தமிழ் சினிமாவில் யானையை வைத்து ஏகப்பட்ட படங்கள் வந்திருக்கின்றன. தேவர் பிலிம்ஸ் எத்தனையோ மிருகங்களை வைத்து படங்களை எடுத்திருந்தாலும் யானைகளைப் படமெடுத்துத்தான் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது இந்த நிறுவனம்.
ஏற்கெனவே தமிழில் எடுத்த ‘தெய்வச்செயல்’ படத்தைக் கொஞ்சம்... கொஞ்சமென்ன கொஞ்சம் நன்றாகவே மாற்றி இந்தியில் தர்மேந்திராவை வைத்து ‘மா’ என்ற படத்தை ஹிட்டாக்கினார் சாண்டோ சின்னப்பா தேவர். அதேபோல், அவர் தயாரிப்பில் வெளிவந்த ‘ஹாத்தி மேரா சாத்தி’யும் அங்கே ஹிட்டடித்தது. அந்தப் படத்தை ரீமேக் செய்து எம்ஜிஆரையும் கே.ஆர்.விஜயாவையும் வைத்து எடுக்கப்பட்ட ‘நல்ல நேரம்’ நன்றாகவே கவனம் ஈர்த்தது. தர்மேந்திரா நடித்த ‘மா’ படத்தைத்தான் மீண்டும் தமிழுக்குக் கொண்டு வந்து ரஜினியை வைத்து மிகப்பெரிய வெற்றியைச் சந்தித்தார் தேவர்.
அம்மாவுக்கு அடங்கி நடக்கிற பிள்ளையாக ரஜினி. வேட்டைக்குச் செல்வதும் வேட்டைக்குச் சென்று, புலிகளையும் மிருகங்களையும் பிடித்து விற்பனை செய்வதும்தான் ரஜினியின் தொழில். ’இந்தத் தொழிலே வேண்டாம், விட்டுவிடு’ என்று அம்மா அஞ்சலிதேவி, ரஜினியிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார். அவரும் ‘இதோ அதோ...’ என்று டிமிக்கி கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.
இந்த நிலையில், தாய் யானையிடம் இருந்து குட்டி யானையைப் பிரித்து வண்டியில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு வருகிறார். தாய் யானை ஆவேசமாகி, வீடு தேடி கண்டுபிடித்து வர, அங்கே அம்மா மாட்டிக்கொள்கிறார். ரஜினியின் கண்முன்னே அம்மா இறந்துபோகிறார். இறக்கும்போது, ‘’தாய் யானையிடம் குட்டி யானையைச் சேர்த்துவிடு’’ என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறார் அம்மா.
குட்டி யானையோ ரஜினிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஓடிவிடுகிறது. தன் காதலி ஸ்ரீப்ரியாவின் துணையுடன் அந்தக் குட்டி யானையைத் தேடி தாய் யானையுடன் ரஜினி சேர்ப்பதுதான் ‘அன்னை ஓர் ஆலயம்’ படம்!
எண்பதுகளின் இறுதி வரை, மிருகங்களை வைத்துப் படமெடுத்தால் குஷியாகிப் பார்ப்பார்கள் ரசிகர்கள். அது எம்ஜிஆர் காலத்தில் இருந்தே தொடர்ந்து கொண்டிருப்பதுதான். இங்கே, இந்தப் படத்திலும் அது சாத்தியமாகி, மிகப் பிரம்மாண்டமான வெற்றியைக் கொடுத்தது.
தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவில் கலைஞானமும் இருந்தார். ரஜினியை வைத்து ‘பைரவி’ படம் எடுக்கும் விஷயத்தை தேவரிடம் சொல்ல, ‘கையைச் சுட்டுக்காதே. படம் ஓடாது’ என்று சொல்லிவிட்டாராம் தேவர். ஆனால் படம் ஓடிய பிறகு, தேவர் அழைத்து, ‘’உன் கணக்கு ஜெயிச்சிருச்சுய்யா. நான்தான் தப்புக்கணக்கு போட்டுட்டேன். அந்தத் தம்பியை நம்ம படத்துல நடிக்கிறதுக்கு கூட்டிட்டு வாய்யா’’ என்று கலைஞானத்திடம் தேவர் சொல்ல, அப்படி தேவர் பிலிம்ஸில் ரஜினி நடித்த முதல் படமாக வந்தது ‘தாய் மீது சத்தியம்’.
மிகப்பெரிய ஹிட்டடித்த பின்னர், மீண்டும் ரஜினியை வைத்து எடுத்ததுதான் ‘அன்னை ஓர் ஆலயம்’. அதிலும் ரஜினி - ஸ்ரீப்ரியா. இதிலும் ரஜினி - ஸ்ரீப்ரியா. ஆனால் ஒரு மாற்றம்... ‘தாய் மீது சத்தியம்’ படத்துக்கு இசை சங்கர் கணேஷ். ‘அன்னை ஓர் ஆலயம்’ படத்துக்கு இசை இளையராஜா.
ரஜினி, ஸ்ரீப்ரியா, மோகன்பாபு, ஜெயமாலினி, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன் முதலானோர் நடித்திருந்தார்கள். காட்டுப்பகுதிகளும் விலங்குகளும் மிரட்டலான காட்சிகளாக எடுக்கப்பட்டிருக்கும். குட்டி யானையின் லொள்ளு செம கலாட்டாவாக இருக்கும். அதிலும் கழுத்தில் உள்ள மணிச்சத்தத்தைக் கேட்டு, ரஜினி தன்னைப் பிடித்துவிடக்கூடாது (!) என்று மணியை வாயில் கவ்விப்பிடித்தபடி குட்டி யானை நகரும்போது தியேட்டரில் விசில் பறந்தது.
அம்மா கதாபாத்திரத்தில் அஞ்சலிதேவி அசத்தியிருந்தார். தெலுங்கில் டப் செய்யப்படுகிற திட்டத்துடன் எடுக்கப்பட்டதால், அஞ்சலிதேவி, மோகன்பாபு என்றெல்லாம் தேர்வு செய்திருந்தார்கள்.
யானையின் நடிப்பு சூப்பர். சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பு யதார்த்தம். ஸ்ரீப்ரியாவின் கிளாமர் கலந்த நடிப்பு கச்சிதம். காமெடியும் அமர்க்களம். எல்லாவற்றையும் விட இளையராஜாவின் இசையில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
’அம்மா நீ சுமந்த பிள்ளை’ என்று ரஜினிக்காக, டி.எம்.எஸ். பாடியிருப்பார். ’மலையருவி மணிக்குருவி ஹோய்ய்ய்ய்ய் ஹோய்’ என்ற பாடலை ஷைலஜா பாடியிருப்பார். கிட்டத்தட்ட, அந்தக் காலத்து ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடல் போல் அமைந்திருந்தது இந்தப் பாட்டு. பாடலினூடே வருகிற இசையும் வயலினும் அசத்தியெடுக்கும்.
’நிலவு நேரம்... இரவு காயும் வானிலே ஆயிரம் வெள்ளி’ என்ற பாடல் ஜெயமாலினிக்கு. கிளப் டான்ஸ் பாடல். பி.சுசீலா பாடியிருப்பார். கிளப் டான்ஸ் என்றாலும் அட்டகாசமான மெலடியாகக் கொடுத்திருப்பார் இளையராஜா. ’நந்தவனத்தில் வந்த குயிலே... எந்தன் மனத்தில் நின்ற மயிலே / நான் இருக்கையில் நடுக்கமென்ன’ என்கிற பாடலை ஸ்டைலாகப் பாடியிருப்பார் எஸ்பிபி கேட்டால் நம் கால்கள் சும்மா இருக்காது. தலையாட்டிக்கொண்டே ரசிப்போம். புல்லாங்குழல் ஆரம்பிக்கும். பிறகு வயலின் சேரும். மீண்டும் புல்லாங்குழல் குழையும். ‘நதியோரம் நதியோரம் நீயும் ஒரு நாணலென்று நூலிடை என்னிடம் சொல்ல, நானந்த ஆனந்தம் என் சொல்ல...’ என்ற மெலடி பாட்டில் கிறங்கடித்திருப்பார் இளையராஜா. எஸ்பிபி-யும் சுசீலாம்மாவும் விளையாடியிருப்பார்கள். நடுவே ‘லுலுலுலு லுலுலுலுலுலுலு’ எனும் ஹம்மிங் நம் மனதைக் கொள்ளையடித்துவிடும். எல்லாப் பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.
அதேபோலத்தான் ‘அப்பனே அப்பனே பிள்ளையாரப்பனே’ பாடலும் இருவரும் சேர்ந்து பாடியிருப்பார்கள். பாடலைக் கேட்கும்போதெல்லாம் குஷியாகிவிடுவோம். ரஜினி, ஸ்ரீப்ரியா, அந்த குட்டி யானை மூவரின் நடிப்பும் அசத்தல். சென்னை தேவி தியேட்டர் காம்ப்ளக்ஸுக்குள் நுழைவதும் படிகளில் ஏறுவதும் திரையைப் பார்ப்பதும் என குட்டி யானை அமர்க்களம் பண்ணியிருக்கும்.
இந்தியைப் போலவே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ரஜினியின் திரையுலகப் பயணத்தில் மிக முக்கியமான படமாகவும் சில்வர் ஜூப்ளி படமாகவும் அமைந்தது ‘அன்னை ஓர் ஆலயம்’. 1979 அக்டோபர் 19-ம் தேதி தீபாவளிக்கு வெளியானது இந்தப் படம். வெளியாகி 43 ஆண்டுகளாகிவிட்டன. இன்றைக்கும் விநாயக சதுர்த்தி முதலான விழாக்களில், ஆட்டோக்கார நண்பர்கள் நடத்தும் விழாக்களில், ‘அப்பனே அப்பனே பிள்ளையாரப்பனே’ பாடல் இடம்பெறும். அதேபோல், இரவை இன்னும் இதமாக்கும் வகையில் ‘நதியோரம்...’ பாடல் சில்லென்ற தென்றல் வீசும் நதிக்கரைக்கே நம்மைக் கூட்டிச் சென்றுவிடும்!