‘ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்’ என்று சொன்ன ‘படிக்காதவன்’!

‘ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்’ என்று சொன்ன ‘படிக்காதவன்’!

சித்தி கொடுமை, மாமியார் கொடுமை, குடிகாரத் தகப்பனின் கொடுமை என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சினிமாவாகவும் பார்த்திருக்கிறோம். ஆனால் அண்ணியின் கொடுமை என்பது தமிழ் சினிமாவில் அரிதினும் அரிதுதான். அப்படி அண்ணியின் கொடுமை தாங்கமுடியாமல், தம்பிகள் இரண்டுபேரும் ஊரைவிட்டு எங்கோ சென்று வாழத் தவிப்பார்கள். அவர்கள், அந்த பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய மூத்த அண்ணனை தங்கள் வாழ்நாளில் சந்தித்தார்களா, சந்திக்கும்போது தங்களை யாரென்று தெரியப்படுத்திக்கொண்டார்களா... அப்படித் தெரியும் சூழல் எப்போது உருவானது என்பதைச் சொன்னவன்தான் ‘படிக்காதவன்.’

மூத்த அண்ணன் சிவாஜி. அவரின் மூத்த தம்பி ரஜினிகாந்த். இன்னொரு தம்பி விஜய்பாபு. அண்ணியாக வடிவுக்கரசி. ரஜினியும் விஜய்பாபுவும் சிறுவர்களாக இருக்கும்போது அண்ணியாரின் கொடுமை அரங்கேறிக்கொண்டே இருக்கும். ஒருகட்டத்தில் இருவரும் வீட்டைவீட்டு வெளியேறி ஊரைவிட்டே போய்விடுவார்கள்.

இஸ்லாமியரான நாகேஷ், சிறுவர்கள் இருவரையும் அரவணைத்துக் கொள்வார். தன் குழந்தைகளோடு குழந்தைகளாக இவர்களையும் வளர்ப்பார். சிறுவயதில் இருந்தே சின்னச்சின்ன வேலைகள் செய்து ரஜினி, தன் தம்பியைக் கஷ்டப்பட்டு படிக்கவைப்பார். வளர்ந்ததும் டாக்ஸி ஓட்டுவார். தான் படிக்காவிட்டாலும் தன் தம்பி படித்து பெரியாளாக வேண்டும் எனும் லட்சியத்துடன் கஷ்டப்பட்டு உழைப்பார்.

ஆனால் அங்கே கல்லூரியில் காதல். பெரிய இடத்துப் பெண். ரம்யா கிருஷ்ணனை விரும்புவார் விஜய்பாபு. பணக்காரர் பூர்ணம் விஸ்வநாதனுக்கும் அவரின் தம்பி ஜெய்சங்கருக்கும் எப்போதும் முட்டிக்கொண்டே இருக்கும். ஜெய்சங்கர் தீய வழிகளில் செல்பவர் வேறு. அண்ணனின் சொத்துகளை அபகரிக்க பல சூழ்ச்சிகளைச் செய்வார்.

இந்த நிலையில், அண்ணன் சிவாஜியை எதிர்பாராத தருணம் ஒன்றில் ரஜினி சந்திப்பார். சிவாஜியைப் பார்த்து அண்ணன் என்று ரஜினிக்குத் தெரிந்துவிடும். ஆனால் ரஜினியைப் பார்த்ததும் தம்பி என்பது சிவாஜிக்குத் தெரியாது. எனினும் ரஜினியின் குணமும் நன்னடத்தையும் பண்பும் பணிவும் சிவாஜிக்கு ரொம்பவே பிடித்துவிடும்.

இந்த நிலையில் தம்பி படிக்காமல் ஏமாற்றியிருப்பார். கல்லூரித் தேர்விலும் தோற்றிருப்பார். பணக்காரப் பெண்ணையும் திருமணம் செய்துகொள்வார். ஜெய்சங்கரின் வலையில் வசமாகச் சிக்கிக்கொள்வார். சட்டவிரோதச் வேலைகளில் ஈடுபடுவார். இவையெல்லாம் பூர்ணம் விஸ்வநாதனுக்குத் தெரியவரும். ஜெய்சங்கர் பூர்ணம் விஸ்வநாதனைக் கொன்றுவிடுவார். அந்தப் பழியை ரஜினி மீது விழும்படியாக செட்டப் செய்திருப்பார் ஜெய்சங்கர். அதன்படி ரஜினி கைதாவார். வக்கீலாக இருந்த சிவாஜி நீதிபதியாகியிருப்பார். அந்த வழக்கின்போதுதான் ரஜினி தன் தம்பி என்பது சிவாஜிக்குத் தெரியவரும். பிறகு வக்கீலாக வந்து, தம்பிக்காக வாதாடுவார். பல உண்மைகளைக் கண்டறிந்து, ரஜினி குற்றவாளி அல்ல என நிரூபிப்பார். பிறகென்ன... எல்லோரும் சேருவார்கள். படம் இனிதே முடிவுறும்.

Ramji

என்.வீராசாமி தயாரிப்பில், இயக்குநர் ராஜசேகரின் இயக்கத்தில் வெளியானது ‘படிக்காதவன்’. ஏற்கெனவே ரஜினியை வைத்து ‘தம்பிக்கு எந்த ஊரு’ எடுத்தவர் ராஜசேகர். ரஜினியின் சொந்தப் படமான ‘மாவீரன்’ படத்தை இயக்கியவர். அவ்வளவு ஏன்... அவர் இயக்கிய கடைசிப் படமான ‘தர்மதுரை’ படத்திலும் ரஜினிதான் ஹீரோ. இந்தப் படத்தில் கலகலவென, காமெடியும் ஆக்‌ஷனும் சென்டிமென்டுமாக ரஜினியை வைத்து தூள் கிளப்பியிருப்பார் இயக்குநர் ராஜசேகர்.

கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு கல்லூரிக்குச் சென்று, தெரிந்து வைத்திருக்கும் இரண்டு மூன்று ஆங்கில வார்த்தைகளை வைத்துக்கொண்டு ரஜினி கொடுக்கும் அலப்பறையில் தியேட்டரே கிடுகிடுத்துச் சிரித்தது. ரஜினிக்கும் அம்பிகாவுக்குமான அறிமுகமும் காமெடி கலாட்டாதான். இன்னொரு பக்கம் ஜனகராஜின் காமெடி அதகளப்படுத்தும். ‘என் தங்கச்சிய நாய் கடிச்சிருச்சுப்பா’ எனும் வசனம் மிகப்பெரிய அளவுக்குப் பிரபலமாயிற்று.

நாகேஷ் சீரியஸ் ரோல் பண்ணியிருப்பார். பூர்ணம் விஸ்வநாதனும் ஜெய்சங்கரும் செந்தாமரையும் அவரவருக்கு உரிய பாத்திரங்களை உணர்ந்து நடித்தார்கள். அண்ணியாக வரும் வடிவுக்கரசி, தனித்துவமான நடிப்பால் கேரக்டருக்கு உயிரூட்டியிருப்பார். சிவாஜியின் அலட்டலில்லாத நடிப்பைச் சொல்ல வேண்டுமா என்ன?

தேங்காய் சீனிவாசன், ரம்யா கிருஷ்ணன், செந்தாமரை என பலரும் சிறப்புற நடித்திருந்தார்கள். அம்பிகா ரஜினியைக் காதலிப்பதும் அவருக்கு ஆறுதல் சொல்வதும் டூயட் பாடுவதும் என்று நன்றாகவே பண்ணியிருப்பார்.

’கெளரவ ஒத்துழைப்பு தந்த, கலைத்தாயின் மூத்த மகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு நன்றி’ என்று டைட்டில் தொடங்கியதும் போடுவார்கள். அதேபோல் அப்போது ஜெய்சங்கர் நடிக்கும் படங்களில், எல்லா நடிகர் நடிகைகளின் பெயர்களைப் போட்டுவிட்டு, ‘இவர்களுடன் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்’ என்று போடுவது வழக்கம்.

கவிஞர் வாலி, வைரமுத்து, கங்கை அமரன் பாடல்களை எழுதினார்கள். பாடல்களை ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி, வாணி ஜெயராம் முதலானோர் பாடினார்கள். ராஜசேகர் படத்துக்கு எப்போதுமே ரங்காதான் ஒளிப்பதிவு செய்வார். இதிலும் அழகு கூட்டியிருப்பார்.

படத்துக்கு ரஜினி ஒரு பலம் என்றால், மிகப்பெரிய பலம் இளையராஜா. பின்னணி இசையிலும் பாடல்களிலும் கூடுதல் கவனம் ஈர்த்தார். எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார். ‘ராஜாவுக்கு ராஜா நான்டா எனக்கு மந்திரிங்க யாருமில்ல’ என்ற பாடல் ஜாலியாக இருக்கும். ’ஒரு கூட்டுக்கிளியாக ஒரு தோப்புக்கிளியாக’ என்ற பாடலை சிவாஜிக்கு மிக அற்புதமாக மலேசியா வாசுதேவன் பாடினார். சிவாஜிக்கு ‘முதல் மரியாதை’ முதலான பல படங்களில் பாடி, டி.எம்.எஸ்ஸுக்கு அடுத்ததாக சிவாஜிக்கு ஜோடி சேரும் குரல் என்று எல்லோரும் பாராட்டினார்கள்.

அதேபடத்தில், ‘சொல்லி அடிப்பேனடி அடிச்சேனுன்னா நெத்தியடிதானடி’ என்று ரஜினிக்கும் மலேசியா பாடினார். ‘சோடிக்கிளியெங்கே’ பாடலும் சூப்பர் டூயட் பாடலாக இனித்தது. விரக்தியில் ரஜினி பாடுகிற ‘ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்’ பாடலை வைரமுத்து பிரமாதமாக எழுதினார்.

’ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி / ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி/ பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்/ பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி’ என்று எழுதி வியப்பூட்டினார்.

’ஏது பந்த பாசம்/ எல்லாம் வெளி வேஷம்/ காசு பணம் வந்தா/ நேசம் சில மாசம்/ சிந்தினேன் ரத்தம் சிந்தினேன்/ அது எல்லாம் வீண் தானோ/ வேப்பிலை கறிவேப்பிலை/ அது யாரோ நான் தானோ/ என் வீட்டுக் கன்னுக்குட்டி/ என்னோட மல்லுக் கட்டி/ என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி/ தீப்பட்ட காயத்தில/ தேள் வந்து கொட்டுதடி கண்மணி கண்மணி’ என்று பாடல் தொடரும்...

’நேற்று இவன் ஏணி/ இன்று இவன் ஞானி/ ஆள கரை சேத்து/ ஆடும் இந்தத் தோணி/ சொந்தமே ஒரு வானவில்/ அந்த வர்ணம் கொஞ்ச நேரம்/ பந்தமே முள்ளானதால்/ இந்த நெஞ்சில் ஒரு பாரம்/ பணங்காசைக் கண்டுப்புட்டா புலி கூட புல்ல தின்னும் கலிகாலம் ஆச்சுதடி கண்மணி என் கண்மணி/ அடங்காத காளை ஒன்னு அடிமாடா போனதடி கண்மணி கண்மணி’ என்று எழுதி உலுக்கியெடுத்தார் வைரமுத்து. ஜேசுதாஸ் தன் குரலால் நம்மை உருக்கியெடுத்தார். இந்தப் பாடலை முணுமுணுக்காதவர்களே இல்லை!

எனக்குத் தெரிந்த கர்ணன் எனும் அண்ணன், இந்தப் பாட்டைத்தான் பத்து வருடங்களாக ரிங் டோனாக வைத்திருக்கிறார். இன்னும் எத்தனை அண்ணன்கள் இந்தப் பாடலை ரிங்டோனாக வைத்திருக்கிறார்களோ... எதை நினைத்து வைத்திருக்கிறார்களோ... தெரியவில்லை.

திருச்சி மாரீஸ் தியேட்டரில் படம் ரிலீஸ். அதுவும் தீபாவளி ரிலீஸ். திருச்சியில்தான் மாரீஸ், மாரீஸ் ராக், மாரீஸ் போர்ட், மாரீஸ் மினி, மாரீஸ் மேக்ஸி என ஐந்து தியேட்டர்கள் இருந்தன. அப்போது, இப்படி ஒரே கட்டிடத்தில் ஐந்து தியேட்டர்கள், ஆசியாவிலேயே இல்லை என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள் திருச்சிக்காரர்கள். மாரீஸ் தியேட்டரில், நல்ல மழைவேளையில், முதல்நாள், முதல் ஷோ பார்த்ததும், செம பசியில், இடைவேளையில் கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு போய், நானும் நண்பர்களும் பத்து சம்சா வாங்கி பகிர்ந்துச் சாப்பிட்டு வயிறு நிறைத்ததையும் மறக்கவே முடியாது.

1985 நவம்பர் 11-ம் தேதி வெளியானது ‘படிக்காதவன்’. படம் வெளியாகி 37 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கு ரீமிக்ஸ் என்று பாடல்களெல்லாம் வருகின்றன. ஆனால் அப்போதே, ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் விசுவுக்கு ‘ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்’ என்று மலேசியா வாசுதேவன் பாடி, சங்கர் - கணேஷ் இசையமைத்தார்கள் என்பது, ‘படிக்காதவன்’ படத்துக்கும் இளையராஜாவுக்கும் வைரமுத்துவின் ‘ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன் ‘ பாடலுக்குமான மெகா வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in