சினிமா மரபுகளை உடைத்து புது விதி செய்த ‘விதி!’

மோகன் - பூர்ணிமாவின் வெள்ளிவிழா வெற்றிப்படம்!
’விதி’ திரைப்படம்
’விதி’ திரைப்படம்

காதல் கதைகள் நம் சினிமாவில் ஏராளமாகவும் தாராளமாகவும் வந்திருக்கின்றன. அதிலும் காதலிப்பதாகச் சொல்லிவிட்டு, கழற்றிவிடுகிற கதைகளும் நமக்குப் புதிதில்லை. அப்படி கைவிடப்பட்ட பெண்ணுக்கு தம்பி இருப்பான். பழி வாங்குவான். ‘பெரிய இடத்துப் பெண்’ணாகிவிடும். அண்ணன் இருப்பான். ‘சகலகலா வல்லவன்’ என்றாகிவிடும். அண்ணனும் இல்லாமல், தம்பியும் இல்லாமல், மகன் வளர்ந்து பழிவாங்கினால், அது ‘நீங்கள் கேட்டவை’யாகவோ ‘மிஸ்டர் பாரத்’தாகவோ இருக்கும்.

இப்படித்தான் ஒவ்வொருவிதமாக படங்கள் வந்து, காதல் கதைகளாகவும் காதலால் ஏமாந்த கதைகளாகவும் அந்த துரோகத்துக்குப் பழிவாங்குவதாகவும் அமைந்து சக்கைப்போடு போட்டன. இவற்றில் இருந்து வேறுபட்டதும் மாறுபட்டதுமான படைப்பாக வந்ததுதான் ‘விதி’ திரைப்படம்!

’எல்லாம் விதி’ என்று சொல்லி தலையிலடித்துக் கொண்டு துக்கித்து விக்கித்துக் கிடக்கிற உலகில், கதையின் நாயகி, ‘விதி’யை மாற்றுகிறாள். அவனுடைய ‘விதி’யையும் மாற்றி எழுதுகிறாள். தயாரிப்பாளர் கே.பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் தயாரித்த படம் இது. கே.விஜயன் இயக்கினார். சுஜாதா, மோகன், பூர்ணிமா ஜெயராம், பூர்ணம் விஸ்வநாதன், ஜெய்சங்கர், சத்யகலா, மனோரமா முதலானோர் நடித்தார்கள்.

துறுதுறுவென வலம் வந்துகொண்டிருக்கும் மோகனுக்கு இதில் ‘ப்ளேபாய்’ கேரக்டர். பெண்ணைப் பிடித்துவிட்டால், விரட்டி விரட்டி, துரத்தித் துரத்திக் காதலிப்பது போல் பாவ்லாக்கள் செய்து, ஜாலங்கள் செய்வார். மிகப்பெரிய பணக்கார வீட்டுப் பையன். அப்பா பிரபல வக்கீல் டைகர் தயாநிதி. அவர்தான் ஜெய்சங்கர். அப்படியொரு சாதாரண தருணத்தில் பூர்ணிமா ஜெயராமைப் பார்ப்பார் மோகன்.

பூர்ணிமா ஜெயராம் மிடில் க்ளாஸ் குடும்பம். அப்பா, கோர்ட்டில் குமாஸ்தா. அன்பான அம்மாவும் குறும்பான தங்கையும் உண்டு. டைப்ரைட்டிங் கற்றுக்கொள்ளச் செல்லும் பூர்ணிமாவை மடக்குவதற்காக, மோகனும் டைப் கற்றுக் கொள்ள அங்கே வருவார். ஆனால், மோகனின் ஜம்பம் பூர்ணிமாவிடம் வேகாது. என்னென்னவோ டிராமாவெல்லாம் பண்ணுவார். ஆனால் எதையும் நம்பமாட்டார். ஏகத்துக்கும் டிராமா போட்டுக்கொண்டே இருப்பார். துரத்தித் துரத்தி பின்னாலேயே வந்துகொண்டிருப்பார். ஒருகட்டத்தில், மோகனின் காதல் நடிப்புக்குப் பலன் கிடைக்கும். பூர்ணிமா ஏமாந்து போவார். நம்பிவிடுவார். வலையில் சிக்கிய பூர்ணிமா, அவரின் காம இச்சைக்கு பலியாவார். கர்ப்பமும் ஆகிவிடுவார்.

பதறிப் போகிற பூர்ணிமா, மோகனிடம் விஷயத்தைச் சொல்லுவார். கெஞ்சுவார். அவர் அலட்சியமாகப் பேசுவார். ’‘என் காரியம் முடிந்தது. அவ்வளவுதான்’’ என்பார், ‘’காதல்ங்கறது வேற, கல்யாணம்ங்கறது வேற’’ என்பார். ‘’கர்ப்பத்தைக் கலைச்சிரு. உங்க அப்பா சொல்ற பையனைக் கல்யாணம் பண்ணிக்கோ’’ என்று அட்வைஸ் செய்வார்.

வீட்டில் அவமானம். வெளியில் அவமானம். காதலித்தவன் செய்துவிட்ட துரோகம். ஆவேசமாவார் பூர்ணிமா. வக்கீல் சுஜாதாவிடம் விஷயத்தைச் சொல்லி, வழக்கு போடக் கேட்பார். வக்கீல் தயாநிதி (ஜெய்சங்கர்) மகன் மோகன் என்பதை அறிந்ததும் சுஜாதா மேலும் கோபமாவார். வழக்கு தொடுக்கப்படும். நான்கு அறைக்குள் நிகழ்ந்தது கோர்ட்டுக்கு வந்து அம்பலமாகும்!

’விதி’ திரைப்படத்தில் கே.பாக்யராஜ்
’விதி’ திரைப்படத்தில் கே.பாக்யராஜ்

மகன் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்கப் பிரயத்தனப்படுவார் ஜெய்சங்கர். ஒருகாலத்தில் தன்னைக் கெடுத்தது ஜெய்சங்கர். இப்போது இந்தப் பெண்ணை அவர் மகன் கெடுத்திருக்கிறான் என்பதையெல்லாம் கோர்ட்டில் பாயிண்ட்டுளாக, ஆதாரங்களாகச் சொல்லிக்கொண்டே போவார் சுஜாதா. இறுதியில் சுஜாதாவின் சாதுர்யமான பேச்சால், வழக்கில் ஜெயிப்பார் பூர்ணிமா ஜெயராம்.

காதலித்து, நம்பிக்கை கொடுத்து, ஏமாற்றியவனை கோர்ட்டுக்கு இழுத்த கதையே அன்றைக்குப் புதுமையானதுதான். ஆனால், தீர்ப்பு சாதகமாகியும் கூட ''அவனுடன் வாழ விரும்பவில்லை. என் குழந்தைக்கு தகப்பன் யாரென்று தெரியவேண்டும். அதை உலகுக்குத் தெரிவித்துவிட்டேன். அதுபோதும்’’ என்று சொன்னதுதான் புரட்சியானது.

ரீமேக் படங்களை எடுத்து, தமிழில் மிகப்பெரிய ஹிட் கொடுப்பதில் சூரரான கே.பாலாஜி, இந்தப் படத்தையும் ரீமேக் செய்தார். ‘நியாயம் காவலி’ என்கிற தெலுங்குப் படம்தான் ’விதி’யாக எடுக்கப்பட்டு, மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் அமைந்தது.

கோர்ட் காட்சிகள் அதிகம் கொண்ட படங்கள் என்றாலே வசனங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். ‘பராசக்தி’, ‘இருவர் உள்ளம்’ தொடங்கி இன்றைக்கு ‘ஜெய் பீம்’ வரை கோர்ட் காட்சிகளும் வசனங்களும் நம்மை கரவொலி எழுப்பச் செய்து, உலுக்கித்தான் போட்டன. ‘விதி’ படத்திலும் கோர்ட்டில் வாதாடும் காட்சிகளும் வசனங்களும் ரசிகர்களைக் கவர்ந்தன. மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன. வசனகர்த்தா ஆரூர்தாஸ், அட்டகாசமாக எழுதியிருந்தார்.

எடுத்ததும் காதல், பிறகு காதலில் ஏமாற்றம். அதையடுத்து கோர்ட், கோர்ட், கோர்ட் என்று சும்மா... கிழிகிழியென வசனங்கள் பெரிய பலத்தைக் கொடுத்தன. ’திருவிளையாடல்’ போல், ‘தங்கப்பதக்கம்’ போல, ‘16 வயதினிலே’ போல ‘விதி’ திரைப்படத்தின் கதை வசன ஒலிச்சித்திர ரிக்கார்டுகள், புதிய ரிக்கார்டு பிரேக் சாதனையைச் செய்தன. எங்கு பார்த்தாலும் இந்தக் கதை வசனம் ஒலிபரப்பப்பட்டு, அமர்க்களப்பட்டது.

’விதி’ படத்தில் மோகனுக்கு நெகடீவ் கதாபாத்திரம். இப்படி நடிப்பது அவருக்குப் புதிதில்லை. அப்பாவியாகவும் அழகு கம்மியாகவும் இருக்கிற மனைவியையே மறைத்து, வேறொரு பெண்ணுடன் குடித்தனம் பண்ணுகிற ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படமாகட்டும்... கொலைகளைச் செய்துவிட்டு, பிணத்தை வீட்டுச்சுவருக்குள் புதைத்து வைக்கிற சைக்கோ கொலையாளியாக ‘நூறாவது நாள்’ படமாகட்டும்.

ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாக மிரட்டியவருக்கு ப்ளேபாய் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சொல்லியா தரவேண்டும்? மனிதர், அமர்க்களப்படுத்தியிருப்பார்.

பூர்ணிமாவும் அப்படித்தான். வீட்டுக்கு அடங்கி நடக்கிற போதும் சரி, கொஞ்சம் கொஞ்சமாக காதல் வலையில் விழுகிற போதும் சரி, உணர்ச்சிவசப்பட்டாலும் காதலின் எல்லை தாண்டாமல் இருக்கப் போராடுகிற இடங்களிலும் சரி, மோகனிடம் காலில் விழாத குறையாக கெஞ்சும் போதும் சரி... வீட்டில் அப்பாவிடமும் அம்மாவிடமும் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு, மருகிக் கலங்கி கதறுகிற போதும் சரி... பூர்ணிமா ஜெயராம் தன் அசாத்திய நடிப்புத் திறமையை வழங்கியிருப்பார்.

மனோரமா,காமெடியில் ரகளை பண்ணியிருப்பார். இன்றைக்கு இருக்கிற பசங்களுக்கு டைப்ரைட்டிங் இன்ஸ்டியூட் தெரியாது. பிரௌசிங் சென்டர்கள் தான் தெரியும். ஆனால், எண்பதுகளின் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் டைப்ரைட்டிங் இன்ஸ்டியூட் மிக முக்கியமான ஸ்பாட். ’பட்டம்மா’ எனும் கேரக்டரில் மனோரமா பட்டையைக் கிளப்பியிருப்பார். ‘முந்தானை முடிச்சு’ படத்தின் முருங்கைக்காய், ‘சகலகலாவல்லவன்’ படத்தின் ‘நேத்து ராத்திரி யம்மா’ பாட்டு என்றெல்லாம் பயன்படுத்தியிருப்பார்கள், படத்தில்!

வக்கீல் சகுந்தலாவாக சுஜாதா. ‘அவள் ஒரு தொடர்கதை’யின் மிடுக்கும் இருக்கும். ‘நூல்வேலி’யின் கம்பீரமும் இருக்கும். ‘அவர்கள்’ படத்தின் சோகமும் இழையோடும். இப்படி மூன்றும் கலந்து நடிப்பில் அப்படியொரு விஸ்தாரமான ராஜாங்கம் பண்ணியிருப்பார். கோர்ட் காட்சிகளிலும் நீளமான வசனங்களைப் பேசுவதிலும் அசத்தியிருப்பார்.

சங்கர் கணேஷ் இசையில் எல்லாப் பாடல்களும் ஹிட்டாக அமைந்தன. ‘விதி’ படத்துக்குள் சினிமா எடுப்பது போல் காட்சி வரும். பாக்யராஜ் இயக்கி நடிப்பது போல் எடுத்திருப்பார்கள். போஸ்ட்மேன் பாக்யராஜ். கிராமத்துப் பெண் நித்யா. பஞ்சாயத்துக் காட்சி. அப்போது, ‘’பத்தினி பேரு சொல்லுங்க’’ என்பார் பாக்யராஜ். ‘’பத்தினி பத்தினி பத்தினி...’’ என்று யோசித்துவிட்டு, ‘கண்ணகி’ என்பார் ஒருவர். இன்னொருவர் யோசித்துவிட்டு, ‘நளாயினி’ என்பார். அடுத்தவர் ‘சாவித்திரி’ என்பார்.

’’ஏங்க, பத்தினி பேர் சொல்லுங்கன்னு கேட்டதும் உங்க அம்மா பேரையோ சித்தி பேரையோ மனைவி பெயரையோ சொல்லுவீங்கனு பாத்தேன். ஆனா, யார்யாரோ பேரையோ சொல்றீங்களே’’ என்று கொளுத்திப் போடுவார். மிகப்பெரிய கரவொலியை எழுப்பி, தியேட்டரே வெடித்துச் சிரிக்கும்! இயக்குநர் பாக்யராஜின் யூனிட்டைச் சேர்ந்த லிவிங்ஸ்டன், ஆர்.பி.விஸ்வம், இளமுருகு, கோவிந்தராஜ் முதலானோரெல்லாம் இருப்பார்கள்.

வக்கீல் சுஜாதா இறப்பதும், அவருடைய சொத்துகளை பூர்ணிமாவுக்கு எழுதி வைப்பதும் அவரின் மகளையும் தன் மகளையும் அனாதைக் குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்குவது, ஆஸ்ரமப் பள்ளியில் சுஜாதாவுக்கு சிலை வைப்பது மோகனின் மனைவி சத்யகலா, கணவன் குறித்த முந்தைய கால நிகழ்வுகளை பூர்ணிமா மூலம் தெரிந்துகொள்வது என சினிமாத்தனங்கள் இருந்தாலும் வசனங்களால், அவையெல்லாம் தூக்கி நிறுத்தப்பட்டு ஜொலித்தன!

1984-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி, ‘விதி’ வெளியானது. பல தியேட்டர்களில், வெள்ளிவிழாவாக 175 நாட்களைக் கடந்து ஓடி, வசூல் சாதனையும் புரிந்தது. மோகனின் வெள்ளிவிழாப் படங்களில், ‘விதி’யும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்தது. படம் வெளியாகி, 39-ம் ஆண்டில் இருந்தாலும், ஆரூர்தாஸின் வசனங்கள், ’விதி’யை நம் தமிழ் சினிமா வரலாற்றில், மிக மிக அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in