நடிகை கௌசல்யாவை வைத்து படம்; பைனான்சியரிடம் 41 லட்சம் மோசடி: `உத்ரா' படத் தயாரிப்பாளரை தேடும் போலீஸ்

நடிகை கௌசல்யாவை வைத்து படம்; பைனான்சியரிடம்  41 லட்சம் மோசடி: `உத்ரா' படத் தயாரிப்பாளரை தேடும் போலீஸ்

ஹைதராபாத்தை சேர்ந்த பைனான்சியரிடம் சினிமா எடுப்பதாக கூறி 41 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த சினிமா தயாரிப்பாளரை போலீஸார் தேடிவருகின்றனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த பைனான்சியர் கஜபதி சுப்பாராவ் தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த 4 வருடத்திற்கு முன்பாக சென்னை அண்ணாநகரை சேர்ந்த ரேகா மூவீஸ் புரொடக்சன்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் சக்கரவர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி திரைப்படம் எடுப்பதற்காக கூறி தன்னிடம் 41 லட்சம் ரூபாயை கடனாக பெற்றதாகவும், பின்னர் அந்த பணத்தை வைத்து, நடிகை கௌசல்யாவை வைத்து பக்தி படமான உத்ரா என்ற திரைப்படத்தை சக்கரவர்த்தி தயாரித்ததாக தெரிவித்துள்ளார். இந்த படம் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானதாகவும், அதன் பின்னர் சக்கரவர்த்தியிடம் கடனாக பெற்ற பணத்தை திருப்பிக்கேட்டபோது, இழுத்தடித்து வந்ததுடன் மிரட்டல் விடுத்தாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி தனது போனை எடுக்காததால் அவர் மீது நடவடிக்கை எடுத்து 41 லட்சம் ரூபாயை பெற்று தருமாறு புகாரில் கேட்டுக்கொண்டுள்ளார். இவரது புகார் தொடர்பாக அண்ணாநகர் போலீஸார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அண்ணாநகரில் வசித்து வந்த தயாரிப்பாளர் சக்கரவர்த்தி, கடந்த 6 மாதத்திற்கு முன்பு வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. மேலும் சக்கரவர்த்தி பைனான்சியரிடம் 1 கோடிக்கு மேல் கடனாக பெற்று மோசடியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தலைமறைவான சக்கரவர்த்தியின செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in