தண்ணீர்ப் பிரச்சினையைக் கண்ணீருடன் சொன்ன ‘தண்ணீர்... தண்ணீர்’

41 ஆண்டுகளில் வணிகமயமாகிவிட்ட தண்ணீர் உலகம்

தண்ணீர்ப் பிரச்சினையைக் கண்ணீருடன் சொன்ன ‘தண்ணீர்... தண்ணீர்’

இந்த தீபாவளிக்கு கார்த்தி நடித்து வெளியான ‘சர்தார்’ திரைப்படம், தண்ணீர் வியாபாரமாகிவிட்டதை, கார்ப்பரேட் வணிகத்துக்குள் தண்ணீர் வந்து விட்டதை வேதனையுடன் பதிவு செய்திருக்கிறது. எத்தனையோ பிரச்சினைகளை தமிழ் சினிமா பொளேரென முகத்தில் அறைந்து சொல்லியிருக்கிறது. எல்லாப் பிரச்சினைகளும் அந்தந்த சூழலுக்குத் தக்கபடி மனதில் பதிந்துவிடுகின்றன. இருப்பதிலேயே தலையாய பிரச்சினை, தண்ணீர்தான். அதனால்தான் ’நீரின்றி அமையாது உலகு’ என்று சொல்லிவைத்திருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட தண்ணீர்ப் பிரச்சினையை, தமிழ் சினிமாவில் பகீரெனச் சொன்னதுதான் ‘தண்ணீர்... தண்ணீர்’.

இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய திரைப்படம். கோமல் சுவாமிநாதனின் கதை வசனத்தில், பல விருதுகளைப் பெற்ற கதை இது. ‘தண்ணீர்’ பிரச்சினையை அப்படியே சினிமாவாக்கினார் பாலசந்தர். இன்று வரைக்கும் தண்ணீரின் தேவையை, தண்ணீரின் அவலத்தை ‘தண்ணீர்... தண்ணீர்...’ அளவுக்கு எந்தப் படமும் சொல்லவில்லை.

கோவில்பட்டிக்கு பக்கத்தில் இருக்கிற அத்திப்பட்டி எனும் கிராமம்தான் கதை மாந்தர்களின் பூமி. வறண்டு கிடக்கிற குளம் குட்டைகள், பாளம்பாளமாகப் பிளந்துகிடக்கிற ஏரி குளங்கள், காய்ந்த மரங்கள், வெயிலின் உக்கிரம், தாகத்துக்கு தண்ணீரில்லாத கிராமம் என காட்சிக்குக் காட்சி, பளார்பொளேரென அறைந்து ரசிகர்களின் உள்ளுக்குள் இருக்கிற வாக்காளர்களுக்கு அறைகூவல் விடுத்துக்கொண்டே இருக்கும் படம்!

தண்ணீரைச் சுரண்டும் நிலப்பிரபுத்துவம், தண்ணீர் கேட்டு மனு கொடுக்கும் பரிதாப மக்கள், அந்த மனுக்களை அலட்சியம் செய்யும் அதிகாரிகள், அதிகாரிகளைக் கண்டுகொள்ளாத அரசாங்கம் என சகலத்தையும் தோலுரித்து முகத்தில் அறைந்திருக்கும் இந்தப் படம், இன்னும் பல நூற்றாண்டுகளுக்கான அத்தியாவசியமான, அவசியமான படம் ப்ளஸ் பாடம்!

‘மூணு மாசம் நிலத்துல வேலை செஞ்சிட்டு, வெள்ளாமைக்குப் பொறவு, ஒம்பது மாசம் காலாட்டிக்கிட்டு, அரிசிச்சோறு தின்ன காலமெல்லாம் போச்சு புள்ள’ என்றொரு வசனம். விவசாயிகள் ஒருகாலத்தில் எப்படி இருந்தார்கள், இப்போது எவ்வளவு பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்லிவிடும்.

‘அமாவாசைக்கு அமாவாசைதான் அம்மனுக்கு அபிஷேகம் பண்றேன். தண்ணி வேணும்ல...’ என்பார் பூசாரி. ‘காசைத் திருடினாத்தான் திருட்டுங்கறாங்க. பொழைப்பைத் திருடுறவனுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுக்குறாங்க’ என்று அரசியல்வாதிகளை இவ்வளவு தைரியமாக எவரும் சாடிவிடமுடியாது. சாட்டையடி கொடுக்கவும் முடியாது.

செவந்தி. கதையின் நாயகி. சரிதா. எங்கோ தொலைதூரம் சென்று, வேகாத வெயிலில் மூன்று நான்கு குடங்களில் தண்ணீர் கொண்டுவருவார். ‘அம்மனுக்கு அபிஷேகம் பண்ணணும். தண்ணி குடேன்’ என்பார் பூசாரி. திட்டிக்கொண்டே, அலுத்துக்கொண்டே, ‘சாபம்லாம் கொடுத்துடாதே.’ என்று தண்ணீர் கொடுப்பார். ஒரு குடம் தண்ணீரை நிரப்பிக்கொண்டு, அதை அம்மனுக்கு அபிஷேகிக்காமல், சத்தமே இல்லாமல், பொண்டாட்டியிடம் கொடுப்பார். ‘ஏதுய்யா’ என்பார் அவர் மனைவி. ‘எல்லாம் சாமி குடுத்துச்சு’ என்பார் பூசாரி. இந்த வசனத்தில்தான் எத்தனை நக்கல். எள்ளல். நையாண்டி.

தண்ணீரின்றி தவிக்கும் ஊருக்குள்ளே சுரக்கும் காதல் ஒன்று. அந்த ஜோடி குதூகலமாகக் காதலிக்கும். ஒருநாள் இரவு, யாருக்கும் தெரியாமல், அந்தப் பெண் காதலனைக் கூப்பிடுவாள். இருவரும் ஊரைத்தாண்டி ஒதுக்குப்புறமான தோப்புக்குள் செல்வார்கள். ‘என்ன ஏது’ என்று நாம் விதுக்கெனப் பார்த்திருக்கும் சூழலில், அங்கே இரண்டுகுடம் தண்ணீர். ‘அப்பாடா... குளிச்சி எவ்ளோ நாளாச்சு? உடம்பை தண்ணில நனைக்கறதே ஒரு சுகம்தான்’ என்று காதலன் குளிப்பான். அங்கே, தண்ணீருடன் சாதிப் பிரச்சினையும் பேசப்படும்.

ஊரில் ஒரு வாத்தியார். ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ என்று பாடமெடுப்பார். ‘ஏன் சார். நம்மூர்லதான் தண்ணியே இல்லியே. அப்புறம் எப்படி கசக்கிக் கட்டிக்கறது’ என்பான் ஒரு பொடியன். ‘சரிசரி... நாம சரித்திரம் படிப்போம்’ என்று சொல்லிவிட்டு, ’நம் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து எத்தனை வருஷமாச்சு?’ என்பார். திரும்பத்திரும்ப இதே கேள்வியை கேட்டுக்கொண்டே இருப்பார். அவர்களும் பதில்களைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். சுதந்திரம் கிடைத்தும் தேசத்துக்கு எந்தவொரு பலனும் இல்லை என்பதை அந்த வசனம் சொல்லிவிடும்.

இன்னொரு நாள்... வாத்தியார் பேப்பர் படித்துக்கொண்டிருப்பார். ‘வாத்தியாரய்யா. பேப்பர்ல என்ன விசேஷம்’ என்று ஒருவர் கேட்பார். ‘ம்... அத்திப்பட்டிக்குத் தண்ணி வரப்போவுதாம். கங்கையையும் பிரம்மபுத்ராவையும் இணைக்கப்போறாங்களாம். அந்தத் தண்ணியை நெல்லை மாவட்டம் அத்திப்பட்டிக்கு கொடுக்கப்போறாங்களாம்’ என்று வாத்தியார் கேலியாகச் சொல்வார். அதுதெரியாமல், ஊரே திரண்டு ஆடத்தொடங்கிவிடும். ‘நிறுத்துங்கடா... உங்க பேரப் பசங்க காலத்துல கூட இங்கே தண்ணி வராது’ என்பார் வாத்தியார். நதிகள் இணைப்பு அறிவிப்பு, வெறும் வெத்துவேட்டு அரசியல் என்பதை அப்போதே அடித்துச் சொல்லியிருக்கிறார் கே.பாலசந்தர்.

கோவில்பட்டிக்கு மந்திரி வருகிறார். மனு கொடுப்போம் என அத்திப்பட்டி மக்கள் முடிவு செய்வார்கள். அம்மனிடம் மனு வைத்து வேண்டிக்கொள்வார்கள். பிறகு, மந்திரியிடம் தண்ணீர் பிரச்சினை குறித்த மனுவைக் கொடுப்பார்கள். மந்திரி, பி.ஏ.விடம் கொடுப்பார். பி.ஏ. கலெக்டரிடம் அந்த மனுவைக் கொடுப்பார். கலெக்டர், ஆர்டிஓவிடம் கொடுப்பார். ஆர்டிஓ, தாசில்தாரிடம் கொடுப்பார். தாசில்தார் டபேதாரிடம் கொடுப்பார். இந்தப் படத்தைப் பார்க்கும் அரசு அதிகாரிகள், வெட்கித்தான் போவார்கள்.

படத்தில் சரிதாவின் மீது, மழைத்துளி ஒன்று விழும். இன்னொரு முறை மூக்கில் விழும். அடுத்த முறை தோளில் விழும். அவ்வளவுதான்... ஊரையே கூட்டிவிடுவார் சரிதா. மழைத்துளிக்கு ஊரே கொண்டாட்டமாகிவிடும். எல்லோரும் சேர்ந்து பாட்டும்கூத்துமாக இருப்பார்கள். வானம் பார்ப்பார்கள். வழக்கம் போலவே மழை தப்பிவிடும். இயற்கையும் மாறி, மழையும் தப்பிவிட்ட அவலத்தையும் ஏக்கத்தையும் ஒரு சோகக்கவிதையாய் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர்.

ஜெயிலில் இருந்து தப்பி வந்திருக்கும் குற்றவாளி ஒருவன், அந்த ஊருக்கு வருவான். உணவுப்பொட்டலம் பிரித்து சாப்பிடுவான். விக்கிக்கொள்ளும். தண்ணீர் கேட்பான். ‘அதெல்லாம் இங்கே இல்ல’ என்பார் ஒருவர். இன்னொருவரோ, ‘இந்த ஊர்ல பொஞ்சாதியைக் கேட்டாக் கூட தப்பு இல்ல. குடிக்க ஒரு சொம்பு தண்ணி கேட்டா, அவ்ளோதான்’ என்பார். படம் பார்த்துக்கொண்டிருக்கிற பாமர ரசிகன் கூட கலங்கிப்போய்விடுவான்.

அந்தக் குற்றவாளி, அந்த ஊரில் இருக்க முடிவு செய்து, ஊர்க்காரர்களிடம் சம்மதம் கேட்பான். பத்தும்பத்தும் இருபது மைல் தள்ளி இருக்கிற தேனூத்தில் இருந்து ஊருக்கு தினமும் தண்ணீர் எடுத்து வருகிறேன் என்பான். ‘குடிக்க தண்ணி கிடைச்சா மட்டும் போதுமா?’ முகம் கழுவ தண்ணி வேணுமே’ என்பான் ஊரைச் சேர்ந்த இளந்தாரிப்பையன். ‘ஆமா, முகம் கழுவுற ஆடம்பரத்துக்கெல்லாம் தண்ணி கெடயாது’ என்பார் பெரியவர் ஒருவர்.

’குற்றவாளியின் பெயர் வெள்ளைச்சாமி. பிடித்துக் கொடுத்தால் 5 ஆயிரம் ரூபாய் பரிசு’ என அறிவிப்பைப் பார்த்துவிடுவார்கள். ‘என் அப்பா வாங்கிய கடனுக்கு, நிலமும் போச்சு. நானும் கொத்தடிமையா வேலை பாத்தேன். எம் பொஞ்சாதியையும் எடுத்துக்கிட்டான். அதான் கொன்னேன்’ என்று விளக்கம் சொல்லுவான். கந்துவட்டி, கொத்தடிமை, பாலியல் வன்கொடுமை என்பதையும் படம் சொல்லியிருக்கும். பிறகு ஊரே சூடம் ஏற்றி சத்தியம் செய்து, குற்றவாளியைக் காப்பதாக உறுதி கொடுக்கும்.

கோமல் சுவாமிநாதன்
கோமல் சுவாமிநாதன்

ஓட்டு கேட்க வரும் அரசியல்வாதி, சாதி பற்றிப் பேசுவார். சாதி அரசியல். முதலாளி, தொழிலாளிகளின் வயிற்றில் அடிப்பார். கம்யூனிஸம். இப்படி, படம் நெடுக சமகால அரசியலை விமர்சித்திருப்பார்கள்.

தேர்தல் வரும். பிரச்சாரத்துக்கு வருவார்கள். தண்ணீர்ப் பிரச்சினையைச் சொல்லுவார்கள். ‘இந்த ஊர்ல எல்லாரும் ஓட்டுப்போடாம இருந்துருவோம்’ என்று சொல்லி, முடிவில் உறுதியாக இருப்பார்கள். தேர்தல் நாளில், யாரும் ஓட்டுப்போட மாட்டார்கள். அப்போது ஒரேயொருவர் மட்டும் பூத்துக்குள் செல்வார். ஊரே கொதித்துப்போகும். அந்த ஆள், உள்ளே போய், ‘கொஞ்சம் தண்ணி குடிச்சிக்கிறேன்’ என்று மடக் மடக்கென தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு ஓட்டுப் போடாமல் வெளியே செல்வார். தியேட்டரே தெறித்துக் கைத்தட்டும்.

சரிதாவின் கணவர் ராதாரவி. போலீஸ் வேலை. குழந்தை பெற்றுக்கொண்டதால் ஆறேழு மாசம் அப்பா வீட்டில் இருப்பார் சரிதா. அந்த ஊர்தான் அத்திப்பட்டி. மாமியாரம்மா வருவார். அவரிடம் சிடுசிடுவென ஏதேதோ பேசி சண்டையாக்கி, அவரை அனுப்பிவைத்துவிடுவார் சரிதா. புருஷன் போலீஸ். அவன் வந்தால், வெள்ளைச்சாமியைப் பார்த்துவிடுவான். பிறகு ஊருக்கு தண்ணீர் கிடைப்பது நின்றுவிடுமே என பொதுநலமாகச் சொல்வார் சரிதா. நெகிழவைக்கும் காட்சி இது. ராதாரவியின் ஆரம்ப காலப் படங்களில் இது முக்கியமான படம்.

தேர்தலைப் புறக்கணித்த ஊரைப் பேட்டியெடுக்க பத்திரிகைக்காரர் வந்திருப்பார். ‘இங்கே எந்தப் பொண்ணும் கற்பழிக்கப்படலியே. ஏன் வந்தீங்க?’ என்பார் வாத்தியார் ராமன். ‘கொலை, கொள்ளைன்னாத்தானே பேப்பர்ல எழுதுவீங்க’ என்று கிண்டலடிப்பார். பிறகு அவரே சொல்லுவார். ‘மந்திரிகிட்ட மனு கொடுத்தோம். அவர் பி.ஏ.கிட்ட கொடுத்தார். அவரு கலெக்டர்கிட்ட கொடுத்தார். அவரு பிளாக் டெவலப்மெண்ட் ஆபீசர்கிட்ட கொடுத்தார். அவரு கிராம சேவக்கிட்டக் கொடுத்தாரு. அவர் வந்து பாத்துட்டு, ‘வாஸ்தவம். அத்திப்பட்டில தண்ணி இல்ல’ன்னு எழுதி ஆர்டிஓகிட்ட கொடுத்தார். அவரும் ‘வாஸ்தவம், அத்திப்பட்டில தண்ணி இல்ல’ன்னு எழுதி, கலெக்டர்கிட்ட கொடுத்தாரு. கலெக்டரும் ‘வாஸ்தவம், அத்திப்பட்டில தண்ணி இல்ல’ன்னு மந்திரி பி.ஏ.கிட்ட கொடுத்தாரு. பி.ஏ.வும் ‘வாஸ்தவம், அத்திப்பட்டில தண்ணி இல்ல’ன்னு மந்திரிக்கு நோட் போட்டுக்கொடுத்தாரு. மந்திரியும் சட்டசபைல, ‘வாஸ்தவம். அத்திப்பட்டில தண்ணி இல்ல’ன்னு பேசினாரு. இதையெல்லாம் பண்றதுக்கு அஞ்சு வருஷமாச்சு அவங்களுக்கு’ என்ற போது சிரிப்பதா, தலையிலடித்துக்கொள்வதா என்று கோபமும் ஆத்திரமும் வரும் நமக்கு!

கடைசியாக, நாமே ஒரு கால்வாய் வெட்டுவோம் என ஊர் தீர்மானிக்கும். அதைச் செயல்படுத்தும்போது அரசாங்கம், அதை எதிர்க்கும். இதனிடையே போலீஸ் ராதாரவி, வெள்ளைச்சாமியைப் பார்த்துவிடுவார்.பிடித்து இழுத்துச் செல்வார். ஆனால் ‘கால்வாய் வெட்டுற வேலை முக்கால்வாசி முடிஞ்சிருச்சு. இன்னும் கொஞ்சம் இருக்கு. முடிச்சிட்டு நானே சரணடையுறேன்யா’ என்பான் வெள்ளைச்சாமி. கைது செய்வதற்கு ஊரும் தடுக்கும்.

கே.பாலசந்தர்
கே.பாலசந்தர்

இதையெல்லாம் கடந்து, வெள்ளைச்சாமி கைது செய்து அழைத்துச்செல்லப்பட்டானா? அந்த ஊருக்கு கால்வாய் வெட்டும் பணி முடிந்ததா, அத்திப்பட்டி கிராமத்துக்கு தண்ணீர் கிடைத்ததா? என்பதுடன் படம் நிறைவடையும். குடத்தைத் தூக்கிக் கொண்டு, தண்ணீருக்காக 20 கிலோமீட்டர் பயணிக்கும் சரிதாவைக் காட்டியபடியே படம் முடியும். நமக்குத்தான் தொண்டை அடைத்துக்கொள்ளும். மனமே கனத்துப் போகும்!

1981-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி வெளியானது, கே.பாலசந்தரின் ‘தண்ணீர் தண்ணீர்’. தீபாவளி வெளியீடாக வந்தது. எட்டாவது படித்துக்கொண்டிருக்கும்போது, கொட்டும் மழையில் முதன்முதலாக இந்தப் படம் பார்த்ததும், பின்னர் இந்தப் படத்தை தியேட்டரில் போடும்போதெல்லாம் சைக்கிளை மிதித்துக் கொண்டு நண்பர்களுடன் பார்த்ததும் நினைவுக்கு வருகின்றன.

இந்தப் படத்துக்கு சிறந்த தமிழ்ப்படம் என்று மத்திய அரசு விருது கொடுத்தது. அதேபோல், சிறந்த திரைக்கதை, கதை, நடிப்பு என பல இடங்களில் இருந்தும் விருதுகள் குவிந்தன.

கண்ணதாசனின் பாடல்களும் வைரமுத்துவின் பாடல்களும் மனதை என்னவோ செய்யும். மெல்லிசை மன்னரின் இசையும் பி.எஸ்.லோகநாத்தின் ஒளிப்பதிவும் அந்த அத்திப்பட்டியின் செம்மண் பரப்பையும் வாடிய குளம் குட்டையையும் நாம் நேரே பார்க்கிற வேதனையைக் கொடுத்துவிடும். ’கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே / ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து / தொட்டில் நனைக்கும் வரை உன் தூக்கம் கலைக்கும் வரை / கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே/

’ஊத்துமலை தண்ணீரே என் உள்ளங்கை சக்கரையே/ ஊத்துமலை தண்ணீரே என் உள்ளங்கை சக்கரையே/ நீ நான் பெத்த தங்கரதம் இடுப்பிலுள்ள நந்தவனம்/

’காயப்பட்ட மாமனின்று கண்ணுறக்கம் கொள்ளவில்ல/ சோகப்பட்ட மக்களுக்கு சோறு தண்ணி செல்லவில்ல/ ஏகப்பட்ட மேகமுண்டு மழை பொழிய உள்ளமில்லே’

’தண்ணீ தந்த மேகம் இன்று ரத்தத்துளி சிந்துதடா/ காத்திருந்தப் பானைக்குள்ளே கண்ணீர்த்துளி பொங்குதடா/ வீட்டு விளக்கெரிவதற்கு கண்ணீர் எண்ணெய் இல்லையடா/ கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே/ ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து தொட்டில் நனைக்கும் வரை உன் தூக்கம் கலைக்கும் வரை/ கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே’ என்ற வைரமுத்துவின் பாடல் நம்மை ரணமாக்கிவிடும். கண்களைக் குளமாக்கிவிடும்.

சில வருடங்களுக்கு முன்பு, தமிழ்ப் படங்களை, தமிழிலேயே மீண்டும் ‘ரீமேக்’ செய்யும் காலம் இருந்தது. இன்றைக்கு ‘பார்ட் 2’ எடுக்கிற காலமும் வந்துவிட்டது. பாட்டில் தண்ணீர், கேன் தண்ணீர், அக்வா தண்ணீர், கார்ப்பரேஷன் தண்ணீர், குடிக்கவொரு தண்ணீர், துவைக்கவொரு தண்ணீர், சமைக்கவொரு தண்ணீர் என்றெல்லாம் விற்பனைக்கு வந்துவிட்ட உலகில், ‘தண்ணீர் தண்ணீர்’ படத்தை ‘ரீமேக்’ செய்தால் இன்னமும் தண்ணீர் கிடைக்காத கிராமங்களை அடையாளம் காட்டலாம். ‘பார்ட் 2’ எடுத்தால், ‘தவிச்ச வாய்க்கு தண்ணிகொடுக்கணும்’ என்பதையும் ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ என்பதையும் மறந்துவிட்ட வியாபார உலகத்துக்குள் தண்ணீரும் மூழ்கிப் போன சோகத்தை முகத்திலறைகிறாற் போலச் சொல்லலாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in