மூவர் கூட்டணி சிவாஜிக்குத் தந்த ‘முதல் மரியாதை’!

வெளியாகி 37 ஆண்டுகளாகியும் இன்றும் மண்மணக்கும் திரைக் காவியம்
’முதல் மரியாதை’
’முதல் மரியாதை’

படம் வருவதற்கு முன்பே பாடல்கள் வெளியாகி, கேசட் அதிக அளவில் விற்பனையான எண்பதுகள் மறக்க முடியாதவை. இந்தப் படத்தின் கேசட் வெளியாகி, ஊரெங்கும் அதே பேச்சாக இருந்தது. டீக்கடைகளில், டெய்லர் கடைகளில் என எங்கு பார்த்தாலும் இந்தப் படத்தின் கேசட்டுதான் ஒலித்தது. ‘எடுத்ததுமே பாரதிராஜா பேசுறாப்ல. அடுத்தாப்ல, ஒவ்வொரு பாட்டுக்கு முன்னாடியும் வைரமுத்து, அந்தப் பாட்டுப் பத்தி சொல்றாப்ல. இவங்க பேசுறதக் கேக்கறதே சுகமா இருக்கு. போதாக்குறைக்கு இளையராஜாவோட ஒவ்வொரு பாட்டும், தேன்ல பலாச்சுளை முக்கிக் கொடுத்தா மாதிரி இருக்கு’ என்று பாடல்களைப் பற்றிய பேச்சாகவே இருந்தபோதுதான் படம் வெளியானது.

‘சிவாஜி நடிக்காத கேரக்டர்னு எதுவுமே இல்ல’ என்போம்தானே. உண்மையிலேயே, இப்படியொரு சிவாஜியை அப்போதுதான் பார்த்தோம். பிரமித்தோம். ஊர்ப்பெரியவராகவே கிராமத்தில் வாழ்ந்து, நம்மையெல்லாம் நெகிழ்த்திய அந்தப் படம்... ‘முதல் மரியாதை’.

நடிகர்திலகம் சிவாஜி கணேசனுடன் ‘முதல் மரியாதை’, ‘பசும்பொன்’ என இரண்டு படங்களில் இணைந்தார் பாரதிராஜா. இந்த இரண்டில் ‘முதல் மரியாதை’யை ஒரு காவியமாகவே படைத்தார்.

60 வயது ஆணுக்கும் 20 வயது பெண்ணுக்கும் நிகழ்கிற காதலும் அன்புமான உணர்வுதான் கதை என்று சொன்னால், ‘என்னப்பா இது?’ என்போம். ஆனால் அப்படி ஒரு கதையைச் செதுக்கி, திரைக்கதையாக்கி, உயிரோட்டமாக உருவாக்கியதில்தான் இருக்கிறது பாரதிராஜா எனும் படைப்பாளியின் கவிநயம்.

மாமனின் மகள் எங்கோ எவரிடமோ சோரம் போகிறாள். ‘மானத்தைக் காப்பாற்ற கல்யாணம் பண்ணிக்கொள்’ என்று தாய்மாமன், தன் காலில் விழ, அதைக் கண்டு கலங்கிப்போகிற மலைச்சாமி, மாமாவுக்காக அவர் மகள் பொன்னாத்தாளைத் திருமணம் செய்துகொள்கிறார். மாமா விருப்பத்துக்காக கல்யாணம் செய்துகொண்டு, வேண்டாவெறுப்பாக வாழ்க்கையைக் கடத்துகிறார்கள் இருவரும்!

சொத்துக்கு ஆசைப்பட்டு கல்யாணம் செய்துகொண்டதாக நினைத்து, கணவனை அடியோடு எப்போதும் மட்டம் தட்டி, குத்திப் பேசி, காயப்படுத்திக்கொண்டே இருக்கிறாள் பொன்னாத்தாள். ஊருக்குப் பஞ்சம் பிழைக்க அப்பனுடன் வருகிறாள் குயிலு. பொன்னாத்தாளின் மகளைத் தன் சொந்த மகளாகவே பாவித்து பாசம் காட்டுவதும் தன் சகோதரி மகன் மீது அன்பைப் பொழிவதும் ஊரே மதிக்கும்படி வாழ்வதும் என இருக்கிற மலைச்சாமியின் வாழ்வில் நிம்மதியுமில்லை; சந்தோஷமுமில்லை.

மலைச்சாமியாக சிவாஜி. பொன்னாத்தாளாக வடிவுக்கரசி. குயிலாக ராதா. மகளாக அருணாவும் மருமகனாக ராமநாதனும். சகோதரியின் மகன் தீபக். அவன் காதலிக்கும் பெண் ரஞ்சனி. மனைவியிடம் கிடைக்காத அன்புக்கு, குருவிகளுடன் பேசுகிற மனநிலையை சிவாஜியைத் தவிர வேறு யாரால் நமக்கு உணர்த்திவிடமுடியும்? காதலுமில்லை; காமமுமில்லை எனத் தொடரும் வாழ்க்கை. ஊர்ப் பெண்களிடம் எள்ளி நகையாடுவதும், எசப்பாட்டு படித்து லந்து பண்ணுவதும் என பேச்சில் கடந்து செல்கிற மனதின் பாரத்தை சிவாஜியைத் தவிர வேறு யாரால் நமக்குக் கடத்திவிட முடியும்?

கொஞ்சம்கொஞ்சமாக, ராதாவுக்கு சிவாஜியின் மீது காதல் மலரும். கொஞ்சம்கொஞ்சமாக சிவாஜிக்கு ராதாவின் மீது பேரன்பு பொழியும். இந்தக் காதலையும் பேரன்பையும் காட்சிக்குக் காட்சி நமக்கு உணர்த்தியிருப்பார் பாரதிராஜா. முதிர்ந்த வயதில், ‘இளவட்டக்கல்’ தூக்குகிற விஷயத்தில், ஒவ்வொரு முறை முயற்சி செய்வதும், ஒருமுறை அந்த இளவட்டக்கல்லை அப்படியே தூக்கி நிறுத்துவதும், அதை ராதா பார்த்துவிட, வெட்கப்பட்டு, நாணிக்கோணிக்கொண்டு, அங்கிருந்து ஓடுவதும் என அந்தக் காட்சியில், அதுவரை தன் வாழ்நாளில் கிடைக்காத ஏதோவொன்று கிடைத்துவிட்ட ஆனந்தப் பூரிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் சிவாஜி.

’16 வயதினிலே’ குருவம்மாவும் ‘மண்வாசனை’ ஒச்சாயிக்கிழவியுமாக சேர்த்துக் குழைத்த கதாபாத்திரமாக பொன்னாத்தாள். வெற்றிலை குதப்பிக்கொண்டும் காதில் தண்டட்டி ஆடிக்கொண்டும் வாய் முழுக்க அனலைக் கக்குகிற அந்தக் கதாபாத்திரம்... வடிவுக்கரசிக்கு வாழ்நாள் பரிசு!

பொன்னாத்தாள் பாத்திரத்தில் வடிவுக்கரசி
பொன்னாத்தாள் பாத்திரத்தில் வடிவுக்கரசி

‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் அறிமுகப்படுத்திய பாரதிராஜா, வடிவுக்கரசிக்கு வழங்கிய ஸ்பெஷல் பார்சல்... பொன்னாத்தாள் கேரக்டர். ‘இம்புட்டு கொடுமை ஆகாது தாயீ. அது கடவுளுக்கே அடுக்காது’ என்று பொன்னாத்தாளைக் கரித்துக்கொட்டினார்கள், படம் பார்த்தவர்கள்.

ராதாவுக்காக சிவாஜி ஆடு விற்றுத் தரும் காட்சி கலகல. இருவரும் ஸ்டூடியோவில் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் காட்சி யதார்த்தம். ஆற்றில் மீன் பிடிக்க, தன் முந்தானையை ராதா தரும் வேளையில், சட்டென்று கோபமாகி சிவாஜி புறக்கணிப்பார். அடுத்த நிமிடமே, சமாதானமாகி துண்டைத் தருவார். ‘ரெண்டுபேர் ராசி’ என்று சொல்லி, நீருக்குள் துணியை முக்க, மீன்கள் அதிகமாகவே சிக்கிக்கொள்ள, சிவாஜி முகத்தில் ஒரு மெல்லிய காதல், சட்டென்று மின்னலென மின்னி மறையும். ‘அட காதலுக்குக் கண்ணுமில்ல, வயசமில்ல’ என்று படம் பார்க்கிற நாம், மனதுக்குள் சொல்லி நெகிழ்ந்து நெக்குருகிப் போனோம்.

கிராமத்தில், கயிறு திரிக்கும் தொழில் செய்யும் ஜனகராஜ். பாரதிராஜா படங்களிலெல்லாம் ஜனகராஜுக்கு அப்படியொரு கதாபாத்திரம் அமைந்துவிடும். இன்னும் சொல்லப்போனால், எண்பதுகளின் எல்லா இயக்குநர்களும் ஜனகராஜை வாரியணைத்துக்கொண்டு நடிக்க வைத்தார்கள். அப்படியொரு உண்மையான நடிப்பை வழங்கும் ஜனகராஜ், வடிவுக்கரசியிடம் சிவாஜிக்கும் ராதாவுக்கும் தொடர்பு என்பதாகத் திரித்துப் போடுவார். பிரச்சினையை ஃபைசல் செய்வதற்காக வடிவுக்கரசி தனது சொந்தபந்தத்தையெல்லாம் கூப்பிட்டு, கிடா வெட்டி விருந்து வைக்கும் காட்சி அத்தனை இயல்பாக இருக்கும். கிராமங்களில் பார்க்கக்கூடிய கறி விருந்து திரைவடிவில் மணக்கும்!

தீபன் - ரஞ்சனி காதல், ஒரு புதுக்கவிதை. இருவருக்கும் சிவாஜியே திருமணம் செய்துவைப்பார். பிறகு ரஞ்சனி இறந்துவிட, பித்துப் பிடித்தது போலாகிவிடுவார் தீபன். ஊரில் சுமைதாங்கிக் கல்லென நிற்கிறார் ரஞ்சனி. ரஞ்சனியின் அப்பா செருப்பு தைக்கும் தொழிலாளி. “ஊருக்கே செருப்பு தைச்சுக் கொடுக்கறேன். உங்களுக்கொரு செருப்பு தைக்க முடியலியே சாமீ” என பொருமுவார் வீராசாமி.

ரஞ்சனி இறந்த பிறகு, “சாமீ... எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ” என சிவாஜியிடம் வந்து கேட்பதும் சிவாஜியைப் பற்றி ராதாவிடம் விவரிப்பதும் என அந்தக் கிளைப்பாத்திரத்தையும் அழகாகவும் கதைக்குச் சத்தாகவும் பயன்படுத்தியிருப்பார் பாரதிராஜா.

ராதா வைக்கும் மீன் குழம்பு சாதத்தை சிவாஜி சாப்பிடுகிற கலகலப்பாக ஆரம்பித்து கண்ணீருடன் முடியும். “நான் எனக்காக சாப்பிடல; உனக்கு வவுறு வலிக்கக் கூடாது பாரு, அதான் சாப்புடுறேன்” என்று சொல்லிவிட்டு, காரம் அதிகமாகி கண்ணீரும் சிரிப்புமாக, அம்மாவின் நினைவும் வந்துவிட, அம்மாவை ஞாபகப்படுத்திய உணவையும் விவரித்து, ‘இருபது வருசமாச்சு’ என்று முடிக்கும்போது, நம் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அதேசமயம் சிவாஜியின் நடிப்புக்கு நம்மை மறந்து கரவொலி எழுப்பியதையெல்லாம் மறந்துவிட முடியுமா?

ஆர்.செல்வராஜின் கதை, வசனம் அத்தனை நேர்த்தி. ‘நான் படப்பிடிப்புக்குச் செல்லும்போது, காமிராவை எடுத்துச் செல்வதில்லை. என் கண்ணனின் இரண்டு கண்களைத்தான் எடுத்துச் செல்கிறேன். அந்தக் கண்களுக்குத்தான் ஆகாயத்தின் மறுபக்கத்தையும் பார்க்கத் தெரியும்’ என்று பாரதிராஜா சொன்னதை மெய்ப்பிக்கும் வகையில், ஒளிப்பதிவாளர் கண்ணனின் காமிரா படம் முழுக்கக் கவிதையாக்கியிருக்கும்.

கதாசிரியர் ஆர்.செல்வராஜ்
கதாசிரியர் ஆர்.செல்வராஜ்

அந்தக் குடிசையையும் குடிசையை வெளியில் இருந்து ஓட்டை வழியே பார்ப்பவர்களைக் காட்டாமல், அவர்களின் குள்ள உயரங்களை, காமிராவின் ஏற்ற இறக்கத்தை மட்டுமே கொண்டு காட்டிவிடுவதுதான் ‘கண்ண ஜாலம்’!

பொன்னாத்தாளைக் கெடுத்தவனாக சத்யராஜ் வரும் ஒரேயொரு காட்சி. அட்டகாசம் பண்ணுவார். அந்தக் காட்சிதான், ராதாவுக்கு சிவாஜி மீது இருக்கும் காதல், வெறும் காதலல்ல... அதுவும் பேரன்பு, அதீத மரியாதை என்பதை நமக்கு உணர்த்தும். தன் குடும்பத்துக்காக சத்யராஜைக் கொலை செய்த குயிலை ஏற்கத் துணிந்த சிவாஜி, ராதாவின் குடிசையிலேயே தன் வாழ்நாளைக் கழிப்பார். ஜெயிலுக்குப் போன ராதா பரோலில் வந்து சிவாஜியைப் பார்ப்பார். காத்துக்கிடந்ததற்குப் பலன் கிடைத்த பூரிப்பில், பார்த்துவிட்ட நிறைவில், சிவாஜி இறப்பார். சிவாஜி கொடுத்த கருகமணியைக் கையில் வைத்தபடி ரயிலில் இறந்துபோவார் ராதா. கனத்த இதயத்துடன் நாம் கண்ணீ மல்க, திரையரங்கைவிட்டு வெளியே வருவோம். அறுபதுக்கும் இருபதுக்குமான அந்தப் பேரன்பில் கரைந்துபோவோம்.

எல்லா பாடல்களையும் வைரமுத்து எழுதினார். ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு தினுசு. ‘ஏ கிளியிருக்கு’, ‘ஏறாத மலைமேலே’, ‘ஏ குருவி’, ‘அந்த நிலாவைத்தான்’, ‘‘பூங்காத்து திரும்புமா?’, ‘வெட்டிவேரு வாசம்’, ’ராசாவே ஒன்ன நம்பி’ என இசை ராஜாங்கமே நடத்தினார் இளையராஜா. இவற்றில், ‘பூங்காத்து திரும்புமா’ பாடலையும், ‘ராசாவே ஒன்ன நம்பி’ பாடலையும் அன்றைக்குப் பாடாத, பாடி உருகாத காதலர்களே இல்லை.

ஒளிப்பதிவாளர் கண்ணன்
ஒளிப்பதிவாளர் கண்ணன்

இந்தக் கதாபாத்திரத்தை, சிவாஜியைத் தவிர இத்தனை இயல்பாக, அழகாக நடித்துத் தந்திருக்கவே முடியாது. பொன்னாத்தாள் எனும் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்த வடிவுக்கரசியை, என்றைக்குமே மறக்க முடியாது. படம் முழுக்க முதிர்ச்சியான, கண்களில் காதலைத் தேக்கி வைத்த ’குயிலு’ ராதாவையும் ராதாவுக்குக் குரல் கொடுத்த ராதிகாவையும் எப்படி மறப்பது?

பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’, பாரதிராஜாவின் ‘புதிய வார்ப்புகள்’, பாரதிராஜாவின் ‘கொடி பறக்குது’ என்றுதான் எல்லா படங்களிலும் டைட்டில் போடுவார். இந்தப் படத்திலும் பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’ என்றுதான் போஸ்டர்களில், விளம்பரங்களில் இருக்கும்.

1985 ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வந்தது ‘முதல் மரியாதை.’ படம் வெளியாகி இன்றுடன் 37 ஆண்டுகளாகின்றன. சிவாஜிக்கு ஆளுயர மாலையை பாரதிராஜா அணிவிப்பதில் இருந்துதான் படம் தொடங்கும்.

இந்த ‘முதல் மரியாதை’ பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து மூவரும் இணைந்து, சிவாஜி எனும் இமயமலையின் எடைக்கு எடை பூக்களைத் தந்த ‘முதல் மரியாதை’ என்று இன்று வரை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in