என்றும் மாறா ‘இளமைக் காலங்கள்!’

39 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் மலர்ந்த இனிமைக் காவியம்
என்றும் மாறா ‘இளமைக் காலங்கள்!’

இப்போதெல்லாம் துள்ளத்துடிக்க காதல் உணர்வைச் சொல்லும் படங்கள் குறைந்துவிட்டன. மெல்லிய உணர்வையும் கனமான உணர்வையும் சொல்லுகிற படங்களெல்லாம் வேறுவிதமாக மாறிவிட்டன. தமிழ் சினிமாவில் காதலின் உணர்வைச் சொன்ன படங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும், ஏதோவொரு வகையில் நமக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

90-களில், பார்த்த காதல், பார்க்காமலேயே காதல், பேசிக்கொள்ளாமலே காதல் என்றெல்லாம் கதைகள் அமைத்து, டைட்டிலில் ‘காதல்’ என்று இணைத்து வெளிவருவதற்கு அச்சாரம் போட்ட படங்கள், அறுபதுகளில், எழுபதுகளில், எண்பதுகளில் வந்து மிகப்பெரிய வெற்றியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

அப்படி எண்பதுகளில் வந்த ஒரு படம் அப்போது நமக்கு உண்டுபண்ணிய தாக்கம், இன்றைக்கும் அதைச் சிலாகித்துக்கொண்டே இருக்கவைக்கிறது. படத்தின் பாடல்களை இப்போது கேட்டாலும் ’டைம் மிஷின்’ இல்லாமலேயே எண்பதுக்குள் நுழைந்து ஒரு ரவுண்டு சென்றுவிட்டு வரத்தான் செய்கிறோம். அப்படியொரு காதலை ஜாலியாகவும் உணர்வுபூர்வமாகவும் சொன்ன படம்தான் ‘இளமைக் காலங்கள்’.

‘இவர் படமென்றால் இப்படித்தான் இருக்கும்’ என்று பல இயக்குநர்களின் படங்களைப் பார்க்கமாலே சொல்லிவிடலாம். ஆனால் இந்த இயக்குநரின் முந்தைய படம் ஒருவிதமாக இருந்தால் அடுத்த படம் வேறுவிதமாக இருக்கும்.

ஒரு படத்தில் குடும்பக்கதை பண்ணுவார். இன்னொரு படத்தில் காமெடியாகப் பண்ணியிருப்பார். மற்றொரு படத்தை த்ரில்லர் படமாகக் கொடுத்திருப்பார். திடீரென்று அரசியல் படமெடுத்து தாக்கியிருப்பார். இப்படி எல்லா இடங்களுக்குள்ளும் புகுந்து புறப்பட்ட இயக்குநராகவும் மிகச்சிறந்த நடிகராகவும் நம் மனதில் தனியிடம் பிடித்த இயக்குநர் மணிவண்ணன் இயக்கிய படம்தான் ‘இளமைக் காலங்கள்’.

மதர்லேண்ட் பிக்சர்ஸ்
மதர்லேண்ட் பிக்சர்ஸ்

பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வந்த பாக்யராஜ் மிகப்பெரிய உச்சம் தொட்ட நேரம் அது. 1982-ம் ஆண்டு, பாரதிராஜாவிடம் பணியாற்றிவிட்டு, ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தை முதல் படமாக இயக்கினார் மணிவண்ணன். “இவன் ரொம்ப திறமைசாலிப்பா. இவனுக்கு ஒரு சான்ஸ் கொடுத்துப்பாருங்க. நல்லா பண்ணுவான்” என்று தயாரிப்பாளரிடம் மணிவண்ணனுக்காக சிபாரிசு செய்தவர் யார் தெரியுமா? இசைஞானி இளையராஜா.

படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர் 1983-ல், மூன்று படங்களை இயக்கினார் மணிவண்ணன். ’ஜோதி’ என்றொரு படமும் ‘வீட்ல ராமன் வெளியில கிருஷ்ணன்’ என்ற படமும் இயக்கினார். அதே வருடத்தில் மூன்றாவது படத்தையும் தந்தார். ஆக, மணிவண்ணனின் நான்காவது படமாக வந்தது ‘இளமைக்காலங்கள்’. கல்லூரி மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் அப்படம் ஏற்படுத்திய தாக்கம்தான், அதை மெகா வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

குளுகுளு ஊட்டிதான் கதைக்களம். மோகன், சசிகலா, ஜனகராஜ், புதுமுகமான பாலாஜி முதலானோர் கல்லூரியில் படிக்க, அங்கே நடக்கும் தேர்தலில் மாணவர் தலைவராக மோகன் வெல்வார். இதனிடையே மோகனுக்கும் சசிகலாவுக்கும் காதல் மலரும். சசிகலாவின் தந்தை ஏ.ஆர்.எஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர். அம்மா சுகுமாரி. மோகனின் அப்பா தொழிலதிபர் செந்தாமரை. அம்மா எஸ்.என்.பார்வதி.

ரகுவுக்கும் (மோகன்), கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ரோஸிக்கும் (சசிகலா) இடையில் காதல் மலரும். ஆட்டமும்பாட்டமுமாக, ஜாலியும் கேலியுமாக, ஊடலும் கூடலுமாக வளர்ந்துகொண்டிருக்கும்.

அந்த சமயத்தில், ஒரு காதல் ஜோடி ஊரைவிட்டு ஓடி, ஊட்டிக்கு வருவார்கள். அந்த மலைப்பகுதியில், பாலாஜி, ஜனகராஜ் முதலான நண்பர்கள் தண்ணியடித்துவிட்டு ஜாலியாக இருப்பார்கள். அந்த ஜோடியைப் பார்த்ததும், காதலனை அடித்துப் போட்டுவிட்டு, அந்தப் பெண்ணைச் சீரழித்துவிடுவார்கள்.

மோகன்
மோகன்

மயக்கம் தெளிந்து எழுந்த காதலனும் காதலியும், இணைந்து வாழலாம் எனும் முடிவில் ஊரைவிட்டு ஓடிவந்தவர்கள், இந்த அவமானமும் வலியும் ஏற்காமல், மலையில் இருந்து ஒன்றாகக் குதித்து செத்துப்போவார்கள்.

ஊர் முழுக்க இதுவே பேச்சாகவும் பரபரப்பாகவும் இருக்கும். இந்தக் கொலைக்கும் கல்லூரி மாணவர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதை ஏ.ஆர்.எஸ் அறிந்து துப்புத்துலக்க கல்லூரிக்கு வருவார்.

மாணவர் தலைவரான மோகனுக்கு விருப்பமில்லாமலேயே ஸ்டிரைக், ஆர்ப்பாட்டம், காவல் துறையினருடன் கைகலப்பு என்று நடக்க, அப்போது பாலாஜி ஏ.ஆர்.எஸ் தலையில் சோடா பாட்டிலை வீச, அதனால் அவர் உயிரிழக்க நேரிடும். இதற்கெல்லாம் காரணம், மோகன் என்று நினைக்கும் சசிகலா அவரை வெறுக்க ஆரம்பிப்பார். நொந்துபோய்விடுவார் மோகன்.

காதல் ஜோடி, சூறையாடல், தற்கொலை, ஏ.ஆர்.எஸ். மரணம் இதற்கெல்லாம் ஏதோவொரு வகையில் தானும் காரணம் என்கிற குற்ற உணர்ச்சியுடன் மனப்பிறழ்ச்சிக்கு ஆளாகி பைத்தியம் போல் திரிவார் ஜனகராஜ். மோகனின் முறைப்பெண் ரோகிணி. அவரைத் திருமணம் செய்ய வலியுறுத்துவார்கள் பெற்றோர். ஆனால் சம்மதிக்கமாட்டார் மோகன். இந்தச் சண்டையில் வீட்டை விட்டே வெளியேறுவார் மோகன்.

அதே வெறுப்புடன் மோகனைப் பார்க்கிற சசிகலா குடும்பத்துக்கு பாலாஜி நெருக்கமாவார். சசிகலாவை அழைத்துக்கொண்டு ஊட்டியில் சுற்றுவார். கலவரத்தில் இறந்த ஏ.ஆர்.எஸ்ஸுக்கு துறையில் விருது வழங்குவார்கள். அதற்காக சென்னை செல்ல வேண்டியிருக்கும். ‘நான் துணைக்குப் போயிட்டு வரேன்’ என்று பாலாஜி சசிகலாவை ஊட்டியிலிருந்து அழைத்து வருவார். கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவார்கள்.

அங்கே... “ஊட்டிக்குப் போகாதீங்க ஊட்டிக்குப் போகாதீங்க.... ‘ரேப்’ பண்ணிருவாங்க” என்று பைத்தியமாகக் கத்திக்கொண்டே இருப்பார் ஜனகராஜ். பாலாஜியைப் பார்த்ததும், “நீதானே அந்தப் பொண்ணை அப்படி செஞ்சே. நானும்தானே அப்படி செஞ்சேன். போலீஸ் அதிகாரியை நீதானே பாட்டில் வீசி கொன்னே...’ என்று அரற்றித் தீர்ப்பார். அதைக் கேட்கும் சசிகலாவுக்கு உண்மையெல்லாம் தெரியவரும். பாலாஜியும் அங்கே வரும் ரயிலில் அடிபட்டு இறந்துபோவார். ஜனகராஜ், சசிகலாவிடம் மன்னிப்பு கேட்பார்.

இதேசமயத்தில் இன்னொன்றும் நிகழ்ந்திருக்கும். சசிகலாவின் தங்கை சிறுமி ஒருத்தி. பள்ளியில் படிப்பவள். மோகன் அவள் மீது பிரியமாக இருப்பார். ஸ்கூலுக்குச் சென்று உணவை ஊட்டிவிடுவதும் விளையாடுவதுமாக இருப்பார்கள்.

ஒருநாள், அவள் மோகனைச் சந்தித்துவிட்டு செல்லும்போது எதிரே வரும் காரில் மோதி, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவாள். ஆபரேஷனுக்குப் பணம் வேண்டும். வேறு வழியில்லாமல் அப்பாவிடம் சென்று பணம் கேட்பார். இதுதான் சமயம் என்று, “முறைப்பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லு, பணம் தரேன்” என்று சொல்ல, குழந்தையைக் காப்பாற்றுவதே முக்கியம் என்றிருக்கும் மோகன் சம்மதிப்பார். பணம் பெறுவார். ஆஸ்பத்திரியில் கொடுப்பார். ஆபரேஷன் நடக்கும். சிறுமி காப்பாற்றப்படுவாள்.

மோகன், சசிகலா
மோகன், சசிகலா

கோவை ரயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்குத் திரும்பி வரும் சசிகலாவுக்கு தங்கை அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கும் விவரம் தெரியவர, அங்கே மோகன் செய்த உதவி கண்டு நெகிழ்ந்து போவார். அதற்கு முன்னர்தான் அப்பாவின் சாவுக்கு மோகன் காரணமில்லை என்பதையும் உணர்ந்த சசிகலா, மோகனை ஏற்றுக்கொள்வார்.

இவர்களின் காதலை முழுமையாக உணர்ந்த ரோகிணி, இருவருக்கும் கல்யாணம் நடக்க விட்டுக்கொடுப்பார். திருமணம் நடக்கும். படம் இனிதே நிறைவுறும்.

கோவைத்தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு என்றாலே நல்ல கதை இருக்கும். எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி இருக்கும். குடும்பத்துடன் பார்க்கிற மாதிரி இருக்கும். முக்கியமாக பாடல்கள் எல்லாமே மனதைக் கவரும் விதமாக இருக்கும் என்று தமிழ் சினிமாவிலும் மக்கள் மத்தியிலும் அப்படியொரு நல்ல பெயர் உண்டு. அந்த நிறுவனம் தயாரித்த ‘இளமைக்காலங்கள்’ அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தியது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி மணிவண்ணன் இயக்கினார். சசிகலா அறிமுகமான படம் இது. அதுமட்டுமா? மிகச்சிறந்த நடிகை எனப் பெயரெடுத்த ரோகிணி அறிமுகமான படமும் இதுதான். அதிக வாய்ப்பில்லை என்றபோது கொடுத்த பாத்திரத்தை சிறப்பாகவே செய்திருப்பார்.

‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தை அடுத்து நடிகர் மோகனுக்கு ஏறுமுகம்தான். அதை இன்னும் உயர்த்தும் வகையில் இந்தப் படம் அமைந்திருந்தது. டீன் ஏஜ் வயதினருக்கு... குறிப்பாக பெண்களுக்கு மோகனை இந்தப் படத்திலிருந்து ரொம்பவே பிடிக்க ஆரம்பித்தது.

ஜனகராஜ், வழக்கம்போலவே இந்தப் படத்திலும் கலக்கலான நடிப்பை வழங்கியிருப்பார். பைத்தியமாக, “ஊட்டிக்குப் போகாதீங்க” என்று இவர் சொல்லும் வசனத்தைப் படம் பார்த்துவிட்டு வந்தவர்கள் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

எடிட்டிங் பாஸ்கரன், ஒளிப்பதிவு சபாபதி என்று மணிவண்ணனின் டீம் படத்தை ஜாலமாக்கியது. இந்தக் காதல் கதைக்கு இளையராஜாவின் இசை மிகப்பெரிய பலமாக அமைந்தது. படத்தில் ஏகப்பட்ட பாடல்கள். எல்லாமே அதிரிபுதிரி வெற்றியைப் பெற்றன. டைட்டில் இசையே அத்தனை ரம்மியமாக இருக்கும். காதல் ஜோடிகளை ஜனகராஜ் உள்ளிட்டவர்கள் துரத்துகிற காட்சியிலும் இன்னபிற காட்சிகளிலும் பின்னணியி இசையில் அதகளம் பண்ணியிருப்பார் இளையராஜா.

‘படிப்புல ஜீரோ நடிப்புல ஹீரோ ரோட்டிலே ரோமியோ’ என்ற பாடல், ‘பாட வந்ததோ கானம் பாவைக் கண்ணிலோர் நாணம்’, ‘இசை மேடையில் இன்ப வேளையில்’, ‘ராகவனே ரமணா ரகுநாதா’, ’யோகம் உள்ள மாமா’, ’வாடா என் வீரா காளியண்ணன் பேரா’ என்று ஒவ்வொரு பாடலும் நம்மை குதூகலப்படுத்தின. கவலை மறக்கச் செய்தன. முத்துலிங்கம், கங்கை அமரன், வைரமுத்து பாடல்கள் எழுதியிருந்தனர். எல்லாவற்றையும்விட வைரமுத்து எழுதிய ‘ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே’ என்ற பாடல், நம்மை அழவைத்தது. மனசுக்கு மயிலிறகென ஆனது. அந்தச் சமயங்களின் காதலித்தவர்களுக்கும் காதல் வலியில் இருந்தவர்களுக்கும் இந்தப் பாடல்தான் தேசியகீதமாகவே ஆறுதல் தந்து இளைப்பாறலைக் கொடுத்தது.

இயக்குநர் மணிவண்ணனின் மகன் பெயர் ரகுவண்ணன். ‘இளமைக் காலங்கள்’ படத்தில் மோகன் கேரக்டருக்கு ரகு என்றுதான் பெயர் வைத்திருப்பார் மணிவண்ணன்.

1983 ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியான இப்படம், வெளியிட்ட தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடியது. ‘காலைக்காட்சிக்குச் சென்று டிக்கெட் கிடைக்காமல், அப்படியே தியேட்டர் க்யூவில் நின்று மேட்னி ஷோவைப் பார்த்துவிட்டு, பிறகு ஐந்தாறு நாள் கழித்து மீண்டும் படம் பார்த்தவர்கள்... எங்கே கைதூக்குங்கள்’ என்று சொன்னால், 50 வயதைக் கடந்த பலரும் உற்சாகமாகக் கைதூக்குவார்கள் அந்த இளமைக் கனவுகளைச் சுமந்தபடி!

இளமைக்காலங்கள் விளம்பரம்
இளமைக்காலங்கள் விளம்பரம்

’பயணங்கள் முடிவதில்லை’ படத்தின் 100-வது நாள் போஸ்டர் அறிவிப்பின்போதே, ‘இளமைக்காலங்கள்’ படத்துக்கான விளம்பரமும் சேர்த்து ஒன்றாகவே வெளியிடப்பட்டது. அதிலொரு ஆச்சரியம். அப்போது அந்தப் படத்தை இயக்குவது சிறுமுகை ரவி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை... அதே ‘இளமைக்காலங்கள்’ எனும் தலைப்பில், மணிவண்ணன் இயக்கி படம் வெளியாகி வெள்ளிவிழாவையும் 200 நாட்களையும் கடந்து மெகா வெற்றிப்படமாக அமைந்தது.

படம் வெளியாகி, 39 ஆண்டுகளாகின்றன. பொதுவாகவே நம் இளமைக்காலங்களை மறக்கவே முடியாது. அதேபோல் மணிவண்ணன் தந்த ‘இளமைக் காலங்க’ளையும் மறக்க முடியாது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in