‘தங்கைக்கோர் கீதம்’ இசைத்த டி.ராஜேந்தர்!

‘தங்கைக்கோர் கீதம்’ இசைத்த டி.ராஜேந்தர்!

அண்ணன் தங்கை பற்றி சிவாஜி காலம் தொடங்கி சிவகார்த்திகேயன் காலத்திலும் கூட படங்களை எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கிறோம். சிவாஜி, சாவித்திரி நடித்து பீம்சிங் இயக்கிய ‘பாசமலர்’ படம்தான் தமிழ் சினிமாவின் அண்ணன் தங்கை கதைகளுக்கெல்லாம் பெஞ்ச் மார்க்!

காதலையும் கல்லூரியையும் வைத்து கலக்கியெடுத்துக்கொண்டிருந்த டி.ராஜேந்தர், கூடவே தங்கைப் பாசத்தையும் கலந்துகட்டி இசைத்ததுதான் ‘தங்கைக்கோர் கீதம்’.

சிற்றன்னையின் கொடுமை. அந்தக் கொடுமையைத் தட்டிக்கேட்காத குடிகாரத் தந்தை எனக் கொடுமையான குடும்பச் சூழல். தாங்க முடியாமல் தன் தங்கை சுதாவை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டே வெளியேறுகிறான் சிறுவன் சூலக்கருப்பன். அவர்களுக்கு அடைக்கலம் கிடைக்கிறது. ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து, தங்கையை வளர்க்கிறான். படிக்கவைக்கிறான். கல்லூரிக்கு அனுப்பிவைக்கிறான்.

கல்லூரியில் சுதாவைத் துரத்தித் துரத்தி காதலிக்கிறான் ஒருவன். அவளுக்கு டார்ச்சர் மேல் டார்ச்சராகக் கொடுக்கிறான். அந்த ஊர் இன்ஸ்பெக்டர் ஹரிச்சந்திரன் நேர்மையானவர், பொய் சொல்லாதவர். பொய் சொல்பவர்களையும் மன்னிக்காதவர். அப்பா அம்மா இல்லாத அவருக்கு அத்தையும் மாமாவும் பெண் பார்த்து திருமணம் செய்துவைக்க முனைகிறார்கள்

இதற்கிடையே, தொழிற்சாலையில் போனஸ் முதலான தொழிலாளர்களுக்கான சலுகைகளைத் தரவில்லை என்று சூலக்கருப்பன் தலைமையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். முதலாளி, பணத்தை லஞ்சமாகக் கொடுத்து சூலக்கருப்பனை வளைக்கப்பார்க்கிறார். முடியவில்லை. இந்நிலையில், இன்ஸ்பெக்டருக்கும் சூலக்கருப்பனின் தங்கைக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது. அதற்கு அடிக்கடி உதவி செய்யும் பணக்கார அன்பரிடம் உதவி கேட்கிறார். தருவதாக உறுதியளித்த நபர், தொழிற்சாலை முதலாளிக்குக் கட்டுப்பட்டு சூலக்கருப்பனுக்குப் பணம் கடனுதவி செயாமல் டிமிக்கி கொடுக்கிறார்.

போடுவதாகச் சொன்ன நகையில், முக்கால்வாசி போட்டுவிட்டு, மீதமுள்ள நகைகளை கவரிங் நகைகளாக வைத்து கல்யாணத்தை முடிக்கிறார் சூலக்கருப்பன். இதையடுத்து ஒரு திருட்டுப்பட்டம் சுமத்தி, சூலக்கருப்பனை சிறைக்கு அனுப்பிவைக்கிறார்கள் வில்லன் கோஷ்டியினர்.

இந்தநிலையில்தான் கல்லூரியில் படிக்கும்போது காதல் டார்ச்சர் செய்தவன், திருமணத்துக்குப் பிறகும் சுதாவை டார்ச்சர் செய்துகொண்டிருக்கிறான். இதைத் தெரிந்துகொண்ட இன்ஸ்பெக்டர் கணவர், ‘ஏன் உண்மையை என்னிடம் சொல்லவில்லை’ என்று வெறுக்கிறார். அவளும் அண்ணன் வீட்டுக்கு வந்துவிடுகிறாள். உண்மையெல்லாம் கணவருக்குத் தெரிந்ததா, தன் தங்கையின் வாழ்வுக்காக சூலக்கருப்பன் என்ன செய்தார் என்பதைச் சொல்லுகிறது ‘தங்கைக்கோர் கீதம்’.

‘பெண்களே, வரதட்சணை கொடுக்காதீர்கள். ஆண்களே, வரதட்சணை வாங்காதீர்கள்’ என்கிற கோரிக்கையை வைத்து படத்தைத் தொடங்குகிறார் டி.ராஜேந்தர். ‘உயிருள்ளவரை உஷா’ படத்துக்குப் பிறகு தஞ்சை சினி ஆர்ட்ஸ் பேனரில் இந்தப் படத்தை எடுத்தார். உஷா ராஜேந்தர் தயாரித்தார்.

சூலக்கருப்பனாக டி.ராஜேந்தர். அவரின் தங்கை சுதாவாக நளினி. கல்லூரியில் அவரைக் காதலிப்பவராக ஆனந்த்பாபு. இவரின் முதல் படம் இதுதான். சிறுவயதில் இவர்களின் அடைக்கலம் தருபவராக வெண்ணிற ஆடை மூர்த்தி.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிச்சந்திரனாக சிவகுமார். அவருடைய அத்தை, மாமாவாக காந்திமதி - எஸ்.எஸ்.சந்திரன். கல்யாண புரோக்கராக உசிலைமணி. தொழிற்சாலை முதலாளியாக செந்தாமரை. அவரின் மகனாக சத்யராஜ். அவருக்குக் கைத்தடியாக இடிச்சபுளி செல்வராஜ்.

அப்பாவும் சித்தியும் சரியில்லை என்பதில் தொடங்கி தங்கைக்காக தன் வாழ்க்கையை முழுவதும் அர்ப்பணித்து, அந்தத் தங்கைக்குக் கல்லூரியில் காதல் டார்ச்சர் என்று அந்தப் பக்கம் போய், பிறகு இன்ஸ்பெக்டருக்குத் திருமணம் செய்துவைத்து, அவளும் பிரச்சினையுடன் வீட்டுக்கு வந்துவிட கஷ்டப்பட்டு அவளை அவள் கணவருடன் சேர்த்துவைப்பது என்று பரபரப்பாகக் காட்சிகள் நகரும். கூடவே, பெண்ணொருத்தி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக, அவளின் மரணவாக்குமூலம், அதைத் தந்தால்தான் உன் தங்கையை விடுவேன் என்று சிவகுமாரை சத்யராஜ் மிரட்டுவது, சிவகுமாரும் டி.ராஜேந்தரும் சேர்ந்து சண்டையிடுவது, அந்தச் சண்டையில் தன் உயிரையே டி.ராஜேந்தர் துறப்பது என... படபடவென கடைசி அரைமணிநேரக் காட்சிகள் திரைக்கதையைக் கடந்து ஓடிக்கொண்டே இருந்தன.

இன்னொரு பக்கம் படத்தின் பாடல்கள் படத்தை வெற்றியின் பக்கம் தன் தோளில் தூக்கிக் கொண்டு சுமந்து சென்றன. பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகின.

’தண்ணியில்லா மீனைப்போல கண்ணீரில் நாங்க வாட’ என்றொரு பாடல், கேட்பவர்களை உருக்கியெடுக்கும்.

’தினம் தினம் உன் முகம் கனவினில் வருகுது’ என்ற டிஸ்கோ பாடல். ‘பகலெனின்றும் இரவெனின்றும்’ என்றொரு பாடல். ‘இது ராத்திரி நேரம்’ என்றொரு பாடல். ‘தஞ்சாவூரு மேளம்’ என்றொரு பாடல். ’தங்கநிலவே உன்னை உருக்கி தங்கச்சி தங்கநகை செஞ்சிடவோ’ என்றொரு பாடல். ’ஏய் மச்சி... அவ துப்பினா எச்சி...’ என்றொரு பாடல். இந்தப் பாடலை மட்டும் மலேசியா வாசுதேவன் பாடியிருப்பார். மற்ற பாடல்களையெல்லாம் எஸ்பிபி பாடியிருப்பார். ஹம்மிங். அழுகை, சிரிப்பு, முக்கல்முனகல் என்று ஜாலங்கள் காட்டியிருப்பார் மனிதர்!

‘தட்டிப்பாத்தேன் கொட்டாங்கச்சி தாளம் வந்தது பாட்டைவைச்சி’ என்ற பாடலை டி.ராஜேந்தரே பாடினார். செம்ம ஹிட் பாடல் அது!

வழக்கமாக பாடல்களுக்கு பிரம்மாண்டமாக செட்டுகள் போட்டு அசத்துவார் டி.ராஜேந்தர். இந்தப் படத்திலேயே ‘தஞ்சாவூர் மேளம்’ படத்துக்கு பிரமாண்டமாக செட் போட்டு பிரமிக்கவைத்தார்.

படத்தின் ஆரம்பக் காட்சிகளில் சிறுவன் சூலக்கருப்பனிடம் வெண்ணிற ஆடை மூர்த்தி, ‘உனக்கு என்னென்ன வேலைகள் தெரியும்பா?’’ என்று கேட்பார். “சைக்கிள் வெலை தெரியும். ஷூ பாலீஷ் போடுவேன், தோட்ட வேலை பாப்பேன்” என்று வரிசையாகச் சொல்வான் சிறுவன். ‘’அப்போ உனக்கு ஏழெட்டு வேலைகள் தெரியும்னு சொல்லு’’ என்று வெண்ணிற ஆடை மூர்த்தி சொல்லுவார். அப்போது, ‘கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, டைரக்‌ஷன் டி.ராஜேந்தர்’ என்று டைட்டிலில் போடுவார் டி.ராஜேந்தர். தியேட்டரி விசில் பறக்கும்!

சிவகுமார் சிறப்பாக நடித்திருந்தார். நளினியின் நடிப்பும் கச்சிதம். ‘உயிருள்ளவரை உஷா’வுக்குப் பிறகு நளினிக்கு அடுத்த ஹிட், அடுத்த உயரம், அடுத்த மார்க்கெட் வேல்யூ என கொடுத்த படம் இது. ‘நாகேஷ் மகன் நடிச்சிருக்கிறாராம்பா... நாகேஷ் மாதிரியே டான்ஸ் ஆடுறாப்லப்பா...’ என்று ஆனந்த்பாபுவையும் அவரின் ஆட்டத்தையும் பார்க்க ‘ரீப்பிட்டு’ ரசிகர்கள் வந்தவண்ணம் இருந்தார்கள். டி.ராஜேந்தரின் வித்தியாசமான மேனரிஸங்கள், பாடிலாங்வேஜ் படம் வந்த சமயத்தில் பெரிதாக ரசிக்கப்பட்டன.

1983 நவம்பர் 4-ம் தேதி தீபாவளித் திருநாளில் வெளியான ‘தங்கைக்கோர் கீதம்’ நல்லதொரு வெற்றியைப் பெற்றது. பாட்டுக் கச்சேரிகளில், ‘இது ராத்திரிநேரம்... அம்மம்மா அம்மம்மா அம்மம்மா’ என்று கிளுகிளுப்பூட்டி பாடியதற்கெல்லாம் விசில்கள் பறந்தன. ‘தினம் தினம் உன் முகம்’ என்று ஆனந்த்பாபு போல் ஆடுகிறேன் காலை உடைத்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

39 ஆண்டுகளானாலும் இன்னமும் சாரம் இழக்காத சகோதரப் பாசக் கதையாக ரசிக்கவைக்கும் ராஜேந்தர் படம் இது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in