். ’’அந்த ராயப்பேட்டை கோமளாவுக்கு உடம்பு முடியல. அதான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போயிட்டு வந்தேன்’’ என்பார். ‘’எனக்கு உடம்பு முடியல. கூட்டிட்டுப் போகலாம்ல’’ என்பார் மனைவி. ‘’நீயும் அவளும் ஒண்ணா. அவதான் தொழிலு. மூலதனம். இது குடும்பம்’’ என்பார். கல்லூரியில் படிக்கும் மகளிடம் கறாராக நடப்பார் புரோக்கர் தந்தை. ஆனால், அந்தப் பெண், வேறொரு புரோக்கர் மூலமாக, இந்தத் தொழிலுக்கு வந்திருப்பார். மகளைப் பார்த்து நொறுங்கிப் போய்விடுவார். மானம், கெளரவம் பெரிதென அவர் உணரும் தருணம் உலுக்கிவிடும் நம்மை! அடுத்த காட்சியில், புரோக்கர், மனைவி மகளுடன் தற்கொலை செய்துகொண்டிருப்பார்.

’தொழில்’ செய்யும்போது கோயில் வாசலில் இருக்கிற பிச்சைக்காரர்களுக்கு வரிசையாகக் காசு போடுவார் சரிதா. ’மகாலக்ஷ்மி’ என்று வாயாரப் புகழ்ந்து தள்ளுவார்கள். திருந்திய பிறகு அவரிடம் காசு இருக்காது. காசு போடாதவளைப் பார்த்து ’மூதேவி’ என்பார்கள். ’அந்தத் தொழில் செய்யும் போது, மகாலக்ஷ்மி என்றார்கள். திருந்தி வாழும்போது மூதேவி என்கிறார்கள்’ என்று திரையில் வசன அட்டை காட்டப்பட்டிருக்கும். இப்படி பல இடங்களில் வசன அட்டைகள் வந்து அதகளம் பண்ணும்.

பாலியல் தொழிலாளரின் வீட்டு வாசலில் அடிக்கப்படும் சைக்கிள் பெல், வாசலில் ‘ஜாக்கிரதை, நாய் கடிக்காது’ எனும் வாசகம், ரஜினி போடும் மூக்குப்பொடி, கிழிந்த உள்பாவாடையைக் கண்டு பதறுகிற ரஜினி, ஓடிச்சென்று புதுப்பாவாடை வாங்கி வருவதில் தெரிகிற அன்பு, நடுவீட்டில் புல்லட்டை ஓட்டிக்கொண்டே பேசுகிற சோமன், ‘ஏய் இவளே’ என பெண்களைக் கூப்பிடுகிற ஆணாதிக்க வெறி… என்று பாலசந்தரின் கதாபாத்திர உருவாக்கங்கள், ஒரு நாவலைப் பார்ப்பது போன்றிருந்தது. வீட்டின் ஜன்னலிலிருந்து இந்த உலகையும் வலி கொண்ட சில மனிதத் துயரங்களையும் பார்ப்பது போலான துக்கத்தைக் கொடுத்தது.

ரஜினியின் ஆகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படம். சரிதாவுக்கு இதுதான் முதல் படம். இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க மிகப்பெரிய துணிச்சலும் திறமையும் தைரியமும் அர்ப்பணிப்பும் வேண்டும். முக்கியமாக பாலசந்தர் எனும் படைப்பாளி மீது வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையே காரணமாக இருக்கும். வாழ்ந்திருப்பார் சரிதா. ஆண் பெண் பேதமின்றி எல்லார் மனங்களையும் தன்வசப்படுத்தியிருப்பார். கமல் ஒரேயொரு காட்சியில் வந்து கிச்சுகிச்சு மூட்டியிருப்பார்.

பார்த்தவர்கள் நல்ல படம் என்றுதான் சொன்னார்கள். ’ஐயோ...’ என்று பதறிப் பரிதாபம் காட்டினார்கள் தேவுகளுக்காகவும் சரசுகளுக்காகவும்! ஆனால் படம் பார்க்க பெரும்பான்மையானவர்கள் வரவில்லை என்பதுதான் சோகம். சமூக சோகம். கண்ணதாசனின் வரிகள், கதைக்கு ஜீவனாகவே அமைந்தன. ’தப்புத்தாளங்கள், வழி தவறிய பாதங்கள்’, ’என்னடா பொல்லாத வாழ்க்கை’, ‘அழகான இளமங்கை’ என்று பாடல்களையெல்லாம் ஹிட்டாக்கிக் கொடுத்தார் இசையமைப்பாளர் விஜயபாஸ்கர். ‘என்னடா பொல்லாத வாழ்க்கை’ என்ற பாடலை அவ்வளவு ஸ்டைலாகப் பாடியிருப்பார் எஸ்.பி.பி. அதிலும் ‘இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?’ என்ற வரிகளை அலட்டிக்கொள்ளாமல் பாடியிருப்பார்.

1978 அக்டோபர் 30-ம் தேதி தீபாவளித் திருநாளில் வெளிவந்த அணுகுண்டுதான் ’தப்புத்தாளங்கள்’. வெளியாகி, 44 ஆண்டுகளாகின்றன. சரிதா எனும் நடிப்பு ராட்சசியை நமக்குத் தந்த படம் இது!

இப்படியொரு படம் இனியும் வர, இன்னும் எத்தனைக் காலமாகுமோ?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in