இளையராஜாவின் இசையில் ஈர்த்த ‘ஓ மானே மானே மானே!’

கமல், ரஜினி காலத்தில் சிவாஜி ஹிட் கொடுத்த ‘வெள்ளை ரோஜா’
இளையராஜாவின் இசையில் ஈர்த்த ‘ஓ மானே மானே மானே!’

எண்பதுகளில், எம்ஜிஆர் ஆட்சியில் இருக்கிறார். தமிழ் சினிமாவில் கமலும் ரஜினியும் முதலிடத்துக்கு வந்துவிட்டார்கள். சிவாஜியின் மகன் பிரபுவும் முத்துராமனின் மகன் கார்த்திக்கும் கூட நடிக்க வந்துவிட்டார்கள். விஜயகாந்தும் சத்யராஜும் மோகனும் தமக்கென ரசிகர் பட்டாளத்தை ஈர்த்து கோலோச்சிவந்தார்கள். பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், டி.ராஜேந்தர், மணிவண்னன், ஆர்.சுந்தர்ராஜனெல்லாம் வந்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள். இந்தச் சமயத்தில் சிவாஜி இரட்டை வேடங்களில் நடித்து, அந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாகவும் கொடுத்தார். பல தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடி சாதனைபடைத்தது. அந்தப் படம்: ‘வெள்ளை ரோஜா!’

அன்பும் பண்பும் நிறைந்தவர் பாதிரியார் ஜேம்ஸ். பாகுபாடின்றி எல்லோரையும் மதிப்பவர். ஊர்மக்கள் அனைவராலும் மதிக்கப்படுபவர். அந்த ஊரில் உள்ள மிகப்பெரிய கோடீஸ்வரர் பரிசுத்தம் (கல்கத்தா விஸ்வநாதன்). அந்த ஊரில் சவப்பெட்டிகளைச் செய்பவர் சவரிமுத்து (ஜி.சீனிவாசன்). அவருடைய மகன் பீட்டர் (பிரபு) கோபக்காரன். பொசுக்கென்று கைநீட்டும் அளவுக்குப் பொறுமையற்றவன். நீதிக்காகப் போராடுபவன். பீட்டரின் தங்கை மேரி(ராதா). இளமையும் அழகும் பொருந்தியிருப்பவள்.

வெள்ளை ரோஜா
வெள்ளை ரோஜா

பரிசுத்தம் மகன் ஜானியும் (சுரேஷ்) மேரியும் காதலிப்பார்கள். இதில் மேரி கர்ப்பமாகிவிடுவாள். இதேநிலையில், ஜானி வெளிநாடு செல்ல வேண்டிய வேலை. இவர்களின் காதல் விவகாரம் தெரிந்து, பரிசுத்தத்திடம் பீட்டர் பேசுகிறான். பிறகு இருவரும் பாதிரியாரிடம் சென்று பேசுகிறார்கள்.

வீட்டாருக்கு மேரியின் காதல் மட்டுமே தெரிகிறது. கர்ப்பமானது தெரியவில்லை. இந்தச் சமயத்தில், பீட்டருக்கும் அதே ஊரில் இருக்கும் லட்சுமிக்கும் (அம்பிகா) காதல். தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை பாதிரியார் ஜேம்ஸிடம் சொல்லி அழுகிறாள் மேரி. அவளுக்கு ஆறுதல் சொல்கிறார் பாதிரியார். இதை அரையும்குறையுமாகக் கேட்டுவிடும் லட்சுமி, அதை பீட்டரிடம் சொல்கிறாள். பாதிரியாருக்கும் மேரிக்கும் தவறான உறவு இருப்பதாக லட்சுமி புரிந்துகொள்ள, அதுவே வினையாகிறது.

இதையடுத்து மறுநாள் பார்த்தால்... மேரி தூக்கில் தொங்கி இறந்து கிடக்கிறாள். ஆத்திரம் அடைந்த பீட்டர், பாதிரியாரைத் தாக்க, கைதாகிறான். போலீஸ் பிடியில் இருந்து பீட்டர் தப்பிவிடுகிறான். பாதிரியாருக்கு, மேரியின் மரணத்தில் சந்தேகம் எழுகிறது. தன்னுடைய சகோதரரும் போலீஸ் அதிகாரியுமான அருளிடம் (இவரும் சிவாஜி கணேசன்) தெரிவிக்கிறார். அதன்படி, போலீஸ் அதிகாரி அந்த ஊருக்கு வருகிறார். மேரியின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்ய தோண்டுகிறார்கள். பார்த்தால்... அங்கே பாதிரியாரின் பிணம்... மேரியின் பிணத்தைக் காணோம்.

பாதிரியாரைக் கொலை செய்தது பீட்டர்தான் என்று ஊர் நம்புகிறது. போலீஸ் அருள் விசாரணையை மேற்கொள்கிறார். மேரி ஏன் கொல்லப்பட்டாள், பாதிரியாரைக் கொலை செய்து குழியில் புதைத்தது யார், எதற்காக மேரியின் பிணம் காணாமல் போனது, மேரியின் காதலன் ஜானி என்னவானான், பீட்டர்தான் குற்றவாளியா என்பதற்கெல்லாம் விடை தேடிப் பயணித்ததுதான் ‘வெள்ளை ரோஜா’.

வெள்ளை ரோஜா
வெள்ளை ரோஜாRamji

இரட்டை வேடத்தில் சிவாஜி. பாதிரியாராக ஒரு சிவாஜி. அவரின் சகோதராகவும் போலீஸ் அதிகாரியாகவும் மற்றொரு சிவாஜி. பல படங்களில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்த ராதா, இதில் பிரபுவின் தங்கை. பிரபுவுக்கு அம்பிகாதான் ஜோடி. ராதாவுக்கு சுரேஷ் ஜோடி. ஊரில் உள்ள சிவசந்திரனுக்கு அம்பிகா மீது கண். போலீஸ் சிவாஜிக்கு உதவியாக ஒய்.ஜி.மகேந்திரன்.

காமெடி, சென்டிமென்ட், காதல், த்ரில்லர், ஆக்‌ஷன் என்று கலந்துகட்டி கதையும் திரைக்கதையும் அமைத்துக் கொடுத்திருப்பார்கள். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘போஸ்ட்மார்ட்டம்’ என்ற படத்தை ரீமேக் செய்து, ‘வெள்ளை ரோஜா’வாக்கியிருந்தார்கள். சிவாஜியின் நடிப்பு பாராட்டப்பட்டது. படத்தில் ராதா, அம்பிகா, ஜி.சீனிவாசன், சிவசந்திரன், ஒய்.ஜி.மகேந்திரன் எல்லோருமே தங்களின் நடிப்பால் கலக்கியிருந்தார்கள். முக்கியமாக, வில்லனாக நடித்த கல்கத்தா விஸ்வநாதன் சிறந்த நடிப்பை வழங்கினார். தேங்காய் சீனிவாசன், மனோரமா, இந்திரா, பண்டரிபாய், வி.கோபாலகிருஷ்ணன், ஒருவிரல் கிருஷ்ணாராவ் முதலானோரும் சிறப்புற நடித்தார்கள்.

நடிகர் சிவசந்திரன் வில்லத்தனத்திலும் ஸ்டைல் காட்டினார். ஒவ்வொரு முறை அம்பிகாவை மிரட்டுவதும் சவால் விடுப்பதும் அட்டகாசமாக இருக்கும். சிவசந்திரனை தமிழ்த்திரையுலகம் இன்னும் பயன்படுத்திக்கொண்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

படத்தின் திரைக்கதை, வசனத்தை ஏ.எல்.நாராயணன் எழுதினார். கணேசபாண்டியனின் ஒளிப்பதிவில் படத்தின் மொத்தக் காட்சிகளும் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தன. இயக்குநர் ஏ.ஜகந்நாதன் அற்புதமாக இயக்கியிருந்தார்.

கவிஞர் வாலி, முத்துலிங்கம், நா.காமராசன், கங்கை அமரன் முதலானோர் பாடல்களை எழுதியிருந்தார்கள். பிலிம்கோ நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு இசை இளையராஜா. படத்தின் மிகப்பெரிய தூண் போல் பாடல்கள் அமைந்தன. மிகப்பெரிய ஹிட் பாடல்களாக அனைத்துப் பாடல்களுமே அமைந்து பட்டையைக் கிளப்பின.

‘தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே’ என்ற பாடலை பாதிரியார் சிவாஜிக்காக மலேசியா வாசுதேவன் பாடியிருப்பார். போலீஸ் சிவாஜி மாறுவேடத்தில் வந்து, ‘நாகூருப்பக்கத்துல நம்மளோட பேட்டை, ராவுத்தரு நிக்காவுல நமக்கு நல்ல வேட்டை’ என்றும் மலேசியா பிரமாதப்படுத்தியிருப்பார். ’வாடி என் பொண்டாட்டி நீதானே’ என்ற குத்தாட்டப் பாட்டு. கங்கை அமரன் பாடியிருப்பார். பிரபுவும் சில்க் ஸ்மிதாவும் ஆடியிருப்பார்கள்.

’சோலைப்பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்’ என்ற பாடலும் படமாக்கப்பட்ட விதமும் சிறப்புற அமைந்திருக்கும். ’ஓ மானே மானே மானே... உன்னைத்தானே’ என்ற பாடலும் அப்படித்தான். செம ஹிட் அடித்த பாடலாக அமைந்தது. இந்தப் பாடல்களை இப்போது கேட்டாலும் மனம், ‘டைம் மிஷினில்’ ஏறி, எண்பதுகளுக்குச் சென்றுவிடும். அம்பிகாவும் ராதாவும் கண்முன்னே நடமாடி, நடனமாடுவார்கள். பிரபுவும் சுரேஷும் சிரித்த முகத்துடன் ஜாலியாய் ஆடி மகிழ்வார்கள்.

1983 நவம்பர் 4-ம் தேதி தீபாவளி வெளியீடாக இப்படம் ரிலீஸானது. அந்தத் தீபாவளிக்கு வந்த படங்களில் செம கலெக்‌ஷன் அள்ளியது ‘வெள்ளை ரோஜா’தான்! பல தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்தும் சில தியேட்டர்களில் 150 நாட்களைக் கடந்தும் ஓடி வசூல் அள்ளியது.

Ramji

எண்பதுகளில் கமல், ரஜினி என இளைஞர்களின் பிடியில் சினிமா வந்துவிட்டபோதும், சிவாஜி இந்தப் படத்தில் ஜெயித்துக் காட்டினார். இத்தனைக்கும் இந்தப் படம் நடிக்கும்போது 200 படங்களையும் தாண்டிவிட்டார் என்பதே பெரிய சாதனைதானே!

’வெள்ளை ரோஜா’ வெளியாகி, 39 வருடங்களாகின்றன. இன்றைக்கும் இளையராஜாவின் இசையில் உருவான, ‘ஓ மானே மானே மானே’வும், ‘சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்’ பாடலும் நம்மை மயக்கிக்கொண்டுதான் இருக்கின்றன. மனதை வருடிக்கொண்டுதான் இருக்கின்றன!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in