’காதல் தோற்பதில்லை... காதலர்கள்தான் தோற்கிறார்கள்’ என்று சொன்ன ’கிளிஞ்சல்கள்!’

- மோகன் - பூர்ணிமா ஜெயராம் நடிப்புக்கு கிடைத்த மெகா வெற்றி!
’காதல் தோற்பதில்லை... காதலர்கள்தான் தோற்கிறார்கள்’ என்று சொன்ன ’கிளிஞ்சல்கள்!’

இந்த உலகில் காதலிக்காதவர்கள் கூட இருக்கலாம். ஆனால், காதலை ரசிக்காதவர்கள் எவருமே இருக்கமுடியாது. எவருடைய காதலின் கதையை யாரோ கேட்டாலும் அதை யாரோ சொன்னாலும் விழிகள் விரியக் கேட்டுக்கொண்டுதான் இருப்போம். சினிமாவில் கூட, காதல் படங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து ரசித்தவர்கள்தானே நாம்!

காதலில் தோற்றவர்களை சரித்திரம் பதிவு செய்துவைத்து, காலங்கள் தாண்டியும் கொண்டாடிக்கொண்டே இருக்கும். இன்றைக்கு காதலின் மையத்தையும் மகத்துவத்தையும் சொல்லும் படங்கள் குறைந்திருக்கலாம். காதலை நையாண்டியாகவும் நக்கலாகவும் சொல்லி வெற்றியும் பெறலாம். ஆனால், ‘தேவதாஸ்’, ‘கல்யாணபரிசு’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘வசந்தமாளிகை’, ‘மரோசரித்ரா’, ‘வாழ்வே மாயம்’ என்று நம் சினிமாவில் காதலின் உன்னதம் சொன்ன எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. வெறுமனே வந்துவிட்டுப் போய்விடாமல், அப்படியே நம் மனதுள் தங்கி வாழ்ந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் காதல் எனும் கடலின் ஆழம் சொல்லி, நமக்கு அள்ளிக்கொடுத்து, மனதைக் கிள்ளிய ‘கிளிஞ்சல்கள்’ படத்தை எப்படி மறந்துவிடமுடியும்?

’’காதலிச்சாங்க. அவன் வேற ஜாதி, இவ வேற ஜாதி. இதுபோதாதா காதலை எதிர்ப்பதற்கு?’’ என்று மிக எளிதாகச் சொல்லிவிடமுடியும். ‘’பையன் ஒரு மதம், பொண்ணு ஒரு மதம். மதமே வித்தியாசமா இருந்துச்சுன்னா, பிரிக்கத்தானே செய்வாங்க?’’ என்று சுலபமாகக் கதையைச் சொல்லிவிடலாம்தான். ஆனால், அங்கே... காதலைச் சொல்லவேண்டும். அதிலும் காதலே அழகியல் என்பதால், அந்தக் காதலை இன்னும் அழகாகச் சொல்லவேண்டும். அழகாகச் சொல்கிறேன் என்று யதார்த்தம் மீறாமல், இயல்பாகச் சொல்லவேண்டும்.

நம் நண்பர்களின் வட்டத்தில் இருக்கிற ஒரு பையனும் நமக்குத் தெரிந்த பெண்ணும் காதலித்தால் என்னென்ன நிகழுமோ, நாம் எவற்றையெல்லாம் எதிர்கொள்வோமோ அவையெல்லாம் இருக்கவேண்டும். அப்படி இருந்ததால்தான் ‘கிளிஞ்சல்கள்’ மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது நமக்குள்!

பொள்ளாச்சிதான் கதைக்களம். ஆனால், அழகு கொஞ்சும் வாய்க்கால் வரப்பையெல்லாம் காட்டாமல், காதலையும் அது தொடர்பான தெருக்களையும் மட்டுமே காதலர்கள் உலவும் இடமாகக் காட்டியிருப்பார்கள். பொள்ளாச்சி ரயில்நிலையமே காதலர்களுக்கான இளைப்பாறல் இடமாக, ஜங்ஷனாக இருக்கிறது.

ரயிலில் கல்லூரி செல்லும் மாணவி ஜூலி. படித்து முடித்துவிட்டு, அவசரம் அவசரமாக அதே ரயிலில், அதே பெட்டியில், ஆனால் பெண்களுக்கான பெட்டியில் பாபு ஏற, அங்கே குறும்புடனும் டீஸிங்குடனும் நிகழ்கிற சந்திப்பு, கொஞ்சம் கொஞ்சமாக, தொடர் சந்திப்புகளும் கேலிகளுமாகச் சேர்ந்து காமெடியில் ரவுசு பண்ண, ஒருகட்டத்தில் பாபுவுக்கும் ஜூலிக்கும் நடுவேயும் உள்ளேயுமாக காதல் அலையடித்து இருவரையும் சேர்த்துவைக்கிறது.

பாபுவின் அப்பா முரட்டு ஆசாமி. மகனின் மீது துளியும் நம்பிக்கை இல்லாமல் சதாசர்வகாலமும் எதிரே யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்காமல், திட்டிக்கொண்டே தேள் மாதிரி கொட்டிக்கொண்டே இருப்பார். ஜூலியின் அப்பாவும் இப்படித்தான் என்றாலும் இத்தனை மோசமான அப்பாவாக இல்லை அவர். நேரத்துக்கு வரவேண்டும், கண்ட இடத்துக்கெல்லாம் சென்று சுற்றக்கூடாது என்பதில் மட்டும் கறார் காட்டுபவர் அவர்.

இப்படி அடக்கிவைத்து வளர்ப்பவைதானே வெடிக்கும். அப்படித்தான் அந்த இருவருக்குள்ளும் வெடித்துப் பூக்கின்றன காதல் பூக்கள். ஜூலியின் பக்கத்து வீட்டில் இருக்கும் பையன், பாபுவுக்கு நண்பன். ஏதோ தெரியும் என்கிற நட்பை, புதுப்பித்துக்கொண்டு, காதலியைக் காண்பதற்காகவே நண்பன் வீட்டு மொட்டைமாடியில் தவம் கிடக்கிறான் பாபு. நண்பனின் அப்பாவும் கறார்தான்! குஸ்திக்குச் செல்லும் உடம்பு அவருக்கு. பார்த்தாலே பயந்துவிடுவோம் நாம்.

ஜூலியின் தோழியரில் ஒருத்திக்கு சகோதரன் உண்டு. இந்தக் குடும்பத்தில் அப்பாதான், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர். ஒருவகையில் இந்த அப்பாவும் கொஞ்சம் கடுகடு ஆசாமிதான். அந்தக் காலங்களில், அப்பாக்களால் கறார் காட்டி வளர்ந்த அறுபது, எழுபது, எண்பதுகளில் வளர்ந்த மகன்கள் சொல்வார்கள்... “நான் இன்னிக்கி வளர்ந்து உருப்படியா வந்து நிக்கிறதுக்கு என் அப்பாவோட கண்டிப்புதான் காரணம்’’ என்று!

அப்பாக்களை விடுங்கள். ஸ்டேஷன் மாஸ்டர் மகன் ஜனாவுக்கு, ஜூலியின் மீது மாறாக்காதல். ஒருதலைக்காதல். காலையும் மாலையும் ஸ்டேஷன் வருவதும், ஜூலியிடம் நேரடியாகவும் தன் தங்கையின் மூலமாகவும் காதலை சொல்லிக்கொண்டே இருப்பதுமாக அலைகிறான்.

அந்த சமயத்தில், ஜனாவும் பாபுவும் சந்தித்துக் கொள்கிறார்கள். இருவரும் பள்ளிக்காலத்து தோழர்கள். ஒருகட்டத்தில், பாபுவும் ஜூலியும் காதலிக்கிறார்கள் எனும் உண்மை, ஜனாவுக்குத் தெரிகிறது. அவர்களின் காதலுக்குத் துணை நிற்கிறான் ஜனா. இப்படியொரு கதாபாத்திரத்தையும் நம்மூரில், நம் நட்பு வட்டத்தில் நாம் நிறையவே பார்த்திருப்போம்.

கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மனம் முழுக்க நிரம்பித் ததும்பிய காதல், ஒருகட்டத்தில், பொசுக்கென ஜூலியின் அப்பாவுக்குத் தெரிகிறது. அவர் தன் மனைவியிடம் சொல்ல, உடனடியாக மாப்பிள்ளை பார்க்கிறார்கள். மாப்பிள்ளை வீடும் சம்மதிக்கிறது.

கிறிஸ்தவ முறைப்படி தேவாலயத்தில் ‘எல்லோருக்கும் சம்மதமா’ எனும் ஓலை அறிவிக்கப்படுகிறது. மறுப்பவர்கள் தெரிவிக்க கடைசி தேதியும் அறிவிக்கப்படுகிறது. ஜூலியே மறுத்து கடிதம் தருகிறாள். சர்ச் ஃபாதர், ஜூலியின் அப்பாவிடம் வந்து விவரம் சொல்லி, ‘இருவரின் சம்மதமும் மிக மிக அவசியம்’ என்று சொல்லிச் செல்கிறார். படிப்புக்கு முழுக்கு போடப்படுகிறது. நட்புக்கும் பங்கம் நடக்கிறது. வீட்டு வாசல் தாண்டக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஒருகட்டத்தில், அறையில் வைத்து பூட்டப்பட்டு விடுகிறாள் ஜூலி.

காதலுக்கு தூது செல்ல காற்றும் நிலாவும் பறவையுமாக இருந்ததெல்லாம் படித்திருக்கிறோம். மனிதர்கள் தூது செல்லமாட்டார்களா என்ன? பக்கத்து வீட்டுச் சிறுவனிடம் ஜூலிக்குச் சேதி சொல்லி, இரவில் சந்திக்கிறான் பாபு. “நாளை இதே நேரத்துக்கு வருகிறேன், ஓடிப்போயிடலாம்” என்று சொல்லிச் செல்கிறான். தூக்கத்தையெல்லாம் தூக்கியெறிந்து, மகளையே கண்கொத்திப்பாம்பாகப் பார்த்துக் கொண்டிருக்கும் தந்தைக்கு இது தெரிகிறது. மறுநாள்... ஜூலி தயாராக இருக்கிறாள். பாபுவும் சொன்னபடி வருகிறான். இருவரும் ஊரைவிட்டு ஓடுவதற்கு, அந்த வீட்டில் இருந்து கிளம்புகிறார்கள். விளக்குகள் போடப்படுகின்றன. சுற்றிலும் போலீஸ் நிற்கிறது. பாபுவைப் பிடித்துச் செல்கிறது. ஜூலிக்கு இன்னும் கட்டுப்பாடுகள் போடப்படுகின்றன.

ஏற்கெனவே கோபக்கார துர்வாசரைப் போல் முணுக்கென கோபம் கொள்ளும் பாபுவின் அப்பா, பாபுவின் இந்தச் செயலால் விட்டு விளாசித்தள்ளுகிறார். அறையில் வைத்து அடைத்தாலும் தப்பிக்கிறான் என்று, மொட்டைமாடியில், இரும்புச் சங்கிலியால் கட்டிப்போடுகிறார்.

பாபுவின் நினைப்பில் ஜூலி கதறுகிறாள். சிலுவையில் அறையப்பட்டிருக்கும் இயேசுநாதரிடம் வேண்டுகிறாள். ஒருகட்டத்தில், கையில் ஆணியையும் சுத்தியலும் எடுக்கிறாள். மேஜையில் கையை வைக்கிறாள். உள்ளங்கையில் ஆணியால் சுத்தியல் கொண்டு, தனக்குத்தானே வலிக்க வலிக்க காதல் வலியை மறக்க முடிவுசெய்கிறாள்.

ரத்தத்தாலும் வலியாலும் காதல் துக்கத்தாலும் மயங்கிச் சரிகிறாள். இறக்கிறாள். நண்பன் ஜனா, சங்கிலியில் கட்டப்பட்டிருக்கும் பாபுவிடம் சொல்லிக் கதறுகிறான். அப்பாவையும் எதிர்ப்பையும் மீறி, ஜூலியின் வீட்டுக்கு ஓடுகிறான். அங்கே எவருமில்லை. வாசலில் பூக்கள் சிதறிக்கிடக்கின்றன. இடுகாட்டுக் கல்லறைக்கு தலைதெறிக்க ஓடுகிறான்.

அங்கே... கிறிஸ்தவ முறைப்படி வேதங்கள் சொல்லப்படுகின்றன. பைபிள் வாசிக்கப்படுகிறது. கர்த்தருக்குள் நித்திரையாகிவிட்ட ஜூலியின் ஆன்மாவுக்காக எல்லோரும் கண்கள் மூடி பிரார்த்தனை செய்கிறார்கள். நடுவே சவப்பெட்டியில் ஜூலியின் சடலம். அப்படியே அவளிடம் அமருகிறான் பாபு. அவளை அள்ளியெடுக்கிறான். முத்தம் கொடுக்கிறான். ஜூலியை சவப்பெட்டியில் சாய்க்கிறான். இவனும் அவள் மீது சாய்கிறான். பிரார்த்தனை முடிந்து, எல்லோரும் கண் திறக்கிறார்கள். பாபுவைத் தொடுகிறார் பாதிரியார். அவனை உசுப்புகிறார். உலுக்குகிறார். சற்றே தூக்கி அசைக்கப்பார்க்கிறார். ஜூலியின் சடலத்தை கெட்டியாகப் பிடித்திருக்கிற பாபுவும் சடலமாகிறான்.

காதல் வாழ்வில் சேரமுடியாதவர்கள், சாவில் ஒன்று சேருகிறார்கள். படம் முடிகிறது. இறுக்கமான முகத்துடன், கண்ணீர் மல்க, கைக்குட்டை நனைய தியேட்டரை விட்டு வெளியே வருகிறோம். ஆனால், அந்தக் ’கிளிஞ்சல்கள்’ தாக்கம், நமக்குள் ஒரு வலியாக, வேதனையாக, நம்மை நிமிண்டி சோகத்தைத் தந்துகொண்டே இருக்கிறது.

பாபுவாக மோகன். அவரின் அப்பாவாக ஜி.சீனிவாசன்.ஜூலியாக பூர்ணிமா ஜெயராம். அவரின் அப்பாவாக வி.எஸ்.கோபாலகிருஷ்ணன். ஜனாவாக திலீப். அவரின் ஸ்டேஷன் மாஸ்டர் அப்பாவாக வி.கே.ராமசாமி. மோகனின் அம்மாவாக வஞ்சியூர் ராதா எனும் மலையாள நடிகை நடித்தார். பூர்ணிமா ஜெயராமின் அம்மாவாக சுகுமாரி நடித்தார். ஜூலியின் பக்கத்து வீட்டு பயில்வானாக பயில்வான் ரங்கநாதன் நடித்தார். ஜனாவாக திலீப்பும் அவரின் சகோதரியாக பூர்ணிமா எனும் நடிகையும் நடித்தார்கள். நடித்தார்கள், நடித்தார்கள் என்று சொல்லுவதை விட, கதாபாத்திரங்களாகவே அனைவரும் திரையில் ஒளிர்ந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

கன்னட ‘கோகிலா’வில் கமலுடன் பாலுமகேந்திரா இயக்கத்தில் அறிமுகமான மோகன், பிறகு ‘மூடுபனி’யில், ‘கோகிலா’ மோகன் என்று டைட்டிலில் போடப்பட்டார். அடுத்து ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’யில் மகேந்திரனின் இயக்கத்தில், பிரதாப், சரத்பாபு, மோகன் என்று மூன்றாமிடத்தில் டைட்டில் வந்தது. மோகனின் திரைவாழ்வில், முன்னர் வந்த இந்தப் படங்களெல்லாம் வெற்றிப் படங்கள்தான். ஆனால் அதைவிட மோகனுக்கு ‘கிளிஞ்சல்கள்’ ரொம்பவே ஸ்பெஷல். டைட்டிலில் ‘மோகன்’ என்று தனிகார்டில் பெயர் போடப்பட்டது இதுவே முதல்முறை. இந்தப் படமே அந்தவகையில் முதல்படம். மோகனும் இளமைத் துள்ளலுடன் தனி ஜாலம் காட்டி நடித்து அசத்தினார்.

ஜூலியாக, அச்சு அசல் கிறிஸ்வதப் பெண் சாயலுடன் மிகச் சிறந்த நடிப்பைத் தந்திருப்பார் பூர்ணிமா ஜெயராம். ஜி.சீனிவாசன், வி.கே.ராமசாமி, சுகுமாரி, எஸ்.என்.பார்வதி, திலீப், அந்தப் பக்கத்து வீட்டு சிறுவன் என எல்லோருமே நிறைவாக நடித்திருப்பார்கள்.

விசுவின் ‘சதுரங்கம்’ படத்தையும் இந்தியில் வெளியான ‘நாகின்’ படத்தை ‘நீயா’ படமாகவும் மலையாள ரீமேக்கான ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தையும் நடிகை ஷோபாவுக்கு ‘ஊர்வசி’ எனும் தேசியப் பட்டமும் விருதுகளும் குவிக்கக் காரணமாக அமைந்த ‘பசி’ படத்தையும் இயக்கிய இயக்குநர் துரை, ‘கிளிஞ்சல்கள்’ படத்தை இயக்கினார்.

மெரினா பீச்சில், கடையில், கிளிஞ்சல் (சங்கின் ஒன்றுவிட்ட தங்கை போல) பார்க்க, அதில் ‘LOVE ME' என்று எழுதியிருக்க, அதை வாங்கி பூர்ணிமா ஜெயராமிடம் மோகன் தருவார். பதிலுக்கு தன் சம்மதத்தை மற்றொரு கிளிஞ்சல் வாங்கி, ‘I LOVE YOU' என்ற வாசகத்துடன் இருப்பதைக் கொடுப்பார்.

மிகப்பெரிய பாடகரான ஜாலி ஆப்ரகாம், இதில் கெளரவ வேடத்தில் ஜோல்னாப்பையும் தாடியும் கண்களில் விரக்தியும் வார்த்தைகளில் காதல் தத்துவமுமாக கலக்கியெடுத்திருப்பார். ‘LOVE IS Danger' என்றும் ‘LOVE NEVER FAILS' என்றும் எழுதியிருக்கிற ஜோல்னாப்பையும் படத்தின் முக்கியக் கதாபாத்திரமாகவே இருக்கும்.

அதேபோல், கருணையும் அன்புமாக இருக்கிற பைபிள் வாசகங்கள் பலவும், இங்கே காதலுக்குக் கையாளப்பட்டிருக்கும். ‘நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை’, தேவாலயத்திற்கு வந்திருக்கும் மோகன், எல்லோரும் சொன்ன பிறகு, ‘ஆமென்’ சொல்லுவது என்று ‘LOVE NEVER FAILS' காதல் ஒருபோதும் தோற்பதில்லை; தோற்பவர்கள் எல்லாம் காதலர்களே!’ என்று முடித்திருப்பார்; அப்படி முடித்து ஜெயித்திருப்பார் இயக்குநர் துரை.

’அழகினில் விளைந்தது’ என்றோரு பாடல். ‘’சின்னச்சின்னக் கண்ணா’ என்றொரு பாடல். ’கிளை இல்லா மரங்களில்’ என்றொரு பாடல். ’விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்’ என்றபாடல். இந்தப் பாடலில் இடம்பெறும் ‘ஜூலி ஐலவ்யூ ஜூலி ஐலவ் யூ’ என்ற வரிகளைச் சொல்லாத, பாடாத எண்பதுகளின் இளைஞர்களும் யுவதிகளும் இல்லை. பாடல்களும் இசையும் டி.ராஜேந்தர். ஒவ்வொரு பாடல்களிலும் தன் முத்திரையைப் பதித்திருப்பார் டி.ஆர்.

1981ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி வெளியாகி, மிகப்பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று, வசூலைக் குவித்தது ‘கிளிஞ்சல்கள்’. 41 ஆண்டுகளாகின்றன.

காதலிக்காதவர்கள் கூட, இந்தப் படத்தைக் காதலித்தார்கள். திரும்பத்திரும்பப் பார்த்தார்கள். மோகனுக்கு தனித்த அடையாளத்தை முதன்முதலாக இந்தப் படம்தான் கொடுத்தது. மோகனின் திரைப்பயணத்தில், பூர்ணிமா பாக்யராஜாக இன்றைக்கும் நடித்துக் கொண்டிருக்கும் பூர்ணிமா ஜெயராமுக்கும் இந்தப் படம் தனி முத்திரையைத் தந்தது.

காதலின் மென் உணர்வுகளை விரசமோ விகற்பமோ இல்லாமல் காட்டிய ‘கிளிஞ்சல்கள்’ தமிழ் சினிமாவின் காதல் காவியப் படங்களில் இடம்பிடித்திருக்கிறது; மக்களின் மனங்களிலும்தான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in