பாலக்காட்டு மாதவனாக வாழ்ந்த பாக்யராஜ்!

- ‘அந்த ஏழு நாட்கள்’ வெளியாகி 41 ஆண்டுகள்
பாலக்காட்டு மாதவனாக வாழ்ந்த பாக்யராஜ்!

’சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் இருந்து இயக்குநரான பாக்யராஜ், ’மெளன கீதங்கள்’ படத்தின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்டார். அதன் பின்னர் ’பாக்யராஜ் படம் வந்துருக்குதாம்ல...’ என்று கூட்டம் கூட்டமாய் திரையுலகிற்கு ஓடி வந்தனர் ரசிகர்கள். அப்படியொரு பிரம்மாண்ட வெற்றியையும் கெளரவத்தையும் பாக்யராஜுக்குக் கொடுத்தது ’அந்த ஏழு நாட்கள்’.

சினிமா என்பது நம்மை சிரிக்கவைக்கும். சில படங்கள் கண்ணீர் சிந்தவைக்கும். சில தருணங்களில் கதறச்செய்யும். கதாபாத்திரங்களின் மீது பரிதாபம் கொள்ளச் செய்யும். கோபமும் வரவைக்கும். வேதனை கொள்ளச் செய்யும். இவை அனைத்தையும் செய்ததுதான் ’அந்த ஏழு நாட்கள்’

திரைக்கதை எனும் உத்திதான், சினிமாவின் அடிநாதம். அந்த திரைக்கதையில் ஜித்து வேலைகள் செய்வதில் மாயக்காரர் பாக்யராஜ். அவரின் திரைக்கதைக்கும் கதை சொல்லும் திறனுக்குமான ஆகச் சிறந்த ஒருசோறு பதமாகத் திகழ்ந்தது ‘அந்த ஏழு நாட்கள்’.

படத்தின் டைட்டில் ஆரம்பமாகும். அதேவேளையில், திருமணக்கோலத்தில் நாயகி அம்பிகா அமர்ந்திருக்க, கல்யாண வேலைகள் நடந்துகொண்டிருக்கும். ‘பரவாயில்லியே... படம் ஆரம்பிக்கும்போதே ஹீரோயினுக்குக் கல்யாணம் ஆகற மாதிரி காட்டுறாங்களே...’ என்று விழிகள் விரியப் பார்த்திருக்க, இறந்துவிட்ட தன் முதல் மனைவியின் குழந்தையுடன் டாக்டர் ராஜேஷ் மணமேடைக்கு வருவார். மணமகனாக அமருவார். டைட்டில் ஓடிக்கொண்டே இருக்கும். தாலிகட்டுவார். டைட்டில் முடியும்.

வயதான, நோய்வாய்ப்பட்டு, படுத்தபடுக்கையாகிக் கிடக்கிற அம்மாவிடம் மனைவியை அறிமுகப்படுத்தி வைப்பார் டாக்டர். அன்றிரவு... முதலிரவு. பேசிக்கொண்டிருக்கும்போதே மயங்கிச் சரிவார் அம்பிகா. மாத்திரை, ஊசி. ‘சரியான தூக்கமில்லை. சாப்பிட்டது ஒத்துக்கலை போல’ என்று டாக்டர், தன் அப்பாவிடம் சொல்வார். ஆனால் அவருக்குத் தெரியும்... முதலிரவு வேளையில், மனைவி தூக்கமாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள் என்று!

பிறகு, காரணம் கேட்பார் ராஜேஷ். ஃப்ளாஷ்பேக் விரியும். பாலக்காட்டு மாதவன் தன் சிஷ்யனுடன் வருவார். ஒரு ஆச்சரியம், அதிர்ச்சி, திகைப்பு, கவலை என்று பயணிக்கும் கதை... அப்படியே வேறொரு தளத்துக்குள் நுழைந்து, நம்மை அப்படியே கட்டிப்போடும். அப்படிக் கட்டுப்போடுவதுதான் பாக்யராஜ் ஸ்டைல்.

வீட்டு வாடகைக்கு அட்வான்ஸ் பணத்தை எடுக்க பாத்ரூம் செல்லுவதும் அம்பிகாவின் ஹேர்பின்னையே சாவியாகப் பயன்படுத்திக் கொள்வதும் பிறந்தமேனியில் குளிப்பதை அம்பிகா பார்த்துவிட்ட கோபத்தில், காவலுக்கு நின்ற ஹாஜா ஷெரீப் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்து இன்னும் ஆத்திரம் கொண்டு வெளுத்தெடுப்பதும் என படம் முழுக்க வருகிற காமெடிகள் எல்லாமே ரகளை கிளப்பின.

கேரள வரவான அம்பிகா தமிழ்ப் பெண்ணாகவும், நம்மூர் பாக்யராஜ் பாலக்காட்டு மாதவனாகவும் நடித்திருப்பார்கள். வழக்கம்போல் பாக்யராஜின் படங்களில் தொடர்ந்து இடம்பெறும் கல்லாபெட்டி சிங்காரமும் அவரின் நகைச்சுவைகளும் என படம் மகிழவும் நெகிழவும் என மாறிமாறி நம்மை ஆட்படுத்திக்கொண்டே இருக்கும். ‘மனசுக்குப் பிடிச்சவரோட சேரவிடாம பிரிச்சிட்டாங்க. கட்டாயக் கல்யாணம் பண்ணி வைச்சிட்டாங்க’ என்று அம்பிகா சகலத்தையும் சொல்லி முடிப்பார். அனைத்தையும் தெரிந்துகொள்வார் ராஜேஷ்.

‘’எங்க அம்மா இன்னும் ஒரு வாரத்துல இறந்துருவாங்க. அவங்க நிம்மதிக்காகத்தான் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்க அம்மாவுக்காக ஒருவாரம் இங்கே இரு. அதுக்குள்ளே உன் காதலன் எங்கே இருக்காருன்னு கண்டுபிடிச்சு, நானே உன்னை அவரோட சேர்த்துவைக்கிறேன்’’ என்று ராஜேஷ் சொல்ல, அந்த டாக்டர் கேரக்டர் உயர்ந்த, சிறந்த மருந்தென நமக்குள்ளே புகுந்து என்னவோ செய்யும்.

காதலி இன்னொருவனைத் திருமணம் செய்துகொள்கிறாள். ஆனால் தற்கொலைக்கு இறங்குகிறாள். காப்பாற்றி விவரம் கேட்ட கணவன், அவளை காதலுடனேயே சேர்த்துவைப்பதாக உறுதி கொடுக்கிறான். அதன்படி காதலனை சந்தித்து, மிகப்பக்குவமாகப் பேசி, சேர்த்துவைப்பதற்கான முயற்சிகளையும் எடுக்கிறான். இப்படியொரு கதையை எள்ளளவும் முகம் சுளிக்கச் செய்யாமலும் நகம் கடிக்க வைக்காமலும் ‘நல்லா சொல்றாங்கய்யா சமூகத்துக்கு நீதி’ என தலையிலடித்துக் கொள்ளாமலும் செய்திருப்பதில்தான் ஒளிந்திருக்கிறது பாக்யராஜின் வெற்றிக்கான சீக்ரெட்!

‘இந்த உலகத்துல பசிக்காம இருக்கறதுக்கு என்னென்ன டெக்னிக் இருக்கோ அது அத்தனையும் எங்க ஆசானுக்குத் தெரியும். துணியில் தண்ணீரை நனைத்து வயிற்றில் கட்டிக் கொள்வார்’ என்று ஹாஜா ஷெரீப் சொல்ல, அம்பிகா, அங்கே ஆர்மோனியத்தில் டியூன் போட்டுக்கொண்டிருக்கும் பாக்யராஜைப் பார்ப்பார். ‘ஈரேழு லோகத்துக்கும் ராஜா நான்தன்னே...’ என்று பாடிக்கொண்டிருப்பார் பாலக்காட்டு மாதவன். ’’அப்ப உனக்குடா’’ என்று அம்பிகா கேட்க, ’’இந்த விஷயத்துல எங்க ஆசான். கரெக்ட்டா இருப்பாருங்க. எனக்கு இட்லி வாங்கித் தின்ன காசு கொடுத்துட்டாரு’’ என்பார் ஹாஜா ஷெரீப். அம்பிகா வளையலை அடகுவைத்து ஹாஜா ஷெரீப்பிடம் பணம் தர, அதை பாக்யராஜின் அம்மாவுக்கு மணியார்டர் செய்திருப்பார்கள். இதைத் தெரிந்துகொண்ட பாக்யராஜ், ஹாஜாவிடம் பணத்தைக் கொடுத்து, ‘வளையலைத் திருப்பிட்டு வா’ என்பார். ‘எந்த வளையல்’ என்பார் ஹாஜா. ஒரு அறை விடுவார் பாக்யராஜ். ஹாஜா ஷெரீப் விழும் இடம் நகைக்கடையாக இருக்கும். பாக்யராஜின் டைரக்‌ஷன் திறமையைப் பார்த்து கரவொலி எழுப்பியதெல்லாம் நினைவுக்கு வருகிறது.

நவராத்திரி கொலு. பொம்மையின் மூலமாக காதலைச் சொல்லும் அம்பிகா, அந்தக் காதலை பொம்மை மூலமாகவே மறுக்கும் பாக்யராஜ் என்று அந்தக் காட்சிகள், காதல் நயமாகச் சொல்லப்பட்டிருக்கும். கடைகளில் திருடிய சாமான்களை பிளாட்பாரத்தில் போட்டு விற்பார் ஹாஜா ஷெரீப். அந்தப் பொருட்களையெல்லாம் போலீஸ் அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். பொருட்கள் வைத்திருந்த போஸ்டர், சினிமா போஸ்டர். அதில், ’திருடாதே’ பட போஸ்டர் இருக்கும். காட்சிக்குத் தகுந்தது போலவும் ’திருடாதே’ டைட்டில். தன் ஆதர்ச எம்ஜிஆரையும் காட்டுகிற புத்திசாலித்தனம்.

இன்னொன்றையும் யோசிக்க பிரமிப்பாகத்தான் இருக்கிறது. படத்தில் இசையும் இருக்கும். காதலும் இருக்கும். சமூகம் சார்ந்த விஷயமும் அலசப்படும். இசைதான் அடித்தளம். ஆனால் படத்தில் நிறைய பாடல்களெல்லாம் இருக்காது. எம்எஸ்வி-யின் இசையும் பாடலும் படத்தின் கனத்தை இன்னும் இன்னுமாக நமக்கு உணர்த்தின.

ஒருவழியாக, ராஜேஷ், பாக்யராஜைப் பார்த்துவிடுவார். ’‘நான் ஒரு சினிமா எடுக்கறேன். நீங்கதான் மியூஸிக் போடுறீங்க’’ என்று அவரை அழைத்துக்கொண்டு, ஹோட்டல் ஒன்றில் தங்கவைப்பார். படத்தின் கதை சொல்கிறேன் என்று டாக்டர் ராஜேஷ், ‘பாலக்காட்டு மாதவன், வசந்தி, டாக்டர்’ ஆகியோரின் வாழ்க்கையையே கதை போலச் சொல்லும் உத்தி கலங்கடித்துவிடும்.

ஒரு காட்சி. ஹோட்டலில் பாக்யராஜுடன் ராஜேஷ் இருப்பார். போன் வரும். வேலைக்காரர் பேசுவார். ‘அம்மா, இறந்துபோயிட்டாங்கய்யா’ என்பார். அம்மா இறந்த துக்கம், வலி, அனைத்தையும் அடக்கிக்கொண்டு இறுக்கமாய் ராஜேஷ் வருவார். அந்த சமயத்தில் பாத்ரூம் போய்விட்டு, வேஷ்டியை சரிசெய்துகொண்டே, “ஆ ஹீரோவோட அம்மை கேரக்டர், மரிச்சுப் போயியா... பிழைச்சுப் போயியா சாரே...” என்பார் பாக்யராஜ். கண்ணீரைக் கட்டுக்குள் வைத்தபடி, ‘’அவங்க செத்துட்டாங்க’’ என்பார் ராஜேஷ். உடனே ‘’சூப்பர் சாரே. இந்த சிச்சுவேஷனுக்கு இப்படி இருந்தாத்தான் சாரே சரியாயிட்டு இருக்கும்னு நெனைச்சேன்’’ என்பார் பாக்யராஜ். இந்தக் காட்சிக்கு அழவும் வைத்து சிரிக்கவும் செய்திருப்பார் இயக்குநர் பாக்யராஜ்.

இன்னொரு வித்தியாசம்... படம் பார்ப்பவர்கள் அனைவரும் ’பாக்யராஜூம் அம்பிகாவும் சேரணுமே சேரணுமே...’ என்று தவித்தபடி படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். தமிழ் சினிமா உலகின் புகழ்பெற்ற அந்த க்ளைமாக்ஸ்... யாராலும் அவ்வளவு சுலபமாக கடக்கவும் முடியாது; மறக்கவும் முடியாது!

மறைந்த நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம் என்றும் அதைப் பற்றி யார் மூலமோ தெரிந்துகொண்ட பாக்யராஜ், பின்னாளில் இதையே ஒரு கருவாக, கதையாக, திரைக்கதையாக, சினிமாவாக உருவாக்கினார் என்றும் பெரிதாகவே பேசப்பட்டது.

இயக்குநர் ஸ்ரீதரின் முதல் இயக்கமான ‘கல்யாண பரிசு’ படத்தின் வசந்தி கேரக்டர் போலவே ’அந்த ஏழு நாட்கள்’ வசந்தியையும் நம்மால் மறக்க முடியாது. ’சக்களத்தி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அம்பிகாவுக்கு, இந்தப் படத்தில்தான் மிகச்சிறந்த கதாபாத்திரம் முதன்முதலாக அமைந்தது. அம்பிகாவும் மிகச்சிறந்த நடிப்பாற்றலை, மெல்லிய உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.

டாக்டராக வரும் ராஜேஷின் பண்பட்ட நடிப்பையும் அவரின் அக்மார்க் அன்பான குரலையும் சொல்லியே ஆகவேண்டும். இரண்டாவது கல்யாணம் செய்துகொள்கிற குதூகலமும் அவர் முகத்தில் இருக்காது. முதலிரவில் மனைவி தற்கொலை முயற்சியில் இறங்கிவிட்டாளே... என்கிற அதிர்ச்சியும் இருக்காது. மனைவி தன் காதலைச் சொல்லும்போது கூட, நின்று நிதானித்து, அமைதியும் அன்புமாகப் பேசுகிற பக்குவப்பட்ட மனதை, தன் நடிப்பால் வெளிப்படுத்தியிருப்பார் ராஜேஷ்.

படத்தின் க்ளைமாக்ஸ். பதைபதைப்புடன் இருந்தது திரையரங்கம். ‘’என்னுடைய காதலி உங்களுக்கு மனைவியாகலாம். ஆனால் உங்களுடைய மனைவி ஒருபோதும் எனக்குக் காதலியாக முடியாது’’ என்று சொல்லிவிட்டு, ‘’இது கொஞ்சம் ஓல்டு க்ளைமாக்ஸ்தான். ஆனா ஓல்டு இஸ் கோல்டு’’ என்று ஆர்மோனியப் பெட்டியுடன் பாக்யராஜ் விறுவிறுவென நடந்துபோவார். அப்போது, கதை திரைக்கதை வசனம் டைரக்‌ஷன் கே.பாக்யராஜ் என்று டைட்டில் கார்டு விழும். மொத்த தியேட்டரும் கைதட்டி வரவேற்றது... அந்த முடிவையும் பாக்யராஜையும்!

அந்தக் காலத்தில், பாக்யராஜ் படங்களை ஆண் ரசிகர்களை விட, பெரும்பான்மையான பெண்களே கொண்டாடித் தீர்த்தார்கள். 'பாக்யராஜை பெண்களுக்கு ஏன் இந்தளவுக்குப் பிடிக்கிறது என்றொரு கேள்வி இருந்தது. பாக்யராஜை பெண்களுக்கு இந்தளவு ஏன் பிடித்தது என்பதற்கான விடைகளில்... ’அந்த ஏழு நாட்கள்’ படமும் ஒன்று!

மெல்லிசை மன்னரின் இசையில், ‘கவிதை அரங்கேறும் நேரம்’, ‘எண்ணியிருந்தது ஈடேற’, ‘தென்றல் வந்து உன்னிடத்தில் சொல்லிவைத்த சேதி என்னவோ’ என எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

ஜிப்பா, வேஷ்டி, ஆர்மோனியம், நெற்றியில் சந்தனம்... ஆனால் டிரேட் மார்க்கான கண்ணாடி மட்டும் இல்லை. தன் நடிப்பில் கலக்கியிருப்பார் பாக்யராஜ். ஹாஜா ஷெரீப்புக்கு இந்தப் படம் ரொம்பவே ஸ்பெஷலான படம்.

இயக்குநர் பாக்யராஜிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னார்... ‘’ ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தை இயக்கும் போதே, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ். அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ‘நான் டைரக்டரான பிறகு உங்களுக்காகவே படம் பண்ணித் தர்றேன். நீங்க படம் தயாரிங்க சார்’ என்று அன்றைக்குச் சொன்ன வாக்குறுதி, ஒவ்வொரு முறையும் தள்ளிப்போய், ‘அந்த ஏழு நாட்கள்’ படமாக அமைந்தது. சொன்ன வாக்குறுதியைக் காப்பாற்றிவிட்ட திருப்தி. கூடவே, ஒரு நல்ல படத்தை என் ஆடியன்ஸுக்கும் தமிழ் சினிமாவுக்கும் தந்த மனநிறைவு’’ என்று பாக்யராஜ் நெகிழ்ந்து சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன்.

1981 அக்டோபர் 26-ம் தேதி வெளியானது ‘அந்த ஏழு நாட்கள்’. தீபாவளிக்கு வந்த படங்களில், மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தை, ரசிகர்கள் தங்கள் நண்பர் குழாமுடன் கைக்காசையெல்லாம் போட்டுத் திரட்டி, ஏழெட்டு தடவைக்கு மேல் பார்த்தார்கள். பலர் திரும்பத் திரும்பப் பார்த்தார்கள்.

திரையிட்ட தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடியது. பல தியேட்டர்களில், வெள்ளிவிழா கொண்டாடியது. சில தியேட்டர்களில், 200 நாட்களைக் கடந்தும் ஓடியது. படம் வெளியாகி, 41 ஆண்டுகளாகின்றன. இன்னும் ஏழு நூற்றாண்டுகள் கடந்தாலும் ’அந்த ஏழு நாட்கள்’ படத்தையும் பாலக்காட்டு மாதவனையும் யாரால்தான் மறக்க முடியும்?!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in