ஆக்டிங்கிலும் அசத்திய கேப்டனின் ‘வைதேகி காத்திருந்தாள்’

- மறக்க முடியாத காதல் கீதம் ’ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு’
ஆக்டிங்கிலும் அசத்திய கேப்டனின் ‘வைதேகி காத்திருந்தாள்’

’’அவரும் நானும் பள்ளித்தோழர்கள். அவருக்குப் பாட்டுன்னா ரொம்பவே உசுரு. சின்னவயசிலிருந்தே, எதையாவது பாடிக்கிட்டே இருப்பாரு. பழைய பாடல்களையெல்லாம் வரிகள் மறக்காம அப்படியே பாடுவாரு’’ என்று நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜை சந்தித்து பேசிக்கொண்டிருந்த தருணத்தில் ஆர்.சுந்தர்ராஜனைப் பற்றி இப்படித்தான் தெரிவித்தார். அவருக்குப் பாடல்கள் பிடிக்கும் என்பது ஒருபக்கம்... அவர் படத்தின் பாடல்களெல்லாம் நமக்குப் பிடிக்கும் என்பதுதான் முக்கியம்! அப்படி ஆர்.சுந்தர்ராஜன், ‘வசந்தத்தில் ஓர் நாள்’ பாடலில் இருந்து ஒரு வரியைத் தேர்ந்தெடுத்தார். ‘வைதேகி காத்திருந்தாள்’ என்று தலைப்பு வைத்தார். .

காதலை மையப்படுத்தியும் காதலர்களைச் சேர்த்துவைக்கப் போராடியதுமான படமாக அமைந்ததுதான் ’வைதேகி காத்திருந்தாள்’.

அந்தக் கிராமத்தில், தண்ணீரை நிரப்பி தோளில் சுமந்து ஊர் மக்களுக்குத் தருபவன் வெள்ளைச்சாமி. அவனுக்குக் கோயிலும் குளத்தாங்கரையுமே வாழ்விடம். அவன் யாரிடமும் பேசமாட்டான். ஆனால் இரவில் பாடுவான். அந்த ஊரில்தான் வசிக்கிறாள் வைதேகி. பரதம் தெரிந்தவள். நட்டுவனாரின் மகள். பாவம்... கல்யாணம் நடந்த அரைமணி நேரத்தில் கணவனைப் பறிகொடுத்தவள். அந்தத் துக்கத்தை அவளின் அப்பா, மதுவில் மறக்கிறார்.

அந்தக் கிராமத்துக்கு வருகிறான் இளைஞன் ஒருவன். சொந்தமில்லை. வேலையும் இல்லை. அவனுக்கு ரேஷன் கடையில் வேலை கிடைக்க, வைதேகி வீட்டு போர்ஷனில் தங்குகிறான். அமைதியான ஊர். ஆனந்தத்திற்கும் பஞ்சமில்லாத ஊர். ’வெள்ளிக்கிழமை ராமசாமி’ என்பவன், ரவுடித்தனம் பண்ணிக்கொண்டிருக்கிறான். கடைகளில் மாமூல் வாங்குவதுதான், அவனுடைய மாமூல் வாழ்க்கை. அவனுடைய தங்கை செங்கமலத்துக்கும் அந்த ரேஷன் கடை இளைஞனுக்கும் பூக்கிறது காதல்!

இதனிடையே, வெள்ளைச்சாமி, கோயில் சுவரில் ’வைதேகி வைதேகி வைதேகி...’ என எழுதிவைக்கிறான். விஷயம் ஊருக்குள் பரவுகிறது. இதில் ஆவேசமான வைதேகி, வெள்ளைச்சாமியிடம் வந்து, “ஏன் எம்பேரை எழுதினே?” என்று கேட்கிறாள். திட்டுகிறாள். அழுகிறாள். ’கெட்டபேர் வந்துவிட்டதே உன்னால்’ என்று கதறுகிறாள். யார் கேட்டும் பேசாத வெள்ளைச்சாமி, வைதேகிக்காகப் பேசுகிறான். ‘’நான் எழுதினது உண்மைதான். ஆனா வைதேகின்னு உங்களை நினைச்சு எழுதலை’’ என்கிறான். பிறகென்ன... வெள்ளைச்சாமிக்கான ஃப்ளாஷ்பேக் ஆரம்பிக்கிறது.

வெள்ளைச்சாமியின் மாமன் மகள். அவள் பெயரும் வைதேகி. மாமனே கதியென இருக்கிறாள். ஆனால் விருப்பம் இருந்தாலும், அவளை நோகடித்து, சீண்டிக்கொண்டே இருக்கிறான் வெள்ளைச்சாமி. ’’வைதேகியைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்’’ என்று அம்மாவிடம் உறுதியாகச் சொல்கிறான். ஆனாலும் வைதேகியிடம் கடைசியாய் விளையாடுகிறான். அந்த விளையாட்டுதான் வினையாகிறது. விஷம் குடித்து, செத்துப்போகிறாள் வைதேகி. துடித்துக் கதறுகிறான் வெள்ளைச்சாமி. சொத்துசுகம், வீடு வாசல் என சகலத்தையும் விட்டுவிட்டு, இந்த ஊருக்கு வருகிறான். ‘’ஒரு தம்ளர் தண்ணி இல்லாததால என் வைதேகி இறந்துபோனா. அதனாலதான் இந்த ஊருக்கே தண்ணி கொண்டாந்து கொடுத்துட்டிருக்கேன்’ என்று சொல்கிறான். அதைக் கேட்டு நட்டுவனாரின் மகள் வைதேகி, அழுகிறாள்.“ஒரு சொட்டுத் தண்ணி இல்லாததால, உன் வைதேகியை நீ காப்பத்த முடியல. ஆத்துல தண்ணி அதிகம் இருந்ததால, என் வாழ்க்கை இப்படி ஆயிருச்சு” என்று ஃப்ளாஷ்பேக் சொல்கிறாள்.

இந்த நிலையில், வைதேகி, தன் வீட்டில் குடியிருக்கும் ரேஷன் கடை இளைஞனின் செயல்களால், தன்னை விரும்புகிறானோ என நினைக்கிறாள். ஒருகட்டத்தில் ஆசையும்படுகிறாள். ஆனால் அவன், வைதேகியிடமே... “நானும் செங்கமலமும் காதலிக்கிறோம்” என்று சொல்ல, இடிந்து போகிறாள். வைதேகியின் அப்பாவும் இறந்துவிடுகிறார்.

விஷயம் வெள்ளிக்கிழமை ராமசாமிக்கு தெரிய, தங்கையைப் பூட்டிவைக்கிறான். காதலர்கள சேர்த்துவைக்க வெள்ளைச்சாமியை நாடுகிறாள் வைதேகி. வெள்ளைச்சாமியின் வைதேகியுமாகச் சேர்ந்து, அந்த இளஞ்ஜோடிக்கு திருமணம் செய்துவைத்தார்களா, வைதேகியின் நிலை என்ன என்பதுதான் ‘வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படம்.

வெள்ளைச்சாமியாக விஜயகாந்த். வைதேகியாக ரேவதி. இன்னொரு வைதேகியாக பரிமளம் எனும் புது நடிகை. வெள்ளிக்கிழமை ராமசாமியாக ராதாரவி. நட்டுவனாரும் வைதேகியின் அப்பாவுமாக டி.எஸ்.ராகவேந்தர்.

தைத்துப் போடப்பட்ட அழுக்கு உடையும் பரட்டைத் தலையும் தாடியுமாக விஜயகாந்த் தன் நடிப்பால் அசத்தியெடுத்திருப்பார். சோகமும் சரி, சண்டையும் சரி... இரண்டிலுமே மனிதர் பாய்ச்சல் காட்டியிருப்பார். சினிமாவுக்குள் நுழைந்த ஆறேழு வருடங்களில், அற்புதமான, கனமான கதாபாத்திரம் விஜயகாந்துக்குக் கிடைத்தது என்று பாராட்டின பத்திரிகைகள்!

விதவை கதாபாத்திரத்தில் ரேவதி. அப்படியொரு சோகப்பொருத்தம் அவரின் முகத்தில் நிறைந்திருக்கும். ராதாரவியின் மேனரிஸமும் நடிப்பும் அசத்தல். படத்தில் ’ஆல் இன் ஆல் அழகுராஜா’ கவுண்டமணியின் கலாட்டாக்களுக்குப் பஞ்சமே இல்லை. செந்திலுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. ‘கோழி குருடா இருந்தா என்னடா. குழம்பு ருசியா இருக்காங்கறதுதான் முக்கியம்’ என்ற வசனம் ஏக பாப்புலர். ‘பொய் சொல்லாதீங்கண்ணே. இது எப்படி எரியும்ணே?’ என்று பெட்ரோமாக்ஸ் பல்பை செந்தில் உடைத்துவிட, முகம் இருண்டுபோய்விடும் கவுண்டமணிக்கு.

‘ஏங்க... இங்கே ஆல் இன் ஆல் அழகுராஜாங்கறது யாரு? பொண்ணுக்கு சாயந்திரம் சீரு வைக்கணும். ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு வாடகைக்கு வேணும்’ என்று பெண்மணி கேட்க... ‘ஏங்க... பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா. இந்த தீப்பந்தம்கீப்பந்தம்...’ என்று செய்வதும் சொல்வதும் கவுண்டரின் நக்கல். ’பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா? இன்றைக்கும் வைரல், டிரெண்டிங், ஹேஷ்டேக் வார்த்தைகள்!

கோகிலாவின் பெயர்தான் என்று நினைத்து, கோகிலாவின் பாட்டி பெயரான புஷ்பாவை, புஷ்பாபுஷ்பா என்று கூப்பிடுவதும் ‘எம் புருசன் என்னை புஷ்ஷு புஷ்ஷுன்னு செல்லமாகக் கூப்பிடுவாரு’ என்று மீனாட்சிப்பாட்டி சொல்லுவதும் அப்போது செம ஹிட்டு.

லைட்டான கதை, வெயிட்டான திரைக்கதை, சிரிக்கவைக்கும் காட்சிகள், சென்டிமென்ட் விஷயங்கள், எழில் கொஞ்சும் இயற்கை ஏரியாக்கள், இசைக்கு முக்கியத்துவம் என்பதுதான் ஆர்.சுந்தர்ராஜன் ஸ்பெஷல். இதிலும் அப்படித்தான்.

’‘ஆறு பாட்டு தரேன். ஒரு கதை ரெடிபண்ணிக்கோ’’ என்று இளையராஜா, ஆர்.சுந்தர்ராஜனை அழைத்துச் சொன்னதாகவும் அதுவே ’இந்த வைதேகி காத்திருந்தாள்’ படம் என்றும் சொல்லுவார்கள். ’ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’, ’இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ’, ’மேகம் கருக்கையிலே’, ’அழகு மலராட’, ’காத்திருந்து காத்திருந்து...’ என ஒவ்வொரு பாட்டு திரையில் வரும்போதும் கைத்தட்டி வரவேற்றார்கள் ரசிகர்கள்.

படத்தின் வெற்றியில் இளையராஜாவின் பங்கு மிகப்பெரியதுதான். இன்றைக்கும் இரவுகளில் பாடல் கேட்போர், இந்தப் பாடல்களில் ஏதேனும் இரண்டுபாடல்களையாவது பதிவேற்றிவைத்துக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஜெயச்சந்திரனின் குரல் மயக்கிப்போடும். ‘மேகம் கருக்கையிலே’ பாட்டுக்கு முன்னதாக, ‘ஆஹா ஓஹோ ஹேய் ஹேய்’ என்கிற ஹம்மிங், குதூகலப்படுத்திவிடும்.

டி.எஸ்.ராகவேந்தரின் முதல் படம் இது. அநேகமாக, கவுண்டமணி, செந்தில், கோவைசரளாவின் கூட்டணிப்படங்களிலும் இது முதலாவதாக இருக்கலாம். தூயவன் தயாரித்தார். பஞ்சு அருணாசலமும் படத்தயாரிப்பில் உதவினார். வழக்கம்போலவே, ஆர்.சுந்தர்ராஜனின் இந்தப் படத்துக்கும் ராஜராஜன் ஒளிப்பதிவு. அத்தனை குளுமை. ஜிலீர் லோகேஷன்!

கவிஞர் வாலிக்கு இந்தக் காலகட்டத்தில், பாடல் எழுதுவது குறைந்திருந்ததாம். ‘’யோவ் பஞ்சு, நீயே படத்தைத் தயாரிச்சு, நீயே பாட்டு எழுதிடுறியே. எங்களுக்கு வாய்ப்பு கொடுய்யா’’ என்று ஜாலியாகவும் உரிமையாகவும் பஞ்சு அருணாசலத்திடம் கேட்டார். ’‘அவ்ளோதானே... இனிமே நம்ம படத்துல ரெண்டு பாட்டாவது கொடுத்துடுறேன், எழுதுங்கண்ணே’’ என்றாராம் பஞ்சு அருணாசலம். ‘’அஞ்சு பாட்டும் கொடுய்யா. சம்பளம் அதிகமாக் கிடைக்கும்ல’’ என்று இன்னும் சீண்டினார் வாலி. இதையடுத்து பஞ்சு அருணாசலம், இரண்டு பாடல்கள் கொடுத்தாலும் ஐந்து பாட்டுக்கு உண்டான சம்பளத்தைக் கொடுத்தார். இதை மேடை ஒன்றில் பஞ்சு அருணாசலமே தெரிவித்துள்ளார்.

’ராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு’ என்ற பாடலை இன்னும் பாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தலைமுறையினரும் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். 'காத்திருந்து காத்திருந்து...’ பாடலைக் கேட்டு உருகிக்கொண்டிருக்கிறார்கள்.

1984ம் ஆண்டு, தீபாவளித் திருநாளில் அக்டோபர் 22ம் தேதியன்று வெளியானது. படம் வெளியாகி, 38 வருடங்களாகின்றன. நல்ல கதை, சிறப்பான நடிப்பு, அட்டகாச காமெடி, எல்லாவற்றையும் விட இளையராஜாவின் இசை என்று அமைந்து வெள்ளிவிழா நாட்களையும் கடந்து, வெற்றிவாகை சூடினாள் ‘வைதேகி காத்திருந்தாள்’.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in