
பிரபல இந்தி திரைப்பட நடிகரும், எழுத்தாளருமான அகில் மிஸ்ரா இன்று காலமானார். அவருக்கு வயது 58. அமீர்கான் நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அகில் மிஸ்ரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1965 ல் பிறந்த அகில் மிஸ்ரா, ‘ஹசாரான் குவைஷீன் ஐசி’, ‘காந்தி, மை ஃபாதர்’ போன்ற படங்களிலும், ‘பிரதான்மந்திரி’ போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் பணியாற்றியுள்ளார். இவர் ஜெர்மன் நடிகை சுசானே பெர்னெர்ட்டை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார்.
இன்று காலை வீட்டின் சமையல் அறையில் அகில் மிஸ்ரா கால் இடறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அதில் படுகாயமடைந்த அகில் மிஸ்ரா, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உடல் உடற்கூறாய்வுக்கு பின் உறவினர்களிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனது இரண்டாவது பாதியை இழந்து விட்டேன்’ என்று அகில் மிஸ்ராவின் மனைவியும், நடிகையுமான சுசானே தெரிவித்துள்ளார்.